என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தாம் உருவாக்கிய படைப்பிரிவுகளுக்கு காந்தி ரெஜிமெண்ட், நேரு ரெஜிமெண்ட், ஆசாத் ரெஜிமெண்ட் என்று பெயர்களை சூட்டினார்.
    • தேசப்பிதா மகாத்மா காந்தியை இழிவுபடுத்திய கவர்னர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 127-வது பிறந்த நாள் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, நேதாஜிக்கு பெருமை சேர்க்கிறோம் என்ற பெயரில், மாவீரர் நேதாஜியின் வரலாற்றையே சிறுமைப்படுத்தி பேசியிருக்கிறார். 2-ம் உலகப் போருக்குப் பின்பு 1942-ல் மகாத்மா காந்தி தொடங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கம் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை.

    நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவம் பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போரிட்டதால் தான் ஆங்கிலேயர்கள் நாட்டுக்கு விடுதலை அளிக்கின்ற நெருக்கடிக்கு உள்ளானார்கள் என்று கவர்னர் தனது உரையில் குறிப்பிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

    பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இந்திய தேசிய ராணுவத்தை கட்டி எழுப்பிப் போர் பிரகடனம் செய்த மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தாம் உருவாக்கிய படைப்பிரிவுகளுக்கு காந்தி ரெஜிமெண்ட், நேரு ரெஜிமெண்ட், ஆசாத் ரெஜிமெண்ட் என்று பெயர்களை சூட்டினார்.

    இந்திய தேசிய ராணுவம், ஐ.என்.ஏ. போர்முனையில் நின்ற போது, 1944 செப்டம்பர் 22-ம் நாள் மாவீரர் நேதாஜி வீரமுழக்கமிட்ட உரையில் "தேசப்பிதாவே! மகாத்மாவே! இந்தியாவின் விடுதலைக்கான இந்த புனிதப் போரில் எங்களுக்கு உங்களின் மேலான ஆசியை தாருங்கள்; வாழ்த்துக்களை வழங்குங்கள்" என்று மானசீகமாக மகாத்மா காந்திக்கு வேண்டுகோள் வைத்து ஆற்றிய உரை நெஞ்சத்தை நெக்குருக செய்யும் உணர்ச்சியின் வெளிப்பாடு ஆகும்.

    தேசப்பிதா மகாத்மா காந்தியை இழிவுபடுத்திய கவர்னர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய வகைப்பாட்டில் மூன்று அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் உயரிய விருதான இலக்கியமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது.
    • இலக்கியமாமணி விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.5 இலட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை அளித்தும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பு செய்யப்பெறுவார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் அறிஞர் பெருமக்களுக்குத் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் வழங்கி, அவர்தம் புலமைக்கும் தொண்டுக்கும் பெருமை சேர்த்து வருகின்றது. அவ்வகையில் மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய வகைப்பாட்டில் மூன்று அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் உயரிய விருதான இலக்கியமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. இலக்கியமாமணி விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஐந்து இலட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை அளித்தும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பு செய்யப்பெறுவார்கள்.

    இலக்கியமாமணி விருது 2022ஆம் ஆண்டிற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் அரங்க. இராமலிங்கம் (மரபுத்தமிழ்), விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கொ.மா.கோதண்டம் (ஆய்வுத்தமிழ்), கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் சூர்யகாந்தன் (மா.மருதாச்சலம்) (படைப்புத்தமிழ்) ஆகியோர் தெரிவு செய்யப்பெற்றுள்ளனர்.

    முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நேர்வாக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மணி அர்ஜீணன் (மரபுத்தமிழ்), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அர. திருவிடம் (ஆய்வுத்தமிழ்), சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த க. பூரணச்சந்திரன் (படைப்புத்தமிழ்) ஆகியோர் தெரிவு செய்யப்பெற்றுள்ளனர்.

