search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inscriptions"

    • 2,500 ஆண்டுகளுக்கு முன்பே பெரும் சிறப்போடு திகழ்ந்த நாடு காங்கயம் நாடு.
    • தமிழா்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சடங்குகளிலும் மண் பானைகள் முக்கிய இடம் பெறுகின்றன.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்டம் காங்கயம் வட்டத்துக்குட்பட்ட பரஞ்சோ்வழியில் உள்ள மகாதேவா் நட்டுராமந்தா் என்னும் மத்தியபுரீஸ்வரா், வீரநாராயண பெருமாள் கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த 2 கோவில்களிலும் திருப்பூா் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநா் ரவிகுமாா், பொறியாளா் பொன்னுசாமி ஆகியோா் கள ஆய்வு மேற்கொண்டு பழமையான இரு கல்வெட்டுகளை கண்டறிந்தனா்.

    இது தொடா்பாக ஆய்வு மையத்தின் இயக்குநா் ரவிகுமாா் கூறியதாவது:-

    பண்டைய கொங்கு மண்டலத்துக்குட்பட்ட 24 நாடுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகத்தால் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே பெரும் சிறப்போடு திகழ்ந்த நாடு காங்கயம் நாடு.

    இந்த நாட்டில் உள்ள பண்டைய 12 கிராமங்களில் பழஞ்சேபளி என்றும், பரஞ்சோ்பள்ளி என்றும் அழைக்கப்பட்ட இன்றைய பரஞ்சோ்வழியும் ஒன்றாகும். இங்குள்ள மத்தியபுரீஸ்வரா் கோவிலின் அம்மன் சன்னதி முன் மண்ணில் புதைந்திருந்த பெரிய தூண் கல்லை எடுத்து ஆய்வு செய்தபோது கி.பி.11-ம் நூற்றாண்டை சோ்ந்த கிரந்த எழுத்துகளுடன் கூடிய மந்திர குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளதை அறிய முடிந்தது.

    220 செ.மீ., உயரம், 50 செ.மீ., அகலம், 20 செ.மீ., கனம் கொண்ட பெரிய கல்லில் நான்கு பக்கங்களிலும் குறியீடுகளும், கிரந்த எழுத்துகளும் பொறிக்கப்பட்டுள்ளன. முதல் பக்கத்தில் இரண்டு குத்துவிளக்குகள், சூலம், சங்கு மற்றும் சந்திரன் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. எழுத்துகளின் உயரம் 60 செ.மீ., ஆகும்.

    இந்த கிரந்த எழுத்துகளை வாசித்த இந்திய வரலாற்று பேராசிரியா் சுப்பராயலு, கல்வெட்டின் 4 பக்கங்களிலும் ஹ்ர்ரிம், ஹஸ்த்தா, ஹஸ்ரா, ஷாம், லம் போன்ற சொற்களே திரும்ப திரும்ப வருகின்றன என்றாா்.

    பொதுவாக இவ்வகை மந்திரக் கல்லை வழிபடுவதால் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படும் நோய் குணமாகும் என்பது நம்பிக்கையாகும். எழுத்து அமைப்பை வைத்து பாா்க்கும்போது இது கி.பி. 11-ம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகும்.

    அதேபோல, வீரநாராயண பெருமாள் கோவிலில் புதைந்திருந்த ஒரு கல்லை வெளியே எடுத்து ஆய்வு செய்தபோது அதில் 3 பக்கங்களிலும் தமிழ் எழுத்துகள் இருப்பதை காண முடிந்தது. 80 செ.மீ., உயரம், 50 செ.மீ., அகலம், 20 செ.மீ., கனம் கொண்ட இந்த கல்லில் 3 பக்கங்களில் வரலாற்று சிறப்புமிக்க செய்திகள் உள்ளன.

    தமிழா்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சடங்குகளிலும் மண் பானைகள் முக்கிய இடம் பெறுகின்றன. கோவில்களிலும் இறைவனுக்கு மண்பானையிலேயே அமுது செய்து படைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மண் பானைகளை உருவாக்கும் குயவா்களை, வேட்கோவா், வேள்கோ என்றெல்லாம் நமது இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

    இந்த கல்வெட்டில் முதல் பக்கத்தில் 12 வரிகளும், இரண்டாம் பக்கத்தில் 9 வரிகளும், மூன்றாம் பக்கத்தில் 4 வரிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் வேட்கோவா்களுக்கு வரி விதித்தது பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது.

