search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sea water"

    • பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்துக்கு வந்ததால் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
    • இ.சி.ஆர். பேரூரில் 40 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் 3-வது திட்டப்பணிகள் ரூ..4,276.44 கோடியில் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க 2003-ம் ஆண்டு நெம்மேலி மற்றும் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் தினமும் தலா 100 மில்லியன் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

    இந்த 2 சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெறப்படும் குடிநீர் சென்னையின் மொத்த குடிநீர் தேவையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்து வருகிறது. இதனால் நெம்மேலியில் கூடுதலாக ரூ.1516.82 கோடி செலவில் 2-வது சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணி கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. தினமும் 15 கோடி லிட்டர் திறன் உடைய சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக மிகப்பெரிய குழாய்கள் அங்கு பதிக்கப்பட்டு வந்தது. உவர்நீரை வெளியேற்றும் குழாயும் கடலில் பதிக்கப்பட்டன. இது மட்டுமின்றி சோழிங்கநல்லூரில் பெரிய அளவில் கீழ்நிலை நீர்த்தேக்கம் மற்றும் 48 கி.மீ. தூரம் வரை குழாய்கள் பதிக்கும் பணியும் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அனைத்து பணிகளும் முடிந்து 4 மாதங்களுக்கு முன்பு பரீட்சார்த்த முறையில் சோதனை ஓட்டமும் தொடங்கியது.

    சோழிங்கநல்லூர், உள்ள கரம், ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க்கட்டளை, மூவரசம்பேட்டை, பல்லாவரம் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இந்த பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்துக்கு வந்ததால் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் உயர் அதிகாரிகள் நெம்மேலிக்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2-வது ஆலையின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. இதனால் வருகிற 24-ந்தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதை நேரில் வந்து தொடங்கி வைக்கிறார்.

    இதன்மூலம் தென்சென்னையில் பல்லாவரம் வரை 12 பகுதிகளை சேர்ந்த 9 லட்சம் மக்களுக்கு கடல் குடிநீர் வினியோகிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்கனவே இ.சி.ஆர். பேரூரில் 40 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் 3-வது திட்டப்பணிகள் ரூ..4,276.44 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை 2026-ல் முடிக்க பணிகள் விரைவுப்ப டுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடல் நீர் உள்வாங்கிய 100 அடி தூரம் சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
    • பருவநிலை மாற்றம் காரணமாக கடல் உள்வாங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. நேற்று அதிகாலை முதல் மழை ஓய்ந்த நிலையில் பனிப்பொழிவு தொடங்கியது. இந்த நிலையில் வேதாரண்யம் சன்னதி கடல் காலை முதல் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கியது.

    கடல் நீர் உள்வாங்கிய 100 அடி தூரம் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்களும், பொதுமக்களும் கடலில் இறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும், அலைகள் எதுவும் இன்றி கடல் அமைதியாக காணப்பட்டது. கடல் நீர் உள்வாங்கியுள்ளதால் மீனவர்களும், பொதுமக்களும் அச்சம் அடைந்தனர். பருவநிலை மாற்றம் காரணமாக கடல் உள்வாங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    கடல் உள்வாங்கி சேறும், சகதியுமாக காணப்படும் நிலையில் இன்னும் ஓரிரு நாளில் காற்று அதிகமாக வீசினால் அலைகள் எழுந்தவுடன் கடல் ஓரத்தில் உள்ள சேறு கரைந்து சீராகும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.

    • கோவா கடற்கரைக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவது புதுவை கடற்கரையைதான்.
    • கடல் நீரைவிட செம்மண் நீரின் அடர்த்தி அதிகம் என்பதால் கடலில் தனியாக தெரிகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அதன் அழகை ரசித்து செல்வது வழக்கம்.

    கோவா கடற்கரைக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவது புதுவை கடற்கரையைதான்.

    இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் வந்திருந்தனர்.

    அப்போது திடீரென பழைய வடிசாராய ஆலையின் பின்புறம் உள்ள குறிப்பிட்ட பகுதியில் கடல் நீரின் நிறம் மாறியிருந்தது. பிற பகுதிகளில் நீல வண்ணத்தில் இருக்கும்போது, அந்த பகுதி மட்டும் செம்மண் நிறத்தில் மாறியிருந்தது. ஒரு கிலோ மீட்டர் அளவில் குருசுகுப்பம் பகுதி வரை செம்மண் நிறமாக காட்சியளித்தது.

