என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்து பீடி இலைகள் மற்றும் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள், மஞ்சள் மற்றும் பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இதை தடுக்க போலீசார் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக கடலோர பகுதிகளில் இருந்து படகு மூலம் 2 டன் பீடி இலைகள் கடத்தி சென்ற 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்து பீடி இலைகள் மற்றும் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

    கடத்தலில் ஈடுபட்டதாக தூத்துக்குடி இனிகோ நகர், சிலுவைபட்டி மற்றும் லூர்தம்மாள்புரம் பகுதியை சேர்ந்த அஸ்வின் (வயது19), அபிஷ்டன் (19), மரிய அந்தோணி (20), டிஜோ(24), காட்வே (19) ஆகிய 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்து இலங்கை கல்பட்டியில் உள்ள கடற்படை தளத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை மாவட்டம் கூத்தன்குழி கடற்கரை வழியாக படகு மூலம் பீடி இலைகளை கடத்தி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • எருது விடும் விழாவில், சீறிப் பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற, 20 பேர் காயமடைந்தனர்.
    • சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் எருதாட்டத்தை கண்டு கழித்தனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே தியாகரசனப்பள்ளியில், எருது விடும் விழா நடந்தது. சூளகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் மொத்தம், 500-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன.

    விழாவில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, கிடா வெட்டி சிறப்பு. பூஜை நடந்தது. அதன்பின் விழா திடலில் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.

    அவற்றை அடக்கி, அதன் கொம்பில் கட்டப்பட்டிருந்த தடுக்குகளை இளைஞர்கள் எடுத்தனர்.

    காளைகள் சீறிப்பாய்ந்த போது, அடக்க முயன்ற இளைஞர்கள் மற்றும் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என, 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    அவர்கள், சூளகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் எருதாட்டத்தை கண்டு கழித்தனர்.

    விழாவில், 20,000க்கும் மேற்பட்டோர் திரண்டதால், சூளகிரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • விருப்ப மனு இன்று முதல் மார்ச் 1-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகிறது.
    • பொதுத் தொகுதிக்கு ரூ.20 ஆயிரமும், தனி தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பா.ஜனதா உறவை துண்டித்த அ.தி.மு.க. தனி அணியாக தேர்தலை சந்திக்க திட்டமிட்டு உள்ளது.

    அ.தி.மு.க.வுடன் சில அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேசி வருகின்ற நிலையில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வினியோகம் இன்று தொடங்கியது.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் விருப்ப மனு வழங்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர். பொதுத் தொகுதிக்கு ரூ.20 ஆயிரமும், தனி தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ரொக்கமாக பணத்தை கொடுத்து ரசீது பெற்றுக்கொண்டு விருப்ப மனுக்களை வழங்கினர்.

    முதல்நாள் என்பதால் பலரும் மனுக்கள் வாங்குவதற்கு தங்களது ஆதரவாளர்களுடன் வந்திருந்தனர். இதனால் அ.தி.மு.க. அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. எந்த தொகுதிக்கு போட்டியிட மனு பெறப்பட்டது என்ற விவரத்தை நிர்வாகிகள் பதிவு செய்தனர்.

    தற்போது சட்டசபை கூட்டம் நடைபெற்று வருவதால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு சென்று இருந்தனர்.

    விருப்ப மனு இன்று முதல் மார்ச் 1-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகிறது.

    தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளிலும் தொகுதி பங்கீடு, கூட்டணி இன்னும் உறுதியாகாத நிலையில் விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்படுகிறது. இதனால் எந்த தொகுதிக்கு பணம் கட்டுவது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஊழலில் ஊறிப்போன தி.மு.க. பா.ஜனதாவை பார்த்து விரல் நீட்ட கூட தகுதியற்ற கட்சி.
    • தி.மு.க. தேர்தல் நெருங்க நெருங்க தி.மு.க.வினருக்கு பயமும் அதிகரித்து வருகிறது.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த தேர்தலுக்கு பிறகு மோடி ஆயுள் தண்டனை பெறுவார். இதுவரை 400-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி இருக்கிறார்கள். புதுவைக்கு வரும் கவர்னர்களிடம் சொத்துக்கணக்குகள் கேட்க வேண்டும் என்று கடுமையாக விமர்சித்தார்.

