என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, தமிழர்கள் இத்தினத்தை திருவிழாவாக கொண்டாடி வருவதாக, திருஞானசம்பந்தரின் "தேவாரப்" பாடல்களில் குறிப்புகள் உள்ளன.
    • கடந்த ஆட்சியில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்ட தைப்பூசத் திருநாளை நாம் கொண்டாடி வருகிறோம்.

    சென்னை :

    மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    "முருகனைக் கூப்பிட்டு

    முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே!

    உடல் பற்றிய பிணி ஆறுமே!"

    தமிழர் பெருங்கடவுள், அய்யன் முருகனுக்கு உகந்த நாளான "தைப்பூசம்" தினமான இன்று, தமிழகம் கடந்து முருகனை வழிபடும் அனைத்து மக்களுக்கும் "தைப்பூசத் திருநாள்" வாழ்த்துகள். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, தமிழர்கள் இத்தினத்தை திருவிழாவாக கொண்டாடி வருவதாக, திருஞானசம்பந்தரின் "தேவாரப்" பாடல்களில் குறிப்புகள் உள்ளன.

    இத்தனை வரலாற்றுச் சிறப்புமிக்க தினத்தை, தமிழக அரசு "அரசு விடுமுறையாக" அறிவிக்க வேண்டும் என்று, நாம் மேற்கொண்ட "வேல் யாத்திரையின்" போது வைத்த கோரிக்கையை ஏற்று, கடந்த ஆட்சியில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்ட தைப்பூசத் திருநாளை நாம் கொண்டாடி வருகிறோம் என கூறியுள்ளார்.

    • மக்களிடம் நன்கு பரிச்சயமான தலைவராக கமல் உள்ளார்.
    • இதுதொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்கு குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை எதிர் கொள்ள ஆயத்தமாகி வருகிறது.

    இதற்கு முன்பு நடை பெற்றுள்ள சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களை தனித்தே சந்தித்த கமல்ஹாசன் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளார்.

    கடந்த ஆண்டு நடை பெற்ற ஈரோடு இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கமல்ஹாசன், தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகளோடு இணக்கமாகவே செயல்பட்டு வருகிறார்.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுவது 100 சதவீதம் உறுதியாகி உள்ளது.

    இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே வெளியாக வேண்டியது உள்ளது. இப்படி கூட்டணி உறுதியானாலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்பது இன்னும் முடிவாகவில்லை.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் கமல் கட்சிக்கு ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதனை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மறுக்கிறார்கள்.

    இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் சேர்ந்து பயணிக்கும்போது கூட்டணிக்கு மிகப்பெரிய பலம் கிடைக்கும். எங்கள் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் பிரசாரம் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை கூட்டணிக்கு நிச்சயம் கைக்கொடுக்கும். இதனை யாரும் மறுக்க மாட்டார்கள். கமல்ஹாசனின் பேச்சை கேட்பதற்கு மக்கள் அதிக அளவில் கூடுவார்கள். மக்களிடம் நன்கு பரிச்சயமான தலைவராக கமல் உள்ளார்.

    சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் குறிப்பிடத் தக்க அளவுக்கு வாக்குகளை வாங்கி எங்களது ஓட்டு வங்கி என்ன? என்பதை நிரூபித்துள்ளோம்.

    எனவே 3 தொகுதிகளை கேட்டு வாங்குவது என்பதில் உறுதியாக உள்ளோம். ஒரு சீட் மட்டும் கொடுத்தால் அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதில் கட்சியினர் உறுதியாக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன்மூலம் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 3 தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என்பதில் கமல்ஹாசன் உறுதியுடன் இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதுதொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்கு குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை கமல்ஹாசன் விரைவில் வெளியிட உள்ளார்.

    • முதல் கட்டமாக இன்று தேர்தல் அறிக்கைக் குழு அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் கூடியது.
    • எத்தனை பக்கங்கள் கொண்டதாக அறிக்கை இடம் பெற வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை போன்ற பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    அ.தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரசாரக் குழு, விளம்பரக் குழு, தொகுதி பங்கீட்டு குழுக்கள் அறிவிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து முதல் கட்டமாக இன்று தேர்தல் அறிக்கைக் குழு அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் கூடியது.

    அக்குழுவில் இடம் பெற்றுள்ள தலைமை நிர்வாகிகள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, பா.வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், வைகை செல்வன் ஆகிய 10 பேர் கூடி ஆலோசித்தனர்.

    பாராளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு அளிக்கப்படும் வாக்குறுதிகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறக்கூடிய வகையிலான திட்டங் களை தேர்தல் அறிக்கையில் இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

    தேர்தல் அறிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தயாரிப்பது குறித்து பேசினார்கள். எத்தனை பக்கங்கள் கொண்டதாக அறிக்கை இடம் பெற வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டது.

    பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முதன் முறையாக பாராளுமன்றத் தேர்தலை அ.தி.மு.க. சந்திக்க இருப்பதால் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கையை தயார்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    • பாரதியாரின் கனவினை பிரதமர் மோடி முன்னெடுத்து செல்கிறார்.
    • தமிழகத்திற்கு உண்மையான, முழுமையான வளர்ச்சி என்ன என்பதை பாரத பிரதமர் மோடி செய்து காட்டுவார்.

    சீர்காழி:

    பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    154-வது தொகுதியாக சீர்காழிக்கு நேற்றுவந்தார். பின்னர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது

    2024-ல் மூன்றாவது முறையாக பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு யாத்திரையில் பங்கேற்றுள்ளீர்கள். திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வார், நந்தனார் போன்ற மகான்கள் பிறந்த ஊரில் மகான்களின் உருவபடத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு வந்துள்ளேன். நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த ஊர். சுதந்திர தாகம் தீட்டிய நீலகண்டபிரம்மச்சாரிக்கு ஒரு வேளை சாப்பிட உணவு இல்லை என பாரதியாரிடம் உணவுகேட்டார்.

    அப்போது முண்டாசு கவிஞர் பாரதியார் தனி மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என நீலகண்டபிரம்மச்சாரிக்காக பாடலை பாடினார். பாரதியாரின் கனவினை பிரதமர் மோடி முன்னெடுத்து செல்கிறார்.

    சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் கோவில் வளாகத்தில் ஐம்பொன் சிலைகள், தமிழகத்தின் அரிதான 410, தேவார செப்பேடுகள் கிடைக்கப் பெற்றது. தமிழகத்தின் பாரம்பரிய சின்னங்கள். இவைகள் காலத்தின் பொக்கிஷம். கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள், தேவார செப்பேடுகள் ஆகியவற்றை ஸ்ரீ சட்டை நாதர் திருக்கோவிலுக்கு உள்ளேயே தான் வைக்க வேண்டும். தவிர மியூசியத்தில் இருக்க கூடாது.

    மயிலாடுதுறையை சுற்றிலும் நவகிரக கோவில்கள், சைவ வைணவ தளங்கள் ஆன்மீகவாதிகள் குடியிருக்க கூடிய எம்பி தொகுதியாக உள்ளது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் வரும் தேர்தலில் பா.ஜனதா வெற்றி வாய்ப்பு கொடுத்தால் இந்தியாவின் ஆன்மீக தலங்களாக மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணத்தை மாற்றி காட்டுவோம். தமிழகத்திற்கு உண்மையான, முழுமையான வளர்ச்சி என்ன என்பதை பாரத பிரதமர் மோடி செய்து காட்டுவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் நடைபெற உள்ளது.
    • தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு சன்மார்க்க சங்கத்தினர்களால் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் வடலூரில் நடைபெறுகிறது.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் கிராமத்தில் உள்ள அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச விழா ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு 153-வது தைப்பூச விழா நடைபெற்றது. இதன் தொடக்கமாக கடந்த 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதல் நடைபெற்றது.

    20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை ஞான சபையில் அருட்பா முற்றோதல் நடைபெற்றது.

    நேற்று (24-ந்தேதி) காலை 5 மணி மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழியிலும், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்திலும், தருமச்சாலையிலும் சன்மார்க்க கொடி ஏற்றம் நடைபெற்றது.

    ஞானசபையில் கொடி ஏற்றம் காலை 10 மணிக்கும், பார்வதிபுரம் கிராம மக்கள் சார்பில் நடைபெற்றது. இரவு தருமச்சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிவும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

    தைப்பூச திருவிழா இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது.

    அப்போது சன்மார்க்க அன்பர்கள் பக்தி பரவசத்துடன் "அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி" என்கிற மகாமந்திர ஒலி ஞானசபை திடல் எங்கும் ஓங்கி ஓலித்தது.

    இதனை காண தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள், லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரண்டு வந்து ஜோதி தரிசனம் பார்த்தனர். மேலும், வெளிநாட்டினரும் வடலூருக்கு வந்து ஜோதி தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு தருமச்சாலை மேடையில் சிறப்பு நிகழ்ச்சிகள் மாவட்ட அறநிலையத்துறையின் அதிகாரி முன்னிலையில் சன்மார்க்க அறிஞர்கள் பேசினார்கள்.

    இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணி, 1 மணிக்கு ஜோதி தரிசனம் நடந்தது. தொடர்ந்து இரவு 7 மணி, 10 மணி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணிக்கும் 7 திரை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கிறது.

    வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் நடைபெற உள்ளது. அப்போது வடலூர் ஞான சபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.

    தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு சன்மார்க்க சங்கத்தினர்களால் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் வடலூரில் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலையம் செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார் மற்றும் பார்வதிபுரம், மேட்டுக்குப்பம், கருங்குழி, மருதூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில் வடலூரில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்பட்டன.

    • இன்று காலை சிகிச்சை பலனின்றி சரவணக்குமார் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார்.
    • பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள வச்சகாரப்பட்டி காமராஜர் புரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஆர்.ஆர். நகர் பகுதியில் உள்ளது. நேற்று காலை ஆலையில் உள்ள ஒரு அறையில் ஊழியர்கள் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்து கலவையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 4 அறைகள் தரைமட்டமானது. கன்னி சேரி புதூரை சேர்ந்த காளிராஜ் (வயது 20), முதலிபட்டியைச் சேர்ந்த வீரக்குமார் (50) ஆகிய 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    இனாம் ரெட்டிய பட்டியை சேர்ந்த சுந்தர மூர்த்தி (18), தம்ம நாயக்கன் பட்டியை சேர்ந்த சரவண குமார் (25) ஆகியோர் தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஆபத்தான நிலையில் 2 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சரவணக்குமார் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

    வெடி விபத்து தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் முருகேசன், குத்தகைதாரர் முத்துக்குமார், மேலாளர் கருப்பசாமி(50) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் கருப்ப சாமி கைது செய்யப்பட்டார்.

    • சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் உள்ள மோட்டார் அறையில் பட்டாசு மற்றும் பொட்டு வெடி தயார் செய்து வந்துள்ளார்.
    • இன்று காலை அந்த மோட்டார் அறையில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் அரசின் அனுமதி பெற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வந்தபோதிலும், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையிலும், சட்டவிரோதமாகவும் பட்டாசு தயாரிப்பில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லாத காரணத்தால் அவ்வப்போது ஏற்படும் விபத்துகளில் விலையில்லா உயிர்கள் பறிபோவது தடுக்க முடியாததாகி வருகிறது. அதேபோல் இன்று காலை நடந்த வெடிவிபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    சாத்தூரை அடுத்த சின்ன கொல்லப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் கழுகுமலையை சேர்ந்த ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. தற்போது விவசாயம் எதுவும் செய்யப்படாத நிலையில் அவர் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    மேலும் சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் உள்ள மோட்டார் அறையில் பட்டாசு மற்றும் பொட்டு வெடி தயார் செய்து வந்துள்ளார். அங்கு ரகசியமாக விவசாய வேலை பார்ப்பதற்கு ஆட்களை அழைத்து வருவது போன்று சிலரை அழைத்து வந்து இந்த சட்டவிரோத பட்டாசு தயாரிப்பை நடத்தி வந்துள்ளார்.

    இந்தநிலையில் இன்று காலை அந்த மோட்டார் அறையில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அடுத்த ஒருசில விநாடிகளில் அந்த அறை முழுவதுமாக இடிந்துவிழுந்து தரைமட்டமானது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ள விவசாய நிலத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் ஓடிவந்தனர்.

    மேலும் இதுதொடர்பாக தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தக வல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றி பார்த்தபோது, அங்கு வாலிபர் ஒருவர் உடல் சிதறிய நிலையில் இறந்து கிடந்தார்.

    போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சட்டவிரோத பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதும், அதில் சிக்கி பலியானது சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டியை சேர்ந்த அஜித் (வயது 27) என்பதும் தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்த ராஜ கோபாலை தேடி வருகிறார்கள்.

    • அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு திருப்பரங்குன்றம்.
    • சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்.

    திருப்பரங்குன்றம்:

    தமிழ்க்கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு என்ற பெருமை கொண்டது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு தைப்பூச திருவிழாவை யொட்டி அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி, பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்தும், நீண்ட அலகு குத்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தனர்.

    இதில் இலவச தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனத்தில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத் திருவிழாவையொட்டி மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன.

