என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தூத்துக்குடியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு மாலையில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
- சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முறப்பநாடு போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்துங்கநல்லூர்:
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள அனைத்தலையூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.
இவர் நேற்று காலை தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது சொகுசு காரில் தூத்துக்குடியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு மாலையில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு அருகே காரில் குடும்பத்துடன் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியே வந்துள்ளது. இதைப்பார்த்த கோவிந்த ராஜ் காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு தனது மனைவி, குழந்தைகளுடன் அவசர அவசரமாக காரில் இருந்து கீழே இறங்கி உள்ளார். அதற்குள் காரின் என்ஜின் பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது.
அதைக் கண்ட அப்பகுதியில் இருந்த மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இருந்தும் கார் அதிக அளவில் தீயில் சேதமடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முறப்பநாடு போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம், அதில் இருந்த 4 பேர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பூர்ணிமா கடந்த வாரம் பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருந்தார்.
- தீக்காயம் அடைந்த பூர்ணிமாவை தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
காரிமங்கலம்:
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் இவரது மகன் சசி மோகன் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி பகுதியில் வசித்து வருகிறார்கள். இவரது மனைவி பூர்ணிமா (வயது 30) கடந்த வாரம் பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக திடீரென பூர்ணிமா மயங்கி விழுந்தார்.
இதில் அவர் அணிந்திருந்த ஆடை விளக்கில் பட்டு தீ பற்றிக்கொண்டது. இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டனர். பின்னர் தீக்காயம் அடைந்த அவரை தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பூர்ணிமா உயிரிழந்தார்.
- பொங்கல் வரை கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டுச் செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக தகவல்.
- நேற்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் பேருந்துகள் புறப்பட வேண்டும் என அரசு தெரிவித்திருந்தது.
ஆம்னி பேருந்துகளை எங்கிருந்து இயக்குவது என்பதில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
தைப்பூசம், குடியரசு தினவிழாவை தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் ஆம்னி பேருந்துகளில் ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து அரசு பேருந்துகள் அங்கிருந்து இயக்கப்படுகிறது. தென்மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பக்கத்தில் நிறுத்தப்படுகிறது.
ஆனால் பொங்கல் வரை ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டது. பொங்கலுக்கு பின்னரும் அங்கிருந்துதான் இயக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில்தான் நேற்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என தமிழக அரசு கறாராக தெரிவித்தது. ஆனால் கோயம்பேட்டில் இருந்துதான் பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.
இதனால் நேற்று மாலையில் இருந்து கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாத வகையில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பயணிகளும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் தென்மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தை தாண்டி சென்னை மாநகருக்குள் நுழைய முயற்சித்தன. ஆனால் போலீசார் ஆம்னி பேருந்துகளை தடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு திருப்பி விட்டனர்.
இதனால் ஆம்னி பேருந்து டிரைவர்கள் பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தினர். கோயம்பேட்டில் நிறுத்துவார்கன் என நினைத்த பயணிகள் இதனால் கடும் அவதி அடைந்தனர்.
கோயம்போடு, தாம்பரம் மற்றும் கிண்டி போன்ற இடங்களுக்கு அரசு மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பயணிகள் குழந்தைகள் மற்றும் லக்கேஜ் உடன் ஆட்டோ அல்லது கார்களில் செல்ல முயன்றனர். ஆனால், கிளாம்பாக்கத்தில் இருந்து அதிகத்தொகை கேட்டதால் நெருக்கடிக்குள்ளாகினர்.
குழந்தைகளுடன் மாநரகப் பேருந்துகளில் செல்ல விருப்பம் இல்லாமலும், அதிகத் தொகை கொடுத்து வாடகை ஆட்டோ, கார்களில் செல்ல முடியாமலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையில் பரிதவித்த நிலையில் பெரும்பாலான பயணிகள் நிற்க வேண்டியிருந்தது.
இதற்கிடையே கோயம்பேட்டிற்குள் ஆம்னி பேருந்துகள் வராத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பூந்தமல்லி மற்றும் ரெட் ஹில்ஸ் செல்லும் ஆம்னி பேருந்துகள் மட்டும் நகருக்குள் அனுமதிக்கப்பட்டு கோயம்பேடு வழியாக செல்கிறார்.
