என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ரெட்லீப் செடிகளுக்கு விதை கிடையாது.
- ஊட்டியில் தற்போது குளிர்காலம் என்பதால் இந்த செடிகளின் வண்ணம் தற்போது சீதோஷ்ண சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறி வருகிறது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வெளிநாட்டில் இருந்து பல்வேறு மலர்ச்செடிகள் கொண்டுவரப்பட்டு, நடவுசெய்யப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வந்தன. அவற்றில் ஒரு சில மலர்ச்செடிகள் தற்போது பெரியளவில் வளர்ந்து மரங்களாக காட்சி அளித்து வருகின்றன.
ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரெட்லீப் மலர்ச்செடிகள் தற்போது நீலகிரியில் உள்ள பெரிய பங்களாக்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலையோர பகுதிகளை அலங்கரித்து வருகின்றன. ரெட்லீப் செடிகளுக்கு விதை கிடையாது. பதியம் போடும் முறையில் வளர்க்க முடியும். இந்த செடியில் உள்ள இலைகள்தான், அங்கு தற்போது மலர் போல காட்சி அளிக்கின்றன.
ரெட்லீப் செடிகளின் முதல் பருவத்தில் அவற்றின் இலைகள் பச்சைநிறத்திலும், பின்னர் சிவப்பு, இளஞ்சிவப்பு, இளம்மஞ்சள் என காலநிலைக்கு ஏற்றார்போல நிறம் மாறும். மலர்கள் பூத்துக்குலுங்குவது போல காட்சியளிக்கும் ரெட்லீப் செடிகள், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்து உள்ளது. ஊட்டியில் தற்போது குளிர்காலம் என்பதால் இந்த செடிகளின் வண்ணம் தற்போது சீதோஷ்ண சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறி வருகிறது.
நீலகிரியில் பூத்து குலுங்கி பல்வேறு வண்ணங்களில் காட்சியளிக்கும் ரெட்லீப் செடிகள் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. எனவே அவர்கள் சாலையோரம் வண்ணம்-வண்ணமாக ஜொலிக்கும் பூக்களின் முன்பாக நின்று செல்பி எடுத்து நண்பர்கள் மற்றும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
- இந்த ஆண்டு பதநீர் உற்பத்தி மிக மிக நன்றாக இருக்கும்.
- உடன்குடி பகுதியில் பல இடங்களில் பூமியில் உவர்ப்பு தண்ணீர் எல்லாம் சுவையாக மாறி உள்ளது.
உடன்குடி:
உடன்குடி என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது கருப்பட்டிதான். உடன்குடி கருப்பட்டி என்று ஊர் பெயரோடு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த கருப்பட்டி மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய 5 மாதங்கள் மட்டுமே உற்பத்தியாகும். தற்போது கருப்பட்டி உற்பத்திக்காக கற்பக தரு என்று அழைக்கப்படும் பனை மரத்தில் தினசரி ஏறி இறங்குவதற்கு இடையூறாக உள்ள சின்ன சின்ன தடைகளை நீக்குதல், பனை மரத்தில் உள்ள சில்லாட்டை, காய்ந்த ஓலைகளை அப்புறப்படுத்தி, மட்டைகளை விரித்து விடுதல், இப்படி விரித்து விட்டால் பதநீர் தரும் பாளைகள் வேகமாக வெளிவரும் என்கிறார்கள்.
பின்பு பாளையை கயிற்றால் கட்டி, தட்டி, பக்குவப்படுத்தி பதநீர் தரும் பாளைகளாக மாற்றுவார்கள். இப்போது கருப்பட்டி உற்பத்திற்கான ஆரம்பக்கட்ட பணி தொடங்கி உள்ளது.
இதுபற்றி இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவர் கூறியதாவது:-
கருப்பட்டி உற்பத்திக்காக ஆரம்ப கட்ட பணி தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு பதநீர் உற்பத்தி மிக மிக நன்றாக இருக்கும். கடந்த டிசம்பர் மாதம் மழை நன்றாக பெய்தது. பல இடங்களில் மழை நீர் பல மாதங்கள் தேங்கி இருந்தது. தற்போது குறைந்துள்ளது.
இதனால் உடன்குடி பகுதியில் பல இடங்களில் பூமியில் உவர்ப்பு தண்ணீர் எல்லாம் சுவையாக மாறி உள்ளது. அதனால் கருப்பட்டி உற்பத்தி மிக மிக அதிகமாக இருக்கும் என்று கூறினார்.
- கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- அக்னி கம்பத்துக்கு பெண்கள் தண்ணீர் ஊற்றி வழிபட்ட காட்சி.
கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் முன்பு அமைக்கப்பட்ட அக்னி கம்பத்துக்கு பெண்கள் தண்ணீர் ஊற்றி வழிபாடு.
- வருகிற 27, 28-ந்தேதிகளில் தமிழகத்தில் 2 நாட்கள் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்கிறார்.
- பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனது கூட்டணி நிலைப்பாட்டினை இன்னமும் அறிவிக்கவில்லை.
கே.கே. நகர்:
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. தமிழகத்தில் மெகா கூட்டணியை அமைக்க திட்டமிட்டு வருகிறது.
இது தொடர்பாக கட்சியின் தமிழக அளவிலான உயர்மட்ட தலைவர்கள் பல்வேறு கட்சிகளுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
வருகிற 27, 28-ந்தேதிகளில் தமிழகத்தில் 2 நாட்கள் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது தேர்தல் கூட்டணி இறுதி செய்ய வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று (புதன்கிழமை) காலை 7.10 மணிக்கு ஒரு விமானம் வந்தது. இந்த விமானத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் தே.மு.தி.க. மாநிலத் துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் வந்தனர்.
இதில் சுதீஷ் ரெகுலர் லாஞ்ச் வழியாக வெளியே வந்தார். அடுத்த சில மணித்துளிகளில் அண்ணாமலை வி.ஐ.பி. லாஞ்ச் வழியாக வெளியே வந்தார். இதைக் கண்டதும் அவர்களை வரவேற்க வந்திருந்த பா.ஜ.க. மற்றும் தே.மு.தி.க. தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
ஒரே விமானத்தில் பயணம் செய்ததால் 2 பேரும் பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேசி இருக்கக் கூடும் என கருதப்படுகிறது. ஆனால் விமானத்தில் சுதீஷ் முன்பக்க இருக்கையிலும், அண்ணாமலை பின்பக்க இருக்கையிலும் அமர்ந்து பயணம் செய்ததாக தெரிகிறது. ஆகவே இருவரும் சந்தித்ததற்கான எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை.
பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனது கூட்டணி நிலைப்பாட்டினை இன்னமும் அறிவிக்கவில்லை. அ.தி.மு.க. மற்றும் பாஜக ஆகிய 2 கட்சிகளும் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க திரை மறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆகவே ஒரே விமானத்தில் 2 கட்சிகளின் தலைவர்களும் பயணம் செய்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அண்ணாமலை கரூருக்கும், சுதீஷ் தஞ்சாவூருக்கும் புறப்பட்டுச் சென்றனர். 2 கட்சிகளின் தொண்டர்களும் அவர்களை வரவேற்று வழி அனுப்பி வைத்தனர்.
- தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து வந்த கே.எஸ்.அழகிரி அதிரடியாக மாற்றப்பட்டு தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வ பெருந்தகை நியமிக்கப்பட்டு உள்ளார்.
- மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி என்பது போல விஜயதாரணியின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழக காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு சத்திய மூர்த்தி பவன் பரபரப்பாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. 5 ஆண்டுகளாக தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து வந்த கே.எஸ்.அழகிரி அதிரடியாக மாற்றப்பட்டு தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வ பெருந்தகை நியமிக்கப்பட்டு உள்ளார்.
தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைமை மாற்றப்பட்டு இருப்பது தமிழக காங்கிரசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அந்தக் கட்சியின் விளவங்கோடு தொகுதி பெண் எம்.எல்.ஏ.வான விஜயதாரணி பாரதிய ஜனதா கட்சியில் சேரப் போவதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் பரவி வருகிறது.
இப்படி பரவி வரும் செய்தியை விஜயதாரணி மறுக்காமலேயே உள்ளார். மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி என்பது போல விஜயதாரணியின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இந்த நிலையில் டெல்லியில் முகாமிட்டுள்ள விஜயதாரணி பாரதிய ஜனதா கட்சியில் சேர்வதில் கூடுதல் வேகத்துடன் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காங்கிரசில் இருந்து வெளியேறி பா.ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. கன்னியாகுமரி எம்.பி. தொகுதியை தனக்கு வழங்க வேண்டும். இல்லை என்றால் மேல்சபை எம்.பி. பதவியில் தன்னை அமர்த்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியிடம் கோரிக்கை வைத்துள்ள விஜயதாரணி டெல்லியில் பா.ஜ.க.வின் தமிழக பொறுப்பாளரான அரவிந்த் மேனனை சந்தித்து பேசி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இது தவிர பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலரையும் அவர் ரகசியமாக சந்தித்து பேசி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் விஜயதாரணி எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் சேர்வது 100 சதவீதம் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எந்த தேதியில் யார் முன்னிலையில் சேருவது என்பது பற்றி முடிவு செய்யப்பட்டதும் விஜயதாரணி பாரதிய ஜனதா கட்சியில் தனது அரசியல் பணியை வேகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மாசி கொடை விழா அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்குகிறது.
- பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்.
மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடைவிழா அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கோவில் தங்கும் விடுதி வளாகத்தில் தனிப்பந்தலில் ராதாகிருஷ்ணபுரம் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 87-வது இந்து சமய மாநாடு நடக்கிறது. மாநாட்டு பந்தலில் அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஜனை, 8.30 மணிக்கு மாநாடு கொடியேற்றம், தொடர்ந்து நடக்கும் சமய மாநாட்டை மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்து உரையாற்றுகிறார்.
விழா நாட்களில் 3-ம் நாள் விழா முதல் 10-ம் திருவிழா வரை காலை, இரவில் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் 2-வது நாள் அதிகாலை 5.30 மணிக்கு லலிதா சகஸ்ர நாம மற்றும் விஷ்ணு சகஸ்ரநாம வேள்வி, காலை 7 மணிக்கு ஸ்ரீமத்பாகவத மாகாத்மிய பாராயணம், 10 மணிக்கு மகாபாரத விளக்கவுரை, நண்பகல் 12 மணிக்கு சமய மாநாடு, மாலை 5 மணிக்கு பரத நாட்டியம், 3-வது நாள் மாலை 5.30 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி, இரவு 10.30 மணிக்கு கதைகளி நடக்கிறது.
4-ம் நாள் காலை 11 மணிக்கு அகவல் பாராயணம், இரவு 10 மணிக்கு இன்னிசை கச்சேரி, 5-ம் நாள் மாலை 6.30-க்கு ஆன்மிக சிறப்புரை, இரவு 10.30 மணிக்கு நாட்டிய நடனம், 6-ம் நாள் காலை 9 மணி முதல் பஜனை போட்டி, இரவு 10.30 மணிக்கு குரு சிவச்சந்திரனின் ஆன்மிக அருளுரை, நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை பூஜை நடைபெறும்.
7-ம் நாள் மற்றும் 8-ம் நாள் காலை 8 மணி முதல் சொற்பொழிவு போட்டி, ஏழாம் நாள் மாலை 4 மணிக்கு சங்க வருடாந்திர மகா சபைக் கூட்டம், இரவு 8 மணிக்கு மாதர் மாநாடு, இரவு 10.30 மணிக்கு புராண நாடகம் நடக்கிறது.
8-ம் நாள் பிற்பகல் 3.30 மணிக்கு யோகா, இரவு 8 மணிக்கு அகிலத்திரட்டு விளக்கவுரை, இரவு 10 மணிக்கு கர்நாடக இன்னிசை, 9-ம் நாள் பிற்பகல் 3.30 மணிக்கு வில்லிசை, இரவு 7 மணிக்கு சமய மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல், இரவு 10 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பெரிய சக்கர தீவட்டி ஊர்வலமும், 10.30 மணிக்கு வேடம் புனைந்த விசாரணை மன்றமும் நடைபெறுகிறது.
நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்குபூஜை நடக்கிறது. பின்னர் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை நிர்வாகிகள் மற்றும் ஹைந்தவ சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.
- 108 திவ்ய தேச வைணவ தலங்களுள் 17-வது தலம்.
- தேரோட்டம் நாளை 22-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
திட்டச்சேரி:
நாகை மாவட்டம் திருமருகல் அருகே திருக்கண்ணபுரம் கிராமத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு பெற்ற இக்கோவில், 108 திவ்ய தேச வைணவ தலங்களுள் 17-வது தலமாக போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசிமக திருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிமக திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 29-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது. விழாவின் 4-வது நாளான நேற்று முன்தினம் காலை பெருமாள் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இரவு பெருமாள் ஓலை சப்பரத்துடன் கூடிய தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
இந்த கருட சேவை நிகழ்ச்சியில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை 22-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. 24-ந் தேதி (சனிக்கிழமை) சவுரிராஜ பெருமாள் புறப்பட்டு திருமருகல் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வந்து அங்குள்ள வரதராஜபெருமாளுடன் சேர்ந்து 2 பெருமாள்களும் தீர்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும், அன்று மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது.
29-ந் தேதி இரவு 10 மணிக்கு சவுரிராஜ பெருமாள் கோவில் முன் அமைந்துள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தில் பங்களாதெப்பம் என்ற தெப்பத்திருவிழா நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
- மத்திய அரசு வழங்கும் தொகை போதாது என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு கான்கிரீட் கூரை அமைப்பதற்காக கூடுதலாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வழங்குகிறது.