    அதாவது விளம்பி வருஷம் மாசி மாதம் 18-ம் நாள் ஸ்ரீ மன் கும்பள அண்ணாா்கள் இப்பகுதியை திம்மராசன் ஆட்சியின் கீழ் அதிகாரம் செய்தபோது, பரஞ்சோ்பள்ளி வீர நாராயண பெருமாளுக்கு திருநந்தா தீபம் எரிப்பதற்காக கூத்தாா் சுங்கம் என்னும் வேட்கோவா் மண்பானை செய்ய பயன்படும் ஒரு சக்கரத்துக்கு அன்று விதிக்கப்பட்ட வரிப்பணம் நான்கை சந்திரன் உள்ளவரை கொடுத்துள்ள செய்தியை அறிய முடிகிறது.

    இதன் மூலம் அன்று மண்பானை தொழில் சிறப்புற்று இருந்ததும், அதற்கு வரி விதிக்கப்பட்டு இருந்ததையும் நாம் அறிய முடிகிறது. எழுத்து அமைப்பை வைத்து பாா்க்கும் போது இது கி.பி.16-ம் நூற்றாண்டை சோ்ந்ததாகும் என்றாா்.

    • கொங்கு நாட்டை கொங்குச்சோழர்கள், பிற்காலச் சோழர்கள் ஆட்சி செய்துள்ளனர் என்பதற்கு ஏராளமான சான்றுகளும், கல்வெட்டுகளும் கிடைக்க பெற்றுள்ளது.
    • ஸ்ரீ வீரபாண்டியன் திரிபுவனச் சக்கரவர்த்தி சாசனம், தானம் எனவும் கல்வெட்டெழுத்துக்கள் காணப்படுகிறது.

    உடுமலை

    தென் கொங்குப்பகுதியில் சேர, சோழர்கள் மட்டுமல்லாமல் பாண்டியர்கள் உட்பட மூவேந்தர்களும் ஆட்சி செய்துள்ளதற்கான கல்வெட்டுகள் கிடைத்துள்ளதாக உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

    மன்னர்கள் ஆட்சி செய்த காலம், அவர்கள் ஆண்ட பகுதி, வழங்கிய தானங்கள் உள்ளிட்ட பல சரித்திர ஆதாரங்கள் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றன. அந்தவகையில் கி.பி. 8-ம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு இறுதி வரையிலும் கொங்கு நாட்டை கொங்குச்சோழர்கள், பிற்காலச் சோழர்கள் ஆட்சி செய்துள்ளனர் என்பதற்கு ஏராளமான சான்றுகளும், கல்வெட்டுகளும் கிடைக்க பெற்றுள்ளது.

    இதற்கு எடுத்துக்காட்டாக, கரைவழி பகுதியில் கொழுமம், குமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, காரத்தொழுவு, கடத்தூர் ஆகிய பகுதிகளில் வீரசோழன், வீரசோழ கலமூர்க்கன், விக்கிரம சோழன், அபிமான சோழ ராஜாதிராஜன், உத்தம சோழ வீரநாராயணன், முதல் குலோத்துங்க சோழன், வீரராசேந்திர சோழன், இரண்டாம் விக்கிரம சோழன் ஆட்சி செய்துள்ளதற்கான கல்வெட்டு சான்றுகள் ஏராளமாக உள்ளது.