    2023-ம் ஆண்டிற்கு இலக்கியமாமணி விருதிற்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஞா. மாணிக்கவாசகன் (மரபுத்தமிழ்), திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் சண்முகசுந்தரம் (ஆய்வுத்தமிழ்), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் இலக்கியா நடராசன் (எ) ச. நடராசன் (படைப்புத்தமிழ்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

    • இன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.
    • கோவில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 6-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோசம் முழங்க கண்டு தரிசனம் செய்தனர்.

    இதனைதொடர்ந்து வெள்ளித்தேரில் சாமி வீதிஉலா நடைபெற்றது. தைப்பூச திருவிழாவின் 7-ம் நிகழ்ச்சியாக இன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது. இதனைமுன்னிட்டு தோழுக்கினியானில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை சண்முகநதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு சாமி திருத்தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெறுகிறது.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாகவே பழனியில் பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகளவில் காணப்பட்டது. கூட்டம் கூட்டமாக வரும் பக்தர்களுக்கு வழி நெடுகிலும் பல்வேறு அமைப்புகளால் அன்னதானம், பழங்கள், இளநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    கோவில் நிர்வாகம் சார்பில் தற்காலிக கழிப்பறைகள், குளியல்அறைகள், பக்தர்கள் தங்கும் இடங்கள் ஆகியவை ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளன. இடும்பன்குளம், சண்முகாநதி பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் திரண்டு நீராடி வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பான முறையில் குளித்து செல்வதை உறுதி செய்யும் வகையில் அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முக்கிய இடங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் சுமார் 2000-ககும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருக்கல்யாண நிகழ்ச்சியை நாளை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 1லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் பழனியில் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் பழனி நகரமே குலுங்கியது.

    தைப்பூசத்தை முன்னிட்டு பழனி கோவில் பாரவேல் மண்டபம் உள்பட முக்கிய இடங்களில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது.


    • விபத்தில் 8 நபர்கள் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
    • விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் உள்வட்டம், தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் நேற்று மாலை 5.15 மணியளவில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சாலை விபத்தில் கோயம்புத்தூர், டவுன்ஹால், அசோக் நகரைக் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சு, விமல், அனுஷ்கா, ஜெனிபர் ஆகிய 4 நபர்கள் உயிரிழந்தனர் என்றும், இவ்விபத்தில் 8 நபர்கள் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

    • நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை 26-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
    • மெச்சத்தக்க சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது தமிழகத்தை சேர்ந்த 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை 26-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான குடியரசுத் தலைவர் விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு ஐஜி லலிதா லட்சுமி, கமென்டண்ட் ராஜசேகரன், துணை காவல் ஆய்வாளர் ராயப்பன் ஆகிய 3 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    மெச்சத்தக்க சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது தமிழகத்தை சேர்ந்த 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது.
    • 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோஷ நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகி றார்கள். கடந்த 23-ந்தேதி முதல் நாளை வரை நான்கு நாட்களுக்கு பிரதோஷம் மற்றும் தை பவுர்ணமி, தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

    அதன்படி தைப்பூசத்தை முன்னிட்டு இன்று அதி காலை 2 மணி முதல் சென்னை, கோவை, நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு தொலை தூர ஊர்களில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.

    இதையடுத்து இன்று காலை 6.15 மணியளவில் வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர். கடும் பனியையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யச் சென்றனர். கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தாணிப்பாறை வழுக்கல் அருவியில் ஆனந்த குளியலிட்டனர்.

    இன்று தை பௌர்ணமி தைப்பூசத்தையொட்டி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அபிஷேகம் முடிந் ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சிய ளித்தார். பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    • தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,830-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலை உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது.

    தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,830-க்கும் சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.46,640-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை உயர்ந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.700 அதிகரித்து ரூ.77,500-ஆகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் இன்று தைப்பூச திரு விழா.
    • முருகர் தனித்தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் இன்று தைப்பூச திரு விழா நடைபெற்றது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தைப்பூச திருவிழா நடைபெற்றது.