    இது தொடர்பாக பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும் மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு கூறியதாவது:-

    விலை கொடுத்து வாங்கி பழக்கப்பட்டவர்களுக்கு அந்த எண்ணம் தான் வரும். இன்று ஜெயிலில் இருக்கும் செந்தில் பாலாஜி முதல் பெரும்பாலானவர்கள் அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு சென்றவர்கள். அவர்களை எவ்வளவு விலை கொடுத்து வாங்கினார்கள் என்பதையும் வெளியிட்டால் நல்லது.


    மற்றவர்களின் சொத்துக்கணக்கை கேட்க ஆசைப்படும் தி.மு.க.வினர் முதலில் அவர்களது பின்புலத்தையும் இப்போதைய சொத்துக்களையும் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும். ஊழலில் ஊறிப்போன தி.மு.க. பா.ஜனதாவை பார்த்து விரல் நீட்ட கூட தகுதியற்ற கட்சி.

    லாலுபிரசாத் யாதவ் ஊழல் செய்து ஜெயிலுக்கு சென்றவர். வடகிழக்கு மாநிலத்தில் ஒரே ஒரு எம்.எல்.ஏ. வீட்டில் ஒரு 350 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்படி நாடு முழுக்க ஊழல் செய்பவர்கள் செய்பவர்களோடு கூட்டணி அமைத்து மக்களிடம் ஓட்டு கேட்க போகிறார்கள்.


    எப்படி மக்கள் ஆதரிப்பார்கள். ஊழலை ஒழிக்க போராடுகிறார் மோடி. அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தங்கள் நிலைமை என்ன ஆகுமோ? என்ற பயத்தில் தான் இப்படி கதறுகிறது. தி.மு.க. தேர்தல் நெருங்க நெருங்க தி.மு.க.வினருக்கு பயமும் அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்கம் நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.46,280-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமும் காணப்பட்டு வரும் நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.46280-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,810-க்கும் சவரன் ரூ.46,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.20-க்கும் பார் வெள்ளி ரூ.77,200-க்கும் விற்பனையாகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தொகுதி வாரியாக பொதுக்கூட்டங்களில் பேச உள்ள சீமான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
    • நாம் தமிழர் கட்சி கடந்த 6 தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க நாம் தமிழர் கட்சி தீவிரமாகி வருகிறது.

    தமிழகம், புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் ஆணுக்கு பெண் சரிசமம் என்பதை உணர்த்தும் வகையில் 20 பெண் வேட்பாளர்களை சீமான் நிறுத்துகிறார். 31 தொகுதிகளுக்கு சீமான் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளார்.

    தென்சென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக தமிழ்செல்வி நிறுத்தப்பட்டுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளராக டாக்டர் களஞ்சியம் சிவக்குமார் போட்டியிடுகிறார். திருவள்ளூர் தொகுதி வேட்பாளராக ஜெகதீஸ் சுந்தர் நிறுத்தப்பட்டுள்ளார்.

    மீதமுள்ள 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கான தேர்வும் இந்த மாத இறுதியில் முடிவாகிறது.

    இதையடுத்து சென்னையில் இருந்து சீமான் இந்த மாத இறுதியில் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.

    தமிழகம்-புதுவையில் போட்டியிடும் 40 பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்யும் அவர் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் வகையில் பிரசாரம் செய்கிறார்.

    பாராளுமன்ற தொகுதி வாரியாக பொதுக்கூட்டங்களில் பேச உள்ள சீமான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

    நாம் தமிழர் கட்சி கடந்த 6 தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டுள்ளது.

    இந்த நிலையில் அந்த சின்னம் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டு பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தை நாம் தமிழர் கட்சி நாடியுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து கட்சி நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

    கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.

    • பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக எழுந்தருளி வீதியுலா.
    • தேரோட்டம் நாளை மறு நாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கடந்த 14-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரத்தில் சுவாமி பல்வேறு வாகனம் மற்றும் சப்பரத்தில் பவனி வருதல் நடைபெற்று வருகிறது.

    8-ம் திருவிழாவான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    இன்று அதிகாலையில் வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மன் அம்சமாக சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி 8 வீதியிலும் உலா வந்து மேல கோவிலில் சேர்தல் நடைபெற்றது.