    மடத்துக்குளத்தையடுத்த கண்ணாடிப்புத்தூர் பகுதி மட்டும் வீரபாண்டிய சதுர்வேதி மங்கலம் எனும் பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் பெயர் கொண்டதாக உள்ளது. அத்துடன் அதற்கு ஆதாரமான கல்வெட்டுகளும் இங்கு இருக்கின்றன. மேலும் கி.பி. 960 முதல் 980 வரை அமரபுயங்கன் பாண்டியன் எனும் பாண்டிய மன்னனின் ஆட்சிக்காலத்தில் தான் சோமவாரப்பட்டி சிவனியத்தலம் கற்கோயில் உருவாக்கப்பட்டதால் அம்மன்னனுடைய பெயரில் அமரபுயங்கீசன் என்னும் பெயரில் அந்த கோவில் வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. அது போல சிஞ்சுவாடி பகுதியில் ஒரு கல்வெட்டு உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினரால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீ விக்கரம சோழன் தெவற்கு பங்குனி எனவும், ஸ்ரீ வீரபாண்டியன் திரிபுவனச் சக்கரவர்த்தி சாசனம், தானம் எனவும் கல்வெட்டெழுத்துக்கள் காணப்படுகிறது.இதில் பெரும்பாலான எழுத்துக்கள் சிதிலமடைந்து இருக்கின்றன.

    இருந்தாலும் அதில் உள்ள, தெரியும் கல்வெட்டு எழுத்துக்களை வைத்து பார்த்தால் வீரபாண்டியன், ஆட்சியாண்டை குறிப்பதாகவும், நில தானம் செய்ததற்கான கல்வெட்டெழுத்துக்கள் என்பது தெரிய வருகிறது.சுமார் 500 முதல் 600 ஆண்டுகள் முந்தைய கல்வெட்டெழுத்து என்பதால் இது பிற்கால பாண்டியர்கள் 12 அல்லது 13-ம் நூற்றாண்டு கல்வெட்டாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    தென்கொங்குப் பகுதி வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதி என்றும், இதற்கு ஆழமான வரலாறுகள் இருப்பதையும் கொழுமம் பகுதியை சேரர்கள் ஆட்சி செய்ததற்கான சான்றுகள் இருக்கும் போது, கடத்தூர், சோழமாதேவி, காரத்தொழுவு, கண்ணாடிப்புத்தூர் பகுதிகளில் சோழர் ஆட்சி செய்தமைக்கான சான்றுகள் இருக்கும் போது, பாண்டியர்களும் கொங்குப் பகுதியை ஆட்சி செய்துள்ளனர் என்பதற்கு இந்தக் கல்வெட்டெழுத்துகள் உறுதியான சான்றுகளாக இருக்கின்றன.

    இந்தத் தகவலை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் முனியப்பன், வரலாற்றுப் பேராசிரியர் மதியழகன், வரலாற்று ஆசிரியர் ராபின், வி.கே. சிவகுமார், அருட்செல்வன் ஆகியோர் தெரிவித்தனர்.

    • கல்வெட்டுகள் நிரம்ப பெற்ற தலமாக பண்ருட்டி திருவதிகை தலம் உள்ளது.
    • மகேந்திரவர்மன் திருவதிகை கோவிலைக் கட்டினான்.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான எல்லா ஆலயங்களிலும் நிச்சயம் கல்வெட்டுகள் இருக்கும். அந்த கோவிலை கட்டியது யார்? கோவிலின் நித்திய பூஜைக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது? யார்-யார் திருப்பணி செய்துள்ளனர்? என்பன போன்ற விவரங்களை தெரிவிக்கும் காலக் கண்ணாடியாக இந்த கல்வெட்டுக்கள் தான் உள்ளன.

    இந்த கல்வெட்டுக்கள் மட்டும் இல்லையெனில் தமிழ் மன்னர்களின் ஆன்மிக பணிகள் நமக்குத் தெரியாமலே போய் இருக்கும். இதை நன்கு உணர்ந்திருந்ததால் தான் ஆலயம் தோறும் திருப்பணிகள் செய்த மன்னர்கள் அந்த விபரங்களை கல்வெட்டுக்களில் குறிப்பிட்டு சுவர்களில் பதித்தனர்.

    அத்தகைய கல்வெட்டுகள் நிரம்பப் பெற்ற தலமாக பண்ருட்டி திருவதிகை தலம் உள்ளது. இத்தலத்தில் 4 சுற்றுச்சுவர்கள் பிரமாண்டமாக உள்ளது. இந்த சுவர்கள் முழுவதிலும் கல்வெட்டுகள் உள்ளன.

