என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.
    • சண்டிகர் மேயர் தேர்தலில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சட்டத்தின் கலங்கரை விளக்கம் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

    புதுடெல்லி:

    சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பதிவான 8 ஓட்டுகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்த ஓட்டுக்கள் அனைத்தும் செல்லும் என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.

    இந்நிலையில், சண்டிகர் மேயர் தேர்தலில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சட்டத்தின் கலங்கரை விளக்கம் என முதலமைச்சர் முகஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மேலும், சட்டப்பிரிவு 142-ன் கீழ் அரிதான அதிகாரத்தைப் பயன்படுத்தி நியாயத்தை சுப்ரீம் கோர்ட் நிலைநிறுத்தியுள்ளது.

    ஒருமைப்பாடு, ஜனநாயகக் கொள்கைகளுக்கான இந்த வெற்றி இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு மகத்தான செய்தி.

    2024 தேர்தலுக்கு முன் பாஜகவின் சூழ்ச்சித் தந்திரங்களுக்கு முன் எச்சரிக்கையை அனுப்பியுள்ளது சுப்ரீம் கோர்ட் என தெரிவித்துள்ளார்.

    • பெண்கள் பேருந்து சேவைகளைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
    • திட்டம் மிகவும் முற்போக்கான எண்ணத்தோடு செயல்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    2021 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று, தமிழ்நாடு அரசு பெண்களுக்கான "கட்டணமில்லா அரசுபேருந்து" திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது ஜூலை 2021-இல் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டமானது பாராட்டுகளையும் விமர்சனங்களையும் சமமாக பெற்றுள்ளது. பெண்கள் அதை ஏற்றுக்கொண்டனர், வல்லுநர்கள் அதைப் பாராட்டினர், ஆனால் விமர்சனர்களோ பெண்களுக்கான இந்த 'இலவசம்' கடினமாக உழைக்கும் ஆண்களால் மட்டுமே சாத்தியமானது, இத்திட்டம் இயல்பாகவே நியாயமற்றது, பாரபட்சமானது, பெண்கள் இந்த திட்டத்தை உபயோகமில்லாமல் பயன்படுத்துகிறார்கள் என்று குறை கூறினர். சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்க்ஷன் குரூப் (CAG)பல ஆண்டுகளாக நிலையான போக்குவரத்து துறையில் பணியாற்றி வருகிறது. மேலும் தமிழ்நாட்டில், திட்டத்தின் தாக்கம் மற்றும் நிலையான பொது போக்குவரத்திற்கான அணுகலை இது எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை ஆய்வு செய்து உள்ளது. கட்டணமில்லா பேருந்து திட்டத்தால் பயனடைந்த 3000 பெண்களை சிஏஜி நேர்காணல் செய்தது. தமிழ்நாட்டின் சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் ஆகிய ஆறு நகரங்களில் இருந்து பல்வேறு வயது மற்றும் சமூக-பொருளாதாரப் பின்னணியைச் சேர்ந்த பெண்கள் நேர்காணல் செய்யப்பட்டனர்.

    இந்த ஆய்வின் மூலம், ஆறு நகரங்களிலும் கண்டறியப்பட்டவை:-

    ● இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, பெண்கள் பேருந்து சேவைகளைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தனர். இப்பெண்கள் ஏற்கனவே பேருந்து சேவையை வழக்கமாகப் பயன்படுத்திய நிலையில், இத்திட்டத்தின் விளைவாக ஷேர் ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்கள் போன்ற பிற போக்குவரத்து வகைகளைப் பயன்படுத்துவது குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    ● இந்த ஆய்வில், பெண்கள் ஒரு மாதத்தில் சுமார் 800 ரூபாய் சேமிப்பதால், அந்தப் பணம் வீட்டுத் தேவைகள், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்குச் செலவழித்து, குடும்பம் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் சிறந்த பலன்களை ஏற்படுத்துகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    ● ஆய்வில் இருந்து மற்றொரு முக்கிய கண்டுபிடிப்பு என்னவென்றால், அதிகமான பெண்கள் பொதுப் போக்குவரத்தை அணுகுவதும், பொது இடங்களில் காணப்படுவதும், இது பாலின நிலைப்பாடுகள் மற்றும் பெண்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளுக்கு தொடர்புடைய தடைகளை உடைக்க உதவியது என்பது தெரியவந்துள்ளது.

