என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அதிகாரங்களை குவித்துக்கொண்டு ஒரு சர்வாதிகாரி போல செயல்பட்டு வருகிறார்.
    • மோடி ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா கூட்டணி ஒளிரப் போகிறது என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்தது முதற்கொண்டு மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அதிகாரக்குவியல் படிப்படியாக நடந்து வருகின்றன. ஒற்றை ஆட்சி என்ற குறிக்கோளுடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற இலக்கை அடைவதன் மூலம் முழுமையாக ஒற்றை ஆட்சியை உறுதி செய்து மாநிலங்களை நகராட்சிகளை போல நடத்த முற்படுகிறார். ஒன்றிய அரசின் நிதி பகிர்வில் அப்பட்டமான பாரபட்சம் காட்டப்பட்டு தென் மாநிலங்கள் கடுமையாக வஞ்சிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் கடந்த ஒன்பதரை ஆண்டு காலமாக மக்களை ஏமாற்றி, திசை திருப்பி அவதூறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி கூறி வருகிறார்.

    ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அதிகாரங்களை குவித்துக்கொண்டு ஒரு சர்வாதிகாரி போல செயல்பட்டு வருகிறார். இது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இதற்கு எதிராக மக்களை அணிதிரட்டவும், கூட்டணி அமைத்து 2024-ல் மோடி ஆட்சியை அகற்ற இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது.

    நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தலைவர் ராகுல்காந்தி அனுப்பிய வாழ்த்து செய்திக்கு நன்றி தெரிவித்து வெளியிடப்பட்ட செய்தியில் 'கூட்டாட்சி கருத்தியலை உயர்த்தி பிடிக்க ஒன்று சேர்ந்து உழைப்போம்" என்று கூறியதன் மூலம் இந்தியா கூட்டணி மேலும் வலிமை பெற்று வருகிறது. இதன்மூலம் மோடி ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா கூட்டணி ஒளிரப் போகிறது என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்திற்கு அதிக திட்டங்களை கொண்டு வந்ததாக பொய் பிரசாரம் செய்து வருகிறார்.
    • இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.

    மதுரை:

    புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரு பிரதமர் எந்த அளவுக்கு பொய் செல்ல வேண்டுமோ அந்த அளவையும் மீறி பிரதமர் மோடி பொய் சொல்லி வருகிறார். தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆளும் மாநிலங்களை பிரதமர் புறக்கணித்து வருகிறார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சென்னை மற்றும் தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்து மக்கள் பாதிக்கப்பட்டனர். அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒன்றாக சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.

    ஆனால் பிரதமர் மோடி தலைமையில் உள்ள மத்திய அரசு தமிழக மக்களை புறக்கணித்ததுடன் இதுவரை நிவாரணத்துக்கான எந்த உதவியைுயம் செய்யவில்லை. தமிழகத்திற்கு அதிக திட்டங்களை கொண்டு வந்ததாக பொய் பிரசாரம் செய்து வருகிறார். அவ்வாறு செய்திருந்தால் அதை பட்டியலிட்டு கூற வேண்டும். ராமேசுவரம், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற பிரதமர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களை சந்திக்கவில்லை.

    10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலின்போது கூறிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. வெளிநாட்டு வங்கியில் இருந்து பணத்தை கொண்டு வந்து ஒவ்வொரு கணக்கிலும் 15 ஆயிரம் ரூபாய் செலுத்துவோம் என்று கூறினார். அதை நிறைவேற்றவில்லை. வேலையில்லா திட்டாட்டம், வறுமையால் மக்கள் அவதிப்படுகின்றனர். சிறு-குறு தொழில்கள் மூடப்பட்டுவிட்டன. மின் கட்டணம் உயர்வு, எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு என மக்கள் அவதிப்படுகின்றனர்.


    மாநில கட்சிகள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை குறை சொல்வதை மட்டுமே பிரதமர் செய்து வருகிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு எந்த வேலையும் நடக்கவில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதன் பிறகும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

    தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. தற்போது புதுச்சேரியில் சாராய ஆறு தான் ஓடிக்கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாத நிலை உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் செய்த சாதனைகளை பா.ஜனதா அரசு செய்ததாக மோடி கூறி வருகிறார்.

    இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றிபெறும். அப்போது பா.ஜனதா வீட்டுக்கு அனுப்பப்படும். பா.ஜனதாவிடம் கூட்டணி சேர ஒரு கட்சிக்கூட முன்வரவில்லை. இந்தியா கூட்டணியில் 28 கட்சிகள் உள்ளன. அமெரிக்காவில் கூட இன்றும் வாக்குச்சீட்டு முறையே உள்ளது. அதே போல் இந்தியாவிலும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மீண்டும் சிறப்பு முகாம் எனும் கொடூரம் அவர்களது வாழ்க்கையில் அரங்கேறும் என்று சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
    • இன்றைய நாள்வரை அவர்கள் விரும்பும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு எந்தவித முடிவும் எடுத்ததாகத் தெரியவில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக சிறையில் 32 ஆண்டு கால நீண்ட சிறை வாசம் அனுபவித்த இலங்கைத் தமிழர்கள் ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், முருகன், சாந்தன் ஆகியோர் 11.11.2022 அன்று சுப்ரீம் கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை குடிமக்கள் என்பதால் அயல் நாட்டிற்கு அனுப்பும்வரை நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

    இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் உடல்நலக் குறைவால் மரணமடைந்து உள்ளது, தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    32 ஆண்டுகள் சிறையில் வாழ்க்கையை இழந்தவர்கள், விடுதலைக் காற்றை சுவாசிக்கப் போகிறோம் என்று பெருமூச்சு விடும்பொழுது, மீண்டும் சிறப்பு முகாம் எனும் கொடூரம் அவர்களது வாழ்க்கையில் அரங்கேறும் என்று சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

    முகாமில் அடைக்கப்படுவதற்கு முன்பே கூட, எந்த நாட்டிற்கு செல்லப்போகிறீர்கள் என்று அவர்களுடைய விருப்பத்தை அரசு அதிகாரிகள் கேட்டபொழுது, அவர்கள் இலங்கை சென்றால் ஆபத்து மற்றும் தங்களுக்கு அங்கு வாழ்வாதாரம் எதுவும் இல்லை என்றும், அதனால் வெளிநாடுகளில் வாழும் தங்களுடைய குடும்பத்தினருடன் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்திருந்தனர். ஆனால், இன்றைய நாள்வரை அவர்கள் விரும்பும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு எந்தவித முடிவும் எடுத்ததாகத் தெரியவில்லை.

    இனியாவது, மீதமுள்ள மூன்று பேரின் கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலித்து, கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு தவறான சிகிச்சையில் ஒரு கண்ணில் பார்வையை இழந்த ஜெயகுமார் மற்றும் உடல்நலக் குறைவால் அவதியுறும் ராபர்ட் பயாஸ் மற்றும் முருகன் ஆகியோரது கடைசி காலத்தில், எஞ்சிய வாழ்நாளை அவர்களுடைய குடும்பத்தினருடன் வசிப்பதற்கு, திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் இருந்து அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய வெளியுறவுத் துறையையும், தி.மு.க. அரசின் முதலமைச்சரையும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • புஷ்பராணி அந்த எட்டே கால் சென்ட்க்கு உரிய தொகையை திரும்பக் கேட்டார்.
    • புஷ்பராணி சமயபுரம் போலீசில் புகார் செய்தார்.

    திருச்சி:

    திருச்சி மணச்சநல்லூர் மேட்டு இருங்களூர் யாகூப் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி புஷ்பராணி (வயது 48).

    பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மனைவி சந்திரா. இவர்கள் 2 பேரும் உறவினர்கள்.

    இந்த நிலையில் சந்திரா இருங்கலூரில் தனக்கு சொந்தமாக இருக்கும் 21 சென்ட்நிலத்தை விற்பதாக அவரிடம் கூறியுள்ளார்.

    அதைத் தொடர்ந்து புஷ்பராணி அந்த நிலத்தை வாங்க முடிவு செய்து ரூ. 18 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை கொடுத்தார்.