    இதனால் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த சுற்றுலா பயணிகள் தலைமை செயலகம் எதிரே உள்ள மணல் பரப்பில் இறங்கி, நிறம் மாறியிருந்த கடலின் அழகை புகைப்படம் எடுத்தனர்.

    இது தொடர்பாக மீனவர்களிடம் கேட்டபோது ஆரோவில் பகுதியில் மழை பெய்தால், அங்குள்ள செம்மண் மேட்டு பகுதிகளில் உள்ள மணல் சரிந்திருக்கும், இதனால் அந்த செம்மண் நீர் நகர்ந்து கடலுக்கு வந்திருக்கும் என்றனர்.

    கடல் நீரைவிட செம்மண் நீரின் அடர்த்தி அதிகம் என்பதால் கடலில் தனியாக தெரிகிறது. அலையில் செம்மண் கடற்கரையில் தேங்கியதும் நிறம் மீண்டும் நீலமாக மாறும் என்றனர். 

    • நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது.
    • சென்னை மக்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட வேண்டிய குடிநீரின் தரம் மற்றும் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்

    பொன்னேரி:

    சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் மீஞ்சூர், காட்டுப்பள்ளியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், இந்த கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் நேற்று மாலை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை எவ்வித தொய்வுமின்றி மேற்கொள்ள வேண்டும் எனவும், சென்னை மக்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட வேண்டிய குடிநீரின் தரம் மற்றும் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், செயல் இயக்குநர் செ.சரவணன், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், திருவள்ளூர் எம்.பி.கே.ஜெயகுமார், எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணசாமி, டி.ஜெ.கோவிந்த ராஜன், துரை சந்திரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீர் வெளியேற்றப்பட்டால்தான், அணுமின் நிலையத்தை செயலிழக்க செய்ய முடியும்
    • உள்ளூர் மீனவர் அமைப்புகளும், சீனாவும், தைவானும் எதிர்க்கிறது

    ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியினால் பெரும் கடல் அலைகள் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின் உள்ளே புகுந்து மின் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளை சேதப்படுத்தியது. மேலும் சேதத்தைத் தடுக்கவும், குளிரூட்டும் அமைப்பிற்கு மாற்றாகவும், கடல் நீர் மற்றும் போரிக் அமிலம், பெரும் அளவில் அந்த ஆலைக்குள் செலுத்தப்பட்டது. இதனால் அசுத்தமான கடல் நீர் அங்கு பெருமளவில் தேங்கியது.

    இந்த நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டால்தான், அணுமின் நிலையத்தை செயலிழக்க செய்யும் நீண்ட பணியை அணுமின் தொழில்நுட்ப பொறியாளர்களால் செய்ய முடியும்.

    ஆனால் இந்த நீரை கடலுக்குள் விடுவதற்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த உள்ளூர் மீனவர்களும், சீனா மற்றும் தைவான் உள்ளிட்ட சில கிழக்கு ஆசிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தாலும், சர்வதேச அணுசக்தி முகமையும், ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பும், சுத்திகரிக்கப்பட்ட நீர் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று திட்டவட்டமாக கூறி இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளித்தது.

    இந்நிலையில் ஜப்பானிய அரசாங்கம், சுனாமியால் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை, இம்மாத பிற்பகுதியில் கடலில் வெளியிட போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல் ஆகியோருடன் அடுத்த வாரம் அமெரிக்காவில் தனது சந்திப்புகளை முடித்த பிறகு, சுமார் 1.3 மில்லியன் டன் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வெளியிடுவதற்கான செயல்முறை தொடங்கும்.

    ஜப்பானிய தலைவர், இரு நாட்டு தலைவர்களுக்கும் நீர் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடல்சார் பணிகள், இயந்திரவியல் மற்றும் மின்சாரம் கருவிகள் நிறுவும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
    • 9 இலட்சம் மக்கள் பயனடைவார்கள் என தலைமை செயலாளர் தெரிவித்தார்.

    மாமல்லபுரம்:

    சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் 1516.82 கோடி ரூபாய் செலவில் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில், அமைக்கப்பட்டு வரும் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் புதிய ஆலையின் கட்டுமானப் பணிகளை நேற்று தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.