- குடிசைகள் இல்லா தமிழ்நாடு என்ற இலக்குடன் மொத்தம் 8 லட்சம் வீடுகள் கட்டி தரப்பட இருக்கின்றன.
சென்னை:
தமிழ்நாடு அரசின் 2024-25-ம் ஆண்டு பட்ஜெட்டில் பெரும்பாலான திட்டங்கள் மத்திய அரசின் திட்டத்தின் பெயரை மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோர் விமர்சித்திருந்தனர்.
அதற்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவின் சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.அந்த பதிவு வருமாறு:-
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் என்பது ரூ.1.2 லட்சம் வழங்கும் திட்டம் ஆகும். இதில் ரூ.72 ஆயிரம் மத்திய அரசும், ரூ.48 ஆயிரம் தமிழ்நாடு அரசும் வழங்குகின்றன. மத்திய அரசு வழங்கும் தொகை போதாது என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு கான்கிரீட் கூரை அமைப்பதற்காக கூடுதலாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வழங்குகிறது. ஆக இந்த திட்டத்தில் மொத்தம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் ஒரு பயனாளிக்கு வழங்கப்படுகிறது. இதில் தமிழ்நாடு அரசு 70 சதவீத தொகையை வழங்குகிறது. மத்திய அரசு 30 சதவீதம் மட்டுமே தருகிறது.
'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தில் முதல் கட்டமாக 1 லட்சம் வீடுகள் தலா ரூ.3½ லட்சம் செலவில் இந்த ஆண்டில் கட்டப்படும். தமிழ்நாடு அரசே ஒட்டுமொத்த நிதியையும் வழங்கும். கிராமப்பகுதிகளில் ஏழை-எளிய மக்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டம் (கலைஞர் கனவு இல்லம்) இது ஆகும். குடிசைகள் இல்லா தமிழ்நாடு என்ற இலக்குடன் மொத்தம் 8 லட்சம் வீடுகள் கட்டி தரப்பட இருக்கின்றன.
இந்தியாவில் 100 நகரங்களை தேர்வு செய்து தமிழ்நாட்டில் சென்னை உள்பட 11 மாநகராட்சிகளை சீர்மிகு நகரங்களாக மாற்றும் திட்டம் 2015-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்த திட்டம் மத்திய, மாநில அரசின் 50:50 பங்கீட்டின் அடிப்படையில் செயல்படுகிறது.
தமிழ்நாடு அரசின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் நகர்ப்புற உள்ளாட்சிகள் இடையே உள்ள வளர்ச்சி இடைவெளியை குறைக்க 121 நகராட்சி மற்றும் 528 நகர பேரூராட்சிகளிலும் அமலில் உள்ளது. இந்த திட்டத்துக்கான முழு நிதியையும் தமிழ்நாடு அரசே வழங்குகிறது.
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தில் 18 வயது நிரம்பியவர்கள் இணைய முடியும். 18 வகை தொழில்களை பாரம்பரிய குடும்ப தொழிலாக செய்பவர்களுக்கு மட்டுமே பயிற்சியும், கடன் உதவியும் வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் கைவினைஞர் மேம்பாட்டுத்திட்டத்தில் 35 வயதுக்கு மேற்பட்ட கலை மற்றும் கைவினை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பயிற்சி கொடுத்து, நவீன தரத்துக்கு உயர்த்துவதே சாராம்சம் ஆகும். குடும்ப தொழிலாக இருக்க வேண்டியதில்லை. 25 சதவீத மானியத்துடன் கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படும். எனவே மத்திய அரசின் நலத்திட்டத்தை பெயர் மாற்றி மாநில அரசின் திட்டமாக அமலாக்கவில்லை. தகவல்களை திரித்து பரப்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாசித் திருவிழா 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் திருநாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், உருகு சட்ட சேவை நடந்தது.
பின்னர் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் ஸ்ரீபெலி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
காலை 8.30 மணிக்கு சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் வெற்றிவேர் சப்பரத்தில் தூண்டிகை விநாயகர் கோவில் அருகே உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
அங்கு சுவாமி- அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் செம்பட்டு அணிந்து, செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். சுவாமி பின்புறம் சிவாம்சமாக நடராஜர் கோலத்தில் காட்சி கொடுத்தார்.
