என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அஸ்வின் 98 டெஸ்டில் விளையாடி 501 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
    • 34 தடவை 5 விக்கெட்டுக்கு மேலும் (இன்னிங்ஸ்), 8 தடவை 10 விக்கெட்டுக்கு மேலும் கைப்பற்றி உள்ளார்.

    சென்னை:

    சென்னை:

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் ஆர்.அஸ்வின். சென்னையைச் சேர்ந்த அவர் இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 2-வது நாள் ஆட்டத்தில் கிராவ்லி விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் அஸ்வின் 500 விக்கெட் கைப்பற்றிய சாதனையை படைத்தார்.

    37 வயதான அஸ்வின் 98 டெஸ்டில் விளையாடி 501 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 34 தடவை 5 விக்கெட்டுக்கு மேலும் (இன்னிங்ஸ்), 8 தடவை 10 விக்கெட்டுக்கு மேலும் கைப்பற்றி உள்ளார்.

    இந்நிலையில், 500-க்கும், 501-வது விக்கெட்டுக்கும் இடையே அஸ்வினுக்கு நிறைய நடந்துவிட்டது என்று அவரது மனைவி பிரீத்தி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உருக்கமாக தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் அஸ்வினின் 500-வது விக்கெட்டை எதிர்நோக்கி இருந்தோம். அது நிறைவேறாத நிலையில் விசாகப்பட்டினம் போட்டியிலும் 500-வது விக்கெட் கிடைக்கவில்லை. அதனால் 499 விக்கெட்டை வீட்டில் இனிப்பை பகிர்ந்து கொண்டாடினோம். 500-வது விக்கெட் அப்படியே அமைதியாக நடந்தது.

    500-க்கும் 501-வது விக்கெட்டுக்கும் இடையே நிறைய நடந்துவிட்டது. அது எங்கள் வாழ்க்கையில் நீண்ட நெடிய 48 மணி நேரமாகும். 500 விக்கெட் வீழ்த்தியது அபாரமான சாதனையாகும். உங்களை (அஸ்வின்) நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம். உங்களை நாங்கள் நேசிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

    • தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்பூரில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • விவசாயிகள் போராட்டம் காரணமாக திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு பரபரப்பு நிலவியது.

    திருப்பூர்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முறியடிக்க மத்திய அரசு கண்ணீர் புகை குண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் மீது தாக்குதலை கண்டித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்பூரில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் மறியலில் ஈடுபட வந்த விவசாயிகள் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

    ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் கூறுகையில்,

    மத்திய பாஜக., அரசால் சமீபத்தில் பாரத ரத்னா விருது கொடுத்து கவுரவிக்கபட்ட எம்.எஸ். சுவாமி நாதன் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ என்ற போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் அறிவித்தனர். இது ஏதோ வட இந்திய விவசாயிகளின் போராட்டம் போல இங்கு சித்தரிக்கபடுகிறது.

    ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான அடிப்படை உரிமை போராட்டம் என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிலர் கோரிக்கைகளின் நியாயத்தை திசை திருப்பி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி பொதுமக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதை தொடர்ந்து செய்துவருகிறார்கள். ஜனநாயக வழியில் போராட வந்த விவசாயிகள் தலைநகர் டெல்லிக்குள் வந்து விடாதபடி சாலைகளில் பெரும் ஆணிகள் பதித்து, கான்கிரீட் தடுப்பரண்கள் அமைத்து, வண்டி வாகனம் செல்லமுடியாதபடி பள்ளங்களை உருவாக்கி உள்ளனர். ஆயிரக்கணக்கான போலீசாரையும் துணை ராணுவ படையினரையும் டெல்லி எல்லை பகுதிகள் முழுவதும் கண்காணிப்பில் ஈடுபடுத்தி உள்ளனர். மேலும் விவசாயிகள் மீது ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீசி உள்ளனர். இது மிகவும் கண்டிக்க த்தக்கது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    விவசாயிகள் போராட்டம் காரணமாக திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு பரபரப்பு நிலவியது.

    • சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகள் செயின்ட் தாமஸ் மவுண்ட் ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ளது.
    • போக்குவரத்து மாற்றங்கள் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகள் செயின்ட் தாமஸ் மவுண்ட் ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ளதால், இப்பணிகளைக் கருத்தில் கொண்டு செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதிகளில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் நாளை (21-ந்தேதி) முதல் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

    ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம் போல் ஆலந்தூர் சுரங்கப்பாதையை நோக்கி இடதுபுறமாக செல்லலாம். இந்த சாலையில் கனரக வாகனங்கள் மட்டும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்.கே.என். ரோடு மற்றும் ரெயில் நிலைய சாலை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் நேராக மவுண்ட் போஸ்ட் ஆபிஸ் நோக்கி செல்ல அனுமதி இல்லை.