    கடல்சார் பணிகள், இயந்திரவியல் மற்றும் மின்சாரம் கருவிகள் நிறுவும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், கடல்நீரை நிலையத்திற்கு உள் கொண்டு வரும் குழாய் மற்றும் நிராகரிக்கப்பட்ட உவர்நீரை கடலுக்கு வெளியேற்றும் குழாய், கடல்நீரை உள் வாங்கும் ஆழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, காற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் கசடுகளை அகற்றும் தொட்டி, வடிகட்டப்பட்ட கடல் நீர்த்தேக்கத் தொட்டி, வடிகட்டப்பட்ட கடல்நீர் உந்து நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    இந்த ஆலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் குடிநீரை, விநியோகம் செய்வதற்காக, 48.10 கி.மீ நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் சோழிங்கநல்லூரில் இடைநிலை நீரேற்று நிலையம் அமைப்பதற்கான அனைத்து கட்டுமானப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது., இப்பணிகளை ஆய்வு செய்த தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அனைத்து பணிகளையும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆலையில் இருந்து பெறப்படும் குடிநீர், தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள தகவல் தொழில் நுட்ப பகுதிகளுக்கு வழங்கப்படும்.

    இதனால் 9 இலட்சம் மக்கள் பயனடைவார்கள் என தலைமை செயலாளர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் இரா.கிர்லோஷ் குமார், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், சென்னை குடிநீர் வாரிய தலைமைப் பொறியாளர் கந்தசாமி, கண்காணிப்புப் பொறியாளர் வைதேகி, செயற்பொறியாளர் கிருபாகரவேல் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.
    • திட்டத்தில் கடல்சார் பணிகளின் ஒரு பகுதியாக கடலில் 835 மீட்டர் குழாய் பதிக்கும் பணிகள் முடிந்துள்ளன.

    சென்னை:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் ரூ.1,516.82 கோடிசெலவில் தினமும் 15 கோடி லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளை சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மேற்கொண்டு வருகிறது.

    தற்போது இந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. மேலும் கடல்சார் பணிகள், கருவிகள் நிறுவும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.

    இந்த திட்டப்பணிகள் தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

    நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் 2-வது அலகின் கட்டுமான பணிகள் வேகமாக வருகின்றன. இந்த திட்டத்தில் கடல்சார் பணிகளின் ஒரு பகுதியாக கடலில் 835 மீட்டர் குழாய் பதிக்கும் பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள 200 மீட்டர் நீளத்துக்கு கடல்நீரை உட்கொள்ளும் குழாய் பதிக்கும் பணிகளுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் குழாய் பதிக்கப்படும். இதுவே இந்தியாவின் மிகப்பெரிய கடல்நீரை உள்கொணரும் குழாயாகும்.

    மேலும் நிராகரிக்கப்பட்ட உவர் நீர் வெளியேற்றும் குழாய் 600 மீட்டர் நீளத்துக்கு கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டு உள்ளது. இன்னும் 36 மீட்டர் அளவுக்கு குழாய் பதிக்க வேண்டியுள்ளது. இந்த திட்டத்தின் அனைத்து பணிகளையும் ஜூலை மாதம் இறுதிக்குள் முடித்து சோதனை ஓட்டம் நடத்தப்படும்.

    இந்த கடல்நீரை குடி நீராக்கும் நிலையத்தில் இருந்து பெறப்படும் 15 கோடி லிட்டர் குடிநீர் வேளச்சேரி, ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசம் பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம்-புழுதிவாக்கம், மடிப்பாக்கம், பல்லாவரம், பழையமகாபலிபுரம் சாலை பகுதிகளுக்கு ஆகஸ்டு மாதம் முதல் வினியோகம் செய்யப்படும். இதன் மூலம் 9 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • சென்னை நகர மக்களின் 70 சதவீத குடிநீர் தேவை பூர்த்தியாகும்.
    • 3-வது ஆலையில் சுமார் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆலை கடந்த 2013-ம் ஆண்டு 1 கோடி லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யும் வகையில் தொடங்கப்பட்டது. இங்கிருந்து திருவான்மியூர், பெருங்குடி, ஈஞ்சம்பாக்கம், பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் தற்போது ஓரளவு குடிநீர் பிரச்சினை குறைந்தது.

    இதைத்தொடர்ந்து சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை குறைக்கும் வகையில் சூலேரிக்காட்டில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் 2-வது ஆலை கட்ட முடிவு செய்யப்பட்டது.