    இதேபோல மூலஸ்தானத்தில் உள்ள கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. திருப்பரங்குன்றத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மலைக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள பழனியாண்டவர் கோவிலில் பழனியாண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இங்கு தைப்பூசத்தை முன்னிட்டு பழனி ஆண்டவருக்கு பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றன. இதில் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்சோலை எனப்படும் சேலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 16-ந்தேதி கொடியேற்றம் நடந்தது. அப்போது முதல் தினமும் சுவாமி சிம்மாசனம், பூத, அன்ன, காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும், பூச்சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

    9-ம் திருவிழாவான நேற்று உற்சவமூர்த்திக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி தங்கத் தேரில் எழுந்தருளி, மாலையில் யாகசாலை பூஜை நடைபெற்று வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு ஆனார். 10-ம் திருவிழாவான இன்று (25-ந்தேதி) காலை 5 மணிக்கு யாக சாலை பூஜைகள், தீபாராதனை நடந்தது. காலை 10 மணிக்கு சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடும், 10.30 மணிக்கு மேல் 10.45 மணிக்குள் தீர்த்தவாரி தைப்பூசம், மகா அபிஷேகம், யாகசாலை கலச அபிஷேகம் நடைபெற்றது.

    • தை மாத பவுர்ணமியை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று இரவு 10.06 மணிக்கு தொடங்கி, இன்று இரவு 11.22 மணிக்கு நிறைவடைகிறது.

    கிரிவலத்தையொட்டி தமிழகம் மட்டும் இன்றி வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிய தொடங்கினர்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.

    கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கிலோ மீட்டர் தூரமும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்டலிங்க சன்னதிகள், அடி அண்ணாமலை திருக்கோவில், இடுக்குப் பிள்ளையார் கோவில்களை வழிபட்டு கிரிவலம் சென்றனர்.

    தை மாத பவுர்ணமியை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும், பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் ஆகியவை நேற்றும், இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பொது தரிசனம் மட்டும் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இன்று முதல் வருகிற 28-ந்தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், கிரிவல பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது.


    எனவே, அருணாசலேஸ்வரர் கோவில் வெளி பிரகாரம் வரை பக்தர்கள் தரிசன வரிசையில் காத்திருந்தனர்.

    தொடர்ந்து இன்றும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

    திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, தைப்பூச நட்சத்திரம் இன்று காலை 9.14 மணிக்கு தொடங்கியது.

    எனவே, கிரிவலப் பாதை யில் உள்ள ஈசான்ய குளத்தில் இன்று காலை தீர்த்தவாரி நடந்தது.

    இதைத் தொடர்ந்து, தவில், நாதஸ்வரம் இசை முழங்க ஈசான்ய குளக்கரையில் அண்ணாமலையார் எழுந்தருளினார். வரும் மாசி மகத்தன்று, பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதியில் வல்லாள மகாராஜாவுக்கு நடைபெறும் திதி மற்றும் தீர்த்தவாரியில் சந்திரசேகரர் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்.

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருவதால் அவை டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது.
    • இனிவரும் நாட்களில் சரக்கு வரத்தை பொருத்து அவற்றின் விலையில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்காக தினமும் கொண்டு வரப்படுகிறது. இதனை சுற்று வட்டார வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

    பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கடந்தாண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சின்னவெங்காயம் வரத்து அதிகமாக இருந்ததால் அந்த நேரத்தில் அவற்றின் விலை ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை இருந்தது. பின்னர் மழைக்காலம் தொடங்கியதும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வரத்து குறைய ஆரம்பித்தது. எனவே சின்ன வெங்காயத்தின் விலை கடந்த அக்டோபர் மாதம் கிடுகிடுவென உயர்ந்தது. இதற்கிடையே நவம்பர் மாதத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக அறுவடை பாதிக்கப்பட்டதால், ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.100 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்து மழைப்பொழிவு குறைந்து உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை மீண்டும் தொடங்கியது. மேலும் கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் ஆந்திராவில் இருந்தும் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக பொள்ளாச்சி மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை மளமளவென குறைய தொடங்கி உள்ளது. அங்கு தற்போது மொத்த விலைக்கு ஒரு கிலோ சின்ன வெங்காயம் முதல் தரம் அதிகபட்சமாக ரூ.30-க்கும், இரண்டாவது தரம் ரூ.20-க்கும் விற்பனையாகி வருகிறது.

    இதுதொடர்பாக பொள்ளாச்சி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருவதால் அவை டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை கடும் சரிவை சந்தித்து உள்ளது. இனிவரும் நாட்களில் சரக்கு வரத்தை பொருத்து அவற்றின் விலையில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும் என தெரிவித்து உள்ளனர்.

    • போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் எதிரில் 2 மாடிகளை கொண்ட பங்களா வீடு ஒன்றை சசிகலா கட்டி உள்ளார்.
    • அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் பங்கேற்கவில்லை.