    ஆலந்தூர் சுரங்கப்பாதையில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.எஸ்.டி. சாலையில் செல்வதற்கு வலதுபுறமாகவோ அல்லது இடப்புறமாகவோ செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, உழவர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
    • நெல்லுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    * பசிப்பிணி போக்கும் மருத்துவர்களாம் வேளாண் பெருமக்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது.

    * 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, உழவர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

    * டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது இரக்கமற்ற வகையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    * உழவர்களைத் தடுக்கச் சாலைகளில் ஆணியைப் புதைக்கிறது பாஜக அரசு.

    * உழவர்களின் மேன்மைக்கு திட்டங்களை தீட்டுகிறது திமுக அரசு.

    * உழவர் பெருமக்களை திமுக அரசு உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது.

    * உழவர் பெருமக்களது வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டியிருக்கிறோம்.

    * பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு 1,775 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * நெல்லுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * கரும்பு விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு 215 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

    * கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1.50 லட்சம் விவசாயிகளுக்கு, இலவச மின் இணைப்பு. இந்த ஆண்டு மேலும் 50 ஆயிரம் பேருக்கு இலவச மின்சார இணைப்பு வழங்க இருக்கிறோம்.

    * உழவர்கள் மட்டும்தான் வேளாண்மை செய்ய வேண்டும் என்று இல்லை. தொழில்துறையை போல் அனைவரையும் வேளாண்மையை நோக்கி ஈர்க்க வைக்கும் முயற்சித் திட்டங்களில் இந்த நிதிநிலை அறிக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு இருப்பதை அனைவரும் உணரலாம்.

    * மக்களை மட்டுமல்ல, மண்ணுயிர் அனைத்தையும் மேம்படுத்தும் ஆட்சி என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடைபெற்றது.
    • ஆலோசனைக் கூட்டத்தில் பொன்னேரி தேர்தல் துணை வட்டாட்சியர் கனகவல்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பாராளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள், ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் பொன்னேரி தாலுகா அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் தலைமையில் நடைபெற்றது. வட்டாட்சியர் மதிவாணன் முன்னிலை வதித்தார்.

    கூட்டத்தில், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட 311 வாக்குச்சாவடி மையங்களில் 34 பூத்துகளில் அதிக வாக்கு எண்ணிக்கை உள்ளதால் அங்கு போலீசாரை கூடுதலாக நியமிக்கவும், தேர்தலின் போது வாக்குச்சாவடி பணிகளை எவ்வாறு மேற்கொள்வது, கட்டிடங்கள் பாதுகாப்பு , அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடைபெற்றது.

    அப்போது சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் கூறும்போது, அதிக வாக்குகள் உள்ள 34 பூத்துகளில் அதிகாரிகள் மற்றும் போலீசார் நேரில் சென்று ஆய்வு செய்து தேர்தலின் போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொன்னேரி தேர்தல் துணை வட்டாட்சியர் கனகவல்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் முழுமையாக செயலிழந்து இருந்தது.
    • வருவாயை அந்தந்த கோவில்களின் திருப்பணிக்கும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தி வருகின்றோம்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆணையர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி ராஜு, க.ரவிச்சந்திர பாபு மற்றும் ஆர்.மாலா ஆகி யோர் முன்னிலையில் 8 கோவில்ளுக்கு காணிக்கை யாக வரப்பெற்ற 130 கிலோ 393 கிராம் எடையுள்ள பல மாற்று பொன் இனங்களை மும்பையில் உள்ள ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொதுமேலாளர் ரவி ரஞ்ஜனிடம் ஒப்படைத்தார்.

    பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கலைஞரின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பயன்பாட்டிற்கு இயலாத பொன்னினங்களை உருக்கி வங்கியில் முதலீடு செய்து அதன்மூலம் பெறப்படுகின்ற வட்டி தொகையை அந்தந்த கோவிலுக்கு அடிப்படை தேவைகள் மற்றும் திருப்பணிகளுக்கு செலவிடப்பட்டு வந்தது.

    கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் முழுமையாக செயலிழந்து இருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பல கோவில்களில் நூற்றுக்கணக்கான கிலோ கிராம் எடையுள்ள பலமாற்று பொன்னினங்கள் பயன்படுத்த இயலாமல் கிடப்பதை முதலமைச்சரின் கவனத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை கொண்டு சென்றவுடன், கலைஞர் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த உத்தர விட்டதற்கிணங்க ஏற்கனவே பெரியபாளையம், இருக்கன்குடி, திருவேற்காடு, மாங்காடு, திருச்செந்தூர் ஆகிய 5 கோவிலில் இருந்து பலமாற்று பொன்னினங்கள் மும்பையில் இருக்கின்ற மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கப்பட்டு 344 கிலோ 334 கிராம் எடை கொண்ட சுத்தத் தங்கம் கிடைக்கப் பெற்றவுடன் அதனை தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததில் வட்டியாக ஆண்டிற்கு ரூ.4.31 கோடி தற்போது கிடைக்கின்றது. இந்த வருவாயை அந்தந்த கோவில்களின் திருப்பணிக்கும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தி வருகின்றோம்.

