என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மேற்கொண்டு வருகிறார்.
- நட்சத்திர ஓட்டலில் தலைமை தேர்தல் ஆணையர் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை:
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
இதற்கான தேர்தல் தேதி அனேகமாக மார்ச் 2-வது வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான ஆயத்த பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மேற்கொண்டு வருகிறார்.
பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.
அந்த வகையில் தமிழ் நாட்டில் தேர்தல் பணிகளை ஆய்வு செய்யவும், அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்டு அறியவும் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் நேற்றிரவு விமானம் மூலம் சென்னை வந்தார். அவருடன் தேர்தல் கமிஷனர் அருண் கோயல், மூத்த துணை தேர்தல் கமிஷனர்கள் தர்மேந்திர சர்மா, நிதிஷ் வியாஸ், துணை தேர்தல் கமிஷனர்கள் அஜய் பாது, மனோஜ்குமார் சாகு, முதன்மை செயலாளர் மலேய்மாலிக் மற்றும் உயர் அதிகாரிகள் நாராயணன், அனுஜ் சந்தக் ஆகியோரும் சென்னை வந்தனர்.
சென்னை விமான நிலையத்துக்கு எதிரே உள்ள 'டிரைடண்ட்' நட்சத்திர ஓட்டலில் தங்கிய இந்திய தேர்தல் கமிஷனர்கள் இன்று காலையில் அதே ஓட்டலில் தேர்தல் தொடர்பாக ஆய்வு கூட்டத்தை நடத்தினார்கள்.
முதலில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளை தனித்தனியாக அழைத்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., ஆம் ஆத்மி கட்சி, தேசிய மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய 10 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
ஒவ்வொரு கட்சியிலும் 2 பேர் சென்று தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமாரிடம் தங்களது கருத்துக்களை முன் வைத்து அதை மனுவாகவும் கொடுத்தனர்.
முக்கியமான கோரிக்கையாக தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றும் வாக்குப்பதிவில் தில்லுமுல்லு நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
பதட்டம் நிறைந்த வாக்கு சாவடிகளில் துணை ராணுவப்படையை நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தினார்கள்.
இன்றைய இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ எம்.பி. கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை எடுத்து கூறினார்கள்.
அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இன்பதுரை கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
பாரதிய ஜனதா கட்சியில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், முன்னாள் டி.ஜி.பி. பாலச்சந்திரன் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியில் வக்கீல் பிரிவு தலைவர் சந்திரமோகன், ஆம் ஆத்மி கட்சியில் மாநில பொதுச் செயலாளர் ஜோசப் ராஜா, ஸ்டெல்லா மேரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் ஆறுமுக நயினார், சம்பத், தேசிய மக்கள் கட்சியில் மாநில தலைவர் சீனிவாசன், செயலாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் 2 பேர் வீதம் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து தங்களது கருத்துக்களை கோரிக்கை மனுவாக வழங்கினார்கள்.
ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளும் 9 நிமிட நேரம் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் பகல் 11.39 மணி வரை நடந்தது.
ஒவ்வொரு அரசியல் கட்சி பிரதிநிதிகள் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் அங்கு வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதன் பிறகு இந்திய தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.
பின்னர் உணவு இடைவேளைக்கு பிறகு மதியம் மீண்டும் தேர்தல் கமிஷனர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொள்ள உள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் ஏற்பாடுகள் எந்த அளவில் தயார் நிலையில் உள்ளது என்பதை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் ஆய்வு மேற்வார். ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியல் விவரங்கள், மின்னணு எந்திரங்கள் கையிருப்பு, பதட்டமான வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்.
இதைத் தொடர்ந்து நாளையும் தேர்தல் ஆணையர்கள் சென்னையில் தங்கியிருந்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
- மாசி மக திருவிழா மற்றும் பொங்கல் விழா 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கிடாய் வெட்டி வழிபட்டனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தெங்குமரஹாடா அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதி கருவண்ணராயர் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இந்த கோவில் உள்ளது.
வருடம் தோறும் மாசி மக திருவிழா மற்றும் பொங்கல் விழா 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு சத்திய மங்கலம், கோயமுத்தூர், சேலம், கரூர் திருப்பூர், ஈரோடு, பெருந்துறை, கடம்பூர் மலைப்பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கிடாய் வெட்டி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள்.
