என் மலர்
நீங்கள் தேடியது "Cheating case"
- நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
- இந்த வழக்கை மும்பை போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
மும்பை:
பிரபல ஹிந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி, தன் கணவர் ராஜ் குந்த்ராவுடன் மகாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வருகிறார்.
ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடேட் என்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ளனர்.
இந்த நிறுவனத்திற்கு தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவர் 2015-ம் ஆண்டில் இருந்து 2023 காலகட்டங்களில் ரூ.60.48 கோடி பணம் கொடுத்துள்ளார். அதிக வட்டியை தவிர்க்க, இதை முதலீடு என மாற்றி பதிவு செய்ததாக கோத்தாரி குற்றம் சாட்டியுள்ளார்.
பணம் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தப்படும் என்ற உத்தரவாதத்துடன், அந்தத் தொகையை முதலீடு செய்யுமாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தச் சூழலில், கடந்த 2016-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து ஷில்பா ஷெட்டி ராஜினாமா செய்துள்ளார்.
அதன்பிறகு, அந்த நிறுவனத்திற்கு எதிராக ரூ.1.28 கோடி திவால் வழக்கு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து தனக்கு ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை என கோத்தாரி குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக ஜூஹு காவல் நிலையத்தில் கோத்தாரி புகார் அளித்தார்.
இந்நிலையில், புகாரின் அடிப்படையில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியார் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் டெபாசிட் தொகைக்கு 15 சதவீதம் வட்டி தருவதாக அறிவிப்பு வெளியிட்டது.
- முதலீட்டாளர்களை வளைப்பதற்காக ஏஜெண்டுகளையும் நியமித்து பண வசூலில் ஈடுபட்டது.
சென்னை:
சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று அதிக வட்டி ஆசையை காட்டி 10 ஆயிரம் பேரிடம் ரூ.800 கோடி வரை சுருட்டிய வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
"ஹிஜாயூ அசோசியேட் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் டெபாசிட் தொகைக்கு 15 சதவீதம் வட்டி தருவதாக அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து முதலீட்டாளர்களை வளைப்பதற்காக ஏஜெண்டுகளையும் நியமித்து பண வசூலில் ஈடுபட்டது. இதன்படி இந்த நிறுவனத்தில் பலர் ஏஜெண்டுகளாக பணிபுரிந்து பொது மக்களிடமிருந்து பணத்தை வசூலித்து கட்டினார்கள்.
இது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக நேரு, குரு மணிகண்டன், முகமது ஷெரீப் ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் கூடுதல் நடவடிக்கையாக சாந்தி, கல்யாணி, சுஜாதா ஆகிய 3 பெண்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.800 கோடி மோசடி வழக்கில் மொத்தம் 21 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் மீதமுள்ள 15 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- சேகர் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
- 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள நாட்டார்மங்கலத்தை சேர்ந்தவர் சேகர். இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் ஆர்வத்தில் இருந்தார். அதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.
அப்போது அவருக்கு கே.புதுப்பட்டி அருகேயுள்ள போசம்பட்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ் ராஜா (வயது 35) என்பவர் அறிமுகமாகி உள்ளார். அவர் சேகரிடம் லண்டன் அல்லது பிரான்ஸ் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதற்காக உடனடியாக ரூ.15 லட்சம் பணத்தையும் வாங்கியுள்ளார்.
ஆனால் காலம் கடந்த பின்னரும் அவரை லண்டன் நாட்டிற்கு அனுப்பாமல் கிர்கிஸ்தான் நாட்டிற்கு அனுப்பியுள்ளார். இவரை போலவே சீனிவாசன், சுப்பையா மற்றும் சிலரிடம் சுமார் ரூ.92 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு சரியான வேலையை வாங்கி தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் சந்தோஷ் ராஜாவிற்கு துணையாக கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஆதில்வினோ என்பவரது மனைவி நிவேதா (26), கேரளாவை சேர்ந்த ஜோஸ்வா நிதின், மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த ராஜ்கமல் மற்றும் சிலர் உதவியுள்ளனர். சேகர் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் மோசடியில் ஈடுபட்ட சந்தோஷ்ராஜா, மதுரையை சேர்ந்த ராஜ்கமல், கன்னியாகுமரியை சேர்ந்த நிவேதா ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- திருமணம் நடந்த ஒரே நாளில் சலபதியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை கண்ட மாணவி அதிர்ச்சியடைந்தார்.
- சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சலபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள கங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் சலபதி (வயது 33). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வந்தார்.
இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். அதே கல்லூரியில் 17 வயது மாணவி ஒருவர் இன்டர் மீடியட் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
மாணவியிடம் சலபதி நெருக்கமாக பழகினார். உன்னை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன் என அவரிடம் ஆசை வார்த்தை கூறினார். அவரது பேச்சில் மாணவி மயங்கினார்.
கடந்த புதன்கிழமை இறுதி தேர்வு எழுதிய மாணவியை பேராசிரியர் திருப்பதிக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து மாணவிக்கு தாலி கட்டினார்.
திருமணம் நடந்த ஒரே நாளில் சலபதியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை கண்ட மாணவி அதிர்ச்சியடைந்தார். மேலும் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் தனது மகளை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று திருமணம் செய்ததாக பேராசிரியர் மீது கங்காவரம் போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சலபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாணவர்களுக்கு நல்ல போதனைகளை வழங்க வேண்டிய பேராசிரியர் ஒருவரே மாணவியை ஏமாற்றி அழைத்துச் சென்று திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சொத்து பத்திரங்களை வாங்கி வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர்.
- பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
பல்லடம் :
பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரி, பிரியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நபர்கள் மோசடி நபர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத் தரக்கோரி மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது :- எங்களிடம் பல்லடத்தை சேர்ந்த சிவகுமார், அவரது அண்ணன் விஜயகுமார் மற்றும் விஜயகுமார் மகன் ராகுல் பாலாஜி மற்றும் பிரவினா உள்ளிட்டோர் எங்களுக்கு கடன் வாங்கி தருவதாகவும், தொழிலில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாகவும் கூறி, எங்களது சொத்து பத்திரங்களை வாங்கி வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. பணத்தை இழந்து அவதிப்பட்டு வருகிறோம். இந்த மோசடியால் எங்களது குடும்பங்கள் பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.
இது குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து ஒரு மாதத்திற்கு பின்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு ஆஜர்படுத்துமாறு பல்லடம் நீதிமன்றம் ஒரு மாதத்திற்கு முன் பிடிவாரண்ட் பிறப்பித்தும் போலீசார் அவர்களை கைது செய்ய தாமதப்படுத்துகின்றனர். மோசடி கும்பல் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். ஆனால் போலீசார் தலைமறைவாக உள்ள அவர்களை கைது செய்யாமல் உள்ளனர். இதனால் மோசடி கும்பலுக்கு போலீசார் துணை போவதாக எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த மோசடி வழக்கினை சிபிஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- சென்னை விமான நிலையத்தில் இருந்து கத்தார் நாட்டுக்கு செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
- விமானத்தில் செல்ல வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆலந்தூர்:
ஐதராபாத்தை சேர்ந்தவர் காஜா மொய்தீன்(55). தொழில் அதிபர். இவர் மீது கடந்த 2019-ஆம் ஆண்டு, ஐதராபாத் மற்றும் தஞ்சாவூர் குற்றப்பிரிவு போலீசில் மோசடி வழக்கு உள்ளது. போலீசார் தேடுவதை அறிந்ததும் காஜா மொய்தீன் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து கத்தார் நாட்டுக்கு செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் செல்ல வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது காஜா மொய்தீனின் பாஸ்போர்ட் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவர் மோசடி வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது.
இதையடுத்து சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் காஜா மொய்தீனின் பயணத்தை ரத்து செய்து, அவரை கைது செய்து தனி அறையில் வைத்தனர். இதுபற்றி தஞ்சாவூர் மற்றும் தெலுங்கானா போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
- கைது செய்யப்பட்ட கணவன்-மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- மோசடி வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி ஒருவர் உண்ணாமலைகடை பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது இவரது இ-மெயிலுக்கு விமான நிலையத்தில் வேலை தொடர்பான அழைப்பு வந்திருந்தது. அதில் செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக அவர் சம்பந்தப்பட்ட செல்போனில் பேசினார். அப்போது சென்னையில் நேர்முகத்தேர்வு நடைபெறுவதாகவும், அதற்கு வருமாறு அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சென்று நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டார்.