    தைப்பூசத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. தீபாராதனைக்கு பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரத வீதியில் உள்ள இல்லத்தார் தைப்பூச மண்டபத்திற்கு வந்து அங்கு சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி தனித்தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு கோவில் சேர்கிறார்.

     தைப்பூச திருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். திரளான பக்தர்கள் காவி மற்றும் பச்சை நிற ஆடை அணிந்து காவடி எடுத்தும், பல்வேறு அடி நீள அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் வந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் குழுக்களாக, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் முருகபெருமானின் உருவப் படத்தை வைத்தும், அவரது திருப்புகழை பாடியவாறும் பாதயாத்திரையாக வந்தனர்.

    நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் சாலையில் திருச்செந்தூருக்கு பக்தர்கள் அணிவகுத்து சென்றனர். திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் கோவில் வளாகம், கடற்கரை, மண்டபங்கள், விடுதிகளில் தங்கினர். திருச்செந்தூர் நகரில் காணும் இடமெல்லாம் முருக பக்தர்களாகவே காட்சியளிப்பதால் விழாக்கோலம் பூண்டது.

     இன்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்தால் கடற்கரை, கோவில் வளாகம் நிரம்பி வழிகிறது.

    • சுபாஷ் சந்திரபோசும் சுதந்திர போராட்ட வீரர்தான். ஆனால் அவர் பேச்சுவார்த்தையால் வெற்றி கிடைக்காது.
    • ஜப்பான் தாக்குதலில் இருந்து தப்பிக்க பிரிட்டிஷ்-இந்திய ராணுவம் வழியை தேர்வு செய்தது.

    சென்னை:

    தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சில கருத்துகளை பதிவிட்டார். அவர் கூறிய சில கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் டி.ஜி.பி.யும், தமிழ்நாடு தடகள சங்க தலைவர் வால்டர் தேவாரம் சென்னையில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

    கவர்னர் ஆர்.என்.ரவி, மகாத்மா காந்தி 1942-க்கு பிறகு சுதந்திரத்துக்காக ஒன்றும் செய்யவில்லை. சுதந்திரம் பெற்றுத்தந்தது சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் தேசிய ராணுவமும்தான் என்று சொல்லியுள்ளார். இதை பொறுக்க முடியவில்லை. நேரு, காந்தி, வல்லபாய் படேல், லால்பகதூர் சாஸ்திரி என அனைத்து சுதந்திர போராட்ட தியாகிகளும் அவர்களால் முடிந்தவரை போராடினார்கள்.

    சுபாஷ் சந்திரபோசும் சுதந்திர போராட்ட வீரர்தான். ஆனால் அவர் பேச்சுவார்த்தையால் வெற்றி கிடைக்காது. அதனால் தீவிர போராட்டத்தின் மூலம் சுதந்திரம் கிடைக்க போராடினார். அவர் மீது எனக்கும் மரியாதை இருக்கிறது. அமெரிக்கா, வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா, பர்மாவை வெற்றி பெற்று, ஜப்பான் அடுத்ததாக இந்தியாவை பிடிக்கும் என்று நினைத்தார்கள். ஜப்பான் விமானப்படை அதன்படி குண்டும் வீசியது. ஜப்பான் தாக்குதலில் இருந்து தப்பிக்க பிரிட்டிஷ்-இந்திய ராணுவம் வழியை தேர்வு செய்தது.

    இருப்பினும் மணிப்பூர் இம்பாலில் பெரிய சண்டை நடந்தது. பிரிட்டிஷ்-இந்திய ராணுவத்தில் இந்தியர்கள் அதிகம் இருந்தார்கள். அந்த சண்டையில் ஜப்பான் ராணுவம் இந்திய ராணுவ வீரர்களை பிடித்துவிட்டார்கள். அவர்களை கைதிகளாக வைத்திருந்தார்கள்.

    அப்போது சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனியில் இருந்து வந்து, ஜப்பான் ராணுவத்திடம் அவர்களை கைதிகளாக வைக்காதீர்கள். அவர்கள் உங்களுக்கு ஆதரவாக, பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து போரிடுவார்கள் என்று கூறினார். அதன்படி, தேசிய ராணுவ வீரர்கள் என்ற பெயரில் அதில் நிறைய பேர் சேர்ந்து போராடினார்கள்.