    தொடர்ந்து மதியம் 11 மணிக்கு மேல கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைக்கு பிறகு பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

    இந்த பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகரை வழிபட்டால் விஷ்ணு அம்சமாக இருந்து சண்முகர் வாழ்வில் வள மான வாழ்வு பெற்று செல்வ செழிப்புடன் இந்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக வாழ வைப்பார் என்ற ஐதீகத்தால் பக்தர்கள் பச்சை நிறத்தில் ஆன உடையணிந்து தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான 10-ம் திருவிழா தேரோட்டம் நாளை மறு நாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளிவீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

    11-ம் திருவிழாவான 24-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு சுவாமியும், அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    12-ம் திருவிழா அன்று மாலை 7 மணிக்கு சுவாமி, அம்பாள் தனித்தனி பூஞ்சப்பரத்தில எழுந்தருளி வீதியுலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடிவதால் பொதுமக்களிடையே நாளுக்கு நாள் மெட்ரோ ரெயிலுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
    • 119 கி.மீ. நீளத்திற்கு நடைபெற உள்ள மெட்ரோ ரெயில் பணிகள் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விமான நிலையம் முதல் சென்ட்ரல் ரெயில் நிலையம் வரையில் ஒரு வழித்தடத்திலும், விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை மற்றொரு வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடிவதால் பொதுமக்களிடையே நாளுக்கு நாள் மெட்ரோ ரெயிலுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை 16.07 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் சிறுசேரி- கிளாம்பாக்கம், பூந்தமல்லி- பரந்தூர், கோயம்பேடு- ஆவடி ஆகிய 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன.

    கோயம்பேடு- ஆவடி மெட்ரோ சேவைக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது.

    119 கி.மீ. நீளத்திற்கு நடைபெற உள்ள மெட்ரோ ரெயில் பணிகள் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    • ரெட்லீப் செடிகளுக்கு விதை கிடையாது.
    • ஊட்டியில் தற்போது குளிர்காலம் என்பதால் இந்த செடிகளின் வண்ணம் தற்போது சீதோஷ்ண சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறி வருகிறது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வெளிநாட்டில் இருந்து பல்வேறு மலர்ச்செடிகள் கொண்டுவரப்பட்டு, நடவுசெய்யப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வந்தன. அவற்றில் ஒரு சில மலர்ச்செடிகள் தற்போது பெரியளவில் வளர்ந்து மரங்களாக காட்சி அளித்து வருகின்றன.

    ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரெட்லீப் மலர்ச்செடிகள் தற்போது நீலகிரியில் உள்ள பெரிய பங்களாக்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலையோர பகுதிகளை அலங்கரித்து வருகின்றன. ரெட்லீப் செடிகளுக்கு விதை கிடையாது. பதியம் போடும் முறையில் வளர்க்க முடியும். இந்த செடியில் உள்ள இலைகள்தான், அங்கு தற்போது மலர் போல காட்சி அளிக்கின்றன.

    ரெட்லீப் செடிகளின் முதல் பருவத்தில் அவற்றின் இலைகள் பச்சைநிறத்திலும், பின்னர் சிவப்பு, இளஞ்சிவப்பு, இளம்மஞ்சள் என காலநிலைக்கு ஏற்றார்போல நிறம் மாறும். மலர்கள் பூத்துக்குலுங்குவது போல காட்சியளிக்கும் ரெட்லீப் செடிகள், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்து உள்ளது. ஊட்டியில் தற்போது குளிர்காலம் என்பதால் இந்த செடிகளின் வண்ணம் தற்போது சீதோஷ்ண சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறி வருகிறது.

    நீலகிரியில் பூத்து குலுங்கி பல்வேறு வண்ணங்களில் காட்சியளிக்கும் ரெட்லீப் செடிகள் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. எனவே அவர்கள் சாலையோரம் வண்ணம்-வண்ணமாக ஜொலிக்கும் பூக்களின் முன்பாக நின்று செல்பி எடுத்து நண்பர்கள் மற்றும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    • இந்த ஆண்டு பதநீர் உற்பத்தி மிக மிக நன்றாக இருக்கும்.
    • உடன்குடி பகுதியில் பல இடங்களில் பூமியில் உவர்ப்பு தண்ணீர் எல்லாம் சுவையாக மாறி உள்ளது.