    பிப்ரவரி 20 ஆம் தேதி நடந்த நிகழ்வில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், I.A.S இந்த அறிக்கையை வெளியிட்டார்.

    இந்த ஆய்வை வரவேற்ற டாக்டர். ஆல்பி ஜான், "இந்தத் திட்டம் பெண்களுக்குச் சிறந்த போக்குவரத்து வசதிகளை வழங்குகிறது, ஏனெனில் அவர்களில் பலர் சொந்த வாகனங்களை வைத்திருக்கவில்லை. அதிகமான பேருந்துகளின் தேவையை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், மேலும் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் மற்ற நகரங்களுக்கு இத்தேவையை பூர்த்தி செய்ய அரசு தற்போது செயல்பட்டு வருகிறது" என்றார்.

    சிஏஜியின் மூத்த ஆராய்ச்சியாளர் சுமனா நாராயணன், பெண்களுக்கு மட்டுமின்றி அவர்களின் முழு குடும்பத்திற்கும் இந்தத் திட்டத்தின் பொருளாதார நன்மைகளை எடுத்துரைத்தார். "இந்தத் திட்டம் பெண்களுக்கு சராசரியாக மாதம் 800 ரூபாய் சேமிக்க அனுமதித்துள்ளது. மேலும் அவர்கள் இந்த சேமிப்பை தங்கள் குடும்ப ஆரோக்கியம், கல்வி மற்றும் ஊட்டச்சத்துக்காக மறு முதலீடு செய்கிறார்கள். இது சமூகத்திற்கும் நாட்டிற்கும் நீண்டகால நன்மைகளை அளிக்கிறது, "என்று அவர் கூறினார். "கட்டணமில்லா பொது போக்குவரத்து திட்டமானது வரி செலுத்துவோரின் பணத்தால் மட்டுமே கட்டணமில்லா பேருந்து திட்டத்தில் இலவச டிக்கெட்டுகள் வழங்குவது சாத்தியம் என்று கருதாமல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பையும், மேலும் இந்தத் திட்டம் மூலம் சமூகத்தில் அனைத்து தரப்பினரின் உள்ளடக்கத்திற்கு அனுமதிக்கிறது."

    இந்தத் திட்டம் முதலில் அறிவிக்கப்பட்டபோது பேசப்பட்ட சில எதிர்மறைக் கருத்துக்களை சுமனா எடுத்துரைத்தார். "இந்தத் திட்டம் பெண்களை நோக்கமின்றி வீட்டை விட்டு வெளியேறவும், ஊர் சுத்தவும் ஊக்குவிக்கிறது என்று பொதுக் கருத்து உள்ளது. பெண்கள் இப்போது பொழுதுபோக்கிற்காகவும் தனிப்பட்ட நேரத்திற்காகவும் கோவில்கள், கடற்கரைகள் மற்றும் பூங்காக்களுக்கு செல்வதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். பெண்களுக்கும் அவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கு சில 'மீ டைம்' தேவை, இது ஒரு நேர்மறையாக பார்க்கப்பட வேண்டும்," என்று அவர் சுட்டிக்காட்டினார்.

    பசுமை போக்குவரத்து தீர்வுகளை மையமாக கொண்டு செயல்படும் ஆராய்ச்சி நிறுவனமான அர்பன் ஒர்க்ஸ் நிறுவனர் ஸ்ரேயா கடப்பள்ளி, அறிக்கை வெளியீட்டு குழுவின் ஒரு பகுதியாக இருந்தார்.