    1942-க்கு பிறகு நாகாலாந்து தலைநகர் கோஹிமாவிலும் இந்த சண்டை நீடித்தது. அதில் ஜப்பான் ராணுவத்தில் இருந்த தேசிய ராணுவ வீரர்களை, பிரிட்டிஷ்-இந்திய ராணுவம் தோற்கடித்தது. அதன் பின்னர் ஜப்பான் ராணுவம் முன்னேறவில்லை. இதுதான் இறுதி சண்டை. இன்றும் அதற்கு ஆதாரமாக தூண் அங்கு இருக்கிறது. 1944-ல் இந்த போர் நிறைவு பெற்றது. இந்த சண்டையால் பிரிட்டிஷ் ராணுவம் நமக்கு சுதந்திரம் கொடுக்கவில்லை.

    1945-ம் ஆண்டுக்கு இடைபட்ட காலத்திலேயே பிரிட்டிஷ், இந்தியாவுக்கு விடுதலை வழங்க முடிவு செய்தது. அதனால் மகாத்மா காந்தி, அவரை சேர்ந்த லட்சக்கணக்கானோர் போராடி உயிரை கொடுத்து பெற்றததுதான் இந்திய சுதந்திரம். அதிலும் சுபாஷ் சந்திரபோசும் அடங்குவார். அப்படிதான் சுதந்திரம் கிடைத்தது.

    கவர்னர் சொல்வது போல, 1942-க்கு பிறகு காந்தி போராடாமல் வீட்டுக்கு சென்றுவிட்டாரா? அல்லது ஓய்வு பெற்றுவிட்டாரா? அவர் சுதந்திரம் கிடைக்கும் வரை அகிம்சை வழியில் போராடிக் கொண்டுதான் இருந்தார். 1942-ம் ஆண்டு என்று சொல்வது என்ன கணக்கு?. எனவே கவர்னர் கூறியது முற்றிலும் தவறு. அவர் எதற்காக இப்படி சொன்னார் என்பதற்கான காரணத்தை சொல்வது இப்போது சரியாக இருக்காது. காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் 'ஹீரோக்கள்'தான்.

    என்னுடைய இந்த கருத்துக்கு எதிர்ப்பு வந்தாலும் அதனை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். எனக்கும், கவர்னருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு சுதந்திர போராட்டம் குறித்த வரலாறு நன்றாக தெரியும். சுதந்திர போராட்டம் பற்றி கூறியதால், நான் அதற்கு விளக்கம் கொடுக்கிறேன்.

    இவ்வாறு முன்னாள் டி.ஜி.பி. வால்டர் தேவாரம் கூறினார்.

    • ஏராளமான பொதுமக்களும் விவசாய தோட்டங்களும், கருப்பட்டி, கற்கண்டு, உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    • வாழை விவசாயிகள், வாழை குலைகளை வெட்டி தண்ணீரில் எடுத்து கொண்டு வருகின்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

    தூத்துக்குடி மாநகர பகுதிகள் மட்டுமின்றி திருச்செந்தூர், உடன்குடி, மெஞ்ஞானபுரம், ஆழ்வார்திருநகரி, ஏரல், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிய ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக மாறின.

    இப்பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது. வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

    அதேநேரம் இதுவரை பல ஆண்டுகளாக மழை இல்லாத பகுதிகளாக இருந்து வந்த உடன்குடி பகுதியில், கனமழை காரணமாக அனைத்து குளங்கள், குட்டைகள், ஆறு மற்றும் ஏராளமான தற்காலிகமான நீர் பிடிப்பு பகுதிகள் எல்லாமே சுமார் 5 ஆண்டுகளுக்கு பின் முழுமையாக நிரம்பியது.

    இந்த ஆண்டு எல்லாமே முழுமையாக நிரம்பிவிட்டது என்று விவசாயிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரு சில நாட்கள் கூட நீடிக்கவில்லை.