    மேலும், இந்து சமய அற நிலையத்துறை வரலாற்றில் எந்த ஆட்சியிலும் மேற் கொள்ளப்படாத வகையில் திருத்தேர்களை செப்பனிடுதல், புதிய திருத்தேர்கள் உருவாக்குதல், திருக்குளங்களை புனரமைத்தல், பசுமடங்களை மேம்படுத்துதல் போன்ற அரும்பெரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்து கோவில்களை வைத்து அரசியல் செய்யலாம் என்பவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கின்றது.

    திருவொற்றியூர் கோவிலில் புளியோதரை கெட்டுப்போன விவகாரம் எங்கள் கவனத்திற்கு வந்தவுடன் சம்பந்தப்பட்ட அலுவலரை உடனடியாக விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறோம். தவறு இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அந்த பிரசாத கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, நல்ல தரமான உணவு தயாரிக்கும் புதிய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். சிறு குறைகள் இருந்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் இது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உடனடியாக துறையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டவுடன் அதன் மீது நடவடிக்கை எடுக்கின்ற பணியை இந்து சமய அறநிலைத்துறை பார பட்சமின்றி மேற்கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சீட்டு முடிந்தும் பணத்தை திருப்பித்தரவில்லை. இது தொடர்பாக போலீசிடம் புகார் செய்துள்ளோம்.
    • பாதிக்கப்பட்ட 305 பேருக்கும் பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், வி.மாதேப்பள்ளி கூட்ரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் பணத்தை தரவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி சமாதானப்படுத்தி கலெக்டரிடம் அழைத்துச் சென்றார்.

    கலெக்டர் சரயுவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வி.மாதேப்பள்ளி கூட்ரோட்டில் கடந்த 10 ஆண்டுகளாக கிருஷ்ண மூர்த்தி என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.

    அவரிடம் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் 2 லட்சம், 5 லட்சம், 10 லட்சம் ரூபாய் என 13 கோடி ரூபாய்க்கு மேல் 305 நபர்கள் ஏலச் சீட்டுக்கு பணம் கட்டியுள்ளனர்.

    ஆனால் சீட்டு முடிந்தும் பணத்தை திருப்பித்தரவில்லை. இது தொடர்பாக போலீசிடம் புகார் செய்துள்ளோம். இதுவரை எங்களுக்கு பணத்தை பெற்று தரவில்லை.

    பாதிக்கப்பட்ட 305 பேருக்கும் பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கூறி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

    • சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
    • மீனவ சங்க பிரதிநிதிகளுடன் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்திலும் படகுகளில் கறுப்பு கொடி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மீனவர்களை விடுவிக்க இன்று காலை ஏராளமான மீனவர்களும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்களும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

    ராமேசுவரத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டனர். மத்திய-மாநில அரசுகள் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    இந்நிலையில் ராமேசுவரம் மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மீனவ சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

    மீனவ சங்க பிரதிநிதிகளுடன் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பிடிக்கப்பட்ட படகுகளையும் மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட கலெக்டர் உத்தரவாதம் அளித்ததை அடுத்து, மீனவர்களின் நடைபயண போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    எனினும், திட்டமிட்டபடி கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாகவும் மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

    • பல வீடுகள் இன்னும் தண்ணீருக்குள்ளே இருக்கின்றன.
    • வெள்ளாளன்விளை மக்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 16, 17,18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக உடன்குடி அருகே உள்ள சடையநேரிகுளத்தில் கீழ்புறம் பகுதியில் உடைப்பு ஏற்பட்டது.

    இதனால் வெள்ளாளன்விளை, வட்டன்விளை, செட்டிவிளை என்ற சிதம்பரபுரம், மருதூர் கரை, பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், சீயோன்நகர், லட்சுமிபுரம், செட்டியாபத்துபோன்ற பகுதிகளெல்லாம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது.

    பல இடங்களில் போக்குவரத்து தடைபட்டது. தற்போது தண்ணீர் வடிந்து போக்குவரத்து சீரானாலும் வெள்ளாளன்விளை ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளாளன்விளை நயினார்புரம் வட்டன்விளை, சிதம்பரபுரம் என்ற செட்டிவிளை ஆகிய பகுதியில் உள்ள மக்கள் இன்னும் வெள்ளநீருடன் போராடிக் கொண்டிருக்கின்றனர்.


