search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KS Azhagiri"

    • ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
    • தமிழக ஆளுநராக பொறுப்பேற்றது முதல் தமிழ் மக்களின் பண்பாட்டை சிறுமைப்படுத்துகிற வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

    ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "இந்திய விடுதலை போராட்டத்துக்காக சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் ஆகியவற்றின் மூலம் பல்வேறு போராட்டங்களை நடத்தி, இந்திய விடுதலையைப் பெற்றுத் தருவதற்கு தமது வாழ்நாளையே அர்ப்பணித்தவர் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள்.பல்வேறு மதம், மொழி, சாதி, இன வேறுபாடுகளைக் கடந்து அனைத்து இந்தியர்களையும் ஒன்று திரட்டி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்திய தேசிய காங்கிரசை வழிநடத்தியவர் மகாத்மா காந்தி. அவரது விடுதலைப் போராட்ட பங்களிப்பை கொச்சைப்படுத்துகிற வகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து கூறியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

    தமிழக ஆளுநராக பொறுப்பேற்றது முதற்கொண்டு, தமிழக நலன்களுக்கு விரோதமாகவும், தமிழ் மக்களின் பண்பாட்டை சிறுமைப்படுத்துகிற வகையிலும் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு விடுதலையை பெற்றுத் தந்தது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் என்றும், மகாத்மா காந்தி அல்ல என்றும் கூறியிருப்பது அனைவரையும் கொதிப்படைய வைத்திருக்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பங்கை பெருமையாக பேசுவதற்கு பதிலாக அவரை மகாத்மா காந்தியோடு ஒப்பிட்டு பேசுவது வரலாற்றுத் திரிபுவாதமாகும்.

    இந்திய விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பங்களிப்பை அங்கீகரித்து அவரது வாழ்த்துகளை பெற்றவர் சுபாஷ் சந்திரபோஸ். விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை முறையை கையாண்டவர் மகாத்மா காந்தி. அதற்கு மாறாக, ஆயுதம் ஏந்திய போராட்டம் நடத்தியவர் சுபாஷ் சந்திரபோஸ். இவர்களது பங்களிப்பை அனைத்து இந்தியர்களும் மனமுவந்து ஏற்றுக் கொண்டு போற்றி பாராட்டி வருகிறார்கள்.

    இவ்விருவரிடையே பேதம் கற்பிக்கிற வகையில் கருத்துகளை ஆர்.என். ரவி கூறியிருப்பது வரலாற்றை சரியாக அறிந்தும் அதை திரித்து பேசுவது மலிவான அரசியலாகும். இதை அவர் அரசியல் உள்நோக்கத்தோடு செய்து வருகிறார்.மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை தியாகி என்று போற்றுகிற பாரம்பரியத்தில் வந்த ஆர்.என். ரவி போன்றவர்கள் இத்தகைய கருத்துகள் கூறுவதை எவரும் அனுமதிக்க முடியாது.

    ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியாக உலகம் போற்றி மகிழும் மகாத்மாவின் பெருமைகளை சிறுமைப்படுத்த முயலும் ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் வருகிற ஜன. 27 சனிக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலை ராஜிவ்காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் எனது தலைமையில் நடைபெறும். இதில், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலை வகிப்பார்கள். அதேபோல, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் தங்களது மாவட்டத்துக்குட்பட்ட ஏதாவது ஒரிடத்தில் தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இந்தியாவின் அடையாளமாக உலக நாடுகள் மத்தியில் போற்றத்தக்க வகையில் அனைத்து மக்களாலும் நேசிக்கப்படுபவர் தேசப்பிதா மகாத்மா காந்தி. அவரை கொச்சைப்படுத்துவது 140 கோடி இந்தியர்களையும் அவமானப்படுத்துவதாகும். அதை அனுமதிக்க முடியாத வகையில், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் தீவிர முனைப்புடன் சிறப்பான ஏற்பாடுகளை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

    • இந்திரா காந்தி எடுத்த நடவடிக்கையால் எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார்.
    • பிரதமரோ, மத்திய அமைச்சர்களோ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை இறுதி தீர்ப்பல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

    ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துறை. எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரியில்லாதபோது, ​​அவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல மருத்துவ வசதியுடன் கூடிய விமானத்தை ஏற்பாடு செய்தார் இந்திரா காந்தி. இதனால்தான் எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார். 