    ஸ்ரீவைகுண்டம் அணையில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அத்துடன் இணைந்த சடைய நேரி கால்வாயில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக வந்து கொண்டிருந்தது.

    இதனால் உடன்குடி அருகே உள்ள சடையனேரி குளம் கிழக்கு பகுதி உடைந்தது, அதில் இருந்து வெளியேறிய வெள்ளநீர் உடன்குடி ஒன்றிய பகுதியில் உள்ள மெஞ்ஞானபுரம், மானிக்கபுரம், லட்சுமிபுரம், வேப்பங்காடு, மருதூர் கரை, செட்டியாபத்து, பரமன்குறிச்சி, என்.எஸ். நகர், சிங்கராயபுரம், வட்டன் விளை, வெள்ளாளன் விளை, சீயோன்நகர், செட்டி விளை, சிதம்பரபுரம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது.

    இதனால் ஏராளமான பொதுமக்களும் விவசாய தோட்டங்களும், கருப்பட்டி, கற்கண்டு, உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    தேக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி மதிப்புள்ள கருப்பட்டி, கற்கண்டு அனைத்தும் மழையிலும், வெள்ள நீரிலும் நனைந்தும் நாசமாயின.

    மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையம், அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பரமன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியன தண்ணீர் சூழ்ந்து இருந்ததால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் தற்காலிகமாக சுமார் 10 நாட்கள் வேறு இடங்களில் செயல்பட்டது. இதன் காரணமாக உடன்குடியில் இருந்து மெஞ்ஞானபுரம் செல்லும் நேர்வழி சாலையும், உடன்குடியில் இருந்து பரமன் குறிச்சி செல்லும் நேர்வழிச் சாலையும் முழுமையாக துண்டிக்கப்பட்டது.


    நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு செல்லும் மக்கள் சுமார் 25 நாட்களாக பல கிலோமீட்டர் சுற்றி சுற்றி சென்று வந்தனர்.

    இந்நிலையில், வட்டன் விளை மற்றும் சீயோன்நகர் பகுதியில் முதல் கட்டமாக ஏராளமான பம்புசெட், நீர் மோட்டார் மூலம் தேங்கி கிடந்த தண்ணீரை அருகில் உள்ள செம்மணல் தேரியில் கொண்டு சேர்க்கும் பணி இரவு பகலாக 10 நாட்கள் நடந்தது.

    தண்ணீர் அப்புறப்படுத்தவில்லை. குறையவும் இல்லை, அடுத்து மெஞ்ஞானபுரம் அருகே உள்ள மருதூர் கரையில் சாலையை உயர்த்தி 15 நாட்களுக்கு பின் போக்குவரத்தை தொடங்கினர். உடன்குடியில் இருந்து செட்டியாபத்து மெஞ்ஞான புரம் வழியாக நெல்லைக்கு போக்குவரத்து தொடங்கியது.

    அதன் பின்பு சியோன் நகர் அருகே பல லாரி மணல் மற்றும் கற்களை கொட்டி தரைப் பாலத்தை சுமார் 25 அடி உயர்த்தி 25 நாட்களுக்குப் பின் போக்குவரத்தை தொடங்கினர்.

    ஆனாலும் இன்று வரை சுமார் 40 நாட்கள் ஆகியும் வட்டன் விளை ஊருக்குள் பரமன்குறிச்சி மெயின் ரோட்டில் இருந்து உள்ளே வர முடியாத அளவிற்கு சுமார் 10 அடி ஆழத்திற்கு இன்னும் தண்ணீர் தேங்கிகிடக்கிறது.

    இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டத்தில் உள்ள தேங்காய்கள் மற்றும் விவசாய பொருட்ககளை தோட்டத்தில் இருந்து கொண்டு வருவதற்கு தற்காலிக படகு போல அமைத்து அதில் சென்று தேங்காய் மற்றும் விவசாய பொருட்களை வெளியில் கொண்டு வருகிறார்கள்.

