என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மேகதாது விவகாரம் தொடர்பாக வரும் 29-ம் தேதி தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
- இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளதாவது:
காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரையறுக்கப்பட்ட 'பணி வரம்புக்கு' அப்பாற்பட்டு, 28-வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது பற்றி விவாதித்து, மேல் நடவடிக்கைக்காக மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியதைக் கண்டித்தும், தமிழகத்தின் காவிரி நதிநீர் விஷயத்தில் துரோகம் இழைத்து வரும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், கர்நாடகம் 2023-24ம் ஆண்டிற்கு காவிரியில் தமிழகத்திற்கு தரவேண்டிய பங்குநீரை பெற்றுத் தராத தி.மு.க. அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 29-ம் தேதி தஞ்சாவூர், திலகர் திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் விவசாயத் தொழிலாளர்களும், பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- மருந்து சீட்டில் மருந்துகளின் பெயர்கள் புரிவதில்லை என கூறப்பட்டு வந்தது
- ஒடிசா உயர் நீதிமன்றம் தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டது
மருத்துவர்கள், நோயாளிகளுக்கு மருந்து சீட்டுகளை (prescriptions) எழுதித் தரும் போது மருந்துகளின் பெயரை "கேப்பிட்டல் எழுத்துகள்" (CAPITAL LETTERS) எனும் "பெரிய" ஆங்கில எழுத்துகளில்தான் இனி எழுதித் தர வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
நீண்ட காலமாகவே டாக்டர்கள் எழுதி தரும் மருந்துகளின் பெயர்கள் புரிவதில்லை எனும் கருத்தை பொதுமக்களும், மருந்தாளுனர்களும் (pharmacists) கூறி வந்தனர்.
எடுத்துக் காட்டாக, செலின் (வைட்டமின் சி) மற்றும் செலிப் (மூட்டு அழற்சிக்கான மருந்து), மாலாக்வின் (மலேரியாவிற்கான மருந்து) மற்றும் மாஹாக்வின் (ஆன்டிபயாடிக்), அசூ (ஆன்டிபயாடிக்) மற்றும் அசாக்ஸ் (மனநலம்) போன்ற பல மருந்துகளின் பெயர்கள் ஒன்றுக்கொன்று ஒத்து போவதால், மருத்துவர்கள் அவற்றை அவசரமாக எழுதி தரும் போது மருந்தாளுனர்களால் அவற்றை புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது.
இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒரு சில நோயாளிகள் தவறான மருந்தை உட்கொண்டதால் ஆபத்தான சிக்கல்களை சந்திக்க நேர்ந்த சம்பவங்கள் நடைபெற்றது.
கடந்த சில வருடங்களாக இந்த புகார் தீவிரமடைந்து வந்த நிலையில், இது குறித்து தொடரப்பட்ட ஒரு வழக்கில் ஒடிசா உயர் நீதிமன்றம், மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்துகள் மற்றும் பரிந்துரைகள் உள்ளிட்டவை புரியும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவு பிறப்பித்து தீர்ப்பளித்தது.
இதன் அடிப்படையில் தேசிய மருத்துவ கவுன்சில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
நோயாளிகளுக்கு புரியும் வகையில் மருந்துகளின் பெயர்களை எழுதித் தர வேண்டும் என்று மத்திய அரசும் ஏற்கனவே அறிவுறுத்தி வந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாங்கள் எழுதித்தரும் மருந்துச்சீட்டில் இடம்பெறும் மருந்துகளின் பெயர்களை, நோயாளிகளுக்கு புரியும் வகையில், தெளிவாக, "கேப்பிட்டல்" எழுத்தில்தான் இனி எழுத வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த செயல் சில நிமிடங்கள் மட்டுமே அதிகம் எடுக்கும் என்றும் இதன் மூலம் சரியான மருந்தை நோயாளிகள் எடுத்து கொள்வது உறுதி செய்யப்படும் என்பதால் மருத்துவர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.
- நீதிபதி கண்ணன் குழு பிரந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலனை.
- பேராசிரியரை நீக்க வேண்டுமென்ற குழுவின் பரிந்துரை அமல்படுத்த வேண்டும்.
பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவிகள் 7 பேர் கலாஷேத்ரா பவுண்டேஷன் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் வந்தது.
