search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிளாம்பாக்கத்தில் நிறுத்தப்பட்ட ஆம்னி பேருந்துகள்: கோயம்பேட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
    X

    கிளாம்பாக்கத்தில் நிறுத்தப்பட்ட ஆம்னி பேருந்துகள்: கோயம்பேட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

    • பொங்கல் வரை கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டுச் செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக தகவல்.
    • நேற்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் பேருந்துகள் புறப்பட வேண்டும் என அரசு தெரிவித்திருந்தது.

    ஆம்னி பேருந்துகளை எங்கிருந்து இயக்குவது என்பதில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

    தைப்பூசம், குடியரசு தினவிழாவை தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் ஆம்னி பேருந்துகளில் ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர்.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து அரசு பேருந்துகள் அங்கிருந்து இயக்கப்படுகிறது. தென்மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பக்கத்தில் நிறுத்தப்படுகிறது.

    ஆனால் பொங்கல் வரை ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டது. பொங்கலுக்கு பின்னரும் அங்கிருந்துதான் இயக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில்தான் நேற்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என தமிழக அரசு கறாராக தெரிவித்தது. ஆனால் கோயம்பேட்டில் இருந்துதான் பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.

    இதனால் நேற்று மாலையில் இருந்து கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாத வகையில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பயணிகளும் அவதிப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் தென்மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தை தாண்டி சென்னை மாநகருக்குள் நுழைய முயற்சித்தன. ஆனால் போலீசார் ஆம்னி பேருந்துகளை தடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு திருப்பி விட்டனர்.

    இதனால் ஆம்னி பேருந்து டிரைவர்கள் பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தினர். கோயம்பேட்டில் நிறுத்துவார்கன் என நினைத்த பயணிகள் இதனால் கடும் அவதி அடைந்தனர்.

    கோயம்போடு, தாம்பரம் மற்றும் கிண்டி போன்ற இடங்களுக்கு அரசு மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பயணிகள் குழந்தைகள் மற்றும் லக்கேஜ் உடன் ஆட்டோ அல்லது கார்களில் செல்ல முயன்றனர். ஆனால், கிளாம்பாக்கத்தில் இருந்து அதிகத்தொகை கேட்டதால் நெருக்கடிக்குள்ளாகினர்.

    குழந்தைகளுடன் மாநரகப் பேருந்துகளில் செல்ல விருப்பம் இல்லாமலும், அதிகத் தொகை கொடுத்து வாடகை ஆட்டோ, கார்களில் செல்ல முடியாமலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையில் பரிதவித்த நிலையில் பெரும்பாலான பயணிகள் நிற்க வேண்டியிருந்தது.

    இதற்கிடையே கோயம்பேட்டிற்குள் ஆம்னி பேருந்துகள் வராத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பூந்தமல்லி மற்றும் ரெட் ஹில்ஸ் செல்லும் ஆம்னி பேருந்துகள் மட்டும் நகருக்குள் அனுமதிக்கப்பட்டு கோயம்பேடு வழியாக செல்கிறார்.

    விடுமுறை நாட்களாக தற்போது ஆம்னி பேருந்துகளில் ஆயிரக்காணக்கான பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். அவர்கள் கோயம்பேட்டில் இருந்துதான் பேருந்துகள் புறப்படும், அங்குதான் வந்து சேரும் என நம்பியிருந்ததால் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    Next Story
    ×