கோவில் பந்தலுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்மநபர்கள்- போலீஸ் விசாரணை

தென்னை ஓலைகள் அனைத்தும் எரிந்து இதில் சேதமாகின.காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கோவில் பகுதியில் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட தடயவியல் நிபுணர்கள்.
கோவில் பகுதியில் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட தடயவியல் நிபுணர்கள்.
Published on

மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் காரமடை நகராட்சிக்குட்பட்ட 15-வது வார்டு மங்களக்கரை புதூரில் வீரசென்னியம்மன் கோவில் உள்ளது.

கெண்டேபாளையம், மருதூர், ராமகேவுண்டன் புதூர், கீரணத்தம், கீரணத்தம் புதுப்பாளையம் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து இந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

புரட்டாசி மாதம், மார்கழி மாதங்களில் இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த நிலையில் இந்த கோவில் முன்பு தென்னை ஓலையில் பந்தல் அமைத்து அதன்மேல் தகர சீட் அமைக்கப்பட்டிருந்து.

இன்று அதிகாலை 2 மணியளவில் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் தீ பற்றி மள, மளவென எரிந்து கொண்டிருந்தது. தென்னை ஓலைகள் அனைத்தும் எரிந்து இதில் சேதமாகின. இதனை பார்த்த அப்பகுதி பொது மக்கள் விரைந்து சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் சம்பவம் குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் கேன் ஒன்று கிடந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் திறந்து பார்த்த போது பெட்ரோல் வாசனை வந்தது. யாரோ மர்மநபர்கள் அதிகாலை நேரத்தில் பெட்ரோலை கொண்டு வந்து ஊற்றி கோவில் பந்தலுக்கு தீ வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கோவில் பந்தலுக்கு தீ வைத்த மர்மநபர்கள் யார்? எதற்காக இந்த செயலில் ஈடுபட்டனர் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் காரமடை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com