    தமிழகத்தை ஆண்ட எல்லா மன்னர்களின் கல்வெட்டுக்களும் இங்குள்ளது. பல்லவ மன்னன் இரண்டாம் பரமேசுவரப் போத்தரையன் (கி.பி.705-710) கங்க பல்லவர் (கி.பி.850-882) பிற்கால பல்லவர் (கி.பி.1216-1246) சோழ மன்னர்கள் (கி.பி.907-1273) பாண்டிய மன்னர்கள் (கி.பி.1054-1281) சாளுக்கிய மன்னர்கள் (கி.பி.1473-1492) விஜய நகர மன்னர்கள் (கி.பி.1339-1586) தஞ்சை நாயக்க மன்னர்கள் (கி.பி.1630-1650) ஆகியோரின் ஆட்சிக் காலக் கல்வெட்டுகள் கோவிலில் உளள்ன.

    சில இடங்களில் மட்டுமே இந்த கல்வெட்டுகள் கோர்வையாக, சீராக உள்ளன. பெரும் பாலான இடங்களில் கல்வெட்டு தகவல்கள் குண்டக்க, மண்டக்க... என மாறி, மாறியுள்ளன.

    மற்ற நாட்டு மன்னர்களின் படையெடுப்பால் முதலில் இந்த கல்வெட்டுகள் இடம் மாறியது. பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் இந்த ஆலயத்தை அவர்கள் தங்கள் படை தலமாக மாற்றினார்கள்.

    இத்தகைய காரணங்களால், பல கல்வெட்டுகள் சிதைந்து போனது. என்றாலும் மிஞ்சிய கல்வெட்டுகள் தற்போது நமக்கு ஆயிரம் கதை சொல்வதாக உள்ளன.

    இந்த கல்வெட்டுகளை படிமம் எடுத்து ஆய்வு செய்துள்ள அறிஞர்கள், அந்த தகவல்களை ஒழுங்குபடுத்தி ஏராளமான உண்மைகளை வெளி உலகுக்கு கொண்டு வந்தனர். அந்த வகையில் திருவதிகை திருத்தலம், கல்வெட்டு களஞ்சியமாக இருப்பதை காணலாம்.

    இத்தலத்துக்கு செல்லும் போது சாமி தரிசனம் செய்து முடித்ததும் பிரகாரத்தை வலம் வரும் போது நாலாபுறமும் கண்களை சுழல விட்டு உன்னிப்பாகப் பார்த்தால் ஆங்காங்கே கல்வெட்டுகளை பார்க்க முடியும்.

    பார்க்க வேண்டிய மேலும் 3 இடங்கள்

    திருவதிகை திருத்தலத்தில் வீராட்டனேசுவரரை தரிசனம் செய்ய வருபவர்கள் அருகில் உள்ள மேலும் 3 இடங்களுக்கு சென்று வருவது நல்லது. சித்தவடமடம், குணபர வீச்சரம், வேகாக் கொல்லை ஆகியவையே இந்த 3 இடங்கள் ஆகும்.

    இதில் சித்தவட மடம் என்பது திருவதிகை நகரின் தொடக்கத்திலேயே உள்ளது. இங்குள்ள சிதம்பரேஸ்வரரை வணங்குவது நல்லது.

    திருவதிகைக்கு வடக்குத் திசையில் கடலூர் செல்லும் சாலையில் குணபரவீச்சரம் உள்ளது. சமணராக இருந்து சைவத்துக்கு மாறிய மகேந்திரவர்மன் இந்த கோவிலைக் கட்டினான்.

    அவனுக்கு ''குணபரன்'' என்றும் ஒரு பெயர் உண்டு. அந்த பெயரால் இவ்வாலயம் ''குணபரச்சுவரம்'' என்று அழைக்கப்படுகிறது. தற்போது இடிந்த நிலையில் உள்ள அந்த ஆலயம் ஆதிமூலேச்சுரம் என்றும் கூறப்படுகிறது.

    திருவதிகைக்கு தெற்கே சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் வேகாக் கொல்லை உள்ளது. முப்புரத்தை அழித்த போது ரத்தம் சிந்தியதால் திருவதிகை மண்ணெல்லாம் சிவப்பாக மாறியது.