    அதேபோல், பிரதமரோ அல்லது மாநில அரசில் உள்ள அமைச்சர்களோ ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மோடி செயல்பட்டிருந்தால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ராகுல் காந்தி தலைவர் பதவியில் நீடிக்க தொண்டர்கள் விரும்புகின்றனர் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
    புதுடெல்லி:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தலைவர் ராகுல் காந்தியை சந்திப்பதற்காக டெல்லிக்கு வந்தோம். நேரம் கேட்டு இருக்கிறோம். கிடைத்தவுடன் சந்தித்து பேசுவோம்.

    இந்திரா காந்தியை போல, ராஜீவ் காந்தியை போல நரேந்திர மோடியும் ஒரு தனித்துவமான தலைவர் என்று நடிகர் ரஜினிகாந்த் சொல்லி இருக்கிறார். அது அவரது ஒப்பீடு. அதை ஏற்பதற்கோ, மறுப்பதற்கோ எனக்கு உடன்பாடு இல்லை.

    12 கோடி மக்கள் ராகுல் காந்திக்காக வாக்கு அளித்து இருக்கிறார்கள். தொண்டர்களால் விரும்பப்படும் தலைவர் அவர். திணிக்கப்படும் தலைவர் அல்ல. எனவே, அவர் தான் தலைமை பொறுப்பில் தொடர வேண்டுமே தவிர, மற்றவர்களை அதில் வைப்பது வீண் வேலை ஆகிவிடும்.



    தமிழக காங்கிரசின் செயற்குழு இன்று (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு கூடுகிறது. இதில் ராகுல் காந்தியே காங்கிரஸ் கட்சியை தலைமை தாங்கி நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அவருக்கு அனுப்ப இருக்கிறோம்.

    பதவியை துறப்பதில் ராகுல் காந்தி வேண்டுமானால் உறுதியாக இருக்கலாம். ஆனால் அவர்தான் தலைவராக இருக்க வேண்டும் என்பதில் தொண்டர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அவர் தலைவர் பதவியில் நீடிக்க தொண்டர்கள் விரும்புகின்றனர்.

    காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழந்தது இது முதல்முறை அல்ல. இருந்தாலும் ‘பீனிக்ஸ்’ பறவை போல மீண்டும் எழுந்து வரும். ஆட்சிக்கட்டிலில் அமரும். இதுதான் கடந்த கால வரலாறு.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ராகுல்காந்தியை விமர்சிக்க தமிழிசைக்கு தகுதி இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கையில் தெரிவித்துள்ளார். #KSAzhagiri #RahulGandhi

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பங்கேற்போடு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைந்தது முதற்கொண்டு பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளிடையே மிகப்பெரிய கலக்கத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க.வினர் புலம்பிக் கொண்டிருப்பதை நம்மாலே புரிந்து கொள்ள முடிகிறது.

    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எதிராக அமைந்துள்ள கூட்டணி நாம் அமைத்ததைப் போல கொள்கைக் கூட்டணி அல்ல. நமது கூட்டணியைப் பற்றி விமர்சனம் செய்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக கேள்விகளை தொடுத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க.வில் இணைந்த அவருக்கு அரசியல் வரலாற்றை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

    இலங்கை தமிழர் பிரச்சினையைப் பற்றி தமிழிசை நீலிக் கண்ணீர் வடிக்கிறார். இலங்கை தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி செயல்பட்டதை எவரும் மறந்திருக்க முடியாது. ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தான் இன்றைக்கும் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருப்பதை தமிழிசையால் மறுக்க முடியுமா ?

    தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க ஒப்பந்தம் போட்ட காரணத்தினாலே இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் ராஜீவ்காந்தி பங்கரவாத அமைப்பால் படுகொலை செய்யப்பட்டார். இத்தகைய உயிர் தியாகத்தைச் செய்த காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கிற ராகுல்காந்தியை விமர்சிக்க தமிழிசைக்கு என்ன தகுதி இருக்கிறது ? இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்து அவர் முன்னிலையில் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடியின் துரோகத்தை தமிழக மக்கள் எவரும் மறக்க மாட்டார்கள்.

    1966-ம் ஆண்டில் தலைநகர் தில்லியில் காமராஜர் குடியிருந்த வீட்டின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சங்பரிவார் கும்பலின் வாரிசாக விளங்கி வருகிற பா.ஜ.க.வினர் அவரது பெயரை உச்சரிக்க கூட தகுதியற்றவர்கள். இவர்களுக்கு எங்களது தலைவர்கள் பெயரை குறிப்பிட்டு பேச என்ன உரிமை இருக்கிறது?

