என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 4 தொகுதிகளுக்காக போராடி வரும் நிலையில் எங்கள் பக்கம் வந்தால் 5 தொகுதிகள் தர தயார் என்று அ.தி.மு.க. தரப்பில் இருந்து தூது அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
    • பா.ம.க. இருக்கும் அணியில் நாங்கள் இடம்பெற முடியாது என்ற தங்கள் நிலைப்பாட்டை சிறுத்தைகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 தொகுதிகள் கேட்கிறது. ஆனால் அதற்கு தி.முக. தரப்பில் இன்னும் இறுதியாக எதுவும் தெரிவிக்காததால் விடுதலை சிறுத்தைகளும் தயக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

    அதே நேரம் பா.ம.க.வும் தனது முடிவை அறிவிக்கவில்லை. தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையில் பலமான கூட்டணி அமையும். திமு.க. கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறும் என்று கூறி வருகிறார்.

    விடுதலை சிறுத்தைகளை குறி வைத்தே அவர் இவ்வாறு கூறியதாக கூறப்படுகிறது.

    விடுதலை சிறுத்தைகளை தங்கள் பக்கம் இழுப்பதற்காக அ.தி.மு.க. முயற்சித்து வருகிறது.

    4 தொகுதிகளுக்காக போராடி வரும் நிலையில் எங்கள் பக்கம் வந்தால் 5 தொகுதிகள் தர தயார் என்று அ.தி.மு.க. தரப்பில் இருந்து தூது அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.


    அப்போது பா.ம.க. இருக்கும் அணியில் நாங்கள் இடம்பெற முடியாது என்ற தங்கள் நிலைப்பாட்டை சிறுத்தைகள் தெரிவித்துள்ளனர். ஆனால் பா.ம.க. வரும் என்பது உறுதியாகவில்லை என்று அ.தி.மு.க. தரப்பில் கூறி இருக்கிறார்கள்.

    ஆனாலும் அ.தி.மு.க.வின் 'ஆஃபரை' ஏற்க விடுதலை சிறுத்தைகள் தயக்கம் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையில் அ.தி.மு.க. 5 இடங்கள் வழங்கினாலும் அது வேட்பாளராகத்தான் இருக்க முடியும். ஆனால் தி.மு.க. கூட்டணியில் ஒதுக்கப்படும் இடங்கள் நிச்சயம் எம்.பி.க்கள் ஆகி விடுவார்கள் என்று கட்சி நிர்வாகிகளும் திருமாவளவனிடம் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

    எனவே இந்த தேர்தலில் விட்டுவிடுங்கள். பின்னர் பார்க்கலாம் என்று மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    • மாசி மாதம் 11 நாட்கள் மாசி மக பெரு விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
    • கொடி மரத்திற்கு மகா தீபாரதனை நடத்தப்பட்டது.

    தென்காசி:

    தென்காசியில் பழமையான காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 11 நாட்கள் மாசி மக பெரு விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான மாசி மகப்பெருவிழா கடந்த 15-ந்தேதி சுவாமி சன்னதி கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

    கோவிலின் நடை திறக்கப்பட்டு கொடிப் பட்ட ரத வீதி உலாவும், பின்னர் கொடி மரத்திற்கு 11 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்க ப்பட்டு வேத விற்பனர்கள் வேத மந்திரங்களை முழங்க கொடி மரத்திற்கு மகா தீபாரதனை நடத்தப்பட்டது. விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வந்தது.

    விழாவின் 9-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் காசி விஸ்வநாதர் மற்றும் உலக அம்மன் பக்தர்களுக்கு கட்சி அளித்தனர். தேரை திரளான பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.

    விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பொதுமக்கள் பலர் அன்னதானம் மற்றும் மோர், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர். மாசி மக பெருந்திரு விழாவில் வருகிற 28-ந்தேதி பச்சை சாத்தியுடன் கூடிய தாண்டவ தீபாராதனை நடைபெற உள்ளது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப் படிதாரர்கள் செய்துள்ளனர்.

    • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் ஐடி துறை மிகவும் உயர்ந்தது.
    • ஐடி துறையில் மாற்றங்களை ஏற்படுத்த பழனிவேல் தியாகராஜனை அமைச்சராக நியமித்தேன்.

    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:

    * 1996ல் கணினி வாசலை திறந்து வைத்தவர் கலைஞர் கருணாநிதி.

    * முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தான் ஐடி துறை மிகவும் உயர்ந்தது.

    * கால் நூற்றாண்டுக்கு முன்பே இதை செய்ததுதான் கலைஞர் கருணாநிதியின் சாதனை.