    உடன்குடி:

    உடன்குடி என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது கருப்பட்டிதான். உடன்குடி கருப்பட்டி என்று ஊர் பெயரோடு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த கருப்பட்டி மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய 5 மாதங்கள் மட்டுமே உற்பத்தியாகும். தற்போது கருப்பட்டி உற்பத்திக்காக கற்பக தரு என்று அழைக்கப்படும் பனை மரத்தில் தினசரி ஏறி இறங்குவதற்கு இடையூறாக உள்ள சின்ன சின்ன தடைகளை நீக்குதல், பனை மரத்தில் உள்ள சில்லாட்டை, காய்ந்த ஓலைகளை அப்புறப்படுத்தி, மட்டைகளை விரித்து விடுதல், இப்படி விரித்து விட்டால் பதநீர் தரும் பாளைகள் வேகமாக வெளிவரும் என்கிறார்கள்.

    பின்பு பாளையை கயிற்றால் கட்டி, தட்டி, பக்குவப்படுத்தி பதநீர் தரும் பாளைகளாக மாற்றுவார்கள். இப்போது கருப்பட்டி உற்பத்திற்கான ஆரம்பக்கட்ட பணி தொடங்கி உள்ளது.

    இதுபற்றி இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவர் கூறியதாவது:-

    கருப்பட்டி உற்பத்திக்காக ஆரம்ப கட்ட பணி தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு பதநீர் உற்பத்தி மிக மிக நன்றாக இருக்கும். கடந்த டிசம்பர் மாதம் மழை நன்றாக பெய்தது. பல இடங்களில் மழை நீர் பல மாதங்கள் தேங்கி இருந்தது. தற்போது குறைந்துள்ளது.

    இதனால் உடன்குடி பகுதியில் பல இடங்களில் பூமியில் உவர்ப்பு தண்ணீர் எல்லாம் சுவையாக மாறி உள்ளது. அதனால் கருப்பட்டி உற்பத்தி மிக மிக அதிகமாக இருக்கும் என்று கூறினார்.

    • கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • அக்னி கம்பத்துக்கு பெண்கள் தண்ணீர் ஊற்றி வழிபட்ட காட்சி.

    கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் முன்பு அமைக்கப்பட்ட அக்னி கம்பத்துக்கு பெண்கள் தண்ணீர் ஊற்றி வழிபாடு.

    • வருகிற 27, 28-ந்தேதிகளில் தமிழகத்தில் 2 நாட்கள் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்கிறார்.
    • பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனது கூட்டணி நிலைப்பாட்டினை இன்னமும் அறிவிக்கவில்லை.

    கே.கே. நகர்:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. தமிழகத்தில் மெகா கூட்டணியை அமைக்க திட்டமிட்டு வருகிறது.

    இது தொடர்பாக கட்சியின் தமிழக அளவிலான உயர்மட்ட தலைவர்கள் பல்வேறு கட்சிகளுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

    வருகிற 27, 28-ந்தேதிகளில் தமிழகத்தில் 2 நாட்கள் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது தேர்தல் கூட்டணி இறுதி செய்ய வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்கள் கூறுகின்றன.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று (புதன்கிழமை) காலை 7.10 மணிக்கு ஒரு விமானம் வந்தது. இந்த விமானத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் தே.மு.தி.க. மாநிலத் துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் வந்தனர்.

    இதில் சுதீஷ் ரெகுலர் லாஞ்ச் வழியாக வெளியே வந்தார். அடுத்த சில மணித்துளிகளில் அண்ணாமலை வி.ஐ.பி. லாஞ்ச் வழியாக வெளியே வந்தார். இதைக் கண்டதும் அவர்களை வரவேற்க வந்திருந்த பா.ஜ.க. மற்றும் தே.மு.தி.க. தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

    ஒரே விமானத்தில் பயணம் செய்ததால் 2 பேரும் பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேசி இருக்கக் கூடும் என கருதப்படுகிறது. ஆனால் விமானத்தில் சுதீஷ் முன்பக்க இருக்கையிலும், அண்ணாமலை பின்பக்க இருக்கையிலும் அமர்ந்து பயணம் செய்ததாக தெரிகிறது. ஆகவே இருவரும் சந்தித்ததற்கான எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனது கூட்டணி நிலைப்பாட்டினை இன்னமும் அறிவிக்கவில்லை. அ.தி.மு.க. மற்றும் பாஜக ஆகிய 2 கட்சிகளும் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க திரை மறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    ஆகவே ஒரே விமானத்தில் 2 கட்சிகளின் தலைவர்களும் பயணம் செய்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அண்ணாமலை கரூருக்கும், சுதீஷ் தஞ்சாவூருக்கும் புறப்பட்டுச் சென்றனர். 2 கட்சிகளின் தொண்டர்களும் அவர்களை வரவேற்று வழி அனுப்பி வைத்தனர்.

    ×