    "இந்தியாவில், ஆண்களில் 10ல் 8 பேர் வெளியே பணிபுரியும் பொழுது, பெண்களில் 10ல் 2 பேர் மட்டுமே வீட்டிற்கு வெளியே வேலை செய்கிறார்கள். இது போன்ற திட்டங்கள் தொழிலாளர் பணிக்குள் நுழைவதில் பெண்கள் எதிர்கொள்ளும் தடைகளை குறைக்கிறது," என்றார். "நீண்ட காலத்தில், பேருந்துகள் அனைவருக்கும் விருப்பமான போக்குவரத்து முறையாக இருக்க வேண்டும். அங்கு செல்வதற்கு, குடிமக்களுக்கு பேருந்து நிறுத்தங்களுக்கு எளிதான அணுகல் மற்றும் குறைந்த காத்திருப்பு நேரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

    "இந்த திட்டம் மிகவும் முற்போக்கான எண்ணத்தோடு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மேம்பட்ட நகரங்களுக்கு இணையாக பொதுப் போக்குவரத்தின் தரம் மற்றும் பேருந்து சேவைகளின் எண்ணிக்கை தன்மையில் வியத்தகு முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறோம்" என்று UNDPன் தலைமை மேம்பாட்டு இலக்கு நிபுணர் ராஜ் செருபால் கூறினார்.

    2021-22 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கொள்கையானது, கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் நோக்கம் பெண்களை சமூகத்தில் அதிக அளவில் செயல்படுவதை ஊக்குவிப்பதாகும் என்பதை வலியுறுத்துகிறது. பொது இடங்களில் பெண்களின் வெளிக்கொணர்தல் இந்தியாவில் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. அதிகமான பெண்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தினால், அது பொது இடங்களில் பெண்களின் இருப்பை அதிகரிக்க வழிவகுக்கும், இதன் விளைவாக, மக்கள்தொகையில் பாதி பேருக்கு அதிகத் தெரிவுநிலை ஏற்படும்.

    சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்க்ஷன் குரூப் (CAG) என்பது 38 வருடங்கள் பழமையான ஒரு இலாப நோக்கற்ற மற்றும் அரசியல் சார்பற்ற அமைப்பாகும், இது குடிமக்கள் உரிமைகள் மற்றும் நல்லாட்சிக்காக செயல்படுகிறது. அதன் முயற்சிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் கூட தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தாலும், சென்னையின் நுகர்வோர் மற்றும் குடிமக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இது முதன்மையாக செயல்படுகிறது.

    • சென்ற ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்க 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டதா அல்லது கைவிடப்பட்டு விட்டதா என்பது பற்றி வேளாண் துறை அமைச்சர் தனது பதிலுரையில் தெரிவிக்க வேண்டும்.

    சென்னை :

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    முதனிலைத் தொழிலாக விளங்கும் வேளாண் தொழிலை வளர்ச்சி அடையச் செய்வதற்கும், உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதற்கும், உணவு தந்துதவும் உழவர்களின் வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்றுவதற்கும் தேவையான திட்டங்களை உள்ளடக்கியதாக வேளாண்மை நிதி நிலை அறிக்கை அமையும் என்று விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில், இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 2024-2025 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை விவசாயிகளிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது என்ற பெருமையைத் தவிர, இந்த நிதிநிலை அறிக்கையால் பயனேதும் இல்லை என்று விவசாயப் பெருங்குடி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், வாழை, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு, பருப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், இது குறித்து எவ்விதமான அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள தென்னை விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தென்னை மரத்திலிருந்து 'நீரா' போன்ற பதநீர் இறக்கி விற்பனை செய்ய ஊக்குவிக்கப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ஏதும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது தென்னை விவசாயிகளிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதேபோன்று, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயாக உயர்த்தித் தரப்படும் என்றும், கரும்புக்கான ஆதார விலை டன் ஒன்றிற்கு 4,000 ரூபாயாக உயர்த்தித் தரப்படும் என்றும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்று விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களுக்கு கிடைத்தது வெறும் ஏமாற்றமே.

    கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மண் வளமே அழியும் அளவுக்கு மணல் கொள்ளை நடந்து கொண்டிருக்கின்ற நிலையில், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தி.மு.க. அரசு அறிவித்து இருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

    இயற்கை சீற்றங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து அவர்கள் மீண்டு வரும் வகையில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், 2024-2025 ஆம் ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த 1,775 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே திட்டத்திற்காக, சென்ற ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் 2,337 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 562 கோடி ரூபாய் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதற்கான பதிலை வேளாண் துறை அமைச்சர் தனது பதிலுரையில் எடுத்துரைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு அரசு சார்பில் செய்யப்படாததால், அதற்கான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, இதற்கான இழப்பீட்டினை வழங்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    சென்ற ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்க 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அதுபற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டதா அல்லது கைவிடப்பட்டு விட்டதா என்பது பற்றி வேளாண் துறை அமைச்சர் தனது பதிலுரையில் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • செல்போன் டவரில் நின்ற சந்திரனிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பொள்ளாதி கிராமம், சின்னத்தொட்டிபாளையம் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள செல்போன் டவர் உச்சியில் நின்றபடி ஒரு வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுப்பதாக அன்னூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில் அந்த வாலிபரின் பெயர் சந்திரன் (வயது 25) என்பதும், இதே பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

    சின்னத்தொட்டியம்பாளையம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சந்திரன் நேற்றிரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்து குடும்பத்தினரிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். அப்போது அங்கு வந்த வார்டு கவுன்சிலர் சுரேஷ் என்பவர், குடிபோதையில் இருந்த சந்திரனை கண்டித்து உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சந்திரன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து வார்டு கவுன்சிலர் சுரேஷை சரமாரியாக தாக்கினார். பின்னர் வீட்டுக்கு சென்ற சந்திரன் அங்கிருந்த கத்தியை எடுத்து தனக்கு தானே கையில் குத்திக்கொண்டு ரத்தக்காயங்களுடன் வெளியேறினார்.

    தொடர்ந்து சின்னதொட்டிபாளையம் பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஏறிய சந்திரன் அங்கிருந்தபடி, நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன் என மிரட்டல் விடுத்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து செல்போன் டவரில் நின்ற சந்திரனிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்பு ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் செல்போன் டவரை சுற்றிலும் பாதுகாப்பு வலையமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் நைசாக செல்போன் டவரின் மேல் ஏறி சென்று, அங்கு இருந்த சந்திரனை லாவகமாக பிடித்து பத்திரமாக கீழே இறக்கினார்கள். அப்போது அவருக்கு கையில் ரத்தம் வழிந்தபடி இருந்தது. தொடர்ந்து அவரை போலீசார் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, இதுதொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக நீதிபதி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
    • செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைதானார். இதன்பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆனந்த் முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மார்ச் 4-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். 22-வது முறையாக செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னையில் பொது மக்களை சந்திக்க உள்ளனர்.
    • 750-க்கும் மேற்பட்ட சங்கங்கள் மூலமாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளை பெற்றுள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான 11 பேர் கொண்ட குழு பிப்ரவரி 5-ந் தேதி முதல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளை அறிந்து வருகின்றனர்.

    உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்-பாராளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ் நாட்டின் கருத்துக்கள் என்ற தலைப்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு கோரிக்கை மனுக்களையும் பெற்று வருகின்றனர்.

    பிப்ரவரி 5-ந் தேதி தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள், 6-ந் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள், பிப்ரவரி 7-ந் தேதி மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், 9-ந்தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள், 10-ந் தேதி காலையில் கோவை, நீலகிரி, பிற்பகலில் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்கள், 11-ந் தேதி சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை சந்தித்து பரிந்துரைகளை பெற்றனர்.