அப்போது விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதற்கு பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்கள். இதைத்தொடர்ந்து அந்த பட்டதாரி வாலிபர் தனது சகோதரருக்கும் வேலை வாங்கி தர வேண்டும் என்று தெரிவித்தார். சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்திற்கு பணம் செலுத்தினார். ரூ.2½ கோடி வரை பணம் செலுத்தியிருந்தார். ஆனால் அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. அதன்பிறகு தான் இவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்திடம் தான் கட்டிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்து வந்ததுடன் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக பட்டதாரி வாலிபர் சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மூலமாக புகார் செய்தார். இதையடுத்து சைபர் கிரைம் சூப்பிரண்டு தேவராணி, குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பட்டதாரி வாலிபர் ஏமாற்றப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குமரி மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையிலான போலீசார் இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தியபோது திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 45), அவரது மனைவி அம்பிகா (36) ஆகியோர் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் தேடுவதை அறிந்து அவர்கள் தலைமறைவானார்கள். இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் கேரளாவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் நேற்று கேரளாவுக்கு விரைந்து சென்று ரஞ்சித், அம்பிகா இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கணவன்-மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த மோசடி வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- புதுச்சேரியை சேர்ந்த ஜான்பால் என்பவர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் முதலீடு செய்ததன் மூலம் ரூ.6 லட்சத்து 98 ஆயிரத்தை இழந்துள்ளார்.
- கடந்த 2 நாட்களில் மட்டும் புதுவையில் 13 பேரிடம் ரூ.40 லட்சம் ஆன்லைன் மோசடி செய்யப்பட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் ஆன்லைன் மூலம் பணத்தை இழப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போலீசார் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அதனை பொருட்டாக கருதாமல் தொடர்ந்து ஆன்லைன் மோசடியில் சிக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி கனகசெட்டி குளம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 34). இவர் நேருவீதியில் கடை வைத்துள்ளார். இவருடைய செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி வந்தது. எதிர் முனையில் சாட்டிங் செய்த நபர் பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பிட்காயின் விலை தற்போது மிகவும் குறைந்துள்ளது. எனவே பிட்காயின் வாங்குவதற்கு தற்போது சரியான தருணம், அதில் முதலீடு செய்தால் பல மடங்கு சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினார்.
இதனை நம்பிய ஹரிகிருஷ்ணன், செல்போனில் வந்த வங்கி கணக்கிற்கு ஒரே தவணையில் ரூ.21 லட்சம் அனுப்பி வைத்தார். ஆனால் அவருக்கு பிட்காயின் எதுவும் வரவில்லை.
இதையடுத்து, தனக்கு செல்போனில் குறுஞ்செய்தி வந்த எண்ணை தொடர்பு கொண்டார். ஆனால் அந்த எண் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஹரிகிருஷ்ணன் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ராமதாஸ் (42) என்பவர் பிட்காயின் வாங்குவதற்காக சென்னையை சேர்ந்த ஒரு நபருக்கு ரூ.10 லட்சம் அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை .
இதுபோல் புதுச்சேரியை சேர்ந்த ஜான்பால் என்பவர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் முதலீடு செய்ததன் மூலம் ரூ.6 லட்சத்து 98 ஆயிரத்தை இழந்துள்ளார்.
கடந்த 2 நாட்களில் மட்டும் புதுவையில் 13 பேரிடம் ரூ.40 லட்சம் ஆன்லைன் மோசடி செய்யப்பட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பணம் கையாடல் செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.
- சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அகிலாவின் குடும்பத்தினரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாசில்தார் அலுவலகத்தில் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பல கோடி ரூபாய் கையாடல் நடைபெற்று உள்ளதாக கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்த கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையில் முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்தது. இதை தொடர்ந்து இந்த புகார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.
போலீஸ் விசாரணையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகள் விவசாயிகள் பெயரில் வழங்கப்படும் திருமண உதவி திட்டம், கல்வி உதவித் திட்டம், இறந்தால் இறுதி சடங்கு செய்ய உதவி திட்டம், விபத்து காப்பீடு திட்டம் என பல திட்டங்களில் பல கோடி ரூபாய்க்கு மேல் கையாடல் செய்தது தெரியவந்தது.
அந்த பணம் சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அகிலா மற்றும் 4-க்கும் மேற்பட்டவர்களின் வங்கி கணக்குகளில் பரிமாற்றம் செய்ததும் தெரிய வந்தது.