விடுமுறை நாட்களாக தற்போது ஆம்னி பேருந்துகளில் ஆயிரக்காணக்கான பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். அவர்கள் கோயம்பேட்டில் இருந்துதான் பேருந்துகள் புறப்படும், அங்குதான் வந்து சேரும் என நம்பியிருந்ததால் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
- மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
- நாளை முதல் இடைநிறுத்தமில்லா பாய்ண்ட் டூ பாய்ண்ட் பேருந்துகள் இயக்கம்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி, கூடுதலாக மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் நீண்ட தூரப் பேருந்துகள் 30.12.2023 முதல் கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இப்பேருந்து முனையத்தை இணைக்கும் வகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி, தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளோடு, கூடுதலாக மாநகரப் போக்குவரத்துக் கழகமானது தடம் எண். எம்18-ல் 6 பேருந்துகளை இடைநிறுத்தமில்லா பேருந்துகளாக (பாய்ண்ட் டூ பாய்ண்ட்) 10 நிமிட இடைவெளியில் 25.01.2024 அன்று முதல் அதிகாலை 03 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தொடர்ந்து இயக்க உள்ளது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிஎம்டிஏ அலுவலரை தாக்கிய நபரை, போலீசார் அழைத்து சென்று விசாரணை.
- கிளாம்பாக்கத்திற்கு மாறுவது தொடர்பாக கடந்த 6 மாதங்களாக பேசப்பட்டு வந்தது.
சென்னைக்குள் ஆம்னி பேருந்து இயக்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஆம்னி பேருந்துகள் இன்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என போக்குவரத்து துறை எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளது.
ஆனால், தாங்கள் கோயம்பேட்டில் இருந்து தான் பேருந்துகளை இயக்குவோம் என்று ஆம்னி பேருந்துகளின் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆம்னி பேருந்து உதவியாளர், சிஎம்டிஏ அலுவலரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க கூடாது என கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
கோயம்பேட்டிற்கு வந்த ஆம்னி பேருந்து பயணிகளை, மாநகர பேருந்துகளில் இலவசமாக கிளாம்பாக்கத்திற்கு போலீசார் ஏற்றி அனுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே, கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் காலியாகவே கிளாம்பாக்கத்திற்கு செல்ல வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும், சிஎம்டிஏ அலுவலரை தாக்கிய நபரை, போலீசார் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளார். அதில், " கடந்த மாதமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டனர்.
முன்னதாக, பொங்கல் கழித்து கிளாம்பாக்கத்திற்கு மாறி விடுவோம் என்று உறுதி அளித்திருந்தனர். ஆனால், தற்போது ஏன் மாற்றி பேசுகிறார்கள் என்றும் இதற்கு பின்னால் உள்ள அரசியல் என்னவென்றும் தெரியவில்லை.
கடந்த 22ம் தேதி நோட்டீஸ் அளித்தும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

கிளாம்பாக்கத்திற்கு மாறுவது தொடர்பாக கடந்த 6 மாதங்களாக பேசப்பட்டு வந்தது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதுமான வசதி இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆம்னி பேருந்துகள் நிறுத்த மோதுமான வசதிகள் கிளாம்பாக்கத்தில் செய்யப்பட்டுள்ளது.
நாளை முதல் தென் மாவட்டங்கள் செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிற்குள் வர அனுமதி இல்லை.
தென் மாவட்டத்திற்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் அரசுக்கு இல்லை. அரசு எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
- ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
தருமபுரியிலிருந்து சேலம் நோக்கி நெல் மூட்டை ஏற்றி சென்ற லாரி தொப்பூர் கணவாய் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த இரண்டு லாரி மற்றும் மூன்று கார்கள் மீது மோதியது. விபத்தில் சிக்கிய ஒரு லாரி பாலத்திற்கு கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தின் போது இரண்டு கார்கள் மற்றும் லாரியின் மீது தீ பரவியதில் வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின.
இந்த விபத்தால் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் தொப்பூர் போலீசார் விரைந்து சென்று, மீட்பு பணியிலும் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். கார் தீ பிடித்து எரிந்ததில் காரில் பயணித்த மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
- கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் புறப்படாது என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
- ஆம்னி பேருந்துகள் நுழையா வண்ணம் ஆங்காங்கே போலீசார் தடுப்பு.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுவிட்டு சென்னை கோயம்பேடுக்கு திரும்பும் ஆம்னி பேருந்துகளை திருப்பி அனுப்பப்படுவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் புறப்படாது என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும், கோயம்பேட்டிற்கு வரும் ஆம்னி பேருந்து பயணிகளை கிளாம்பாக்கம் செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
கோயம்பேட்டிற்குள் ஆம்னி பேருந்துகள் நுழையா வண்ணம் ஆங்காங்கே போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர்.
இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆம்னி பேருந்து தரப்பில் கோயம்பேட்டிற்கு வர கூறியதாகவும், பின்னர் கிளாம்பாக்கத்திற்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்துவதாலும், ஆம்னி பேருந்துகள் தொடர்பாக சரியான தகவல் இல்லாததால், எங்கு செல்வது என தெரியவில்லை என பயணிகள் புலம்பி வருகின்றனர்.
- கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- 4 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கிய விவகாரத்தில் அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பிரசாத் ரெட்டி அவரது கார் ஓட்டுனர் ஸ்ரீதர் உள்ளிட்ட 4 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி உள்ளே புகுந்து தாக்குதல், காயப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
- ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
- தமிழக ஆளுநராக பொறுப்பேற்றது முதல் தமிழ் மக்களின் பண்பாட்டை சிறுமைப்படுத்துகிற வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"இந்திய விடுதலை போராட்டத்துக்காக சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் ஆகியவற்றின் மூலம் பல்வேறு போராட்டங்களை நடத்தி, இந்திய விடுதலையைப் பெற்றுத் தருவதற்கு தமது வாழ்நாளையே அர்ப்பணித்தவர் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள்.பல்வேறு மதம், மொழி, சாதி, இன வேறுபாடுகளைக் கடந்து அனைத்து இந்தியர்களையும் ஒன்று திரட்டி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்திய தேசிய காங்கிரசை வழிநடத்தியவர் மகாத்மா காந்தி. அவரது விடுதலைப் போராட்ட பங்களிப்பை கொச்சைப்படுத்துகிற வகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து கூறியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழக ஆளுநராக பொறுப்பேற்றது முதற்கொண்டு, தமிழக நலன்களுக்கு விரோதமாகவும், தமிழ் மக்களின் பண்பாட்டை சிறுமைப்படுத்துகிற வகையிலும் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு விடுதலையை பெற்றுத் தந்தது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் என்றும், மகாத்மா காந்தி அல்ல என்றும் கூறியிருப்பது அனைவரையும் கொதிப்படைய வைத்திருக்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பங்கை பெருமையாக பேசுவதற்கு பதிலாக அவரை மகாத்மா காந்தியோடு ஒப்பிட்டு பேசுவது வரலாற்றுத் திரிபுவாதமாகும்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பங்களிப்பை அங்கீகரித்து அவரது வாழ்த்துகளை பெற்றவர் சுபாஷ் சந்திரபோஸ். விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை முறையை கையாண்டவர் மகாத்மா காந்தி. அதற்கு மாறாக, ஆயுதம் ஏந்திய போராட்டம் நடத்தியவர் சுபாஷ் சந்திரபோஸ். இவர்களது பங்களிப்பை அனைத்து இந்தியர்களும் மனமுவந்து ஏற்றுக் கொண்டு போற்றி பாராட்டி வருகிறார்கள்.
இவ்விருவரிடையே பேதம் கற்பிக்கிற வகையில் கருத்துகளை ஆர்.என். ரவி கூறியிருப்பது வரலாற்றை சரியாக அறிந்தும் அதை திரித்து பேசுவது மலிவான அரசியலாகும். இதை அவர் அரசியல் உள்நோக்கத்தோடு செய்து வருகிறார்.மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை தியாகி என்று போற்றுகிற பாரம்பரியத்தில் வந்த ஆர்.என். ரவி போன்றவர்கள் இத்தகைய கருத்துகள் கூறுவதை எவரும் அனுமதிக்க முடியாது.
ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியாக உலகம் போற்றி மகிழும் மகாத்மாவின் பெருமைகளை சிறுமைப்படுத்த முயலும் ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் வருகிற ஜன. 27 சனிக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலை ராஜிவ்காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் எனது தலைமையில் நடைபெறும். இதில், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலை வகிப்பார்கள். அதேபோல, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் தங்களது மாவட்டத்துக்குட்பட்ட ஏதாவது ஒரிடத்தில் தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவின் அடையாளமாக உலக நாடுகள் மத்தியில் போற்றத்தக்க வகையில் அனைத்து மக்களாலும் நேசிக்கப்படுபவர் தேசப்பிதா மகாத்மா காந்தி. அவரை கொச்சைப்படுத்துவது 140 கோடி இந்தியர்களையும் அவமானப்படுத்துவதாகும். அதை அனுமதிக்க முடியாத வகையில், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் தீவிர முனைப்புடன் சிறப்பான ஏற்பாடுகளை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
- போக்குவரத்து தொழிலாளர்களை ஏமாற்றும் ஆட்சி தான் திராவிட மாடல் அரசு.
- சேலம் தி.மு.க. மாநாட்டில் இருக்கைகள் காலியாக கிடந்தன என தெரிவித்தார்.
சேலம்:
சேலத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் 15 லட்சம் பேர் திரண்டனர். ஆனால், சேலம் தி.மு.க. மாநாட்டில் இருக்கைகள் காலியாக கிடந்தன.
நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து வாங்கிய பிரதிகள் மாநாட்டு திடலில் கிடந்தன. அவை குப்பைத்தொட்டிக்கு சென்றன. இவர்களா நீட் தேர்வை ரத்து செய்வார்கள். அவர்கள் ஏமாற்றுவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்நிகழ்வு நீட் தேர்வில், தி.மு.க. எவ்வளவு அக்கறை செலுத்துகிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. நீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் நாடகத்தை ஸ்டாலினும், அவரது மகனும் அரங்கேற்றுகின்றனர்.
மக்களுக்கு உதவும் வகையில் தி.மு.க. தீர்மானங்களில் எந்த தீர்மானமும் இல்லை. திட்டமிட்டு மக்களையும் ஊடகத்தையும் ஏமாற்றும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது. அக்கட்சி அளித்த வாக்குறுதிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக பொய் சொல்கின்றனர்.
வெவ்வேறு கருத்துகள் கொண்ட கட்சிகள் தான் இண்டியா கூட்டணியில் இணைந்துள்ளன. அது எப்படி சரியாக இருக்கும்? அந்தக் கட்சிகள் இணைந்து செயல்படுவது கடினம். இன்னும் எத்தனை கட்சிகள் வெளியே செல்லும் என்பதைப் பார்ப்போம்.
கோவில்களை கட்டி வாக்குகளைப் பெறலாம் என பா.ஜ.க. நினைக்கிறதா? ராமர் கோவில் கட்டியதால் பா.ஜ.க. எப்படி வெற்றி பெறமுடியும்?
பாராளுமன்ற தேர்தலில் சூழ்நிலைக்கேற்ப கூட்டணி அமைக்கப்படும்.
5 ஆயிரம் பஸ்கள் வாங்குவோம் என ஒவ்வொரு ஆண்டும் சொல்கின்றனர். ஆனால் ஒரு பஸ் கூட வாங்கியதாக தெரியவில்லை. போக்குவரத்து கழகம் முற்றிலும் செயலிழந்து காணப்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களை ஏமாற்றும் ஆட்சி தான் திராவிட மாடல் அரசு. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை பணி ஆரம்பமாகி உள்ளது என தெரிவித்தார்.
- கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டு போட்டி.
- பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 10 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார்.
மதுரை கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றுள்ளது.
இதில், கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்த பூவந்தியை சேர்ந்த அபிசித்தருக்கு, ஜீப் உடன் ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 10 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். 2ம் இடம் பிடித்த வீரர்கள் தமிழரசன், பரத்குமாருக்கு பைக் பரிசாக வழங்கப்படுகிறது.
இதில், சின்னப்பட்டி தமிழரசன், விளாங்குடி பரத்குமார் தலா 6 காளைகளை அடக்கி 2ம் இடம் பிடித்தனர்.
கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையாக தேர்வான புதுக்கோட்டை கணேஷ் கருப்பையா களைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
சிறந்த காளையாக 2ம் இடத்தை திருச்சி அணைக்கரை வினோத் காளை பிடித்துள்ளது. தொடர்ந்து, சிறந்த காளையாக 3ம் இடத்தை பிடித்தது மதுரை அண்ணாநகர் பிரேம் காளை.
- கோயம்பேட்டில் இருந்து தான் பேருந்துகளை இயக்குவோம் என்று ஆம்னி பேருந்துகளின் சங்கம் அறிவிப்பு.
- ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்குவது இயலாத காரியம்.
சென்னைக்குள் ஆம்னி பேருந்து இயக்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஆம்னி பேருந்துகள் இன்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என போக்குவரத்து துறை எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளது.
ஆனால், தாங்கள் கோயம்பேட்டில் இருந்து தான் பேருந்துகளை இயக்குவோம் என்று ஆம்னி பேருந்துகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது:-
கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயங்க கூடாது என அரசு அறிவித்துள்ளது. நேற்றிரவு திடீரென அறிவிப்பு வழங்கி 30ம் தேதிக்குள் காலி செய்யுமாறு கூறினர். தைப்பூசம் உள்ளிட்ட விடுமுறை நாட்களுக்கு ஏற்கனவே முன்பதிவு முடிந்துவிட்டது.
2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், எப்படி இடத்தை மாற்ற முடியும்.
தற்போது திடீரென பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க கூடாது என்றால் என்ன செய்வது ?
அறிவிப்பு செய்த இரு நாட்களுக்குள் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்குவது இயலாத காரியம்.
மேலும், அரசு முறையாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கிளாம்பாக்கத்தில் 144 பேருந்துகளை நிறுத்த தான் இடம் உள்ளது. 1400 ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கான வசதிகள் கிளாம்பாக்கத்தில் இல்லை.

நீதிமன்ற ஆணைகளை மதிக்காமல் அதிகாரிகள் செயல்படுகின்றனர். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு தொடர்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் சங்க நிர்வாகிகள் பங்கேற்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






