search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "agitation Attack"

    • சிஎம்டிஏ அலுவலரை தாக்கிய நபரை, போலீசார் அழைத்து சென்று விசாரணை.
    • கிளாம்பாக்கத்திற்கு மாறுவது தொடர்பாக கடந்த 6 மாதங்களாக பேசப்பட்டு வந்தது.

    சென்னைக்குள் ஆம்னி பேருந்து இயக்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    ஆம்னி பேருந்துகள் இன்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என போக்குவரத்து துறை எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளது.

    ஆனால், தாங்கள் கோயம்பேட்டில் இருந்து தான் பேருந்துகளை இயக்குவோம் என்று ஆம்னி பேருந்துகளின் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    இந்நிலையில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆம்னி பேருந்து உதவியாளர், சிஎம்டிஏ அலுவலரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க கூடாது என கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

    கோயம்பேட்டிற்கு வந்த ஆம்னி பேருந்து பயணிகளை, மாநகர பேருந்துகளில் இலவசமாக கிளாம்பாக்கத்திற்கு போலீசார் ஏற்றி அனுப்பி வருகின்றனர்.

    இதற்கிடையே, கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் காலியாகவே கிளாம்பாக்கத்திற்கு செல்ல வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். 

    மேலும், சிஎம்டிஏ அலுவலரை தாக்கிய நபரை, போலீசார் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுதொடர்பாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளார். அதில், " கடந்த மாதமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டனர்.

    முன்னதாக, பொங்கல் கழித்து கிளாம்பாக்கத்திற்கு மாறி விடுவோம் என்று உறுதி அளித்திருந்தனர். ஆனால், தற்போது ஏன் மாற்றி பேசுகிறார்கள் என்றும் இதற்கு பின்னால் உள்ள அரசியல் என்னவென்றும் தெரியவில்லை.

    கடந்த 22ம் தேதி நோட்டீஸ் அளித்தும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. 

    கிளாம்பாக்கத்திற்கு மாறுவது தொடர்பாக கடந்த 6 மாதங்களாக பேசப்பட்டு வந்தது.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதுமான வசதி இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆம்னி பேருந்துகள் நிறுத்த மோதுமான வசதிகள் கிளாம்பாக்கத்தில் செய்யப்பட்டுள்ளது.

    நாளை முதல் தென் மாவட்டங்கள் செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிற்குள் வர அனுமதி இல்லை.

    தென் மாவட்டத்திற்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் அரசுக்கு இல்லை. அரசு எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×