    அடுத்தக்கட்டமாக 23-ந் தேதி வேலூர், ஆரணியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கவுள்ளனர். 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னையில் பொது மக்களை சந்திக்க உள்ளனர்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை எழுத்துப்பூர்வமாகவும், தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள், ஆன்லைன் மூலமாகவும் கோரிக்கைகளை அனுப்புவதற்கான முகவரிகளும் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த பதிவீடுகளுக்கான காலக்கெடு பிப்ரவரி 25-ந் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெறப்பட்ட அனைத்து பரிந்துரைகளையும் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு மதிப்பீடு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பார்வைக்கு கொண்டு சென்று அதன்பிறகு அதிகாரப்பூர்வத் தேர்தல் அறிக்கையாக தயாரிக்கப்பட உள்ளது.

    இப்போது வணிகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், சிறு குறு நிறுவனங்களின் உரிமையாளர்கள், பெண்கள் நல அமைப்பு நிர்வாகிகள், சமூக நல அமைப்புகள், ஓட்டல் உரிமையாளர்கள், தொழில் அதிபர்கள், தொழிலாளர்கள், மாற்று திறனாளிகளின் அமைப்பு நிர்வாகிகள், மற்றும் பொது மக்கள் என அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் நேரிலும், எழுத்துப்பூர்வமாக, தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள் வழியாக, ஆன்லைன் மூலமாகவும் தங்கள் கோரிக்கைகளை அளித்து வருகின்றனர்.

    இதுவரை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை சந்தித்துள்ளனர். 750-க்கும் மேற்பட்ட சங்கங்கள் மூலமாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளை பெற்றுள்ளனர்.

    கோரிக்கைகள் தொடர்பாக தொலைபேசி வாயிலாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் மக்களிடம் இருந்து வந்துள்ளதுடன், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து 2,500-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள்; சமூக ஊடகங்கள் வாயிலாக 4 ஆயிரத்துக்கும் மேலான பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளது.

    தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு 500க்கும் மேற்பட்ட கடிதங்களும் பெறப்பட்டு உள்ளதாக இக்குழுவினர் தெரிவி்த்துள்ளனர்.

    • சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரெயில் இரு மார்க்கங்களிலும் நாளை ரத்து செய்யப்படுகிறது.
    • பல்வேறு ரெயில்கள் வேறு மார்க்கமாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    * விழுப்புரம் - திருச்சி இடையே நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக நாளை 6 ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரெயில் இரு மார்க்கங்களிலும் நாளை ரத்து செய்யப்படுகிறது.

    * விருத்தாசலம் - திருச்சி, திருப்பாதிரிப்புலியூர் - திருச்சி, திண்டுக்கல் - விழுப்புரம் ரெயில்களும் நாளை ரத்து செய்யப்படுகிறது.

    * மேலும் பல்வேறு ரெயில்கள் வேறு மார்க்கமாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படக் கூடாது.
    • ஆதரவளித்த அரசியல் பிரமுகர்கள் மீதும் தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வந்த பூவழகன் என்பவர், கந்துவட்டி கும்பலால் அவமரியாதை செய்யப்பட்டதால், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

    கந்துவட்டி கும்பலின் அட்டகாசம் பல ஆண்டுகளாகத் தொடரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் கந்து வட்டி தடை செய்யப்பட்டுள்ளது. அதை மதிக்காமல் கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படக் கூடாது. மருந்தாளுனர் பூவழகன் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டி மற்றும் சூதாட்டக் கும்பலை காவல்துறை கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். அவர்களுக்கு ஆதரவளித்த அரசியல் பிரமுகர்கள் மீதும் தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
    • திருமங்கலம் போலீசார், நடிகை ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    சென்னை:

    கடந்த 2022-ம் ஆண்டு 'சினேகம் பவுண்டேஷன்' பெயரைப் பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து தன்மீது சினேகன் அவதூறு பரப்புவதாக கூறி நடிகை ஜெயலட்சுமியும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    இது தொடர்பாக இருவரும் மாறி மாறி காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.



    இந்நிலையில் வழக்கு தொடர்பான விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நடிகை ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார்.

    முன்னதாக, வழக்கு தொடர்பாக திருமங்கலம் போலீசார், நடிகை ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நடிகை ஜெயலட்சுமி கைதாகியுள்ளார்.