    * முதல் 2 ஆண்டுகளில் நிதி அமைச்சராக மிக சிறப்பாக செயல்பட்டவர் பழனிவேல் தியாகராஜன். 

    * நிதித்துறையில் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியவர் பழனிவேல் தியாகராஜன்.

    * நிதித்துறையை போலவே ஐடி துறைக்கும் மாற்றங்கள் தேவைப்பட்டது.

    * ஐடி துறையில் மாற்றங்களை ஏற்படுத்த பழனிவேல் தியாகராஜனை அமைச்சராக நியமித்தேன்.

    * 750 திட்டங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.

    * ஐடி துறையின் வளர்ச்சியும் முன்னேற்றமும் தான் திராவிட மாடல் ஆட்சியின் தனித்தன்மை என்று கூறினார்.

    • சமரசம் ஏற்பட்டால் கச்சத்தீவு செல்லலாம் என்ற அடிப்படையில் வெளியூர்களில் இருந்து ராமேசுவரம் துறைமுகத்தில் ஏராளமான பக்தர்கள் இன்று காலை குவிந்தனர்.
    • காத்திருந்த பக்தர்கள் படகுகள் எதுவும் கச்சத்தீவுக்கு இயக்கப்படாததால் ஏமாற்றத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

    மண்டபம்:

    இந்திய, இலங்கை கடல் நடுவில் அழகிய குட்டித்தீவாக அமைந்துள்ளது கச்சத்தீவு. இந்தியாவின் எல்லையில் இருந்த இந்த தீவு கடந்த 1974-ல் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது அதிபர் பண்டாரநாயகாவுடன் போடப்பட்ட ஒப்பந்தப்படி இலங்கைக்கு வழங்கப்பட்டது.

    இருப்பினும் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் கோவில் திருவிழாவினை இருநாட்டை சேர்ந்தவர்கள் இணைந்து கொண்டாடி கொள்ளலாம், தமிழக மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்தி கொள்ளலாம் என்ற ஷரத்துகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

    அதன்பேரில் ஆண்டுதோறும் கச்சத்தீவில் இருநாட்டு மீனவர்களும், பக்தர்களும் கொண்டாடி வந்தனர். இலங்கையில் கடந்த 1983-ல் போர் உச்சகட்டத்தை அடைந்தபோது, தமிழக மீனவர்கள் கச்சத்தீவு செல்வதற்கு அனுமதி வழங்க இலங்கை அரசு மறுத்தது. அதனால் இந்த திருவிழாவிற்கு முறையான அனுமதியின்றி ஒருசிலர் மட்டுமே சென்று அந்தோணியாரை வழிபட்டு வந்தனர்.

    தொடர்ந்து உள்நாட்டு போர் தீவிரமடைந்ததும் கச்சத்தீவு திருவிழா நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் 2002-ல் நிலைமை கட்டுக்குள் வந்ததும் கச்சத்தீவில் மீண்டும் திருவிழா தொடங்கியது. இருந்தபோதும் இந்திய மக்கள் அனுமதிக்கப்படவில்லை.

    இந்நிலையில் இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததும், 27 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2010-ம் ஆண்டு தமிழக மக்கள் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல இலங்கை அரசு அனுமதி அளித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழக மக்கள் கச்சத்தீவு சென்று திருவிழா கொண்டாடி வருகின்றனர்.

    பாஸ்போர்ட், விசா போன்றவை இல்லாமல் இந்த விழாவில் இருநாட்டினரும் கலந்து கொள்ளலாம் என்பதால் இந்தாண்டு ராமேசுவரம், மதுரை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், பாண்டிச்சேரி உள்ளிட்ட தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 500 பக்தர்கள் செல்ல பதிவு செய்திருந்தனர். இலங்கை தரப்பிலிருந்து 4 ஆயிரம் பக்தர்களும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்ததை கண்டித்து, ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினா் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்தனர். இதை உறுதிப்படுத்தி கச்சத்தீவு திருவிழா திருப்பயண குழு ஒருங்கிணைப்பாளர் ராமேசுவரம் பாதிரியார் சந்தியாகு கலெக்டர் விஷ்ணு சந்திரனுக்கு கடிதம் அனுப்பினார்.

