search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள்
    X

    திருப்பூரில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள்

    • தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்பூரில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • விவசாயிகள் போராட்டம் காரணமாக திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு பரபரப்பு நிலவியது.

    திருப்பூர்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முறியடிக்க மத்திய அரசு கண்ணீர் புகை குண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் மீது தாக்குதலை கண்டித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்பூரில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் மறியலில் ஈடுபட வந்த விவசாயிகள் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

    ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் கூறுகையில்,

    மத்திய பாஜக., அரசால் சமீபத்தில் பாரத ரத்னா விருது கொடுத்து கவுரவிக்கபட்ட எம்.எஸ். சுவாமி நாதன் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ என்ற போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் அறிவித்தனர். இது ஏதோ வட இந்திய விவசாயிகளின் போராட்டம் போல இங்கு சித்தரிக்கபடுகிறது.

    ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான அடிப்படை உரிமை போராட்டம் என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிலர் கோரிக்கைகளின் நியாயத்தை திசை திருப்பி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி பொதுமக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதை தொடர்ந்து செய்துவருகிறார்கள். ஜனநாயக வழியில் போராட வந்த விவசாயிகள் தலைநகர் டெல்லிக்குள் வந்து விடாதபடி சாலைகளில் பெரும் ஆணிகள் பதித்து, கான்கிரீட் தடுப்பரண்கள் அமைத்து, வண்டி வாகனம் செல்லமுடியாதபடி பள்ளங்களை உருவாக்கி உள்ளனர். ஆயிரக்கணக்கான போலீசாரையும் துணை ராணுவ படையினரையும் டெல்லி எல்லை பகுதிகள் முழுவதும் கண்காணிப்பில் ஈடுபடுத்தி உள்ளனர். மேலும் விவசாயிகள் மீது ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீசி உள்ளனர். இது மிகவும் கண்டிக்க த்தக்கது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    விவசாயிகள் போராட்டம் காரணமாக திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×