search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udangudi Karupatti"

    • இந்த ஆண்டு பதநீர் உற்பத்தி மிக மிக நன்றாக இருக்கும்.
    • உடன்குடி பகுதியில் பல இடங்களில் பூமியில் உவர்ப்பு தண்ணீர் எல்லாம் சுவையாக மாறி உள்ளது.

    உடன்குடி:

    உடன்குடி என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது கருப்பட்டிதான். உடன்குடி கருப்பட்டி என்று ஊர் பெயரோடு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த கருப்பட்டி மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய 5 மாதங்கள் மட்டுமே உற்பத்தியாகும். தற்போது கருப்பட்டி உற்பத்திக்காக கற்பக தரு என்று அழைக்கப்படும் பனை மரத்தில் தினசரி ஏறி இறங்குவதற்கு இடையூறாக உள்ள சின்ன சின்ன தடைகளை நீக்குதல், பனை மரத்தில் உள்ள சில்லாட்டை, காய்ந்த ஓலைகளை அப்புறப்படுத்தி, மட்டைகளை விரித்து விடுதல், இப்படி விரித்து விட்டால் பதநீர் தரும் பாளைகள் வேகமாக வெளிவரும் என்கிறார்கள்.

    பின்பு பாளையை கயிற்றால் கட்டி, தட்டி, பக்குவப்படுத்தி பதநீர் தரும் பாளைகளாக மாற்றுவார்கள். இப்போது கருப்பட்டி உற்பத்திற்கான ஆரம்பக்கட்ட பணி தொடங்கி உள்ளது.

    இதுபற்றி இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவர் கூறியதாவது:-

    கருப்பட்டி உற்பத்திக்காக ஆரம்ப கட்ட பணி தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு பதநீர் உற்பத்தி மிக மிக நன்றாக இருக்கும். கடந்த டிசம்பர் மாதம் மழை நன்றாக பெய்தது. பல இடங்களில் மழை நீர் பல மாதங்கள் தேங்கி இருந்தது. தற்போது குறைந்துள்ளது.

    இதனால் உடன்குடி பகுதியில் பல இடங்களில் பூமியில் உவர்ப்பு தண்ணீர் எல்லாம் சுவையாக மாறி உள்ளது. அதனால் கருப்பட்டி உற்பத்தி மிக மிக அதிகமாக இருக்கும் என்று கூறினார்.

    • எப்போதுமே ஒரு வருடம் இருப்பு இருந்த பழைய கருப்பட்டிக்கு தான் தனி மவுசு உண்டு.
    • தற்போது புதிய கருப்பட்டி உற்பத்தி சீசன் இல்லை.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி வட்டார பகுதியில் உற்பத்தியாகும் கருப்பட்டிக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. உடன்குடி கருப்பட்டி என்ற ஊர் பெயரோடு தான் விற்பனையாகும்.

    எப்போதுமே ஒரு வருடம் இருப்பு இருந்த பழைய கருப்பட்டிக்கு தான் தனி மவுசு உண்டு. பழைய கருப்பட்டி ஒரு கிலோ ரூ.360 என்று விற்றது. தற்போது ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது புதிய கருப்பட்டி உற்பத்தி சீசன் இல்லை. சுமார் 3 மாதங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட கருப்பட்டி ஒரு கிலோ ரூ.280, ரூ. 300, ரூ.320 என உயர்ந்து. தற்போது ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இது பற்றி உற்பத்தியாளர் ஒருவர் கூறும்போது, மழை காலம் தொடங்கிவிட்டது. மழையும், குளிரும், கருப்பட்டிக்கு வேண்டாதது. அதனால் புகை மூட்டம் போட்டு இருப்பு வைத்த கருப்பட்டியை பாதுகாக்க முடியவில்லை. இதனால் இன்னும் விலை உயரும் என்று கூறினார்.

    • உடன்குடி கருப்பட்டி என்று சொன்னாலே உதடும், உள்ளமும் இனிக்கும்.
    • பனை மரத்தை அழிப்பவர்களை அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும்.

    உடன்குடி:

    உடன்குடி கருப்பட்டி என்று சொன்னாலே உதடும், உள்ளமும் இனிக்கும். ஊர் பெயரோடு ஊர்ஊராய் சென்று விற்பனை செய்வதுதான் உடன்குடி கருப்பட்டி.

    சர்க்கரை நோய் வராது

    பனைமரத்தின் இயற்கை பானமான பதநீரை எடுத்து, அதில் பக்குவமாய் சுண்ணாம்பு கலந்து குடித்தால் சர்க்கரை நோயே வராது.

    பனை மரத்தில் தினசரி காலை, மாலை என 2 முறை ஏறி இறங்குவதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை. பல வகையான எந்திரங்கள் வந்தாலும், அவை அனைத்தும் ஒரு சில நாளில் செயல் இழந்து விடுகிறது.