    பின்னர் புஷ்பராணி அந்த நிலத்துக்குரிய வில்லங்க சான்றை பார்த்தபோது 21 சென்ட் நிலத்தில் எட்டே கால் சென்ற நிலம் ஸ்ரீதேவி மங்கலம் பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவரது பெயரில் இருப்பது தெரியவந்தது. ஆனால் போலி ஆவணங்கள் தயாரித்து சந்திரா அவரை ஏமாற்றியது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து புஷ்பராணி அந்த எட்டே கால் சென்ட்க்கு உரிய தொகையை திரும்பக் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து புஷ்பராணி சமயபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சந்திரா மற்றும் அவரது உறவினர்கள் தர்மராஜ், மகன் பிரபாகர் மரியராஜ், மனைவி மார்க்சி மற்றும் மார்க்கெட் புஷ்பலதா, டெய்சி ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • ராமநாதபுரம், கோவை, கன்னியாகுமரி ஆகிய 3 இடங்களுக்கு பிரதமர் மோடி சென்று பிரசாரம் செய்வது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
    • பிரதமர் மோடியின் தென்னிந்திய பயணத்துக்கு ஏற்ப தமிழக சுற்றுப்பயணம் மற்றும் பிரசார கூட்டங்கள் இறுதி செய்யப்படும் என்று தெரிய வந்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வர தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே அவர் 2 தடவை தமிழகம் வந்து சென்றார்.

    அடுத்து 3-வது முறையாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வர இருக்கிறார். நாளை பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சியிலும், கட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தேர்தல் தேதி அட்டவணை வெளியிட்ட பிறகு ஒரு தடவை பிரதமர் மோடி தமிழகம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா மாவட்டங்களுக்கு அவர் வந்து செல்லக்கூடும்.

    வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு அடுத்தடுத்து பிரதமர் மோடி தமிழகம் வருவார் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் மொத்தம் 8 அல்லது 9 கூட்டங்களில் பிரதமர் மோடியை பேச வைப்பதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    ராமநாதபுரம், கோவை, கன்னியாகுமரி ஆகிய 3 இடங்களுக்கு பிரதமர் மோடி சென்று பிரசாரம் செய்வது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் 6 நகரங்களை தேர்வு செய்யும் பணியை தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மேற்கொள்ள உள்ளனர்.

    பிரதமர் மோடியின் தென்னிந்திய பயணத்துக்கு ஏற்ப தமிழக சுற்றுப்பயணம் மற்றும் பிரசார கூட்டங்கள் இறுதி செய்யப்படும் என்று தெரிய வந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
    • வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (மார்ச் 3) காலை 10 மணி முதல் மாலை 3.30 வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை இயங்கும் புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதனால், அந்த வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    சென்னை பிராட்வே-யில் இருந்து அண்ணாசாலை வழியாக தாம்பரத்திற்கு செல்லும் 18A பேருந்தின் எண்ணிக்கை 60-ஆகவும்,

    சென்னை பிராட்வே-யில் இருந்து தி.நகர், எழும்பூர் வழியாக தாம்பரத்திற்கு செல்லும் 18G பேருந்தின் எண்ணிக்கை 20-ஆகவும்

    கிண்டியில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு செல்லும் 18ACT பேருந்தின் எண்ணிக்கை 10 ஆகவும்,

    கொருக்குப்பேட்டையில் இருந்து தாம்பரத்திற்கு செல்லும் B18 பேருந்தின் எண்ணிக்கை 30 ஆகவும்,

    சென்னை பிராட்வே-யில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் E18 பேருந்தின் எண்ணிக்கை 20 ஆகவும்,

    தியாகராயநகரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் G18 பேருந்தின் எண்ணிக்கை 10 ஆகவும் மொத்தம் 150 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    • பள்ளப்பட்டி பகுதியில் வந்தபோது திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
    • 6 பேரின் நிலைமை மோசமாக இருந்ததால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மேலூர்:

    நெல்லை மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்த 42 பெண்கள் உள்பட 50 பேர் தனியார் பஸ்சில் இன்று காலை மேல் மருவத்தூர் கோவிலுக்கு புறப்பட்டனர். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி 4 வழிச்சாலையில் காலை 10 மணியளவில் பஸ் வந்து கொண்டிருந்தது. அங்குள்ள பள்ளப்பட்டி பகுதியில் வந்தபோது திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் ரோட்டோர பள்ளத்தில் பஸ் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. அப்போது பஸ்சுக்குள் இருந்த பயணிகள் கூக்குரலிட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் பெண்கள் உள்பட 26 பேர் படுகாயமடைந்தனர்.

    இவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 6 பேரின் நிலைமை மோசமாக இருந்ததால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த விபத்து தொடர்பாக கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோபா, ஏட்டு தெய்வேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நியாயமான முறையில் தரமான சேலை நெய்யும் பல லட்சம் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
    • ஆன்லைன் மூலம் நடக்கும் விற்பனைகளுக்கு வரைமுறை ஏற்படுத்திடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலம் மாவட்டம், இடங்கண சாலை, தாரமங்கலம், மகுடஞ்சாவடி, நகரம். ஒன்றியம் சுற்றுவட்டார பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் பல லட்சம் பேர் வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர். தரமற்ற சூரத் சேலைகள் விற்பனையினாலும், வெளி மாநிலங்களில் இருந்து கள்ளச் சந்தை மூலம் சேலைகள் விற்பனைக்கு வந்ததாலும், எந்த ஒழுங்குமுறையும் இல்லாமல் ஆன்லைனில் சேலை விற்பனை செய்வதாலும், நியாயமான முறையில் தரமான சேலை நெய்யும் பல லட்சம் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு தரமற்ற சூரத் சேலைகள் விற்பனையாவதை தடுத்து, கள்ள சந்தைகள் மூலம் விற்பனை செய்வதை தடுத்திடவும், ஆன்லைன் மூலம் நடக்கும் விற்பனைகளுக்கு வரைமுறை ஏற்படுத்திடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இப்பகுதியில் சேலை நெசவு விசைத்தறி தொழிலாளர்களுக்கு விரைவாக சங்கம் அமைத்துக் கொடுத்து. சங்கங்கள் மூலம் சேலைகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்து, தரமான சேலைகளை வாங்குவதற்கு பொது மக்களிடையே விழிப்புணர்வு செய்து, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட விசைத்தறி தொழிலாளர்களுக்கு தே.மு.தி.க.வின் சார்பாக ஆதரவு குரல் என்றைக்கும் இருக்கும். அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் உடனடியாக அரசு கவனம் செலுத்தி அவர்களுடைய உழைப்பில் உருவாகும் அந்த சேலை, வேட்டி போன்ற துணிகளுக்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு துணை நிற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை பசு மாடு கடித்தது.
    • உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் அந்த பசு மாட்டை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி அடுத்த திகனாரை கிராமத்தை சேர்ந்தவர் தாயப்பா (61) விவசாயி. இவர் 5 பசு மாடுகள் வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் அவர் வழக்கம் போல் மேய்ச்சலுக்கு மாடுகளை விட்டிருந்தார். தொடர்ந்து அங்கு உள்ள மானாவாரி நிலத்தில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் ஒரு நாட்டு வெடிகுண்டு கிடந்தது. கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை ஒரு பசுமாடு கடித்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் அந்த பசு மாட்டின் வாய்ப்பகுதி முழுவதும் சிதைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அந்த பசு மாடு தாயப்பா வீட்டிக்கு தானாக நடந்து வந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் அந்த பசு மாட்டை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த பசு மாட்டுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மாடு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, சிலர் காட்டுபன்றிகளை வேட்டையாட நாட்டுவெடி குண்டு (அவுட்காய்) வைத்து வேட்டையாடி வருகின்றனர். அந்த நாட்டு வெடிகுண்டுகளை மாடுகள் உள்பட கால்நடைகள் தெரியாமல் கடித்து விடுகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே நாட்டு வெடிகுண்டு வைக்கும் நபர்கள் மீது வனத்துறை மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மதுபானக் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
    • பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இயங்கிவரும் மதுபானக் கடைகள்.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்த 28 வது வார்டில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டும் ஆறு மதுபானக் கடைகள் இயங்கி வருவதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் நாள் தோறும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    மதுக்கடைகள் திறக்கப்படும் நேரம் தொடங்கி வார்டு முழுவதுமே மது குடிப்பவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால், வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுவதாகவும், இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் மதுபானக் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதியில் வசிக்கும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இயங்கிவரும் மதுபானக் கடைகளைக் கணக்கெடுத்து அவற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுப்பதோடு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர் காலத்தை சிதைக்கும் போதைப் பொருட்களின் தாராள நடமாட்டத்தை இனியாவது தீவிர சோதனையின் மூலம் கண்டறிந்து அவற்றை முற்றிலுமாக ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளு மாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எல்லா வங்கிகளிலும் நுழைவு நிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வுகள் நடைமுறையில் உள்ளன.
    • இத்தகைய மாற்றம் தமிழ்வழிக் கல்வி மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் எளிய மாணவர்களுக்கு போட்டியில் சம வாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கும்.