அவர்கள் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாகவும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நேற்று தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய செயலாளர் சுரேந்தர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பணம் கையாடல் செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று திட்டக்குடி சென்றனர். அங்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றிய அகிலாவை கைது செய்து அழைத்து சென்றனர். அவர் ரூ.4½ கோடிக்கு மேல் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.
சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அகிலாவின் குடும்பத்தினரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் திட்டக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து ரூ.30 ஆயிரம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்ததை கண்டு அனிஷ் அதிர்ச்சி அடைந்தார்.
- விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருகம்பாக்கம், நடேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் அனிஷ் அகமது. தனியார் நிறுவன ஊழியர். இவர் பிரபல தனியார் வங்கியின் "கிரெடிட் கார்டு" பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் அனிஷ் செல்போனுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் ரூ.5ஆயிரம் பரிசு கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டு "லிங்க்" ஒன்று வந்தது. இதை உண்மை என்று நம்பிய அவர் அந்த "லிங்க்"கை பயன்படுத்தி தனது கிரெடிட் கார்டின் எண் மற்றும் தகவல்களை ஒவ்வொன்றாக பதிவு செய்தார். பின்னர் ரகசிய ஓ.டி.பி எண்ணையும் பதிவு செய்தார்.
சிறிது நேரத்தில் அவரது "கிரெடிட் கார்டு" கணக்கில் இருந்து ரூ.30 ஆயிரம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்ததை கண்டு அனிஷ் அதிர்ச்சி அடைந்தார். வங்கியில் இருந்து அனுப்புவது போல் குறுந்தகவல் அனுப்பி நூதனமான முறையில் மர்மநபர்கள் பணத்தை சுருட்டி சென்றது தெரியவந்தது.
இந்த கும்பல் இதேபோல் மேலும் பலருக்கு பரிசு விழுந்து இருப்பதாக 'லிங்க்' அனுப்பி மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாடகைக்கு எடுத்து சென்ற 521 “லேப்டாப்” களையும் தினேஷ் வேறு ஒரு நிறுவனத்திடம் ரூ.80 லட்சத்துக்கு விற்று மோசடியில் ஈடுபட்டது தெரிந்து பிரேமலதா அதிர்ச்சி அடைந்தார்.
- நேரில் சென்று கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசிய தினேஷ், பிரேமலதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
போரூர்:
சென்னை நொளம்பூர், பகுதியை சேர்ந்தவர் பிரேமலதா. இவர் விருகம்பாக்கம் பகுதியில் லேப்டாப், கம்ப்யூட்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை மாத வாடகைக்கு கொடுத்து வரும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவருக்கு பம்மல் சங்கர் நகரை சேர்ந்த டிப்ளமோ பட்டதாரி தினேஷ் லிங்கம் (27) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமானார். மேலும் மாத வாடகைக்கு "லேப்டாப்"களை எடுத்து சென்று முறையாக வாடகையும் செலுத்தி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ3.5 கோடி மதிப்புள்ள 521 "லேப்டாப்"களை தினேஷ் மாத வாடகைக்கு எடுத்து சென்றார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அவர் "லேப்டாப்"களை திரும்ப ஒப்படைக்கவில்லை. அவரது செல்போனும் "சுவிட்ச் ஆப்" செய்யப்பட்டு இருந்தது.
இதற்கிடையில் தன்னிடம் வாடகைக்கு எடுத்து சென்ற 521 "லேப்டாப்" களையும் தினேஷ் வேறு ஒரு நிறுவனத்திடம் ரூ.80 லட்சத்துக்கு விற்று மோசடியில் ஈடுபட்டது தெரிந்து பிரேமலதா அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி நேரில் சென்று கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசிய தினேஷ், பிரேமலதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து பிரேமலதா விருகம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். உதவி கமிஷனர் சுப்பிரமணியன் தலைமையிலான தனிப்படை போலீசார் தினேஷ் லிங்கத்தை கைது செய்தனர். அவர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி, ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
- திருமங்கலம் போலீசார், நடிகை ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை:
கடந்த 2022-ம் ஆண்டு 'சினேகம் பவுண்டேஷன்' பெயரைப் பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து தன்மீது சினேகன் அவதூறு பரப்புவதாக கூறி நடிகை ஜெயலட்சுமியும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக இருவரும் மாறி மாறி காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் வழக்கு தொடர்பான விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நடிகை ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, வழக்கு தொடர்பாக திருமங்கலம் போலீசார், நடிகை ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நடிகை ஜெயலட்சுமி கைதாகியுள்ளார்.