    கயிறு மூலம் பனை மரத்தில் தடுப்பு அமைத்து ஏறி இறங்குவதும், காலில் நார் மாட்டிக்கொண்டு பனைமரத்தை சேர்த்து கட்டிப்பிடித்து ஏறி இறங்குவதும் தான் இப்போது நிலைத்து நிற்கிறது. பனை மரத்தில் ஏறி பதநீர் தரும் பாளைகளை இடுக்கி, அரிவாளால் சீவி பக்குவப்படுத்தி பதநீர் போட வைப்பது எல்லோருக்கும் தெரிந்த கலை அல்ல.

    புவிசார் குறியீடு

    தினசரி 2 முறை பதனீர் தரும் பாளையை சீவி விட வேண்டும். இப்படி தயாரிக்கப்படும் கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்பது இத்தொழிலில்ஈடுபட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

    மேலும் இத்தொழிலை மேம்படுத்த அரசு பல்வேறு வகையான மானியங்கள் வழங்க வேண்டும் என்றும், பனை மரங்களை வளர்ப்பதற்கும் மானியம் கொடுக்க வேண்டும் என்றும் தொழிலில் ஈடுபட்டவர்கள் கூறுகிறார்கள்.

    இது பற்றி தாண்டவன்காடு தமிழ்ராஜ் என்பவர் கூறியதாவது:-

    கற்பகதரு என்று சொல்லக்கூடிய பனைமரம் மட்டும்தான் வேர் பகுதியில் இருந்து தலை ஓலை வரை அதாவது அடி முதல் உச்சி வரை 100 வகையில் மக்களுக்கு பயன்தருகிறது.

    இந்த பனை மரத்தை அழிப்பவர்களை அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும். வேறு எந்த மரமும் 100 வகையில் மக்களுக்கு பயன்தருவதில்லை. பணந்தும்பு, கால் மிதி, தும்பு மூலம் பல வகையான பொருட்கள் பனமரக்கட்டை. பனை ஓலை பெட்டி, பனை ஓலைக்கு வண்ணம்பூசி பலவகையான வண்ண வண்ண பெட்டிகள், நுங்கு, பணம்பழம், பனங்கிழங்கு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    நிலத்தடி நீர்

    கூரைகள் அமைப்பதற்கு பனைமர கட்டை, பனைமர ஓலை அதை கட்டுவதற்கு பனைமர நார் இப்படி 100 வகையான பயன்களை சொல்லலாம். அப்படிப்பட்ட பனை மரத்தை அழிக்கவே கூடாது. தோட்டங்களில் கரைகளிலும், வேலிகளின் கரைகளிலும் பனை மரத்தை வளர்த்தால், அது பலனும் தரும்.

    நிலத்தடி நீரையும் பாதுகாக்கும். இப்படிப்பட்ட பனைமரம் முன்பெல்லாம் மக்களோடும் மக்களாய் இணைந்து இருந்தது. தற்போது மக்களை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறது. இதனால் செழுமை குறைந்து வறுமை அதிகரித்துவிட்டது. அதனால் பனைமரம் மீண்டும் மக்களோடு, மக்களாய் இணைவதற்கு அனைத்து தரப்பு மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    சிறுநாடார் குடியிருப்பு ஊராட்சி மன்ற துணைத் தலைவரும், முன்னாள் உடன்குடி யூனியன் கவுன்சிலருமான பிரபாகர்முருகராஜ் கூறியதாவது:-

    உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு கிடைக்க வேண்டும் என்பதில் நானும் மிகுந்த ஆவலாய் உள்ளேன். உடனடியாக புவிசார் குறியீடு கிடைக்க வேண்டும். கோவில்பட்டி என்றால் கடலை மிட்டாய். நெல்லை என்றால் அல்வா, மணப்பாறை என்றால் முறுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் என்றால் பால்கோவா, திண்டுக்கல் என்றால் பூட்டு.

    இந்த வரிசையில் உடன்குடி என்றால் கருப்பட்டி. இப்படி ஊர் பெயரோடு ஊர் ஊராய் பவனி வரும் உடன்குடி கருப்பட்டிக்கு மேலும் சிறப்பு சேர்க்கையில் ஈடுபடும் தொழிலாளர்கள் அனைவரும் மிகவும் உற்சாகத்துடன் செயல்பட வேண்டும்.

    பனைமரச் தொழிலை பாதுகாப்பதும், அதில் இருந்து கிடைக்கும் 100 வகையான பொருட்களை தயாரிப்பதிலும், பனைமரம் என்ற கற்பக தெரு எவ்வளவுக்கு வளர்ச்சி அடைகிறதோ அவ்வளவுக்கு அதிகமாக மக்களின் தரமும் உயரும் என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. பனைத் தொழிலை போற்றுவோம் பனை மரத்தை வளர்ப்போம், பனை மரத்தினால் பயன்பெறுவோம் என்று கூறினார்.

    ×