search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொடர்ந்து டெல்லியில் முகாம்: பா.ஜனதா கட்சியில் சேர விஜயதாரணி தீவிரம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தொடர்ந்து டெல்லியில் முகாம்: பா.ஜனதா கட்சியில் சேர விஜயதாரணி தீவிரம்

    • தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து வந்த கே.எஸ்.அழகிரி அதிரடியாக மாற்றப்பட்டு தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வ பெருந்தகை நியமிக்கப்பட்டு உள்ளார்.
    • மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி என்பது போல விஜயதாரணியின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழக காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு சத்திய மூர்த்தி பவன் பரபரப்பாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. 5 ஆண்டுகளாக தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து வந்த கே.எஸ்.அழகிரி அதிரடியாக மாற்றப்பட்டு தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வ பெருந்தகை நியமிக்கப்பட்டு உள்ளார்.

    தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைமை மாற்றப்பட்டு இருப்பது தமிழக காங்கிரசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அந்தக் கட்சியின் விளவங்கோடு தொகுதி பெண் எம்.எல்.ஏ.வான விஜயதாரணி பாரதிய ஜனதா கட்சியில் சேரப் போவதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் பரவி வருகிறது.

    இப்படி பரவி வரும் செய்தியை விஜயதாரணி மறுக்காமலேயே உள்ளார். மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி என்பது போல விஜயதாரணியின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இந்த நிலையில் டெல்லியில் முகாமிட்டுள்ள விஜயதாரணி பாரதிய ஜனதா கட்சியில் சேர்வதில் கூடுதல் வேகத்துடன் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    காங்கிரசில் இருந்து வெளியேறி பா.ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. கன்னியாகுமரி எம்.பி. தொகுதியை தனக்கு வழங்க வேண்டும். இல்லை என்றால் மேல்சபை எம்.பி. பதவியில் தன்னை அமர்த்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியிடம் கோரிக்கை வைத்துள்ள விஜயதாரணி டெல்லியில் பா.ஜ.க.வின் தமிழக பொறுப்பாளரான அரவிந்த் மேனனை சந்தித்து பேசி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    இது தவிர பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலரையும் அவர் ரகசியமாக சந்தித்து பேசி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் விஜயதாரணி எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் சேர்வது 100 சதவீதம் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    எந்த தேதியில் யார் முன்னிலையில் சேருவது என்பது பற்றி முடிவு செய்யப்பட்டதும் விஜயதாரணி பாரதிய ஜனதா கட்சியில் தனது அரசியல் பணியை வேகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×