அப்போது, "மாணவிகள் அளித்த பாலியல் தொல்லை புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா அறக்கட்டளை கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது" என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், "நீதிபதி கண்ணன் குழு பிரந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக உடனடியாக பரிசீலிக்க வேண்டும்" என கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என்றும், புகாருக்கு உள்ளான பேராசிரியரை நீக்க வேண்டுமென்ற குழுவின் பரிந்துரை உடனடியாக அமல்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- மதுரை நகரில் மோடி பயணம் செய்யும் சாலைகள் மற்றும் முக்கிய பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகளை மாநில போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.
- மோடி வருகையையொட்டி மத்திய பாதுகாப்பு படையினரும் ஓரிரு நாளில் மதுரை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உள்ளனர்.
மதுரை:
தமிழ்நாட்டில் வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்கிறார். கோவை, திருப்பூர், மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக டெல்லியில் இருந்து 27-ந்தேதி மதியம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் வரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
பின்னர் மாலை ஐந்து மணிக்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் மதுரை வருகிறார். மதுரை வீர பாஞ்சான் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்கும் பிரதமர் மோடி அந்த பள்ளி வளாகத்தில் நடைபெறும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்க திட்டம், கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகிறார்.
மாலை 6.15 மணி அளவில் காரில் புறப்பட்டு பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு வரும் மோடி அங்கு இரவு தங்குகிறார். முன்னதாக பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பா.ஜனதா தலைவர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த மோடி திட்டமிட்டுள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மறுநாள் 28-ந்தேதி காலை 8 .40 மணிக்கு காரில் மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி செல்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா நடைபெறும் தனியார் பள்ளி மைதானம் மற்றும் இரவு தங்கி ஓய்வு எடுக்கும் பசுமலை நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மதுரை நகரில் மோடி பயணம் செய்யும் சாலைகள் மற்றும் முக்கிய பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகளை மாநில போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். மோடி வருகையையொட்டி மத்திய பாதுகாப்பு படையினரும் ஓரிரு நாளில் மதுரை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உள்ளனர்.
- சேதமடைந்த கரைகளில் சீரமைப்பு பணிகள் தற்போது நடை பெற்று வருகின்றன.
- ஏரியில் போதுமான தண்ணீர் உள்ளதாலும் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை பெறவில்லை.
ஊத்துக்கோட்டை:
சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறை வேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது.
இங்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மற்றும் மழைநீரை சேமித்துவைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்படுகிறது.
கடந்த ஆண்டு மிச்சாங் புயல் காரணமாக பலத்த மழை கொட்டி தீர்த்ததால் கிருஷ்ணா கால்வாயில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் தமிழக எல்லையான ஊத்துக் கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் கிருஷ்ணா கால்வாய் கரைகள் சேதம் அடைந்தன. சேதமடைந்த கரைகளில் சீரமைப்பு பணிகள் தற்போது நடை பெற்று வருகின்றன.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திரா அரசு வருடம்தோறும் தமிழகத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.
ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. என 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாலும், ஏரியில் போதுமான தண்ணீர் உள்ளதாலும் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை பெறவில்லை.
மேலும் வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதால் குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பும் வேகமாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் வருகிற கோடைமாதங்களில் சென்னை நகரில் குடிநீர் தேவை மேலும் அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணாகால்வாய் கரை சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து கண்ட லேறு அணையில் இருந்து தண்ணீரை பெற திட்டமிட்டு இருப்பதாக பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி ஆகும். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 2.580 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாயில் வினாடிக்கு 150 அடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 15 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
- புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் விடுத்தது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் பதிவு செய்துள்ளார்.
- ஸ்ரீதர் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் வாவு யூவியாஸ் பாக்மி (வயது 47).
இவரது மூத்த மருமகன் ஜின்னா என்பவரின் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் கடந்த அக்டோபர் மாதம் ஒரு செல்போன் எண்ணில் இருந்து பகுதி நேர வேலை சம்பந்தமாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனையடுத்து வாவு யூவியாஸ் பாக்மி அந்த மர்மநபரிடம் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு அதில் அவர் அனுப்பிய 'லிங்க்' மூலம் டெலிகிராம் குரூப்பில் இணைந்து, வேலை செய்வதற்கு அவர் அனுப்பிய மற்றொரு லிங்க் மூலம் பதிவும் செய்துள்ளார்.