பக்தர்கள் அடர்ந்த வன ப்பகுதிக்குள் வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதனால் இந்த வருட திருவிழாவுக்கு நீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி கோவிலுக்கு வரும் பக்தர்கள் போதை தரும் பொருட்கள் எதையும் எடுத்துச் செல்லக்கூடாது, வனம் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு திருவிழாவை நடத்த வேண்டும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் வாகனங்களை நிறுத்த வேண்டும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் பாலித்தீன் பொருட்களை வனப்பகுதிக்குள் கொண்டு செல்லக்கூடாது, பாதுகாப்பு முன் எச்சரிக்கையாக மோயார் ஆறு மற்றும் அதன் அருகில் உள்ள பகுதி களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட 20 வகை யான நிபந்தனைகள் குறிப்பிட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று கரு வண்ணராயர் கோவில் மாசி மக மற்றும் பொங்கல் திருவிழா தொடங்கியது. இன்று முதல் 3 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனை அடுத்து இன்று அதிகாலை முதலே சத்திய மங்கலத்தை அடுத்துள்ள காராச்சி குறை சோதனை சாவடியில் 20 வண்டிகளுடன் பக்தர்கள் வந்தனர்.

வண்டிகளை பவானிசாகர் வனத்துறையினர் தீவிரமாக சோதனை செய்து பின்னர் வனப்பகுதிக்குள் அனுப்பினர். கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கிடாய் வெட்டி வழிபட்டனர். 300-க்கும் மேற்பட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிலில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து பெரிய பேனர் வைக்கப்பட்டுள்ளது.
- தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,795-க்கும் சவரன் ரூ.46,360-க்கும் விற்பனையாகிறது.
- வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக ஏற்றமும் இறக்கமும் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது.
தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,795-க்கும் சவரன் ரூ.46,360-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76-க்கும் பார் வெள்ளி ரூ.76ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- மாநாட்டில் கட்சி கொடி மற்றும் கொள்கைகள் அறிவிக்கப்பட உள்ளன.
- புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு செயலி அடுத்த வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகம் என புதிய அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் தொடர்ந்து கட்சி வளர்ச்சி பற்றி அடுத்தடுத்து புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார்.
அரசியல் பணிகளுக்காக புதிய வியூகங்களை அமைப்பது தொடர்பாக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
முதலில் உள்கட்சி கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக சமீபத்தில் விஜய் உத்தரவின் பேரில் புஸ்சி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் நடந்தது.
இதில் கட்சிக்கு 2 கோடி உறுப்பினர்களை புதிதாக சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்த கட்டமாக மாவட்ட தலைவர்கள், மகளிரணி நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள் என புதிய நிர்வாகிகள் அறிவிப்பு வெளியாக உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 100 ஆக பிரித்து புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய் தற்போது 'தி கோட்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.
இதைத் தொடர்ந்து புதிய அரசியல் பயணத்தை அதிரடியாக அறிவித்த விஜய் கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் பிரமாண்டமாக நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ந்தேதி மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டில் கட்சி கொடி மற்றும் கொள்கைகள் அறிவிக்கப்பட உள்ளன. பெண்கள் மற்றும் இளைஞர்கள், இளம்பெண்களை கவரும் வகையில் கட்சி கொள்கைகள் மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு செயலி அடுத்த வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.
- கோவை மக்கள் அரசியலை எப்போதும் குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்க மாட்டார்கள்.
- தமிழக அரசியலில் மீண்டும் ஒரு மாற்றம் பாராளுமன்ற தேர்தலில் ஏற்படும்.
கோவை:
தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை கோவை சிங்காநல்லூர் தொகுதியில் நடந்தது. பாப்பநாயக்கன் பாளையம் திங்களூர் மாரியம்மன் கோவில் அருகே அண்ணாமலை தனது நடைபயணத்தை தொடங்கினார். அண்ணாமலைக்கு ஆரத்தி எடுத்தும், பூக்கள் தூவியும் பெண்கள் வரவேற்பு அளித்தனர். நடைபயணத்தில் மத்திய மந்திரிகள் எல்.முருகன், ராஜீவ்சந்திரசேகர், எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி ஆகியோரும் பங்கேற்றனர்.
நடைபயணம் வி.கே.கே. மேனன் சாலையில் நிறைவடைந்தது. அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசினார். அவர் கூறியதாவது:-
கோவை மக்கள் அரசியலை எப்போதும் குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்க மாட்டார்கள். கோவை குண்டு வெடிப்பை அவர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். இந்த பகுதி மக்கள் அரசியல் சூழ்நிலையை பார்த்து கட்சியை ஆதரிப்பார்கள். கோவையின் சிறு, குறு தொழில்களுக்கு அதிக கடன் கொடுத்து இருப்பது பா.ஜனதா அரசு தான். 10 ஆண்டாக எந்த பிரச்சினையும் இங்கு இல்லை. பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் முதல் தாமரை கோவையில் இருந்து இருக்கும் என்று நம்புகிறோம்.