    தோட்டத்திற்கு நீச்சலில் செல்கிறார்கள். வாழை விவசாயிகள், வாழை குலைகளை வெட்டி தண்ணீரில் எடுத்து கொண்டு வருகின்றனர்.


    இன்று வரை விவசாயிகள் மற்றும் பல தரப்பட்ட மக்கள் வடியாத வெள்ளத்தில் தங்களது வாழ்க்கையை கடத்தி வருகின்றனர்.

    இது பற்றி விவசாயிகள் கூறும் போது, நிரந்தரமாக வடிகால் அமைத்தால் தான் இனி தண்ணீர் வடியும். தண்ணீர் வடிவதற்கு எந்த விதமான சூழ்நிலையும் தற்போது இல்லை.

    தண்ணீர் தேங்கி 40 நாட்களை கடந்து விட்டதால் அதிகமான அளவில் சேறும்சகதியும் சேர்ந்து விட்டதால் தேங்கியதண்ணீர் பூமிக்குள் இறங்கும் நிலைமை இல்லை.

    அதனால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வடிகால் அமைத்தால் தான் எங்கள் விவசாயங்களை நாங்கள் காப்பாற்ற முடியும். மீண்டும் புதியதாக விவசாயம் செய்ய முடியும் என்றனர்.

    தரைமேல்பிறக்க வைத்தான், எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான் என்ற ஒரு சினிமாபாடலை பாடிக்கொண்டு விவசாயிகளும், கிராம மக்களும் தண்ணீருக்குள் சென்று தங்கள் தோட்டத்தில் உள்ள விவசாய பயிர்களை வெளியே கொண்டு வருவது மிகவும் பரிதாபமாகவும், பரிதவிப்பாகவும் உள்ளது.

    • முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி.
    • திருவிழாவின் 7-ம் திருநாளான இன்று தேரோட்டம்.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில், தைப்பூச திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 6-ம்நாளான நேற்று இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவில் வெளிப்பிரகாரத்தில் வண்ண மலர்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு திருமண மேடையில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வனையுடன் எழுந்தருளினார். அப்போது 16 வகை அபிஷேகம் நடந்தது.

    அதன் பின்னர் விநாயகர் பூஜை, சங்கல்பம், வருண பூஜை, பஞ்சகவ்யபூஜை, சுப்பிரமணிய பூஜை, வேதபாராயணம், சுப்ரமணியா யாகம், வாத்திய பூஜை நடைபெற்றது. மணமேடைக்கு முன்பு பல வகையான பழங்கள், பட்டுச்சேலை, வேட்டி, திருமாங்கல்யம், வண்ண மலர்கள், இனிப்பு வகைகள் மற்றும் பல்வேறு வகை சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

    அதன்பின்னர் பொற்சின்னம் இடித்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, கன்னிகா தானம், மாங்கல்ய பூஜை நடந்தது. பின்னர் வள்ளி-தெய்வானைக்கு பழனி கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

    அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் "கந்தனுக்கு அரோகரா...! முருகனுக்கு அரோகரா"...! என சரண கோஷம் எழுப்பினர். மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்மன்களுக்கு தீபாராதனை, அர்ச்சனை, ரட்சை சாற்றுதல், 16 வகை உபசாரம் நடைபெற்றது. தொடர்ந்து திருமுறை பாராயணம், வாத்திய கோஷம் முழங்க மகா தீபாராதனை நடந்தது.

    வெள்ளிரத உலா

    பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருமண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். திருமணம் மற்றும் பூஜை நிகழ்ச்சிகளை செல்வசுப்பிரமணியம் மற்றும் குருக்கள் செய்தனர். இரவு 9.30 மணிக்கு மேல் வெள்ளிரதத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் நான்கு ரத வீதிகளில் உலா வந்தார்.

