search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gunaparan"

    • கல்வெட்டுகள் நிரம்ப பெற்ற தலமாக பண்ருட்டி திருவதிகை தலம் உள்ளது.
    • மகேந்திரவர்மன் திருவதிகை கோவிலைக் கட்டினான்.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான எல்லா ஆலயங்களிலும் நிச்சயம் கல்வெட்டுகள் இருக்கும். அந்த கோவிலை கட்டியது யார்? கோவிலின் நித்திய பூஜைக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது? யார்-யார் திருப்பணி செய்துள்ளனர்? என்பன போன்ற விவரங்களை தெரிவிக்கும் காலக் கண்ணாடியாக இந்த கல்வெட்டுக்கள் தான் உள்ளன.

    இந்த கல்வெட்டுக்கள் மட்டும் இல்லையெனில் தமிழ் மன்னர்களின் ஆன்மிக பணிகள் நமக்குத் தெரியாமலே போய் இருக்கும். இதை நன்கு உணர்ந்திருந்ததால் தான் ஆலயம் தோறும் திருப்பணிகள் செய்த மன்னர்கள் அந்த விபரங்களை கல்வெட்டுக்களில் குறிப்பிட்டு சுவர்களில் பதித்தனர்.

    அத்தகைய கல்வெட்டுகள் நிரம்பப் பெற்ற தலமாக பண்ருட்டி திருவதிகை தலம் உள்ளது. இத்தலத்தில் 4 சுற்றுச்சுவர்கள் பிரமாண்டமாக உள்ளது. இந்த சுவர்கள் முழுவதிலும் கல்வெட்டுகள் உள்ளன.

    தமிழகத்தை ஆண்ட எல்லா மன்னர்களின் கல்வெட்டுக்களும் இங்குள்ளது. பல்லவ மன்னன் இரண்டாம் பரமேசுவரப் போத்தரையன் (கி.பி.705-710) கங்க பல்லவர் (கி.பி.850-882) பிற்கால பல்லவர் (கி.பி.1216-1246) சோழ மன்னர்கள் (கி.பி.907-1273) பாண்டிய மன்னர்கள் (கி.பி.1054-1281) சாளுக்கிய மன்னர்கள் (கி.பி.1473-1492) விஜய நகர மன்னர்கள் (கி.பி.1339-1586) தஞ்சை நாயக்க மன்னர்கள் (கி.பி.1630-1650) ஆகியோரின் ஆட்சிக் காலக் கல்வெட்டுகள் கோவிலில் உளள்ன.

    சில இடங்களில் மட்டுமே இந்த கல்வெட்டுகள் கோர்வையாக, சீராக உள்ளன. பெரும் பாலான இடங்களில் கல்வெட்டு தகவல்கள் குண்டக்க, மண்டக்க... என மாறி, மாறியுள்ளன.

    மற்ற நாட்டு மன்னர்களின் படையெடுப்பால் முதலில் இந்த கல்வெட்டுகள் இடம் மாறியது. பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் இந்த ஆலயத்தை அவர்கள் தங்கள் படை தலமாக மாற்றினார்கள்.

    இத்தகைய காரணங்களால், பல கல்வெட்டுகள் சிதைந்து போனது. என்றாலும் மிஞ்சிய கல்வெட்டுகள் தற்போது நமக்கு ஆயிரம் கதை சொல்வதாக உள்ளன.

    இந்த கல்வெட்டுகளை படிமம் எடுத்து ஆய்வு செய்துள்ள அறிஞர்கள், அந்த தகவல்களை ஒழுங்குபடுத்தி ஏராளமான உண்மைகளை வெளி உலகுக்கு கொண்டு வந்தனர். அந்த வகையில் திருவதிகை திருத்தலம், கல்வெட்டு களஞ்சியமாக இருப்பதை காணலாம்.

    இத்தலத்துக்கு செல்லும் போது சாமி தரிசனம் செய்து முடித்ததும் பிரகாரத்தை வலம் வரும் போது நாலாபுறமும் கண்களை சுழல விட்டு உன்னிப்பாகப் பார்த்தால் ஆங்காங்கே கல்வெட்டுகளை பார்க்க முடியும்.

    பார்க்க வேண்டிய மேலும் 3 இடங்கள்

    திருவதிகை திருத்தலத்தில் வீராட்டனேசுவரரை தரிசனம் செய்ய வருபவர்கள் அருகில் உள்ள மேலும் 3 இடங்களுக்கு சென்று வருவது நல்லது. சித்தவடமடம், குணபர வீச்சரம், வேகாக் கொல்லை ஆகியவையே இந்த 3 இடங்கள் ஆகும்.

    இதில் சித்தவட மடம் என்பது திருவதிகை நகரின் தொடக்கத்திலேயே உள்ளது. இங்குள்ள சிதம்பரேஸ்வரரை வணங்குவது நல்லது.

    திருவதிகைக்கு வடக்குத் திசையில் கடலூர் செல்லும் சாலையில் குணபரவீச்சரம் உள்ளது. சமணராக இருந்து சைவத்துக்கு மாறிய மகேந்திரவர்மன் இந்த கோவிலைக் கட்டினான்.

    அவனுக்கு ''குணபரன்'' என்றும் ஒரு பெயர் உண்டு. அந்த பெயரால் இவ்வாலயம் ''குணபரச்சுவரம்'' என்று அழைக்கப்படுகிறது. தற்போது இடிந்த நிலையில் உள்ள அந்த ஆலயம் ஆதிமூலேச்சுரம் என்றும் கூறப்படுகிறது.

    திருவதிகைக்கு தெற்கே சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் வேகாக் கொல்லை உள்ளது. முப்புரத்தை அழித்த போது ரத்தம் சிந்தியதால் திருவதிகை மண்ணெல்லாம் சிவப்பாக மாறியது.

    இன்றும் இந்த பகுதி மணல் சிவப்பாக இருப்பதை காணலாம். ஆனால் சிவபூஜை செய்ததால் 3 அசுரர்கள் மட்டும் தப்பினார்கள். அவர்கள் தீயில் எரியாத, சுடப்படாத இடம் வேகாக் கொல்லை எனப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் வேகாக் கொல்லை பகுதியில் மணல் வெண்மணலாக இருப்பதை காணலாம்.

    திருவதிகைக்கு செல்பவர்கள், முன்கூட்டியே திட்டமிட்டு தரிசன நேரத்தை தீர்மானித்துக் கொண்டால் திருவதிகை அருகில் உள்ள இந்த 3 இடங்களுக்கும் செல்ல முடியும். இங்கும் நீங்கள் வழிபாடுகள் செய்தால் உங்கள் திருவதிகை பயணம் முழுமையான சிறப்பை பெறும்.

    ×