என்னை லேகியம் விற்பவர் என அ.தி.மு.க.வினர் விமர்சித்துள்ளனர். வருகிற 27-ந் தேதி பல்லடத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில தமிழகத்தில் நிலவி வரும் குடும்ப ஆட்சி உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக அந்த லேகியம் அமையும். பல்லடம் பொதுக்கூட்டத்தில் எதிர்கால இந்தியாவிற்கு பிரதமர் என்ன சொல்ல போகிறார் என்பதை பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து கேட்க வேண்டும்.
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு மாற்றம் பாராளுமன்ற தேர்தலில் ஏற்படும். தமிழகம், புதுச்சேரியில் பா.ஜ.க. 40-க்கு 40 வெற்றி பெறும். 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை கொண்டு வர வேண்டும். பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்துவது தான் ஒரே நோக்கம்.
பா.ஜனதா கட்சி எங்கு இருக்கிறது என்று கருணாநிதி கேட்டார். ஆனால் தற்போது சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கிறார். இது பா.ஜனதா காலம்.
தமிழக பட்ஜெட்டே ஒரு ஏமாற்றம். மது விற்பனை மூலம் எவ்வளவு வருவாய் என்பது தெரியாமல் இருந்தது. ரூ.50 ஆயிரம் கோடி என்பது இந்த பட்ஜெட் மூலம் தெரியவந்தது. இதுபோன்று எந்த மாநிலத்திலும் இல்லை. எம்.ஜி.ஆர். இருக்கும் வரை தி.மு.க.வால் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டுகள் தி.மு.க. உள்ளே வராது. இதுதான் கடைசி முறை.

தமிழகத்தில பா.ஜ.க. 20 சதவீத வாக்கு சதவீதத்தை தாண்டி பல ஆண்டுகள் கடந்து விட்டது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 33 சதவீத வாக்குகள் பெறும்.
தமிழக அரசு ரூ.9½ லட்சம் கோடி கடன் வைத்திருக்கிறது. ஆனால் ரூ.8½ அரை லட்சம் கோடி கடன் என்று சொல்கிறது. ரூ.1 லட்சம் கோடி கடனை அரசு கணக்கில் காட்டவில்லை. இதுகுறித்து பா.ஜனதா சார்பில் வெள்ளை அறிக்கை வெளியிடுவோம். தி.மு.க. ஆட்சியில் 3 லட்சம் டன் உணவு உற்பத்தி குறைந்து இருக்கிறது. ஆனால் உணவு உற்பத்தி அதிகரித்ததாக வேளாண் பட்ஜெட்டில் கூறி இருக்கிறார்கள்.
கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. நாட்டிலேயே பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது. ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைவு தான்.
நதிகள் புனரமைப்பு உள்ளிட்ட தமிழக அரசு அறிவித்து வரும் திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து அமல்படுத்தி வரும் திட்டங்கள் தான். கோவை பாராளுமன்ற தொகுதி வெற்றியை மோடி எதிர்பார்த்து இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரோகரா கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
- நாளை இரவு 10.30 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கடந்த 14-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரத்தில் சுவாமி பல்வேறு வாகனம் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.
மேலும் 7-ம் திருவிழாவான 20-ந்தேதி சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி எழுந்தருளல், 8-ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலையில் வெள்ளை சாத்தி கோலத்திலும், அதனை தொடர்ந்து சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து 4.30மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

காலை 6.30 மணிக்கு விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதிகளில் உலா வந்து 7.15 மணிக்கு நிலையம் சேர்ந்தது. பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

தேரோட்டத்தை மாலைமுரசு நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
தேரோட்டத்தில் மாலைமுரசு இயக்குனர் கதிரேசன் ஆதித்தன், கோவில் இணை ஆணையர் கார்த்திக், திருச்செந்தூர் சார்பு நீதிபதி வஷித் குமார், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில பொது செயலாளர் டாக்டர் அரசு ராஜா, ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பால சுப்பிரமணிய ஆதித்தன், தி.மு.க. மாநில விவசாய அணி கணேஷ்குமார் ஆதித்தன் மற்றும் குமர குருபரஆதித்தன், வரதராஜ ஆதித்தன், ஹெட் கேவார் ஆதித்தன், சபேஷ் ஆதித்தன், அசோக்குமார் ஆதித்தன், தனிகேசவ ஆதித்தன், பகவதி ஆதித்தன், சண்முகநாதன் ஆதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். சுவாமி தேரானது நான்கு ரதவீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது. தொடர்ந்து அம்பாள் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது.