    • மாத்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள டயர் சேமிப்பு கிடங்கில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
    • புகைமூட்டம் அருகில் இருந்த மருத்துவமனையை சூழ்ந்ததால் அங்கிருந்த நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்.

    சென்னை:

    சென்னை மாதவரம் அருகே மாத்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள டயர் சேமிப்பு கிடங்கில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    தீ வேகமாக பரவியதால் அப்பகுதியில் கரும்புகை எழுந்தது. இந்த புகைமூட்டம் அருகில் இருந்த மருத்துவமனையை சூழ்ந்ததால் அங்கிருந்த நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்.

    தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • விஜில் ஜோண்சை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
    • பத்மநாபபுரம் கோர்ட்டில் விஜில் ஜோண்சை ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    தக்கலை:

    குமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியை சேர்ந்தவர் விஜில்ஜோண்ஸ் (வயது 40). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் பெங்களூருவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் விஜில் ஜோண்ஸ் முகநூலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மனோ தங்கராஜ் ஆகியோரை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. வக்கீல் அணி அமைப்பாளர் ஜோசப்ராஜ் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். ஆனால் புகார் கூறப்பட்ட விஜில் ஜோண்சை கைது செய்ய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பற்றி அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரம் தொடாபாக மதுரை ஐகோர்ட் கிளையிலும் ஜோசப் ராஜ் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் விஜில் ஜோண்சை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    அதன்படி அவரை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தனர். அங்கு அவரை கைது செய்தனர்.

    பெங்களூருவில் கைது செய்யப்பட்ட விஜில் ஜோண்ஸ் இன்று தக்கலைக்கு அழைத்து வரப்பட்டார்.

    முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பற்றி முகநூலில் அவதூறு கருத்துகள் வெளியிட்டது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின் பத்மநாபபுரம் கோர்ட்டில் விஜில் ஜோண்சை ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்துக்கு வந்ததால் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
    • இ.சி.ஆர். பேரூரில் 40 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் 3-வது திட்டப்பணிகள் ரூ..4,276.44 கோடியில் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க 2003-ம் ஆண்டு நெம்மேலி மற்றும் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் தினமும் தலா 100 மில்லியன் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

    இந்த 2 சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெறப்படும் குடிநீர் சென்னையின் மொத்த குடிநீர் தேவையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்து வருகிறது. இதனால் நெம்மேலியில் கூடுதலாக ரூ.1516.82 கோடி செலவில் 2-வது சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணி கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. தினமும் 15 கோடி லிட்டர் திறன் உடைய சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக மிகப்பெரிய குழாய்கள் அங்கு பதிக்கப்பட்டு வந்தது. உவர்நீரை வெளியேற்றும் குழாயும் கடலில் பதிக்கப்பட்டன. இது மட்டுமின்றி சோழிங்கநல்லூரில் பெரிய அளவில் கீழ்நிலை நீர்த்தேக்கம் மற்றும் 48 கி.மீ. தூரம் வரை குழாய்கள் பதிக்கும் பணியும் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அனைத்து பணிகளும் முடிந்து 4 மாதங்களுக்கு முன்பு பரீட்சார்த்த முறையில் சோதனை ஓட்டமும் தொடங்கியது.

    சோழிங்கநல்லூர், உள்ள கரம், ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க்கட்டளை, மூவரசம்பேட்டை, பல்லாவரம் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இந்த பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்துக்கு வந்ததால் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் உயர் அதிகாரிகள் நெம்மேலிக்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2-வது ஆலையின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. இதனால் வருகிற 24-ந்தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதை நேரில் வந்து தொடங்கி வைக்கிறார்.

    இதன்மூலம் தென்சென்னையில் பல்லாவரம் வரை 12 பகுதிகளை சேர்ந்த 9 லட்சம் மக்களுக்கு கடல் குடிநீர் வினியோகிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்கனவே இ.சி.ஆர். பேரூரில் 40 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் 3-வது திட்டப்பணிகள் ரூ..4,276.44 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை 2026-ல் முடிக்க பணிகள் விரைவுப்ப டுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×