search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: சென்னைக்கு ஆகஸ்டு முதல் கூடுதலாக 15 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும்
    X

    கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: சென்னைக்கு ஆகஸ்டு முதல் கூடுதலாக 15 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும்

    • பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.
    • திட்டத்தில் கடல்சார் பணிகளின் ஒரு பகுதியாக கடலில் 835 மீட்டர் குழாய் பதிக்கும் பணிகள் முடிந்துள்ளன.

    சென்னை:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் ரூ.1,516.82 கோடிசெலவில் தினமும் 15 கோடி லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளை சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மேற்கொண்டு வருகிறது.

    தற்போது இந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. மேலும் கடல்சார் பணிகள், கருவிகள் நிறுவும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.

    இந்த திட்டப்பணிகள் தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

    நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் 2-வது அலகின் கட்டுமான பணிகள் வேகமாக வருகின்றன. இந்த திட்டத்தில் கடல்சார் பணிகளின் ஒரு பகுதியாக கடலில் 835 மீட்டர் குழாய் பதிக்கும் பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள 200 மீட்டர் நீளத்துக்கு கடல்நீரை உட்கொள்ளும் குழாய் பதிக்கும் பணிகளுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் குழாய் பதிக்கப்படும். இதுவே இந்தியாவின் மிகப்பெரிய கடல்நீரை உள்கொணரும் குழாயாகும்.

    மேலும் நிராகரிக்கப்பட்ட உவர் நீர் வெளியேற்றும் குழாய் 600 மீட்டர் நீளத்துக்கு கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டு உள்ளது. இன்னும் 36 மீட்டர் அளவுக்கு குழாய் பதிக்க வேண்டியுள்ளது. இந்த திட்டத்தின் அனைத்து பணிகளையும் ஜூலை மாதம் இறுதிக்குள் முடித்து சோதனை ஓட்டம் நடத்தப்படும்.

    இந்த கடல்நீரை குடி நீராக்கும் நிலையத்தில் இருந்து பெறப்படும் 15 கோடி லிட்டர் குடிநீர் வேளச்சேரி, ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசம் பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம்-புழுதிவாக்கம், மடிப்பாக்கம், பல்லாவரம், பழையமகாபலிபுரம் சாலை பகுதிகளுக்கு ஆகஸ்டு மாதம் முதல் வினியோகம் செய்யப்படும். இதன் மூலம் 9 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×