    சென்னை:

    சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தவர் சசிகலா. அவரது மரணத்துக்கு பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளரானார். பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

    சிறை தண்டனை முடிந்து அவர் வெளியில் வருவதற்குள் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மாற்றங்களால் அந்த கட்சிக்குள் சசிகலாவால் அதிகாரம் செலுத்த முடியாமல் போய் விட்டது. இருப்பினும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரிலேயே சசிகலா அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

    தனது ஆதரவாளர்களை அடிக்கடி சந்தித்து பேசி வரும் சசிகலா சுற்றுப் பயணத்தையும் மேற்கொண்டு வருகிறார். பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வினரை ஒன்றிணைப்பேன் என்று கூறி வரும் சசிகலா தி.நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வந்தார்.

    இந்த நிலையில் போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் எதிரில் 2 மாடிகளை கொண்ட பங்களா வீடு ஒன்றை சசிகலா கட்டி உள்ளார். வருமான வரித்துறையினர் அந்த வீட்டை சில நாட்கள் முடக்கி வைத்திருந்தனர். கோர்ட்டு நடவடிக்கைகள் முடிவடைந்து சிக்கல்கள் தீர்ந்து உள்ள நிலையில் சசிகலா நேற்று புதிய வீட்டில் பால் காய்ச்சினார். அவரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கிரகபிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் பங்கேற்கவில்லை. நேற்று காலையில் கிரகபிரவேசம் முடிவடைந்துள்ள நிலையில் சசிகலா இனி போயஸ்கார்டனில் உள்ள புதிய வீட்டில் இருந்தபடியே அரசியல் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    2 மாடிகளை கொண்ட வீட்டில் மாடியின் ஒரு பகுதியில் 500 பேர் அமரும் வகையில் கூட்ட அரங்கம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. தனது ஆதரவாளர்களின் கூட்டத்தை வீட்டிலேயே கூட்டி ஆலோசித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்திலேயே சசிகலா தனது வீட்டில் அரசியல் கூட்ட அரங்கை கட்டி உள்ளார்.

    இதனால் சசிகலாவின் அரசியல் பணிகள் போயஸ் கார்டனில் இருந்து இனி வேகமெடுக்கும் என்றே சசிகலா ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தாம் உருவாக்கிய படைப்பிரிவுகளுக்கு காந்தி ரெஜிமெண்ட், நேரு ரெஜிமெண்ட், ஆசாத் ரெஜிமெண்ட் என்று பெயர்களை சூட்டினார்.
    • தேசப்பிதா மகாத்மா காந்தியை இழிவுபடுத்திய கவர்னர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 127-வது பிறந்த நாள் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, நேதாஜிக்கு பெருமை சேர்க்கிறோம் என்ற பெயரில், மாவீரர் நேதாஜியின் வரலாற்றையே சிறுமைப்படுத்தி பேசியிருக்கிறார். 2-ம் உலகப் போருக்குப் பின்பு 1942-ல் மகாத்மா காந்தி தொடங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கம் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை.

    நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவம் பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போரிட்டதால் தான் ஆங்கிலேயர்கள் நாட்டுக்கு விடுதலை அளிக்கின்ற நெருக்கடிக்கு உள்ளானார்கள் என்று கவர்னர் தனது உரையில் குறிப்பிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

    பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இந்திய தேசிய ராணுவத்தை கட்டி எழுப்பிப் போர் பிரகடனம் செய்த மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தாம் உருவாக்கிய படைப்பிரிவுகளுக்கு காந்தி ரெஜிமெண்ட், நேரு ரெஜிமெண்ட், ஆசாத் ரெஜிமெண்ட் என்று பெயர்களை சூட்டினார்.

    இந்திய தேசிய ராணுவம், ஐ.என்.ஏ. போர்முனையில் நின்ற போது, 1944 செப்டம்பர் 22-ம் நாள் மாவீரர் நேதாஜி வீரமுழக்கமிட்ட உரையில் "தேசப்பிதாவே! மகாத்மாவே! இந்தியாவின் விடுதலைக்கான இந்த புனிதப் போரில் எங்களுக்கு உங்களின் மேலான ஆசியை தாருங்கள்; வாழ்த்துக்களை வழங்குங்கள்" என்று மானசீகமாக மகாத்மா காந்திக்கு வேண்டுகோள் வைத்து ஆற்றிய உரை நெஞ்சத்தை நெக்குருக செய்யும் உணர்ச்சியின் வெளிப்பாடு ஆகும்.

    தேசப்பிதா மகாத்மா காந்தியை இழிவுபடுத்திய கவர்னர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×