    இன்றும் இந்த பகுதி மணல் சிவப்பாக இருப்பதை காணலாம். ஆனால் சிவபூஜை செய்ததால் 3 அசுரர்கள் மட்டும் தப்பினார்கள். அவர்கள் தீயில் எரியாத, சுடப்படாத இடம் வேகாக் கொல்லை எனப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் வேகாக் கொல்லை பகுதியில் மணல் வெண்மணலாக இருப்பதை காணலாம்.

    திருவதிகைக்கு செல்பவர்கள், முன்கூட்டியே திட்டமிட்டு தரிசன நேரத்தை தீர்மானித்துக் கொண்டால் திருவதிகை அருகில் உள்ள இந்த 3 இடங்களுக்கும் செல்ல முடியும். இங்கும் நீங்கள் வழிபாடுகள் செய்தால் உங்கள் திருவதிகை பயணம் முழுமையான சிறப்பை பெறும்.

    • கல்வெட்டு மற்றும் சுவடிகள் பாதுகாப்புக்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், விளக்கமளித்தார்.
    • ஹேனாெஷர்லி, வரலாற்று பேராசிரியர் ராபின் ஆகியோர் உடனிருந்தனர்.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் தாலுகா அமராவதி ஆற்றங்கரையில், தொன்மை வாய்ந்த கோவில்கள், கல்வெட்டுகள் உள்ளன.கரைவழி நாடுஎனப்படும் கல்லாபுரம், கொழுமம், கொமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், மடத்துக்குளம், சோழமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் பல்வேறு வரலாற்று சின்னங்கள் உள்ளன.கோவில்கள் மற்றும் இதர பகுதிகளிலுள்ள நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள், அரசின் தொல்லியல்துறை மற்றும் வரலாற்று ஆய்வாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வரலாற்று சிறப்பு மிக்க இக்கல்வெட்டுகளை தமிழக தொல்லியல்துறை ஆய்வாளரும் சுவடிகள் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளருமான சசிகலா ஆய்வு செய்தார்.

    குறிப்பாக காரத்தொழுவு சிவன் கோவிலில், கரைவழி நாட்டு காரத்தொழுவு என்ற வாசகம் இருப்பதையும், 12ம் நுாற்றாண்டில், குலோத்துங்கன், வீரராஜேந்திரன் உள்ளிட்ட மன்னர்கள் அமராவதி ஆற்றங்கரையை உள்ளடக்கிய தென்கொங்கு நாட்டு பகுதிகளை ஆட்சி செய்ததை கல்வெட்டு வாசகங்களை கொண்டு உறுதிப்படுத்தினார்.மேலும் இப்பகுதி ராஜராஜ வள நாடு என கல்வெட்டில், பொறிக்கப்பட்டுள்ள தகவலையும் தெரிவித்தார்.கல்வெட்டு மற்றும் சுவடிகள் பாதுகாப்புக்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், விளக்கமளித்தார்.

    ஆய்வின் போது உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் முனைவர்கள் விஜயலட்சுமி, ேஹனாெஷர்லி, வரலாற்று பேராசிரியர் ராபின் ஆகியோர் உடனிருந்தனர்.

    • தொல்லியல் துறை கல்வெட்டுகள் குறித்தும் தர்காவின் பழமை குறித்தும் ஆய்வு.
    • நாகூர் தர்கா ஒரு வரலாற்று பொக்கிஷம், பல்வகை கலாச்சரத்துக்கு மூல காரணம்.

    நாகப்பட்டினம்:

    நாகை சட்டமன்ற உறுப்பினர்ஷா நவாஸ் தலை மையில் தொல்லியல் துறை சம்பந்தமாக டாக்டர் க.சுபாஷிணிதலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஜெர்மனி, டாக்டர். பாப்பா, டாக்டர். இறைவாணி, ஆய்வாளர் ப்ரீத்தி, மணி வண்ணன்வரலாற்றுப் பயணம் பிரிவு, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் அருங்காட்சியக பிரிவு, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பினர் ஆகியோர் நாகூர் தர்கா வருகை புரிந்து நாகூர் தர்காவின் தொல்லியல் துறை கல்வெட்டுகள் குறித்தும் தர்காவின் பழமையினை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

    நாகூர் தர்கா ஒரு வரலாற்று பொக்கிஷம், பல்வகை கலாச்சரத்துக்கு மூல காரணம். இதற்க்கு அத்தாட்சி நாகூர் தர்காவில் உள்ள கல்வெட்டுகள் என பாராட்டினர்.