    தமிழகத்தில் தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 2004 பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றியைப் போல நாற்பதும் நமதே என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறது. தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்ட போகிறது. இந்தியாவின் எதிர்கால பிரதமராக ராகுல்காந்தியும், தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலினும் பதவியேற்கிற காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை தமிழிசை புரிந்து கொள்ள வேண்டும். ஆயிரம் தமிழிசைகள் ஒன்று சேர்ந்தாலும் எந்த சக்தியாலும் இதை தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #KSAzhagiri #RahulGandhi

    போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை வேண்டாம் என்று தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார். #KSAzhagiri

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சி என்றாலே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முன் வைக்கிற நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்காமல் புறக்கணிக்கிற காரணத்தினால் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் எஸ்மா சட்டம் ஏவி விடப்பட்டு ஒடுக்கப்பட்டதை எவரும் மறக்க முடியாது. அந்த பாரம்பரியத்தில் வந்த இன்றைய அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் அதே அடக்கு முறையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எதிராக கையாண்டு வருகின்றனர்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளுக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டு பழிவாங்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

    இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பள்ளிக்கு வராதவர்கள், தேதி வாரியாக கணக்கெடுக்கப்பட்டு பட்டியல் தயாராகி வருவதாக கல்வித்துறை இயக்குநர் மிரட்டல் தொனியில் கருத்து கூறியிருக்கிறார்.

    தங்கள் மீது ஏவிவிடப்பட்ட கடுமையான நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் முதலமைச்சரை சந்தித்து முறையிட முயன்றனர். ஜனநாயக நாட்டில் போராடுகிற அரசு ஊழியர்களை சந்திக்க முதலமைச்சர் தயங்குவது ஏன்? மன்னர் ஆட்சியாக இருந்தால் மறுக்கலாம்.

    ஜனநாயக ஆட்சியில் சந்திக்க மறுக்கலாமா? முதலமைச்சரை சந்திக்க மறுக்கப்பட்ட நிலையில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோரைச் சந்தித்து பழிவாங்கும் நடவடிக்கையை தவிர்க்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கையை செவிமடுக்காமல் தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கைக்காக பட்டியல்கள் தயாராகி வருகின்றன. இந்த போக்கு நீடிக்குமேயானால் இதைவிட கொடிய அடக்குமுறை வேறு எதுவும் இருக்க முடியாது.

    ஜனநாயக நாட்டில் கோரிக்கை எழுப்புவது, குரல் கொடுப்பது, போராடுவது, வேலை நிறுத்தம் செய்வது அடிப்படை உரிமையாகும். அத்தகைய உரிமைகளை அ.தி.மு.க. அரசு பறிக்குமேயானால் கடந்த ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஏவிவிடப்பட்ட அடக்குமுறைகளுக்கு தமிழக மக்கள் 1996 சட்ட மன்றத் தேர்தலில் எத்தகைய பாடத்தை புகட்டினார்களோ, அதைவிட பலமடங்கு கூடுதலான படிப்பினையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வழங்குவார்கள் என்பதை அ.தி.மு.க. அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புகிறேன்.

    எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசின் அடித்தளமாக விளங்குபவர்கள். அவர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவிவிட்டு ஒரு அரசு இயங்க முடியாது.

    அப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு தமிழக அரசு உடனடியாக ஜாக்டோ ஜியோ அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலிக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #KSAzhagiri

    தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கே.எஸ்.அழகிரி டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்துப் பேசினார். #KSAzhagiri #congress #rahulgandhi

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய தலைவராக கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் புதிய தலைவரான கே.எஸ்.அழகிரி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.

    டெல்லியில் அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்துப் பேசினார்.

    முன்னதாக கே.எஸ்.அழகிரி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஒரு மத சார்பற்ற அரசியலை பலப்படுத்த ராகுல்காந்தி என்னை காங்கிரஸ் தலைவராக நியமித்து ஒரு புதிய கட்சி அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் சேர்ந்து ஒரு வலிமையான கூட்டணியை அமைத்து தேர்தலில் வெற்றி பெறுவது தான் முதல் நோக்கம்.

    தற்போது நாட்டில் ஏற்றத்தாழ்வு அதிகமாக இருக்கிறது. மதம், ஜாதி ரீதியாக ஏற்றத்தாழ்வு இருக்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். மத்திய அரசு, மாநில அரசு தமிழகத்தின் வளர்ச்சியை பின்னோக்கி தள்ளி விட்டது.

    மதம், ஜாதி என்ற உணர்வு ஒரு தனி மனிதனுக்கு இருக்கலாம். ஒரு அரசாங்கத்துக்கு இருக்க கூடாது. இந்த அடையாளத்தை மாற்ற மக்களை பிரித்து பார்க்காதபடி சமூக அக்கறையோடு நாடு வளர்ச்சி பெற பாடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #KSAzhagiri #congress #rahulgandhi

    ×