    இன்று தேரோட்டம்

    தைப்பூச திருவிழாவின் 7-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) தைப்பூச தேரோட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக இன்று அதிகாலை 5 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தோளுக்கினியாள் வாகனத்தில் எழுந்தருளி, சண்முகநதியில் தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10.30 மேல் மீன லக்னத்தில் திருத்தேரேற்றமும், தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடக்கிறது. தேர் நிலை வந்தடைந்த பின்னர் தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சியும், ரதவீதிகளில் சுவாமி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    • உழைப்பாளர் சிலை அருகில் நாளை குடியரசு தின விழா நடைபெறுகிறது.
    • ராணுவப்படைப் பிரிவு, கடற்படைப்பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படைப் பிரிவினர் அணி வகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செலுத்துவார்கள்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசின் சார்பில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். ஆனால் அந்தப் பகுதியில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கின்றன. எனவே கடந்த ஆண்டு குடியரசு தினவிழா, மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்றது. இந்த ஆண்டும் உழைப்பாளர் சிலை அருகில் நாளை (வெள்ளிக்கிழமை) குடியரசு தின விழா நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து உழைப்பாளர் சிலை பகுதியில் பிரமாண்டமான அளவில் பந்தல்கள் போடப்படுகின்றன. அங்கு சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, நீதிபதிகள், வெளிநாட்டு தூதுவர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் அமர்வார்கள். காலை 7.52 மணிக்கு விழாப்பகுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவார்.

    காரின் முன்னும் பின்னும் போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அவர் அழைத்து வரப்படுவார். பொதுமக்களுக்கும், விழா பந்தலில் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களுக்கும் அவர் கையசைத்து வாழ்த்து தெரிவிப்பார். அணி வணக்கம் ஏற்கும் மேடை அருகே முதலமைச்சரை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்பார்.

    காலை 7.54 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, மனைவி லட்சுமி ரவியுடன் வருகை தருவார். அவர், விமானப்படையினர் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்படுவார். அவரும் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு கையசைத்து வாழ்த்து தெரிவிப்பார். அதைத்தொடர்ந்து, 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி வரவேற்பார்.

    பின்னர், தென்னிந்திய பகுதிகளின் ராணுவ மேஜர் ஜெனரல், கடற்படை அதிகாரி, தாம்பரம் வான்படை நிலைய தலைமை அதிகாரி, கடலோர காவல்படை (கிழக்கு) கமாண்டர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை கவர்னருக்கு சம்பிரதாயப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைப்பார்.

    அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசியக்கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றி வைப்பார். அப்போது அந்தப் பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவும். அந்த நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்படும்.

    பின்னர் ராணுவப்படைப் பிரிவு, கடற்படைப்பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படைப் பிரிவினர் அணி வகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செலுத்துவார்கள். அதை அவர் ஏற்றுக் கொள்வார். அப்போது, கடற்படை ஊர்தியில் போர்க்கப்பலின் சிறிய வடிவம், வான்படை ஊர்தியில் சிறிய வடிவிலான விமானம், கடலோர காவல்படை ஊர்தியில் சிறிய வடிவிலான படகுகள் ஆகியவை அணிவகுத்து கொண்டு வரப்படும்.

    அதைத்தொடர்ந்து சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., ஆர்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப் படை, கடலோர பாதுகாப்புக்குழு, ஊர்க்காவல் படை (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்பட 30 படைப்பிரிவினர் அணிவகுத்துச் செல்வார்கள்.

    அதன்பின்னர் அணிவகுப்பு மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து பதக்கங்களை வழங்குவார். வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது, காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு முதலமைச்சர் வழங்குவார். பின்னர், பதக்கம் பெற்றோர் குழுவாக முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள்.

    அதைத்தொடர்ந்து விழா மேடையில் கவர்னர், முதலமைச்சர் அமர்ந்திருக்க, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் மங்கள இசை ஊர்தி உள்பட பல்வேறு அரசுத் துறைகளின் ஊர்திகள், அரசில் நலத்திட்டங்களை விவரிக்கும் வகையிலான வடிவமைப்புகளுடன் வலம் வரும். அதற்கு முன்னதாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. 

    ×