    வெள்ளாளன்விளையில் பல வீடுகள் இன்னும் தண்ணீருக்குள்ளே இருக்கின்றன. 60 நாட்களை கடந்தும் தண்ணீரில் மூழ்கி விட்டது. இந்த வீட்டில் உள்ளவர்கள் அருகில் உள்ள கோவில்களிலும், உறவினர்கள் வீட்டிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த தண்ணீரை இன்னும் அப்புறப்படுத்த முடியவில்லை, இதனால் வெள்ளாளன்விளை மக்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

    பனைமரத் தொழிலாளர்கள், தென்னை, வாழை விவசாயம் மற்றும் பல்வேறு விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்கள் தோட்டத்திற்கு எப்படி போவது? தோட்டத்தில் உள்ள நீர் இறைக்கும் பம்பு செட் மோட்டார் பயன்படுமா? என வருத்தத்தில் உள்ளனர்.

    அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் ஆலோசனையின் படி உடன்குடியூனியன் சேர்மன் பாலசிங் வெள்ளாளன்விளை ஊராட்சி மன்ற தலைவர் ராஜரத்தினம் ஆகியோர் நீர் இறைக்கும் பம்புசெட் மோட்டார் மூலமாக கடந்த 5 நாட்களாக இரவு பகலாக 2 மின் மோட்டார் முலம் தண்ணீரை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இன்னும் தண்ணீர் குறைந்தபாடு இல்லை.

    மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் 2 மாதங்களை கடந்து தேங்கி கிடக்கும் தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை ஆகும்.

    • திருமாவளவன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
    • கடந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது குறிப்பித்தக்கது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்காக சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற் கொள்ளப்படுகிறது.

    அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் இன்று கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    கடந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது குறிப்பித்தக்கது.

    • 14 ஆண்டு காலமாக நீடித்து வரும் இந்த பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும்.
    • பள்ளி கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

    சென்னை:

    பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் பள்ளிக் கல்வி அலுவலகம் முற்றுகை போராட்டம் இன்று 2-வது நாளாக நடந்தது. நேற்று முற்றுகையிட முயன்ற ஆசிரியர்களை கைது செய்து மாலையில் போலீசார் விடுவித்தனர்.

    ஆனாலும் இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் தங்கி இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலை-சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும். முரண்பாடுகளை களைய வேண்டும். 14 ஆண்டு காலமாக நீடித்து வரும் இந்த பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி காலை 9 மணி முதல் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் கூடத் தொடங்கினர்.

    அங்கிருந்து பள்ளி கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் போலீசார் அதற்கு முன்பாகவே ஆசிரியர்களை மறித்து கைது செய்தனர்.

    கிரீம்ஸ் சாலையில் இருந்து அவர்களை வெளியே வர முடியாமல் தடுத்து மறித்தனர். மாநில பொறுப்பாளர்கள் ராபர்ட், ஆனந்தகுமார், கண்ணன், வேல்முருகன், ஞானசேகரன் ஆகியோர் தலைமை யில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப் பட்டனர்.

    போராட்டம் குறித்து சங்க நிர்வாகி கூறியதாவது:-

    எங்களோடு பணியில் சேர்ந்த இளநிலை உதவியாளருக்கும், ஆசிரியருக்கும், ஊதிய முரண்பாடு ரூ.3170 உள்ளது. அதனை சரிசெய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

    எங்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும் போராட்டம் தொடரும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராடுவோம் என்றார்.

    • பாம்பை செல்லா பிடித்து வந்த போது வெள்ளை நிறத்தில் இருந்த பாம்பு படம் எடுத்தது.
    • பொதுவாக இது போன்ற வெள்ளை நிற நாகங்கள் இல்லை.

    கடலூர்:

    கடலூர் பச்சையாங் குப்பம் பகுதியில் ஹார்டு வேர்ஸ் கடை நடத்தி வருபவர் லெனின்.

    இவருடைய கடைக்குள் பாம்பு புகுந்து விட்டதாக வன ஆர்வலரான செல்லாவிற்கு தகவல் கொடுத்தார். அதனை தொடர்ந்து செல்லா கடைக்கு சென்று பார்த்த போது அது அரிய வகை வெள்ளை நிற நாகப்பாம்பு என்பது தெரிய வந்தது.

    அந்த பாம்பை செல்லா பிடித்து வந்த போது வெள்ளை நிறத்தில் இருந்த பாம்பு படம் எடுத்தது. இதனை அங்கு இருந்த மக்கள் ரசித்தனர். இந்த நிலையில் இந்த அரியவகை வெள்ளை நிற பாம்பு பாதுகாப்பாக காப்பு காட்டில் விடப்பட்டது.

    பொதுவாக இது போன்ற வெள்ளை நிற நாகங்கள் இல்லை என்றாலும் ஜீன் குறைபாடு காரணமாக ஓரிரு பாம்புகள் இது போன்று வெள்ளை நிறத்தில் இருப்பதாக வன ஆர்வலர் செல்லா தெரிவித்தார்.

    ×