11-ம் திருவிழாவான நாளை இரவு 10.30 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. சுவாமியும், அம்பாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
நாளை மறுநாள் 12-ம் திருவிழா அன்று மாலை 7 மணி அளவில் சுவாமி, அம்பாள் தனித்தனி பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.
- ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
- மயான பூஜை நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு நடந்தது.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து தினமும் மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு நடந்தது.
இதனையொட்டி கோவிலில் நள்ளிரவில் மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பூஜைகள் முடிந்ததும் அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகரன் உள்பட 20-க்கும் மேற்பட்ட அருளாளிகள் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்திற்கு அம்மனின் சூலம் தாங்கி சென்றனர்.
அங்கு மயான மண்ணை கொண்டு மாசாணியம்மன் திருவுருவம் உருவாக்கப் பட்டிருந்து. நள்ளிரவு 1 மணிக்கு பம்பை இசை முழங்க மயான பூஜை தொடங்கியது.
அப்போது அம்மன் அருளாளி அருண் சாமி வந்து ஆடியபடி, அம்மன் உருவத்தை சிதைத்து எலும்பை வாயில் கவ்வியபடியே பிடி மண்ணை எடுத்தார். அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மாசாணி தாயே என பக்தி கோஷம் எழுப்பினர்.
இந்த பூஜையில் ஆனைமலை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள், வெளிமாவட்டத்தினர், வெளி மாநிலத்தினர் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக ஸ்ரீ மாசாணி அம்மன் நற்பணி மன்றம் சார்பில் வள்ளி கும்மியாட்டமும் நடைபெற்றது. இதனையும் பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
மயான பூஜையையொட்டி அங்கு ஆனைமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீநிதி உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று காலை 9.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30 மணிக்கு மகா பூஜை நடந்தது. நாளை (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதல் நடக்கிறது.
அதனை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சித்திரைத் தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா ஆகியவையும் நடக்கிறது. இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது.
25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் திரளான பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள். 26-ந்தேதி காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கொடி இறக்குதல், காலை 10 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், இரவு 8 மணிக்கு மகா முனி பூஜையும், 27-ந்தேதி காலை 11.30 மணிக்கு மகாஅபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
- சிக்னல் டிவைஸ் கருவி கரும் புகையுடன், பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
- பாதுகாப்பு நடவடிக்கையாக காலை முதலே அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நாயக்கர் குப்பம் மீனவர் கிராமத்தில் கடந்த 12-ந்தேதி காலை உலோகத்தால் ஆன உருளை வடிவிலான மர்மபொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் அப்பொருளை மீட்டு கடற்கரை பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் நீர்மூழ்கிய கப்பல்களில் பயன்படுத்தப்படும் சிக்னல் டிவைஸ் கருவி என தெரியவந்தது. மேலும் அப்பொருளில் அபாயகரமானது, தொடாதீர்கள், காவல்துறைக்கு தெரிவியுங்கள் எனவும் அச்சிடப்பட்டிருந்தது. உடனே இது குறித்து சென்னை வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர் குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன் பெயரில் சென்னையிலிருந்து வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர்கள் சீர்காழிக்கு வந்தனர். பின்னர் சீர்காழி புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் ஆழமான குழி தோண்டப்பட்டு அதில் சிக்னல் டிவைஸ் கருவி வைக்கப்பட்டு வெடிகுண்டு செயல் இழப்பு செய்யும் கருவிகளுடன் இணைப்பு ஏற்படுத்தி அதனை வெடிக்க வைத்தனர். அப்போது அந்த சிக்னல் டிவைஸ் கருவி கரும் புகையுடன், பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
வெடிக்க வைக்கும் பணிகள் தொடங்கியதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம், 108 மீட்பு வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக காலை முதலே அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பாட்டி ராஜேஸ்வரி பச்சபெருமாள் பட்டியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
- உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்ததன் பேரில் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சை பெருமாள் பட்டி தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்ந்த சிவகுமார்-மேகலா தம்பதியினரின் ஒரே மகள் மெர்சி (வயது 14). தம்பதியர் இருவரும் பணி நிமித்தம் காரணமாக வெளியூரில் உள்ளனர்.
இதனால் மெர்சி, உறவினரான பாட்டி ராஜேஸ்வரி உடன் தங்கி, பச்ச பெருமாள்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
பாட்டி ராஜேஸ்வரி பச்சபெருமாள் பட்டியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இரவு பள்ளிப் பணிகளை முடித்து ராஜேஸ்வரி வீடு திரும்பினார்.
