என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பள்ளப்பட்டி பகுதியில் வந்தபோது திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
    • 6 பேரின் நிலைமை மோசமாக இருந்ததால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மேலூர்:

    நெல்லை மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்த 42 பெண்கள் உள்பட 50 பேர் தனியார் பஸ்சில் இன்று காலை மேல் மருவத்தூர் கோவிலுக்கு புறப்பட்டனர். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி 4 வழிச்சாலையில் காலை 10 மணியளவில் பஸ் வந்து கொண்டிருந்தது. அங்குள்ள பள்ளப்பட்டி பகுதியில் வந்தபோது திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் ரோட்டோர பள்ளத்தில் பஸ் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. அப்போது பஸ்சுக்குள் இருந்த பயணிகள் கூக்குரலிட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் பெண்கள் உள்பட 26 பேர் படுகாயமடைந்தனர்.

    இவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 6 பேரின் நிலைமை மோசமாக இருந்ததால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த விபத்து தொடர்பாக கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோபா, ஏட்டு தெய்வேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நியாயமான முறையில் தரமான சேலை நெய்யும் பல லட்சம் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
    • ஆன்லைன் மூலம் நடக்கும் விற்பனைகளுக்கு வரைமுறை ஏற்படுத்திடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலம் மாவட்டம், இடங்கண சாலை, தாரமங்கலம், மகுடஞ்சாவடி, நகரம். ஒன்றியம் சுற்றுவட்டார பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் பல லட்சம் பேர் வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர். தரமற்ற சூரத் சேலைகள் விற்பனையினாலும், வெளி மாநிலங்களில் இருந்து கள்ளச் சந்தை மூலம் சேலைகள் விற்பனைக்கு வந்ததாலும், எந்த ஒழுங்குமுறையும் இல்லாமல் ஆன்லைனில் சேலை விற்பனை செய்வதாலும், நியாயமான முறையில் தரமான சேலை நெய்யும் பல லட்சம் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு தரமற்ற சூரத் சேலைகள் விற்பனையாவதை தடுத்து, கள்ள சந்தைகள் மூலம் விற்பனை செய்வதை தடுத்திடவும், ஆன்லைன் மூலம் நடக்கும் விற்பனைகளுக்கு வரைமுறை ஏற்படுத்திடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இப்பகுதியில் சேலை நெசவு விசைத்தறி தொழிலாளர்களுக்கு விரைவாக சங்கம் அமைத்துக் கொடுத்து. சங்கங்கள் மூலம் சேலைகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்து, தரமான சேலைகளை வாங்குவதற்கு பொது மக்களிடையே விழிப்புணர்வு செய்து, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட விசைத்தறி தொழிலாளர்களுக்கு தே.மு.தி.க.வின் சார்பாக ஆதரவு குரல் என்றைக்கும் இருக்கும். அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் உடனடியாக அரசு கவனம் செலுத்தி அவர்களுடைய உழைப்பில் உருவாகும் அந்த சேலை, வேட்டி போன்ற துணிகளுக்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு துணை நிற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை பசு மாடு கடித்தது.
    • உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் அந்த பசு மாட்டை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி அடுத்த திகனாரை கிராமத்தை சேர்ந்தவர் தாயப்பா (61) விவசாயி. இவர் 5 பசு மாடுகள் வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் அவர் வழக்கம் போல் மேய்ச்சலுக்கு மாடுகளை விட்டிருந்தார். தொடர்ந்து அங்கு உள்ள மானாவாரி நிலத்தில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் ஒரு நாட்டு வெடிகுண்டு கிடந்தது. கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை ஒரு பசுமாடு கடித்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் அந்த பசு மாட்டின் வாய்ப்பகுதி முழுவதும் சிதைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அந்த பசு மாடு தாயப்பா வீட்டிக்கு தானாக நடந்து வந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் அந்த பசு மாட்டை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த பசு மாட்டுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மாடு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, சிலர் காட்டுபன்றிகளை வேட்டையாட நாட்டுவெடி குண்டு (அவுட்காய்) வைத்து வேட்டையாடி வருகின்றனர். அந்த நாட்டு வெடிகுண்டுகளை மாடுகள் உள்பட கால்நடைகள் தெரியாமல் கடித்து விடுகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே நாட்டு வெடிகுண்டு வைக்கும் நபர்கள் மீது வனத்துறை மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மதுபானக் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
    • பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இயங்கிவரும் மதுபானக் கடைகள்.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்த 28 வது வார்டில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டும் ஆறு மதுபானக் கடைகள் இயங்கி வருவதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் நாள் தோறும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    மதுக்கடைகள் திறக்கப்படும் நேரம் தொடங்கி வார்டு முழுவதுமே மது குடிப்பவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால், வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுவதாகவும், இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் மதுபானக் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதியில் வசிக்கும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இயங்கிவரும் மதுபானக் கடைகளைக் கணக்கெடுத்து அவற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுப்பதோடு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர் காலத்தை சிதைக்கும் போதைப் பொருட்களின் தாராள நடமாட்டத்தை இனியாவது தீவிர சோதனையின் மூலம் கண்டறிந்து அவற்றை முற்றிலுமாக ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளு மாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எல்லா வங்கிகளிலும் நுழைவு நிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வுகள் நடைமுறையில் உள்ளன.
    • இத்தகைய மாற்றம் தமிழ்வழிக் கல்வி மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் எளிய மாணவர்களுக்கு போட்டியில் சம வாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கும்.

    சென்னை:

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை பாராளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில்,

    இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி அதிகாரிகள் நியமனங்களுக்கான முறைமையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் வெளிச்சந்தையில் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு பேரதிர்ச்சி தருவதாக உள்ளது.

    இவ்வாண்டு வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் முன் பணி அனுபவம் கட்டாயத் தகுதியாக இணைக்கப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளில் 2 ஆண்டுகள், தனியார் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் 3 ஆண்டுகள் பணி ஆற்றி இருந்தால் மட்டுமே விண்ணப்பம் செய்ய இயலும் என்பதே அது. கடந்த கால பணி நியமனங்களில் இந்த நிபந்தனை கிடையாது. இது வேலைக்காக வெளியே காத்திருக்கும் புதிய தேர்வர்களுக்கு, முன் பணி அனுபவம் இல்லாத கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு நியமனத் தேர்வில் பங்கேற்க இயலாமல் வெளியே நிறுத்துவது ஆகும்.

    தேர்வு முறைமையில் எழுத்துத் தேர்வு நீக்கப்பட்டுள்ளது. குழு விவாதம், நேர்காணல் வாயிலாகத் தேர்வு நடைபெறும் என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எல்லா வங்கிகளிலும் நுழைவு நிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வுகள் நடைமுறையில் உள்ளன. இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியின் உள் பதவி உயர்வுகளுக்கே எழுத்துத் தேர்வுகள் உள்ள நிலையில் புதிய நியமனங்களுக்கு எழுத்துத் தேர்வு இல்லை என்ற முரண்பாடு வியப்பைத் தருகிறது.

    இத்தகைய மாற்றம் தமிழ்வழிக் கல்வி மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் எளிய மாணவர்களுக்கு போட்டியில் சம வாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கும். மேலும் எழுத்துத் தேர்வை நீக்கி குழு விவாதம், நேர்காணல் மட்டுமான முறைமை வெளிப்படைத் தன்மை அற்றதாகவே அமையும். இது தனி நபர் விருப்பு வெறுப்புகள், வெளித் தலையீடுகளுக்கு வழி வகுப்பதுமாகும்.

    ஆகவே புதிய முறைமையை கைவிட்டு, முன் அனுபவ நிபந்தனையை நீக்கி, எழுத்துத் தேர்வுடன் கூடிய முந்தைய நியமன முறைமைக்குத் திரும்ப தலையீடுகளை செய்யுமாறு கோரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியின் தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவை பாராளுமன்ற தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    • ஒரு இடத்தை கமல்ஹாசனுக்கு வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் ஒரு இடம் ஒதுக்கப்பட உள்ளது. கோவை பாராளுமன்ற தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த சின்னத்தி லேயே கமல்ஹாசன் போட்டியிட முடிவு செய்திருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கூறி வருகிறார்கள். அதுபோன்று போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே கட்சியின் தனித்தன்மையை பாதுகாக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒரு இடத்தை கமல்ஹாசனுக்கு வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனால் காங்கிரஸ் கட்சியின் சின்னமான கை சின்னத்திலேயே கமல்ஹாசனை போட்டியிட வலியுறுத்தி நிர்பந்தம் செய்வது என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவதை விட கை சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி பெறுவது எளிதாக இருக்கும் என்று கமல்ஹாசனிடம் காங்கிரஸ் கட்சியினர் அறிவுறுத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனை ஏற்று கமல்ஹாசன் கை சின்னத்தில் களம் இறங்குவரா? இல்லை மக்கள் நீதி மய்யம் கட்சி சின்னமான டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடு வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    • திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது.
    • வெகு விரைவில் சுமுகமாக தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் தொகுதி பங்கீடு இறுதியாகும்.

    * தொகுதி பங்கீடு குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை பேசிக்கொண்டிருக்கிறது. தொகுதி பங்கீடு விவகாரத்தில் இலக்கங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம்.

    * தொகுதி பங்கீட்டில் வேறுபாடு இருந்தாலும் அனைவரும் இந்தியா கூட்டணியில் தான் இருப்போம்.

    * வெகு விரைவில் சுமுகமாக தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம். 40 தொகுதியையும் எங்களுடையதாக கருதி, தேர்தல் பணியாற்றுவோம் என்று கூறினார்.

    • கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜாபர். இவர் அந்த பகுதியில் உணவு கடை வைத்து நடத்தி வருகின்றார். நேற்று இரவு 12 மணியளவில் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3000 பணம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. அதன் அருகே உள்ள மற்றொரு குளிர்பான கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று மர்ம நபர்கள் பணம் இல்லாததால் திரும்பி சென்று விட்டனர்.

    மேலும் குளிர்பானம் கடை அருகே ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றவர் இன்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப் பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.26 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு போய் இருந்தது. இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 3 கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருப்பது அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • தேசப்பற்று உள்ள கட்சிகள் பா.ஜ.க. கூட்டணியில் இணையவேண்டும்.
    • நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு தொடர மாநில கட்சிகள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக- தமிழ் மாநில காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசன் இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜி.கே.வாசனுடன், பொன்.ராதா கிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை உறுதி செய்தார். முதல் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்தது. தொகுதி எண்ணிக்கை குறித்து பேசியுள்ளோம். தேசப்பற்று உள்ள கட்சிகள் பா.ஜ.க. கூட்டணியில் இணையவேண்டும். நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு தொடர மாநில கட்சிகள் சிந்தித்து செயல்பட வேண்டும். முரண்பாடுகளின் மொத்த வடிவம் இந்தியா கூட்டணி என்றார்.

    முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், தொகுதி பங்கீடு குறித்து ஜி.கே.வாசன் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். பா.ஜ.க, த.மா.கா இடையே சுமூகமாக பேச்சுவார்த்தை தொடர்கிறது. வரும் 4-ம் தேதிக்கு பிறகு 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினார்.

    • கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அதிரடியாக ஐஸ்கிரீம் விலையை உயர்த்தி இருக்கிறது.
    • ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்பட்டதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஐஸ்கிரீம் உள்பட பால் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    கோடை காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் பால் பொருட்களுக்கு வழக்கத்தை விட தேவை அதிகரிக்கும்.

    தற்போது கோடை காலம் உச்சத்தை எட்ட தொடங்கி இருக்கிறது. அடுத்த வாரம் முதல் வெயில் அளவு கடுமையாக உயரும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது. இதனால் ஐஸ்கிரீம் விற்பனை கணிசமாக உயர வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அதிரடியாக ஐஸ்கிரீம் விலையை உயர்த்தி இருக்கிறது. இது தொடர்பாக ஐஸ்கிரீம் விற்பனையாளர்களுக்கு கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் நேற்று முன்தினம் கடிதம் அனுப்பி உள்ளார்.

    அந்த கடிதத்தில் 4 வகையான ஐஸ்கிரீம் விலையை உயர்த்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 65 எம்.எல். எடை கொண்ட சாக்கோ பார் ஐஸ்கிரீம் விலை ரூ.20-ல் இருந்து ரூ.25ஆக அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதுபோல 125 எம்.எல். எடை கொண்ட பால் வெண்ணிலா ஐஸ்கிரீம் ரூ.28-ல் இருந்து ரூ.30 ஆக உயர்ந்துள்ளது.

    100 எம்.எல். எடை கொண்ட கிளாஸ்சிக் கோன் வெண்ணிலா ஐஸ்கிரீம் ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அது போல கிளாஸ்சிக் கோன் சாக்லெட் ஐஸ்கிரீமும் ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆக உயர்ந்துள்ளது.

    ஐஸ்கிரீம் விலை உயர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அமலுக்கு வருவதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும் என்று தெரிகிறது.

    ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்பட்டதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பால் உபபொருட்களின் விற்பனை விலையை நேரடியாகவும், பால் விற்பனை விலையை மறைமுகமாகவும் கடந்தாண்டு வரலாறு காணாத வகையில் உயர்த்திய ஆவின் நிர்வாகம் நடப்பாண்டில் நாளை (3-ந் தேதி) முதல் ஐஸ்கிரீம் விற்பனை விலையை உயர்த்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

    ஏனெனில் தனியார் பால் நிறுவனங்கள் பலவும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் விற்பனை விலையை குறைப்பது, பல்வேறு சலுகைகள் வழங்குவது என செயல்பட்டு வரும் சூழலில் ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடுகள் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதைப் போலிருக்கிறது.

    மேலும் தமிழ்நாடு முழுவதும் பால் கொள்முதலில் கவனம் செலுத்தாமல், வடமாநிலங்களில் இருந்து பால் பவுடர், வெண்ணெய் கொள்முதல் செய்து அதன் மூலம் பணம் ஈட்டி, தங்களின் கஜானாவை நிரப்பிக் கொள்வதில் அக்கறை காட்டும் ஊழல் அதிகாரிகளால் ஆவின் நிர்வாகம் சிதிலமடைந்து வரும் நிலையில் இதுபோன்ற விற்பனை விலை உயர்வு அறிவிப்புகள் ஆவினுக்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும் என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் எச்சரிக்கையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

    அத்துடன் பால் வளத்துறை அமைச்சரும், ஆவின் நிர்வாக இயக்குனரும் அதிகாரிகள் மட்டத்தில் குளிர்சாதன அறைகளில் அமர்ந்து கொண்டு ஆலோசனை கூட்டம் என்கிற பெயரில் மக்களின் வரிப்பணத்தை, பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் உழைப்பால் வரும் வருமானத்தை வீணடிப்பதை நிறுத்திவிட்டு களத்தில் இறங்கி ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் நடப்பாண்டின் கோடை காலத்தில் ஆவின் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
    • தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளனர்.

    சென்னை:

    பெங்களூருவில் ராமேசுவரம் கபே ஓட்டலில் நேற்று நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதை தொடர்ந்து தென் மாநிலங்களில் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    தமிழகத்திலும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்திலும் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    குறிப்பாக சென்னை மாநகரில் நேற்று மாலையில் இருந்து இரவு முழுவதும் விடிய விடிய வாகன சோதனை தீவிரமாக நடத்தப்பட்டது.

    லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சந்தேகத்திற்கிடமாக யாராவது தங்கி இருக்கிறார்களா? சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக யாரேனும் ஊடுருவி இருக்கிறார்களா? என்பது பற்றி கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை மாநகர பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கியுள்ள வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாரேனும் சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா? என்பதை கண்டறிய அந்தந்த பகுதிகளை சேர்ந்த போலீசார் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் எழும்பூர், திருவல்லிக்கேணி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையையொட்டிய பகுதிகளில் உள்ள லாட்ஜூகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது அங்கு தங்கி இருந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெங்களூருவில் நடந்துள்ள குண்டு வெடிப்பு சம்பவத்தை போன்று தென் மாநிலங்களில் வேறு எங்கும் நடந்துவிடக்கூடாது என்பதில் மாநில போலீசார் முழுமையான கவனத்தோடு செயல்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இதன்படி தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக சட்டம்-ஒழுங்கு போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • பராமரிப்பு பணிகள் காரணமாக 4-வது வாரமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
    • சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    அதேபோல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    இதனால் பொதுமக்களின் வசதிக்காக நாளை காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அனைத்து பயணிகளும் தங்களின் பயணங்களை அதற்கேற்ப திட்டமிடுமாறு மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    ×