    கச்சத்தீவு செல்ல விசைப்படகு மீனவர்கள் புறக்கணித்த நிலையில் 17 நாட்டுப்படகுகளில் 302 மீனவர்கள் இன்று காலை 6 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து செல்ல அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் விசைபடகு மீனவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கச்சத்தீவு திருவிழா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசும் தமிழகத்தில் இருந்து பக்தர்கள் செல்ல தடை விதித்தது. இந்த தடையை மீறி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் ராமேசுவரம் துறைமுகத்தில் குவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ஒரு வேளை சமரசம் ஏற்பட்டால் கச்சத்தீவு செல்லலாம் என்ற அடிப்படையில் வெளியூர்களில் இருந்து ராமேசுவரம் துறைமுகத்தில் ஏராளமான பக்தர்கள் இன்று காலை குவிந்தனர். அவர்களுக்கு போலீசார் படகில் செல்ல அனுமதி அளிக்கவில்லை. அதனால் ராமேசுவரம் துறைமுகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காலை 8 மணி வரை காத்திருந்த பக்தர்கள் படகுகள் எதுவும் கச்சத்தீவுக்கு இயக்கப்படாததால் ஏமாற்றத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

    மீனவர்கள் பிரச்சனையால் இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழா புறக்கணிக்கப்பட்டது தமிழக பக்தர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரா் காட்சி தரும் ஐதீக திருவிழா.
    • பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மகம் பெருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனை, பஞ்சமூா்த்திகள் வீதி உலா நடைபெற்றன.

    இதனையடுத்து 6-ம் நாள் விழாவாக கடந்த 20-ந்தேதி விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரா் காட்சி தரும் ஐதீக திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான 9-ம் திருவிழா நிகழ்ச்சியாக பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

    முன்னதாக, அதிகாலை யில் பஞ்ச மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடை பெற்றன. இதை யடுத்து, அலங்கரிக்கப்பட்ட 5 திருத்தோ்களில் விநாயகா், சுப்பிரமணியா், விருத்தகிரீஸ்வரா், விருத்தாம்பாள், சண்டிகேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா்.

    தொடா்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் காலை 5:45 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது.

    முதலில் விநாயகா் தோ் புறப்பட்டது. இதையடுத்து, குறிப்பிட்ட நேர இடைவெளியில் மற்ற 4 திருத்தோ்களும் புறப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பக்தி முழக்கத்துடன் தோ்களை வடம் பிடித்து இழுத்தனா்.

    விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான மாசி மகம் தீா்த்தவாரி மணிமுக்தா ஆற்றில் நாளை நடைபெறுகிறது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தெப்ப உற்சவமும், திங்கட்கிழமை சண்டிகேஸ்வரா் சாமி வீதியுலா நடைபெற உள்ளது.

    • தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சராக உள்ளவர் மு.பெ. சாமிநாதன்.
    • அமைச்சரின் தந்தை மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    திருப்பூர்:

    தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் தந்தை சா.பெருமாள் சாமி கவுண்டர் காலமானார்.

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சராக உள்ளவர் மு.பெ. சாமிநாதன். இவர் திருப்பூர் மாவட்டம் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் தந்தை சா. பெருமாள் சாமி கவுண்டர் (94). தாயார் தங்கமணி. இந்த நிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தாயார் தங்கமணி இறந்தார்.

    இதற்கிடையே சா.பெருமாள் சாமி கவுண்டர் வயது மூப்பு காரணமாக கடந்த 3 நாட்களாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.50 மணி அளவில் இறந்தார். அமைச்சரின் தந்தை மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    • இரவில் அலங்கரிக்கப்பட்ட மின் தேரில் அம்மன் வீதிஉலா.
    • அம்மனை பக்தர்கள் வழிநெடுகிலும் காத்திருந்து வழிபட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த 8-ந்தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. 9-ந்தேதி பூச்சொரிதல் எனப்படும் பூத்தேர் ஊர்வலமும், 13-ந்தேதி கொடியேற்றமும் நடைபெற்றது.

    அதனைதொடர்ந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்தும், தீச்சட்டி எடுத்து வந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தில்லைதெரு பொடிக்கார வெள்ளாளர் மண்டகப்படி நேற்று நடைபெற்றது.

    இரவில் அலங்கரிக்கப்பட்ட மின் தேரில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. வெண்பட்டு உடுத்தி சரஸ்வதி அலங்காரத்தில் கையில் வீணையுடன் எழுந்தருளிய அம்மனை பக்தர்கள் வழிநெடுகிலும் காத்திருந்து வழிபட்டனர்.

     திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் விழா இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது. இதற்காக கோவில் முன்பு பூக்குழி தயாரிக்கப்பட்டு முதலில் கோவில் பூசாரி அதில் இறங்கினார். அதனைத் தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் ஒவ்வொருவராக பூக்குழி இறங்கினர்.