    சென்னை:

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை பாராளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில்,

    இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி அதிகாரிகள் நியமனங்களுக்கான முறைமையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் வெளிச்சந்தையில் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு பேரதிர்ச்சி தருவதாக உள்ளது.

    இவ்வாண்டு வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் முன் பணி அனுபவம் கட்டாயத் தகுதியாக இணைக்கப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளில் 2 ஆண்டுகள், தனியார் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் 3 ஆண்டுகள் பணி ஆற்றி இருந்தால் மட்டுமே விண்ணப்பம் செய்ய இயலும் என்பதே அது. கடந்த கால பணி நியமனங்களில் இந்த நிபந்தனை கிடையாது. இது வேலைக்காக வெளியே காத்திருக்கும் புதிய தேர்வர்களுக்கு, முன் பணி அனுபவம் இல்லாத கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு நியமனத் தேர்வில் பங்கேற்க இயலாமல் வெளியே நிறுத்துவது ஆகும்.

    தேர்வு முறைமையில் எழுத்துத் தேர்வு நீக்கப்பட்டுள்ளது. குழு விவாதம், நேர்காணல் வாயிலாகத் தேர்வு நடைபெறும் என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எல்லா வங்கிகளிலும் நுழைவு நிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வுகள் நடைமுறையில் உள்ளன. இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியின் உள் பதவி உயர்வுகளுக்கே எழுத்துத் தேர்வுகள் உள்ள நிலையில் புதிய நியமனங்களுக்கு எழுத்துத் தேர்வு இல்லை என்ற முரண்பாடு வியப்பைத் தருகிறது.

    இத்தகைய மாற்றம் தமிழ்வழிக் கல்வி மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் எளிய மாணவர்களுக்கு போட்டியில் சம வாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கும். மேலும் எழுத்துத் தேர்வை நீக்கி குழு விவாதம், நேர்காணல் மட்டுமான முறைமை வெளிப்படைத் தன்மை அற்றதாகவே அமையும். இது தனி நபர் விருப்பு வெறுப்புகள், வெளித் தலையீடுகளுக்கு வழி வகுப்பதுமாகும்.

    ஆகவே புதிய முறைமையை கைவிட்டு, முன் அனுபவ நிபந்தனையை நீக்கி, எழுத்துத் தேர்வுடன் கூடிய முந்தைய நியமன முறைமைக்குத் திரும்ப தலையீடுகளை செய்யுமாறு கோரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியின் தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவை பாராளுமன்ற தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    • ஒரு இடத்தை கமல்ஹாசனுக்கு வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் ஒரு இடம் ஒதுக்கப்பட உள்ளது. கோவை பாராளுமன்ற தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த சின்னத்தி லேயே கமல்ஹாசன் போட்டியிட முடிவு செய்திருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கூறி வருகிறார்கள். அதுபோன்று போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே கட்சியின் தனித்தன்மையை பாதுகாக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒரு இடத்தை கமல்ஹாசனுக்கு வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனால் காங்கிரஸ் கட்சியின் சின்னமான கை சின்னத்திலேயே கமல்ஹாசனை போட்டியிட வலியுறுத்தி நிர்பந்தம் செய்வது என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவதை விட கை சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி பெறுவது எளிதாக இருக்கும் என்று கமல்ஹாசனிடம் காங்கிரஸ் கட்சியினர் அறிவுறுத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனை ஏற்று கமல்ஹாசன் கை சின்னத்தில் களம் இறங்குவரா? இல்லை மக்கள் நீதி மய்யம் கட்சி சின்னமான டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடு வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ×