என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பராமரிப்பு பணிகள் காரணமாக 4-வது வாரமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
- சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதனால் பொதுமக்களின் வசதிக்காக நாளை காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
அனைத்து பயணிகளும் தங்களின் பயணங்களை அதற்கேற்ப திட்டமிடுமாறு மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Chennai Metro Rail Service Schedule update:
— Chennai Metro Rail (@cmrlofficial) March 2, 2024
Due to maintenance work on Southern Railways between Central and Tambaram, more passengers are expected on the Metro tomorrow, Sunday, March 3rd 2024.
To accommodate this, Chennai Metro Rail will be operating the trains at every 7…
- குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் அருகே உயர் மின் அழுத்த மின்கம்பங்கள் வருவதால் பெரும் பாதிப்பு ஏற்படும்.
- பெண்கள் உள்ளிட்ட விவசாயிகளை கள்ளிமந்தையம் போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அப்பியம்பட்டி பகுதியில் தனியார் காற்றாலை அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின்சாரத்தை தனியார் துணை மின் நிலையத்திற்கு எடுத்துச்செல்ல உயர் அழுத்த மின்கம்பங்கள் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் அருகே உயர் மின் அழுத்த மின்கம்பங்கள் வருவதால் பெரும் பாதிப்பு ஏற்படும் என அப்பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு மின்கம்பங்கள் அமைப்பதை நிறுத்த வேண்டும் என கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று போலீஸ் பாதுகாப்புடன் வந்த தனியார் காற்றாலை நிறுவனத்தினர் மின்கம்பங்களை அமைக்க முயன்றபோது அதை தடுத்து நிறுத்திய பெண்கள் உள்ளிட்ட விவசாயிகளை கள்ளிமந்தையம் போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
அப்போது ஒரு மூதாட்டி மயங்கி விழுந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ய முயன்றனர். அப்போது விவசாயி ஒருவரை ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. முருகேசன் தகாத வார்த்தையால் திட்டியதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- பஸ்சின் முன் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.
- சற்றும் எதிர் பாராத டிரைவர் சுதாரித்துக்கொண்டு பஸ்சை நிறுத்தினார்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணார் செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் வழியாக நாள்தோறும் வாகன மற்றும் சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பூரில் இருந்து உடுமலை வழியாக அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு மூணாருக்கு சென்றது.
பின்னர் அங்கு பயணிகளை இறக்கி விட்டு விட்டு இரவு மூணாறில் இருந்து அந்த பஸ் புறப்பட்டு உடுமலை நோக்கி வந்து கொண்டிருந்தது. தலையார் அருகே வந்த போது உடுமலை-மூணார் சாலையில் ஆக்ரோசத்துடன் சுற்றித்திரிந்த ஒற்றை யானை அந்த பஸ்சை வழிமறித்து தாக்கியது. இதில் பஸ்சின் முன் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.
இதை சற்றும் எதிர் பாராத டிரைவர் சுதாரித்துக்கொண்டு பஸ்சை நிறுத்தினார். இதன் காரணமாக அச்சமடைந்த பயணிகள் அலறினர். காட்டு யானையின் அடாவடி செயலால் உடுமலை- மூணார் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானை பஸ்சை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், கடந்த சில நாட்களாக உடுமலை- மூணார் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. மேலும் சாலையின் ஓரங்களில் வாகனங்களை நிறுத்தக் கூடாது.யானைகளை துன்புறுத்தும் வகையில் ஒலி எழுப்புவதோ, கற்களை வீசுவதோ கூடாது. யானைகள் சாலையை கடக்கும் நிகழ்வு நேர்ந்தால் தூரத்தில் வாகனங்களை நிறுத்தி அவை சாலையை கடந்த பின்பு இயக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.
- ஜாம்நகர் விமான நிலையத்திற்கு 10 நாட்களுக்கு சர்வதேச விமான நிலையம் என்ற அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.
- நாள் ஒன்றுக்கு 6 விமானங்களை கையாளும் ஜாம்நகரில் நேற்று மட்டுமே 140 விமானங்கள் வந்துள்ளன.
சென்னை:
மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மோடி அரசின் மெகா "மொய்"
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விருந்துக்காக ஜாம் நகர் விமான நிலையத்துக்கு 10 நாள் சிறப்பு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து.
6 விமானங்கள் இறங்கி ஏறுகிற இடத்தில் 140 விமான சேவைக்கு ஏற்பாடு.
ஆனால் மதுரையின் பல ஆண்டு சர்வதேச விமான நிலையக் கோரிக்கை மட்டும் இன்று வரை ஈடேறவில்லை. தமிழ்நாட்டுக்கு எதற்கு 4 வது சர்வதேச விமான நிலையம் என்று கேள்வி கேட்டவர்கள் தான் இவர்கள் என பதிவிட்டுள்ளார்.
மோடி அரசின் மெகா "மொய்"
— Su Venkatesan MP (@SuVe4Madurai) March 2, 2024
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விருந்துக்காக ஜாம் நகர் விமான நிலையத்துக்கு 10 நாள் சிறப்பு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து.
6 விமானங்கள் இறங்கி ஏறுகிற இடத்தில் 140 விமான சேவைக்கு ஏற்பாடு.
ஆனால் மதுரையின் பல ஆண்டு சர்வதேச விமான நிலையக்… pic.twitter.com/WNMDr0uGPb
முன்னதாக, ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவை ஒட்டி, குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்திற்கு 10 நாட்கள் அதாவது பிப்.25 முதல் மார்ச்.5 வரை சர்வதேச விமான நிலையம் என்ற அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு 6 விமானங்களை கையாளும் ஜாம்நகரில் நேற்று மட்டுமே 140 விமானங்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வதோடு கட்டிடக் கலையின் நுட்பங்களையும் பார்த்து பிரமிப்புடன் செல்கின்றனர்.
- கருவறையை நோக்கி ருக்மணி, தேவசேனாபதி ஆகியோர் சிவபுராணம் பாடியப்படி வந்தனர்.
தஞ்சாவூர்:
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வதோடு கட்டிடக் கலையின் நுட்பங்களையும் பார்த்து பிரமிப்புடன் செல்கின்றனர்.
இந்நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சிறுமி ருக்மணி (வயது 12), அவரது 6 வயது சகோதரர் தேவசேனாபதி ஆகிய இருவரும் தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து பின்னர் பெரிய கோவிலுக்கு சென்றனர். அங்கு பெருவுடையாரை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அந்த நேரத்தில் கருவறையை நோக்கி ருக்மணி, தேவசேனாபதி ஆகியோர் சிவபுராணம் பாடியப்படி வந்தனர்.
பின்னர் பக்தர்களை கடந்து கருவறை முன்பு நின்று கொண்டு மனம் உருகி நமச்சிவாய வாழ்க.. நாதந்தாழ் வாழ்க... என மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணத்தை வெண்கல குரலில் சரியான ஏற்ற இறக்கத்துடன் ஒரு சேர தூய தமிழில் பாடினர். இதனை பெருவுடையார் தரிசனத்துக்காக கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சிறு வயதில் பக்தியுடன் இப்படி ஒரு பாடலா என மெய்மறந்து ரசித்ததோடு குழந்தைகள் இருவரையும் மனதார பாராட்டினர்.
குழந்தைகளின் இந்த பக்தி செயல் ஆன்மீக அன்பர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில் அமைந்திருந்தது என்றால் அது மிகையல்ல.
- சமூக வலைதளத்தில் மிகவும் புகழ் பெற்றிருப்பவர் ஜெர்மன் பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மன்.
- குறையைக் கூட நிறைவானதாக மாற்ற முடியும் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
"பக்தியெனும் மொழியில் பாடுவதை கேட்க விருந்தாக இருந்தது" என சத்குரு பாராட்டு.
ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிரபல பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மன் கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு அவர்களை சந்தித்தார். அப்போது அவரது விருப்ப பாடலான ஆதிசங்கரர் எழுதிய "நிர்வாண ஷடக"த்தை பாடிக்காட்டினார். இந்த காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த சத்குரு கசாண்ட்ராவிற்கு பாராட்டு தெரிவித்தார்.
சமூக வலைதளத்தில் மிகவும் புகழ் பெற்றிருப்பவர் ஜெர்மன் பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மன். பார்வையற்ற மாற்றுத் திறனாளியான இவர் இந்திய கர்நாடக பாடல்களை பாடி காணொளி வெளியிடுவதில் மிகவும் பிரபலமானவர். நம் பாரத நாட்டிற்கு முதன் முறையாக வருகை தந்திருக்கும் இவர் கோவை ஈஷா யோக மையத்திற்கு வந்திருந்து சத்குரு அவர்களை நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது, ஆன்மீகத்தில் ஆழங்கால் பட்ட ஆதி சங்கராச்சாரியார் இயற்றிய சமஸ்கிருத பாடல் "நிர்வாண ஷடகத்தை" சத்குருவிற்கு பாடி அர்ப்பணித்தார். அவருடைய பக்திக்கு பெருமை சேர்க்கும் விதமாக சத்குரு அவர்கள் தனது மலர் மாலையை அணிவித்து ஆசி வழங்கினார்.
இந்த காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த சத்குரு "நமஸ்காரம் கசாண்ட்ரா! ஈஷா யோக மையத்தில் நீங்கள் எங்களுடன் இருந்தது அற்புதமானது மற்றும் பக்தி என்ற தடைகள் ஏதும் அறியாத மொழியில் நீங்கள் பாடுவதை கேட்பது சிறந்த விருந்தாக இருந்தது. குறையைக் கூட நிறைவானதாக மாற்ற முடியும் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. உங்களுக்கு என் வாழ்த்துகளும் & ஆசியும்"என பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதற்கு, "வாவ்! நான் கேட்டதிலேயே மிகவும் ஊக்கமளிக்கும் வார்த்தைகள் இவை. உங்களோடு இருந்த தருணங்களை எண்ணி மகிழ்கிறேன்" எனபதில் பதிவு இட்டுள்ளார் காசண்ட்ரா.
அதுமட்டுமின்றி, ஈஷா யோக மையத்தில் அவர் தங்கியிருந்தபோது, சில யோகப் பயிற்சிகளை கற்றுக்கொண்டார். மேலும், இந்திய கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கோவில்கள் குறித்தும் அறிந்து கொண்டார். அதோடு, சுற்றுச்சுழல் சார்ந்தும், சமூக செயல்பாடுகள் சார்ந்தும் ஈஷா அறக்கட்டளை செய்து வரும் பங்களிப்புகளை பற்றியும் தெரிந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து, "நான் ஜெர்மனி திரும்பி செல்கையில், இந்தியாவின் அனைத்து நினைவு தடங்களையும் என்னுள் வைத்துக் கொள்வேன். அதை கொண்டு நிறைய பாடல்களை உருவாக்குவேன்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.
- கூட்டணி குறித்த இறுதி வடிவம் எட்டிய பிறகு அது பற்றி கூறுகிறேன்.
- எங்களிடம் தான் குக்கர் சின்னம் உள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது மனைவி அனுராதாவுடன் சென்று கோ- பூஜை, கஜ பூஜை செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எனக்கு 60 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்பாளின் அனுகிரகத்தை பெறுவதற்காக வந்து பூஜைகள் செய்தேன். நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணிக்காக சில கட்சிகளுடன் பேசிக் கொண்டிருப்பது உண்மை. கூட்டணி குறித்த இறுதி வடிவம் எட்டிய பிறகு அது பற்றி கூறுகிறேன். நானும் ஓ.பி.எஸ்.ம் வருங்காலத்தில் அரசியலில் இணைந்து செயல்படுவது என ஏற்கனவே முடிவு எடுத்துள்ளோம். எங்களிடம் தான் குக்கர் சின்னம் உள்ளது. எனவே வீண் வதந்திகளை நம்பாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 7 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தங்களுக்கு ஒதுக்கி தர வேண்டும் என்று தே.மு.தி.க. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- அடுத்த கட்டமாக பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு வசதியாக தே.மு.தி.க.வில் 5 பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு எதிராக வலுவான அணியை அமைக்க அ.தி.மு.க. திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.
இதையொட்டி பா.ம.க., தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் அ.தி.மு.க. சார்பில் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் அ.தி.மு.க. நேற்று அதிரடியாக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின், கே.பி.அன்பழகன் ஆகியோர் விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்று தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்து பேசினார்கள்.
அப்போது கட்சியின் துணைச் செயலாளர்களான எல்.கே.சுதீஷ், முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர். சுமார் ½ மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது.
இதுபற்றி தே.மு.தி.க. சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், அ.தி.மு.க.வுடன் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
14 தொகுதிகள் மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தரும் கட்சியுடன்தான் தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் என்று பிரேமலதா ஏற்கனவே கூறியிருந்த நிலையில் அ.தி.மு.க.வுடன் நடத்தப்பட்ட நேற்றைய பேச்சுவார்த்தையின்போது அந்த கட்சி இறங்கி வந்துள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் 7 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தங்களுக்கு ஒதுக்கி தர வேண்டும் என்று தே.மு.தி.க. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு பதில் அளித்த அ.தி.மு.க. குழுவினர் கூட்டணியில் எத்தனை தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு ஒதுக்குவது? என்பது பற்றி பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அடுத்த கட்டமாக பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு வசதியாக தே.மு.தி.க.வில் 5 பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. இதனை பிரேமலதா விரைவில் அறிவிக்க உள்ளார்.
இந்த குழுவில் தே.மு.தி.க. முன்னணி நிர்வாகிகள் இடம் பெற உள்ளனர். இந்த குழுவுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் இன்னும் சில நாட்களில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்த உள்ளனர்.
இதன் முடிவில் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகள் மற்றும் போட்டியிடும் இடங்கள் ஆகியவை இறுதி செய்யப்பட உள்ளது.
தே.மு.தி.க. சார்பில் 7 பாராளுமன்ற தொகுதிகள் கேட்கப்பட்டுள்ள நிலையில் அ.தி.மு.க. தரப்பிலோ 4 பாராளுமன்ற தொகுதிகளை ஒதுக்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதே நேரத்தில் மேல்சபை எம்.பி. பதவி ஒன்றும் கண்டிப்பாக வேண்டும் என்றும் தே.மு.தி.க. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றியும் பேசி முடிவு செய்து கொள்ளலாம் என அ.தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற உள்ள பா.ம.க.வும் மேல்சபை எம்.பி. பதவியை கேட்பதால் இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுப்பது என்பது பற்றி அ.தி.மு.க. தலைமை ஆலோசித்து முடிவெடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஒருவேளை மேல்சபை எம்.பி. பதவியை கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டாலும் தே.மு.தி.க.வை சமாதானப்படுத்தி எப்படியும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற செய்துவிட வேண்டும் என்பதே அ.தி.மு.க. தலைவர்களின் விருப்பமாக உள்ளது.
அதற்கேற்ப அடுத்தடுத்து கூட்டணி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவும் அந்த கட்சி முடிவு செய்து உள்ளது.
- எந்த மக்களவை தொகுதி ஒதுக்கினாலும் அதிலும் போட்டியிட தயாராக உள்ளோம்.
- இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. - மனிதநேய மக்கள் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவுடன் ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா கூறியதாவது:-
* 2013-ம் ஆண்டு முதல் தி.மு.க. கூட்டணியில் பணியாற்றி வருகிறோம்.
* வரும் பாராளுமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
* எந்த மக்களவை தொகுதி ஒதுக்கினாலும் அதிலும் போட்டியிட தயாராக உள்ளோம்.
* இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது என்றார்.
முன்னதாக, தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சிகள் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
#WATCH | Tamil Nadu: Manithaneya Makkal Katchi (MMK) president and MLA Jawahirullah reaches DMK HQ Arivalayam to hold discussions alliance with DMK regarding Lok Sabha elections, in Chennai. pic.twitter.com/rdi8zZQ7ZY
— ANI (@ANI) March 2, 2024
- இந்திய தோ்தல் ஆணையத்தால் பாராளுமன்ற தோ்தல் குறித்த அறிவிப்பு வெளியானவுடன், தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடும்.
- கடைசியாக வெளியிடப்பட்ட உத்தரவின் விவரத்தைக் குறிப்பிட்டு அதற்குக் கீழே இந்த கோடு வரைந்திருக்க வேண்டும்.
சென்னை:
பாராளுமன்ற தோ்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில், புதிய உத்தரவுகளை வெளியிட, பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அனைத்துத் துறைகளின் செயலா்களுக்கும் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய தோ்தல் ஆணையத்தால் பாராளுமன்ற தோ்தல் குறித்த அறிவிப்பு வெளியானவுடன், தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடும். அதிலிருந்து புதிய திட்டங்கள் அல்லது புதிய உத்தரவுகளை வெளியிடக் கூடாது. இந்த விவகாரத்தில் கடந்த காலங்களில் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதாவது, தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வந்த இரண்டொரு நாட்களுக்குப் பிறகும், முன்தேதியிட்டு சில உத்தரவுகள் வெளியிடப்பட்டதாக புகாா்கள் எழுந்தன. தோ்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே, இந்த உத்தரவுகள் வெளியிடப்பட்டது போன்ற தோற்றத்தை அவை வெளிப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
எனவே, இதுபோன்ற புகாா்கள், குற்றச்சாட்டுகளை தவிா்க்க வேண்டுமென அனைத்து கூடுதல் தலைமைச் செயலா்கள், முதன்மைச் செயலா்கள், துறைச் செயலா்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தோ்தல் தேதி தொடா்பான அறிவிப்பு ஊடகங்களில் வெளியானவுடன், அரசு உத்தரவுகளின் விவரங்களை பதிவிடும் பதிவேட்டில் நீளமாக ஒரு கோடு வரைந்து கொள்ள வேண்டும். அதாவது, கடைசியாக வெளியிடப்பட்ட உத்தரவின் விவரத்தைக் குறிப்பிட்டு அதற்குக் கீழே இந்த கோடு வரைந்திருக்க வேண்டும்.
இதை நகலெடுத்து இந்தியத் தோ்தல் ஆணையத்தால், தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் இதனைச் செய்ய வேண்டும்.
மேலும், அந்த நகலை தலைமைத் தோ்தல் அதிகாரியின் அலுவலகத்துக்கு அனுப்பிட வேண்டும். இந்த நடைமுறையால், தேவையற்ற குற்றச்சாட்டுகள் எழுவதும், மற்றவா்கள் புகாா்கள் கூறுவதும் தவிா்க்கப்படும். தோ்தல் தேதி அறிவிக்கப்படும் தருவாயில், துறைச் செயலா்கள் யாரேனும் தலைமையிடத்தை விட்டு வெளியே சென்றிருந்தால் அவா்கள் தலைமையிடத்தில் உள்ள குறிப்பிட்ட ஒருவருக்கு இந்தப் பணியைச் செய்திட அதிகாரம் அளித்திட வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் சத்யபிரதா சாகு கூறி உள்ளார்.
- பிரதமர் யார் என்பதை முடிவு செய்து மக்கள் வாக்களிக்கப் போகும் தேர்தல்.
- காங்கிரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பும் தேர்தல்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா களம் இறக்கப் போகும் வேட்பாளர்கள், அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் பற்றி கட்சி மேலிடம் பரிசீலித்து வருகிறது.
இதில் நடிகை குஷ்பு பெயரும் இடம் பெற்றுள்ளது. சென்னையில் அவரை களம் இறக்க திட்டமிட்டுள்ளனர். தென் சென்னை அல்லது மத்திய சென்னை தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
இது பற்றி குஷ்புவிடம் கேட்ட போது, எனக்கு எதுவும் தெரியாது. ஒவ்வொரு தேர்தலிலும் இப்படி பெயர் அடிபடுவது வழக்கமானதுதான். கட்சி என்ன சொல்கிறதோ அதை செய்வேன் என்றார்.
இந்த தேர்தல் நாடு சந்திக்கும் வித்தியாசமான தேர்தல். பிரதமர் யார் என்பதை முடிவு செய்து மக்கள் வாக்களிக்கப் போகும் தேர்தல்.
அடுத்ததாக காங்கிரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பும் தேர்தல்.
1967-க்கு பிறகு மத்தியில் ஆட்சியில் இருந்தும் தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகளில் தங்களுக்கு யார் சாதகமாக இருப்பார்களோ அவர்கள் மீது சவாரி செய்து பழக்கப்பட்டு விட்டது.
இந்த தேர்தலில் ஏற்கனவே கையில் இருக்கும் தொகுதிகளையாவது தாருங்கள் என்று தி.மு.க.விடம் கையேந்தும் நிலைக்கு வந்துள்ளது. இந்த தேர்தலோடு காங்கிரசை மக்கள் கை கழுவி விடுவார்கள்.
போதை பொருள் புழக்கத்தில் தமிழகம் முதலிடத்துக்கு வந்து விட்டது. ஆனால் அரசு போதையில் மயங்கி கிடக்கிறது.
ரூ.3500 கோடி போதை பொருள் கடத்தலில் தி.மு.க. துணையோடுதான் ஈடுபட்டுள்ளார்கள். எனவே மத்திய அரசு தீவிர விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும். சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
- வெள்ளி கிராமுக்கு 80 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கும் பார் வெள்ளி ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றமும் இறக்கமும் காணப்பட்டு வந்தது. நேற்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில் இன்று ஜெட் வேகத்தில் சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.
தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5,940-க்கும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.47,520-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 80 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கும் பார் வெள்ளி ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.800 உயர்ந்துள்ளதால் தங்கம் வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