அப்போது வீட்டில் இருந்த மெர்சி தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கியதை கண்டு அலறினார். இதுபற்றி உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் பேரில் நேற்று நள்ளிரவு துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ் குமரேசன், செபாஸ்டின் சந்தியாகு போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் வீட்டில் தனியாக இருந்த மெர்சி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்ததன் பேரில் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- கஞ்சா பொட்டலங்கள் குறித்து மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- கஞ்சா பொட்டலங்களின் மதிப்பு ரூ.5 லட்சம் என்பது தெரியவந்தது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பம்ப் ஹவுஸ் அருகில் இன்று காலை 13 பொட்டலங்கள் கரை ஒதுங்கியது. அவ்வழியாக வந்த மீனவர்கள் அந்த பொட்டலங்கள் என்னவென்று தெரியாமல் அருகில் சென்று பார்த்தனர். அப்போது அது கஞ்சா பொட்டலங்கள் என்பது தெரியவந்தது.
உடனடியாக மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேதாரண்யம் கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது 13 பொட்டலங்களிலும் தலா 2 கிலோ வீதம் 26 கிலோ கஞ்சா இருந்ததும், இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்பதும் தெரியவந்தது.
இலங்கைக்கு கடத்திய போது கஞ்சா பொட்டலங்கள் கடலில் தவறி விழுந்து கரை ஒதுங்கியதா? அல்லது வேறு காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மைசூரில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து.
- பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் 26, 27 மற்றும் மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் ரத்து.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதியிலிருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16204) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்துசெய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16203) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்துசெய்யப்படுகிறது.
மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு மைசூரு செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16021) வரும் 26, 27 மற்றும் மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, மைசூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16022) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல, பெங்களூருவில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12658) வரும் 26, 27 மற்றும் மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் பா.ஜனதா பொதுக்கூட்டங்கள், தனியார் நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
- ராமேசுவரம் புதிய பாம்பன் ரெயில்வே பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திரமோடி தமிழ்நாட்டில் வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
அரசு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் பா.ஜனதா பொதுக்கூட்டங்கள், தனியார் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார்.
இந்த சுற்றுப்பயணத்தின்போது அவர் தமிழக பா.ஜனதா தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பு 27-ந்தேதி மதுரையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்க உள்ளது.
பிரதமர் மோடியின் முழு சுற்றுப்பயண விவரம் வெளியாகி உள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 1.30 மணிக்கு பிரதமர் மோடி கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலமாக கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகிறார்.
பின்னர் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் செல்கிறார்.
பல்லடத்தை அடுத்த மாதப்பூரில், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று யாத்திரையை நிறைவு செய்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியானது பிற்பகல் 2.45 மணி முதல் 3.45 மணி வரை நடக்கிறது. இதன்பின்பு பிரதமர் மோடி 3.50 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5.05 மணிக்கு மதுரையை சென்றடைகிறார்.
அங்கு ஒரு தனியார் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி 5.15 மணி முதல் 6.15 மணி வரை 1 மணி நேரம் நடக்கிறது.
இதன்பின்பு, பிரதமர் மோடி 6.45 மணிக்கு மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு தமிழக பா.ஜனதா மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கிறார். அப்போது அவர்களுடன் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க உள்ளார். பின்னர் இரவு அதே ஓட்டலில் தங்குகிறார்.
மறுநாள் 28-ந்தேதி காலை 8.15 மணிக்கு ஓட்டலில் இருந்து கார் மூலமாக மதுரை விமான நிலையத்திற்கு மோடி செல்கிறார்.
8.40 மணிக்கு மதுரையில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, 9 மணிக்கு தூத்துக்குடி சென்றடைகிறார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் காலை 9.45 மணி முதல் 10.45 மணி வரை நடைபெறும் விழாவில் பங்கேற்று சில திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முடிவடைந்த பணிகளை தொடங்கி வைக்கிறார்.
திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ராமேசுவரம் புதிய பாம்பன் ரெயில்வே பாலத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
விழா முடிந்ததும் 10.35 மணிக்கு பிரதமர் மோடி தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக நெல்லைக்கு 11.10 மணிக்கு வருகிறார்.
நெல்லையில் பா.ஜனதா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். காலை 11.15 மணிக்கு தொடங்கும் கூட்டம் 12.15 மணிக்கு நிறைவடைகிறது.
பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு பிரதமர் 12.30 மணிக்கு நெல்லையில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலமாக கேரளாவிற்கு செல்கிறார்.