    ரூ.1,260கோடி செலவில், 15 கோடி லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யும் வைகயில் 2-வது புதிய ஆலை கட்டுமான பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

    தற்போது 2-வது ஆலை கட்டுமான பணிகள் 85 சதவீதம் முடிந்து உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த 2-வது ஆலை பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    இந்நிலையில் வரும் ஆண்டுகளில் சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், ஜப்பான் நாட்டு பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுடன் இணைந்து சூலேரிக்காடு கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட நவீன 3-வது ஆலையை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. அப்பகுதியில் தற்காலிக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

    மேலும் நவீன கருவிகளுடன் கடல் நீர்நிலை ஆய்வு, மணல் தன்மை, குழாய்கள் பதிக்கும் பகுதி, மீன்வள பாதுகாப்பு, இயற்கை சூழல், மாசுபாடு, வனவளம் உள்ளிட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த ஆலையில் புதிதாக தொடங்கப்பட உள்ள 2-வது மற்றும் 3-வது ஆலை முழுபயன்பாட்டுக்கு வரும்போது சென்னை நகர மக்களின் 70 சதவீத குடிநீர் தேவை பூர்த்தியாகும் என்று தெரிகிறது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, சூலேரிக்காட்டில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் 2-வது ஆலை அமைக்கும்பணி முடியும் நிலையில் உள்ளது. சுமார் 85 சதவீத பணிகள் முடிந்து உள்ளது.

    எனவே இன்னும் 3 மாதத்தில் இந்த 2-வது ஆலை பயன்பாட்டுக்கு வரும். இங்கு தற்போது 3-வது ஆலை அமைக்க திட்டமிடப்பட்டு ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த பணி முடிய குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும்.

    3-வது ஆலையில் சுமார் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. 2-வது, 3-வது ஆலை பயன்பாட்டுக்கு வரும்போது சென்னையின் குடிநீர் தேவையில் 70 சதவீதத்தை பூர்த்தி செய்ய முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமாவாசை, பவுர்ணமி தினங்களில் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலானது உள்வாங்குவதும், இயல்பு நிலை திரும்புவதும் வழக்கம்.
    • இன்று திடீரென கடல் உள்வாங்கியது கோவிலுக்கு வந்த பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது கடற்கரை அருகில் அமைந்துள்ளது.

    இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    இந்தக் கோவிலில் திருவிழா காலங்களை தவிர்த்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் இன்று கோவில் கடலானது சுமார் 200 அடி தூரம் உள்வாங்கியது. இதனால் பாறைகள் வெளியே தெரிந்தது. மேலும் கடலில் அலைகள் இல்லாமல் குளம் போல் காட்சியளித்தது. இதனால் பாறை மீது ஏறி நின்று பக்தர்கள் செல்பி எடுத்து வருகின்றனர்.

    அமாவாசை, பவுர்ணமி தினங்களில் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலானது உள்வாங்குவதும், இயல்பு நிலை திரும்புவதும் வழக்கம்.

    ஆனால் இன்று திடீரென கடல் உள்வாங்கியது கோவிலுக்கு வந்த பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேசிய அளவில் சராசரி தனிமனிதன் தினசரி உபயோகிக்கும் தண்ணீரின் அளவு 135 லிட்டர் ஆகும்.
    • குழாயை திறந்துவிட்டு பல்துலக்குவதால் ஒரு மனிதன் ஒரு வருடத்தில் 2 லட்சம் லிட்டர் குடிநீரை வீணாக்குகிறான்.

    புதுச்சேரி:

    புதுவையில் உலக தண்ணீர் தின கருத்தரங்கில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ரமேஷ் பேசியதாவது:-

    தேசிய அளவில் சராசரி தனிமனிதன் தினசரி உபயோகிக்கும் தண்ணீரின் அளவு 135 லிட்டர் ஆகும். புதுவையில் இது இருமடங்காகும்.

    பிற மாநிலங்களில் போல் இல்லாமல் புதுவையின் தண்ணீரின் பயன்பாடு 100 சதவீதம் நிலத்தடி நீரையே சார்ந்துள்ளது.

    இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து கடல் நீர் குடிநீரில் கலந்து வருகிறது. இதனை உணர்ந்து நாம் உடனடியாக தண்ணீர் சிக்கனத்தை கடைப்பிடிக்காவிடில் ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் நகரத்தை போல் குளிப்பதற்கு கடல்நீரை பயன்படுத்த வேண்டிய சூழல் புதுவைக்கு ஏற்படும். குழாயை திறந்துவிட்டு பல்துலக்குவதால் ஒரு மனிதன் ஒரு வருடத்தில் 2 லட்சம் லிட்டர் குடிநீரை வீணாக்குகிறான்.

    இதனால் 1 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் கழிவு நீர் உற்பத்தி ஆகுகிறது. குவளை நீரில் பல்துலக்கினால் பெருமளவில் தண்ணீரை சேமிக்கலாம். நமது முன்னோர்கள் நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்காக புதுவையில் 88 ஏரிகள், 450 குளங்கள் அமைத்தனர்.

    மணக்குள விநாயகர் கோவில், குளக்கரையில் கட்டப்பட்டது. எதிர்கால சந்ததியருக்கு நாம் விட்டு செல்லும் சொத்து பாதுகாப்பான குடிநீராக இருக்க வேண்டும் என்றார். கருத்தரங்கில் பல்கலைக்கழக பேராசி ரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடல் நீர் உட்புகுவது தடுக்கப்–படுகிறது.
    • 10 கி.மீ தூரத்திற்கு ஒரு தடுப்பணை அமைக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொண்டல் தலைப்பி–லிருந்து உருவாகும் உப்பனாறு கொண்டல், வள்ளுவக்குடி, அகணி, சீர்காழி, சட்டநாதபுரம், திட்டை, தில்லைவிடங்கன், எடமணல் திருநகரி, வழுதலைக்குடி வழியாக சென்று திருமுலைவாசலில் கடலில் கலந்து வருகிறது. இந்த உப்பனாறு மூலம் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மேம்பட்டு வந்தது.

    இந்நிலையில் கோடை காலங்களில் கடல் நீர் உப்பனாற்று முகத்துவாரம் வழியாக 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு உப்புகுந்து நிலத்தடி நீர் முழுதும் பாதிக்கப்பட்டு உவர் நீராக மாறி வருகிறது.

    இதனால் சீர்காழி அருகே பனமங்கலம் பகுதியில் கடல் நீர் உட்புகுவதை தடுக்க அப்பகுதி மக்கள் ம.தி.மு.க மாவட்ட செயலாளர் மார்கோனி நிதியுதவியுடன் தற்காலிகமாக மண் அணை அமைத்து வருகின்றனர்.

    மழைக்காலங்களில் பெய்த மழை நீரால் நிலத்தடி நீர் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் கோடைக்காலம் துவங்க உள்ளதால் கடல் நீர் உட்புகுந்து வருவதை தடுக்க மண் அணையை ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதன் மூலம் பனமங்கலம், துறையூர், கோடங்குடி, குமாரநத்தம், வரவுக்குடி, ஆதமங்கலம், கொண்டல், வள்ளுவக்குடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடல் நீர் உட்புகுவது தடுக்கப்–படுவதோடு நிலத்தடி நீர் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்–படுவதாக அப்பகுதி கிராம மக்கள், விவ–சாயிகள் தெரிவிக்கின்றனர்.

    பனமங்கலம் பகுதியில் அரசு நிரந்தரமாக தடுப்பணை அமைக்க வேண்டும், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தடுப்பணை அமைத்திட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திடீரென மேகங்கள் வானில் இருந்து தாழ்வாக கடல் அருகே இறங்கியது.
    • சுமார் அரை மணிநேரம் கடல் நீரை மேகக்கூட்டங்கள் உறிஞ்சிய இந்த அரிய காட்சியை மீனவர்கள் தங்களது செல்போனில் படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலம்பாறை என்ற இடத்தில் இருந்து கடலுக்குள் 5 கிலோ மீட்டர் தொலைவில் விசைப்படகில் மரக்காணம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்கியிருந்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது, திடீரென மேகங்கள் வானில் இருந்து தாழ்வாக கடல் அருகே இறங்கியது. சற்று நேரத்தில் கடல்நீர் சுழல் போல் மேலெழுந்து மேகங்களுக்குள் இழுக்கப்பட்டது. இந்த வினோத காட்சியை மீனவர்கள் கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.

    சுமார் அரை மணிநேரம் கடல் நீரை மேகக்கூட்டங்கள் உறிஞ்சிய இந்த அரிய காட்சியை மீனவர்கள் தங்களது செல்போனில் படம் மற்றும் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இது குறித்து துறைமுக அதிகாரியிடம் கேட்டபோது, 'கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடல் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் 'நீர்த்தாரைகள்' எனப்படும் இந்த அதிசய நிகழ்வு ஏற்படும். பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும். மீண்டும் இரண்டு காற்றுகளின் வெப்பநிலையும் சமமாக மாறும் போது, நீர்த்தாரைகள் மறைந்து விடும். இந்த வினோத நிகழ்வின்போது கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும். இந்த நிகழ்விற்கு ஆங்கிலத்தில் "டோர்னடோ" என்று பெயர். இதுபோன்ற நிகழ்வுகள் ஐரோப்பா போன்ற பகுதிகளில் அதிக அளவில் தோன்றும்' என்றார்.

    மரக்காணம் கடல் பகுதியில் நடந்த இந்த அதிசயம் நிகழ்வு மீனவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×