search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா தேரோட்டம்
    X

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா தேரோட்டம்

    • அரோகரா கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    • நாளை இரவு 10.30 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கடந்த 14-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரத்தில் சுவாமி பல்வேறு வாகனம் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.

    மேலும் 7-ம் திருவிழாவான 20-ந்தேதி சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி எழுந்தருளல், 8-ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலையில் வெள்ளை சாத்தி கோலத்திலும், அதனை தொடர்ந்து சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து 4.30மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

    காலை 6.30 மணிக்கு விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதிகளில் உலா வந்து 7.15 மணிக்கு நிலையம் சேர்ந்தது. பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

    தேரோட்டத்தை மாலைமுரசு நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

    தேரோட்டத்தில் மாலைமுரசு இயக்குனர் கதிரேசன் ஆதித்தன், கோவில் இணை ஆணையர் கார்த்திக், திருச்செந்தூர் சார்பு நீதிபதி வஷித் குமார், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில பொது செயலாளர் டாக்டர் அரசு ராஜா, ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பால சுப்பிரமணிய ஆதித்தன், தி.மு.க. மாநில விவசாய அணி கணேஷ்குமார் ஆதித்தன் மற்றும் குமர குருபரஆதித்தன், வரதராஜ ஆதித்தன், ஹெட் கேவார் ஆதித்தன், சபேஷ் ஆதித்தன், அசோக்குமார் ஆதித்தன், தனிகேசவ ஆதித்தன், பகவதி ஆதித்தன், சண்முகநாதன் ஆதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். சுவாமி தேரானது நான்கு ரதவீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது. தொடர்ந்து அம்பாள் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது.

    11-ம் திருவிழாவான நாளை இரவு 10.30 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. சுவாமியும், அம்பாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

    நாளை மறுநாள் 12-ம் திருவிழா அன்று மாலை 7 மணி அளவில் சுவாமி, அம்பாள் தனித்தனி பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    Next Story
    ×