பின்னர் அந்த மர்மநபர் தூண்டுதலின்பேரில் வாவு யூவியாஸ் பாக்மி அதிக லாபம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் தனது மருமகன் ஜின்னாவின் வங்கி கணக்கில் இருந்து பல்வேறு வங்கி கணக்கிற்கு மொத்தம் ரூ. 11 லட்சத்து 72 ஆயிரம் பணத்தை செலுத்தி உள்ளார். அதன் பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த நவம்பர் 22-ந்தேதி அந்த மர்மநபர், ஜின்னாவின் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனது பெயர் ஸ்ரீதர் என்றும் நான் தங்களுடைய பணத்தை எடுத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்றும் கூறி கூகுல்பே மூலமாக ஜின்னாவின் வங்கி கணக்கிற்கு ரூ. 20 ஆயிரம் பணமும், அதனைத் தொடர்ந்து ரூ. 30 ஆயிரமும், அதற்கு மறுநாள் ரூ 9 ஆயிரமும் அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து ஸ்ரீதர் ஜின்னாவின் செல்போன் எண் மூலம் வாவு யூவியாஸ் பாக்மியை தொடர்பு கொண்டு அவர்களுடைய குடும்ப விபரங்களை பற்றி கூறி, வாவு யூவியாஸ் பாக்மியின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து பல்வேறு இன்ஸ்டாகிராம் கணக்குகளில் பதிவு செய்துள்ளார். பின்னர் கடந்த டிசம்பர் 20-ந் தேதி முதல் வாட்ஸ்அப்பில் வாவு யூவியாஸ் பாக்மியின் குடும்பத்தினருக்கும் மற்றும் அவரது மூத்த மருமகன் ஜின்னாவின் குடும்பத்தினருக்கும் ஆபாச வார்த்தைகள் மற்றும் ஆபாச புகைப்படங்களை அனுப்பி ஸ்ரீதர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து வாவு யூவியாஸ் பாக்மி தாங்கள் மோசடி செய்யப்பட்டது மற்றும் சமூக வலைதளத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் விடுத்தது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் பதிவு செய்துள்ளார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி மதுரை வடக்கு தாலுகா தத்தனேரி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் (36) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
- கடைக்குள் இருந்த அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்களை கூட்டம்-கூட்டமாக தின்று சேதப்படுத்தியது.
- வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த 5 காட்டு யானைகளையும் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்டினர்.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. மேலும் அவை அங்குள்ள ஆற்றங்கரையோரங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் நேற்று நள்ளிரவு நல்லகாத்து எஸ்டேட் பகுதிக்கு வந்தது. பின்னர் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அங்குள்ள ரேஷன் கடையை தாக்கி ஜன்னல், கதவு மற்றும் சுற்றுச்சுவரை உடைத்து சேதப்படுத்தியது. பின்னர் கடைக்குள் இருந்த அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்களை கூட்டம்-கூட்டமாக தின்று சேதப்படுத்தியது.
நள்ளிரவு நேரத்தில் யானைகள் பிளிறும் சத்தம் கேட்டு பொதுமக்கள் விழித்து தெருவுக்கு வந்து பார்த்தனர். அப்போது காட்டு யானைகள் ரேஷன் கடையை சூறையாடிக்கொண்டு இருந்தன. தொடர்ந்து பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அவர்கள் இதுதொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த 5 காட்டு யானைகளையும் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்டினர்.
காட்டு யானைகள் புகுந்து ரேஷன் கடையை சூறையாடிய சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகளை வராமல் தடுக்கவும், அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- வேலைநிறுத்த போராட்டம் காரணமாக கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவிற்கு விசைப்படகுகளை இயக்க மாட்டோம் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
- வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு படகுகளில் செல்ல பதிவு செய்த நபர்கள் ராமேசுவரம் துறைமுகத்திற்கு வரவேண்டாம்.
மண்டபம்:
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இது ராமேசுவரத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும், இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை (23-ந்தேதி) மற்றும் 24-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் இந்திய தரப்பிலிருந்து சுமார் 3 ஆயிரத்து 500 பக்தர்களும், இலங்கை தரப்பிலிருந்து 4 ஆயிரம் பக்தர்களும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது.
இதற்கிடையே ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடிக்க சென்ற நான்கு மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்தது. இதை கண்டித்து, ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினா் கடந்த சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதைத்தொடர்ந்து இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நாளை 23, 24-ந்தேதிகளில் நடைபெறும் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். வேலைநிறுத்த போராட்டம் காரணமாக கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவிற்கு விசைப்படகுகளை இயக்க மாட்டோம் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து விழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்க போவதில்லை. மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தால் கச்சத்தீவு திருவிழாவுக்கான பயண ஏற்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு படகுகளில் செல்ல பதிவு செய்த நபர்கள் ராமேசுவரம் துறைமுகத்திற்கு வரவேண்டாம்.