தொடர்ந்து சுவாமி- அம்பாள்களுடன் 8 வீதிகளிலும் உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் 8-ம் நாளான இன்று (புதன்கிழமை) பகல் 11 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற பட்டு உடுத்தி, பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
10-ம் திருநாள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விநாயகர், சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்பாள் ஆகியோர் தனித்தனி தேரில் எழுந்தருளி வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 11-ம் திருநாள் (சனிக்கிழமை) இரவில் தெப்ப உற்சவம் நடக்கிறது.
- திருவனந்தபுரம் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் கூடுதல் நிறுத்தமாக கேரள மாநிலம் சிராயின்கீழ் பகுதியில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.
- சென்னை எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் கூடுதல் நிறுத்தமாக கேரள மாநிலம் பல்ராமபுரம் பகுதியில் ஒரு நிமிடம் நின்று வரும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து வரும் 24-ந் தேதி மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.12695) கூடுதல் நிறுத்தமாக கேரள மாநிலம் சிராயின்கீழ் பகுதியில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.
திருவனந்தபுரத்தில் இருந்து வரும் 25-ந் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12624) கூடுதல் நிறுத்தமாக கேரள மாநிலமான கழக்கூட்டம், சிராயின்கீழ் மற்றும் கடகவூர் பகுதிகளில் ஒரு நிமிடம் நின்று வரும்.
மேலும், கொல்லத்தில் இருந்து 25-ந் தேதி பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20636) கூடுதல் நிறுத்தமாக கேரள மாநிலம் பல்ராமபுரம் பகுதியில் ஒரு நிமிடம் நின்று வரும்.
இதேபோல, கொச்சுவேலியில் இருந்து வரும் 25-ந் தேதி பிற்பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (06429) ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 3.40 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒரு எம்.எல்.ஏ. என்ற முறையிலும், பா.ஜனதா தேசிய மகளிர் பிரிவு தலைவி என்ற முறையிலும் இதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
- இந்த தரச்சான்றை பெற்றதன் மூலம், எங்களது பணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சென்னை:
வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான எனது எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைத்துள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை புரிந்துள்ள முதல் எம்.எல்.ஏ. நான்தான். ஒரு எம்.எல்.ஏ. என்ற முறையிலும், பா.ஜனதா தேசிய மகளிர் பிரிவு தலைவி என்ற முறையிலும் இதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
2011-ம் ஆண்டு குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைத்தது.
இந்த தரச்சான்றை பெற்றதன் மூலம், எங்களது பணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த எம்.எல்.ஏ. அலுவலகம், மக்களுக்கு அளித்து வரும் சேவை மற்றும் அதன் செயல்பாட்டில் உள்ள சர்வதேச தரத்தை, இந்த சான்றளிப்பு அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்த சாதனையை சபாநாயகர் அப்பாவுவிடம் காட்டி மகிழ்ச்சி அடைந்தேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு கடன் சுமையில் இருக்கிறது என்பதையே தமிழக அரசின் பட்ஜெட் உணர்த்துகிறது.
- தமிழகத்தில் பா.ஜ.க.வின் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கிறது என அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
மத்திய அரசு திட்டங்களின் பெயரை மாற்றி புது ஸ்டிக்கர் ஒட்டுவதைத் தான் மாநில அரசு வாடிக்கையாக செய்கிறது.
தமிழ்நாடு கடன் சுமையில் இருக்கிறது என்பதையே தமிழக அரசின் பட்ஜெட் உணர்த்துகிறது.
மண் பரிசோதனை திட்டத்தை 2015ல் கொண்டு பிரதமர் கொண்டு வந்தார். பல விவசாயிகள் பலனடையும் போது தமிழக அரசு இன்று அறிமுகம் செய்கிறது.
தமிழகத்தில் மாற்றம் வேண்டுமென தமிழக மக்கள் நினைக்கிறார்கள். பா.ஜ.க.வில் இருக்கக்கூடிய கூட்டணி வலிமையான கூட்டணியாக இருக்கும்.
தமிழகத்தில் பா.ஜ.க.வின் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கிறது. ஆனால், இணைவதும், இணையாமல் செல்வதும் அந்தந்த கட்சியின் விருப்பம்.
2024 தேர்தலில் தமிழகத்தில் பிரதான கட்சிகள் 3 மற்றும் 4-ம் இடத்திற்குச் சென்றுவிடும்.
தமிழ்நாட்டில் மக்கள் அதிகாரம் கொடுத்துள்ள முக்கிய புள்ளிகள் ஓரிரு நாட்களில் பா.ஜ.க.வில் இணைய உள்ளார்கள். எனவே அனைவரையும் நாங்கள் ஒரே மாதிரியாக ஏற்றுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.