     கையில் குழந்தையை ஏந்தியவாறும், தீச்சட்டி எந்தியவாறும், அலகு குத்தியும், கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்தும், பக்தர்கள் பூக்குழி இறங்கியது மெய்சிலிர்க்க வைத்தது.

    3400-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழிய இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை காண திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கோவிலில் குவிந்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக போலீசார், தீயணைப்புத் துறையினர், ஆயுதப்படை போலீசார் ஆகியோர் குவிக்கப்பட்டிருந்தனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டிருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து மீண்டும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • நாயை அடித்துக்கொன்று குடிநீர் தொட்டியில் வீசிய மர்மநபர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி கிராம ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 50-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஆட்டையான்வட்டம் பகுதியில் 5 கிராமங்களுக்கு அனுப்பும் வகையில் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்கும் வகையில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி 16.5 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த குடிநீர் தொட்டிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் காவிரி நீர் ஏற்றப்பட்டு இந்த தொட்டியில் இருந்து அருகில் உள்ள அங்கன்வாடி மையம், அரசு நடுநிலைப்பள்ளி, கொடியன் வளவு, ஆட்டையன்வளவு, கந்தாயி வட்டம், ஆரான்வட்டம், ஆப்பவட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கும் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. டேங்க் ஆபரேட்டராக அம்மாசி என்பவர் பணியாற்றி வருகின்றார்.

    இந்த நிலையில் நேற்று தண்ணீர் தொட்டிக்குள் நாய் ஒன்று செத்து மிதந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் தாரமங்கலம் போலீசாருக்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி பணியாளர்கள் குடிநீர் தொட்டியில் செத்து மிகுந்த நாயை வெளியே எடுத்து போட்டனர். அதன் பிறகு குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து மீண்டும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



    இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடிநீர்தேக்க தொட்டியில் மர்மநபர்கள் அங்கு சுற்றி திரிந்த தெரு நாயை அடித்துக்கொன்று போட்டுள்ளது தெரியவந்தது.

    எனவே நாயை அடித்துக்கொன்று குடிநீர் தொட்டியில் வீசிய மர்மநபர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மர்மநபர்களை உடனடியாக போலீசார் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் எதிர்காலத்தில் வேறு எங்கு வேண்டுமானாலும் இதுபோல் மீண்டும், மீண்டும் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்த சம்பவம் தாரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது.
    • பவுர்ணமியை யொட்டி சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 21-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 3 நாட்களாக பக்தர்கள் சதுரகிரியில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

     நாளை பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் இன்று திரளான பக்தர்கள் குவிந்தனர். காலை 6.35 மணிக்கு வனத்துறையினர். சோதனைக்கு பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்து டன் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வாக னங்களில் ஏராளமானோர் வந்திருந்தனர்.

    இன்று மாலை சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர், உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மேற்கொண்டு வருகிறார்.
    • நட்சத்திர ஓட்டலில் தலைமை தேர்தல் ஆணையர் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

    இதற்கான தேர்தல் தேதி அனேகமாக மார்ச் 2-வது வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான ஆயத்த பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மேற்கொண்டு வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.

    அந்த வகையில் தமிழ் நாட்டில் தேர்தல் பணிகளை ஆய்வு செய்யவும், அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்டு அறியவும் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் நேற்றிரவு விமானம் மூலம் சென்னை வந்தார். அவருடன் தேர்தல் கமிஷனர் அருண் கோயல், மூத்த துணை தேர்தல் கமிஷனர்கள் தர்மேந்திர சர்மா, நிதிஷ் வியாஸ், துணை தேர்தல் கமிஷனர்கள் அஜய் பாது, மனோஜ்குமார் சாகு, முதன்மை செயலாளர் மலேய்மாலிக் மற்றும் உயர் அதிகாரிகள் நாராயணன், அனுஜ் சந்தக் ஆகியோரும் சென்னை வந்தனர்.

    சென்னை விமான நிலையத்துக்கு எதிரே உள்ள 'டிரைடண்ட்' நட்சத்திர ஓட்டலில் தங்கிய இந்திய தேர்தல் கமிஷனர்கள் இன்று காலையில் அதே ஓட்டலில் தேர்தல் தொடர்பாக ஆய்வு கூட்டத்தை நடத்தினார்கள்.

    முதலில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளை தனித்தனியாக அழைத்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., ஆம் ஆத்மி கட்சி, தேசிய மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய 10 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

    ஒவ்வொரு கட்சியிலும் 2 பேர் சென்று தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமாரிடம் தங்களது கருத்துக்களை முன் வைத்து அதை மனுவாகவும் கொடுத்தனர்.

    முக்கியமான கோரிக்கையாக தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றும் வாக்குப்பதிவில் தில்லுமுல்லு நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

    பதட்டம் நிறைந்த வாக்கு சாவடிகளில் துணை ராணுவப்படையை நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தினார்கள்.

    இன்றைய இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ எம்.பி. கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை எடுத்து கூறினார்கள்.

    அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இன்பதுரை கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    பாரதிய ஜனதா கட்சியில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், முன்னாள் டி.ஜி.பி. பாலச்சந்திரன் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியில் வக்கீல் பிரிவு தலைவர் சந்திரமோகன், ஆம் ஆத்மி கட்சியில் மாநில பொதுச் செயலாளர் ஜோசப் ராஜா, ஸ்டெல்லா மேரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் ஆறுமுக நயினார், சம்பத், தேசிய மக்கள் கட்சியில் மாநில தலைவர் சீனிவாசன், செயலாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் 2 பேர் வீதம் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து தங்களது கருத்துக்களை கோரிக்கை மனுவாக வழங்கினார்கள்.

    ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளும் 9 நிமிட நேரம் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் பகல் 11.39 மணி வரை நடந்தது.

    ஒவ்வொரு அரசியல் கட்சி பிரதிநிதிகள் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் அங்கு வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதன் பிறகு இந்திய தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.

    பின்னர் உணவு இடைவேளைக்கு பிறகு மதியம் மீண்டும் தேர்தல் கமிஷனர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் ஏற்பாடுகள் எந்த அளவில் தயார் நிலையில் உள்ளது என்பதை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் ஆய்வு மேற்வார். ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியல் விவரங்கள், மின்னணு எந்திரங்கள் கையிருப்பு, பதட்டமான வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்.

    இதைத் தொடர்ந்து நாளையும் தேர்தல் ஆணையர்கள் சென்னையில் தங்கியிருந்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

    • மாசி மக திருவிழா மற்றும் பொங்கல் விழா 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கிடாய் வெட்டி வழிபட்டனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தெங்குமரஹாடா அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதி கருவண்ணராயர் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இந்த கோவில் உள்ளது.

    வருடம் தோறும் மாசி மக திருவிழா மற்றும் பொங்கல் விழா 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு சத்திய மங்கலம், கோயமுத்தூர், சேலம், கரூர் திருப்பூர், ஈரோடு, பெருந்துறை, கடம்பூர் மலைப்பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கிடாய் வெட்டி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள்.

    பக்தர்கள் அடர்ந்த வன ப்பகுதிக்குள் வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதனால் இந்த வருட திருவிழாவுக்கு நீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    அதன்படி கோவிலுக்கு வரும் பக்தர்கள் போதை தரும் பொருட்கள் எதையும் எடுத்துச் செல்லக்கூடாது, வனம் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு திருவிழாவை நடத்த வேண்டும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் வாகனங்களை நிறுத்த வேண்டும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் பாலித்தீன் பொருட்களை வனப்பகுதிக்குள் கொண்டு செல்லக்கூடாது, பாதுகாப்பு முன் எச்சரிக்கையாக மோயார் ஆறு மற்றும் அதன் அருகில் உள்ள பகுதி களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட 20 வகை யான நிபந்தனைகள் குறிப்பிட்டு இருந்தது.

    இந்நிலையில் இன்று கரு வண்ணராயர் கோவில் மாசி மக மற்றும் பொங்கல் திருவிழா தொடங்கியது. இன்று முதல் 3 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனை அடுத்து இன்று அதிகாலை முதலே சத்திய மங்கலத்தை அடுத்துள்ள காராச்சி குறை சோதனை சாவடியில் 20 வண்டிகளுடன் பக்தர்கள் வந்தனர்.

     வண்டிகளை பவானிசாகர் வனத்துறையினர் தீவிரமாக சோதனை செய்து பின்னர் வனப்பகுதிக்குள் அனுப்பினர். கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கிடாய் வெட்டி வழிபட்டனர். 300-க்கும் மேற்பட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிலில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து பெரிய பேனர் வைக்கப்பட்டுள்ளது.

    • தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,795-க்கும் சவரன் ரூ.46,360-க்கும் விற்பனையாகிறது.
    • வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக ஏற்றமும் இறக்கமும் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது.

    தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,795-க்கும் சவரன் ரூ.46,360-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76-க்கும் பார் வெள்ளி ரூ.76ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    ×