விசைப்படகிற்காக அவர்கள் செலுத்திய பணம் விரைவில் திருப்பித் தரப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரனுக்கு நேற்று கச்சத்தீவு சர்ச் விழா திருப்பயண குழு ஒருங்கிணைப்பாளர் ராமேஸ்வரம் பாதிரியார் சந்தியாகு கடிதம் அனுப்பியுள்ளார். மீனவர்கள் பிரச்சனையால் இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழா புறக்கணிக்கப்பட்டது தமிழக பக்தர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வழக்கை அருகில் உள்ள சிவகங்கை மாவட்டத்திற்கும் மாற்ற முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் அங்கு உள்ளார்கள்.
- வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பாண்டித்துரை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 2012 ஆம் ஆண்டு தேவர் குருபூஜைக்காக பசும்பொன் சென்றவர்கள், அங்கு தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு ஒரு வேனில் 20-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.
அப்போது பரமக்குடி அருகே பாம்பு விழுந்தான் என்ற கிராமத்தில் உள்ளே சென்ற வேனை, சிலர் வழி மறித்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் வேன் டிரைவர் சிவக்குமார், வீரமணி மற்றும் மலைகண்ணன் ஆகிய 3 பேர் அடித்து கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் பலர் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டனர். தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருப்பதால் சாட்சிகள் கோர்ட்டுக்கு சென்று சாட்சி சொல்வதில் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இந்த வழக்கில் பல அரசு தரப்பு சாட்சிகள் சாட்சிகளை ஒழுங்காக பதிவு செய்யவில்லை. பாதிக்கப்பட்ட ஒரு தரப்பினர் கூட குற்றவாளிகளுக்கு பயந்து பிறழ் சாட்சியாக மாறி விட்டனர்.
எனவே இந்த வழக்குகளின் விசாரணையை ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் இருந்து வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளை பாதுகாப்பது அரசின் கடமை. மேலும் இந்த வழக்கை அருகில் உள்ள சிவகங்கை மாவட்டத்திற்கும் மாற்ற முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் அங்கு உள்ளார்கள்.
எனவே இந்த கொலை வழக்குகளின் விசாரணையை மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு மாற்றப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
- அமரன் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என வலியுறுத்தினர்.
- போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
தஞ்சாவூா்:
அமரன் திரைப்படத்தின் டீசர் எனப்படும் முன்னோட்டக் காட்சிகள் வெளியானது. அதில் காஷ்மீா் இளைஞா்களையும், போராட்டத்தில் ஈடுபடுபவா்களை பயங்கரவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து அப்படத்தை தயாரித்த நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோரை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
அந்த வகையில் கும்பகோணம் காந்தி பூங்கா நுழைவாயில் முன்பு விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். இதில் மாநில இளந்தமிழ்ப்புலிகள் பாசறை துணை அமைப்பாளர் விஜய ஆனந்த், மகளிர் அணி மாநில செயலாளர் வெண்ணிலா சேகர், மாவட்ட துணைச் செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் ஆகியோரை கண்டித்து அவர்களது உருவ பொம்மைகளை தீயிட்டு எரித்து கோஷங்கள் எழுப்பினர். அமரன் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என வலியுறுத்தினர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த உருவ பொம்மைகள் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, மூதாட்டியை பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை
- ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவர் மீதும் இன்று மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு
மாட்டிறைச்சி கொண்டு சென்றதால் பேருந்திலிருந்து மூதாட்டி இறக்கிவிடப்பட்ட விவகாரத்தில், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவர் மீதும் இன்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை அரங்கேறியுள்ளது.
இது சம்பந்தமாக, வீடியோ வெளியான நிலையில், நேற்று பேருந்து ஓட்டுநர் சசிக்குமார், நடத்துநர் ரகு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
- அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படும் பேருந்துகள் கொரோனா காரணமாக நிறுத்தப்படவில்லை.
- தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு ஓட்டுநர்களை நியமனம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை:
சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரத்தில், பேராவூரணி - பட்டுக்கோட்டை இடையே கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்படுமா என பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படும் பேருந்துகள் கொரோனா காரணமாக நிறுத்தப்படவில்லை. போதிய ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இல்லாத காரணத்தினால் தான் அந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு ஓட்டுநர்களை நியமனம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மற்ற போக்குவரத்து கழகங்களுக்கு பணியாளர்களை நியமனம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டவுடன் நிறுத்தப்பட்ட வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