    நாகூர் தர்கா பிரசிடன்ட் கலீபா சாஹிப் நாகூர் தர்கா சிறப்பினை பற்றி விளக்கினார். உடன் போர்டு ஆப் டிரஸ்டிகள், முக்கிய பிரமுகர்கள் இருந்தனர்.

    நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷா நவாஸ் நாகூர் தர்கா கந்தூரிக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடதக்கது.

    • வெளிநாட்டு வணிகத்தால் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பே பெரும் சிறப்போடு திகழ்ந்துள்ளது.
    • வட்டெழுத்துக் கல்வெட்டில் விக்கிரம சோழனுடைய தந்தை "கோகலிமூர்க்கன்" பெயர் வந்துள்ளது.

    திருப்பூர்,

    சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளை இணைக்கும் வகையில் பெரு வழிகள் எனப்படும் பழங்கால வணிக பாதைகள் திருப்பூர் மாவட்டம் வழியாக பயணித்த கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.

    இந்தப்பாதைகளை காக்க ஒவ்வொரு பாதையிலும் காவல் வீரர்கள் இருந்ததும், இந்தப் பாதைகளை பயன்படுத்தும் வணிகர்கள், வழியில் அமைந்துள்ள ஆலயங்களுக்கு வரி கொடுத்த சான்றுகளும் ஏராளமாக கிடைத்த வண்ணம் உள்ளன. அதே போல்,மேற்கத்திய நாட்டவர்கள் இங்கு வணிகத்துக்கு வந்து சென்றதும் பதிவாகியுள்ளது.

    இந்நிலையில் பண்டைய கொங்கு 24 நாடுகளான, காங்கேய நாடு, பூந்துறை நாடு, குறுப்பு நாடு என இருந்துள்ளதும், இவை உள்நாட்டு மட்டுமின்றி வெளிநாட்டு வணிகத்தால் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பே பெரும் சிறப்போடு திகழ்ந்துள்ளது. அதில் மிகச் சிறப்படையதாக காங்கேயநாடு உள்ளது. இங்கு "பெரில்" எனப்படும் பச்சைக் கல்லுக்குப் பெயர் பெற்ற படியூரும், சிவன் மலையும் பண்டைய காங்கேய நாட்டில் அமைந்திருந்ததால் இக்கற்களை விலைக்கு வாங்க வணிகர்கள் இங்கு வந்தனர்.

    மேலும் மேற்குக் கடற்கரையில் வந்து இறங்கிய மேலை நாட்டு வணிகர்கள், பேரூர், வெள்ளலூர், காங்கேயம், கரூர் வழியாகப் பூம்புகார் வரை சென்ற பண்டைய புகழ்பெற்ற "இராசகேசரி பெருவழியில்" காங்கேய நாடு அமைந்திருந்ததால் பண்டைய காலத்தில் இது வணிகத்தால் இப்பகுதி சிறப்புற்று விளங்கியுள்ளது. காங்கேய நாட்டில் தொன்மையான ஊர்கள் 12 கிராமங்கள் ஆகும். ஓங்கு புகழோடு விளங்கிய பண்டைய கிராமங்களில் பார்புகழ் "பழஞ்சேபளி" என்றும், பரஞ்சேர்பள்ளி என்றும் அழைக்கப்பட்ட இன்றைய பரஞ்சேர்வழியும் அந்த கிராமங்களில் ஒன்றாகும்.

    தற்போது காங்கேயம் வட்டத்தில் அமைந்துள்ள பரஞ்சேர்வழியில் உள்ள "மகாதேவர் நட்டுராமாந்தார்" என அழைக்கப்படும் மத்யபுரீஸ்வரர் கோவிலில், திருப்பூரில் இருந்து இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த சு.ரவிக்குமார் மற்றும் க.பொன்னுச்சாமி ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வின் போது வரலாற்றுச் சிறப்புமிக்க கி.பி.1038 ம் ஆண்டு வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து ஆய்வு மையத்தின் இயக்குனர் சு.ரவிக்குமார் கூறுகையில், காஞ்சி மாநதி என அழைக்கப்பட்ட நொய்யல் ஆற்றின் தென் கரையிலும், சிவன்மலையில் இருந்து செல்லும் ஓடையின் வட கரையிலும் அமைந்துள்ள ஊர் பரஞ்சேர்வழி. பண்டைய கொங்கு மண்டலத்தில் சைவ,வைணவ மற்றும் சமணம் என முச்சமயங்களும் தழைத்து வளர்ந்த ஊர் பரஞ்சேர்வழி ஆகும். இங்குச் சமணப்பள்ளி இருந்ததற்குச் சான்றாக இன்றும் இங்கு கி.பி.10. ம் நூற்றாண்டைச் சேர்ந்த தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் ஒன்று உள்ளது.

    சமணப் பள்ளிகளில் வாழ்ந்த சமணப் பெரியார்கள் மக்களுக்கும், மாணாக்கர்களுக்கும், துறவிகளுக்கும் அறம் உரைத்து வாழ்ந்திருக்கிறார்கள். உணவு, அடைக்கலம், மருந்து ,கல்வி முதலிய நால்வகைத் தானங்களைச் சமணர்கள், சமணப்பள்ளி மூலம் மேற்கொண்டு இருந்தனர். இங்கு இத்தகைய சமணப்பள்ளி செயல்பட்டதை இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டும் மெய்ப்பிக்கிறது

    இந்தக் கல்வெட்டில் பரஞ்சேர்வழி "பழஞ்சேபளி" என்று குறிப்பிடப்படுகிறது.' பளி' என்பது பண்டு சமணர்கள் வாழ்ந்த இடத்தைக் குறிக்கும் சொல் ஆகும். இந்தக் கல்வெட்டு கொங்கு மண்டலத்தைக் கி.பி.1004 முதல் 1047 வரை சிறப்பாக ஆட்சி செய்த கோனாட்டு அரசர்களில் மூன்றாவதாக வரும் விக்கிரம சோழன் காலத்தை சேர்ந்தது ஆகும்.

    இது அம்மன்னனின் 34-வது ஆட்சியாண்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விக்கிரம சோழனின் கல்வெட்டுகள் ஏற்கனவே அன்னூர், பெரமியம், வள்ளியரச்சல், அகிலாண்டபுரம், அரசம்பாளையம், மூலனூர் மற்றும் திங்களூரில் கிடைத்துள்ளன. இவை அனைத்துமே வட்டெழுத்துக் கல்வெட்டுகள் என்பது ஓர் தனிச்சிறப்பாகும். வட்டெழுத்து என்பது இன்று நாம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துக்களுக்கு முன்பு கி.பி. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.12 ஆம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்த தமிழ் எழுத்து வரிவடிவம் ஆகும்.

    இங்கு நமக்குக் கிடைத்துள்ள வட்டெழுத்துக் கல்வெட்டில் விக்கிரம சோழனுடைய தந்தை "கோகலிமூர்க்கன்" பெயர் வந்துள்ளது. 30 செ.மீ. அகலமும், 90 செ.மீ. உயரமும் கொண்ட இக்கல்வெட்டில் மொத்தம் 17 வரிகள் தான் கிடைத்துள்ளன. கீழ்ப்பகுதி சேதமடைந்துள்ளது. விக்கிரம சோழனுடைய மற்ற வட்டெழுத்துக் கல்வெட்டுகளை ஆய்வு செய்தபோது அது பெரும்பாலும் திருக்கோயில் அல்லது சமணப்பள்ளிக்குக் கொடை அளித்தது பற்றியே வருவதால் இங்கும் 1038-ஆம் ஆண்டு கொடை அளித்தது பற்றி இக்கல்வெட்டு இருக்கலாம் என்றார். 

    ×