search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தை பிரதமர் மோடி தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்- நாராயணசாமி குற்றச்சாட்டு
    X

    தமிழகத்தை பிரதமர் மோடி தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்- நாராயணசாமி குற்றச்சாட்டு

    • தமிழகத்திற்கு அதிக திட்டங்களை கொண்டு வந்ததாக பொய் பிரசாரம் செய்து வருகிறார்.
    • இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.

    மதுரை:

    புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரு பிரதமர் எந்த அளவுக்கு பொய் செல்ல வேண்டுமோ அந்த அளவையும் மீறி பிரதமர் மோடி பொய் சொல்லி வருகிறார். தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆளும் மாநிலங்களை பிரதமர் புறக்கணித்து வருகிறார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சென்னை மற்றும் தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்து மக்கள் பாதிக்கப்பட்டனர். அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒன்றாக சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.

    ஆனால் பிரதமர் மோடி தலைமையில் உள்ள மத்திய அரசு தமிழக மக்களை புறக்கணித்ததுடன் இதுவரை நிவாரணத்துக்கான எந்த உதவியைுயம் செய்யவில்லை. தமிழகத்திற்கு அதிக திட்டங்களை கொண்டு வந்ததாக பொய் பிரசாரம் செய்து வருகிறார். அவ்வாறு செய்திருந்தால் அதை பட்டியலிட்டு கூற வேண்டும். ராமேசுவரம், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற பிரதமர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களை சந்திக்கவில்லை.

    10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலின்போது கூறிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. வெளிநாட்டு வங்கியில் இருந்து பணத்தை கொண்டு வந்து ஒவ்வொரு கணக்கிலும் 15 ஆயிரம் ரூபாய் செலுத்துவோம் என்று கூறினார். அதை நிறைவேற்றவில்லை. வேலையில்லா திட்டாட்டம், வறுமையால் மக்கள் அவதிப்படுகின்றனர். சிறு-குறு தொழில்கள் மூடப்பட்டுவிட்டன. மின் கட்டணம் உயர்வு, எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு என மக்கள் அவதிப்படுகின்றனர்.


    மாநில கட்சிகள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை குறை சொல்வதை மட்டுமே பிரதமர் செய்து வருகிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு எந்த வேலையும் நடக்கவில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதன் பிறகும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

    தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. தற்போது புதுச்சேரியில் சாராய ஆறு தான் ஓடிக்கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாத நிலை உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் செய்த சாதனைகளை பா.ஜனதா அரசு செய்ததாக மோடி கூறி வருகிறார்.

    இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றிபெறும். அப்போது பா.ஜனதா வீட்டுக்கு அனுப்பப்படும். பா.ஜனதாவிடம் கூட்டணி சேர ஒரு கட்சிக்கூட முன்வரவில்லை. இந்தியா கூட்டணியில் 28 கட்சிகள் உள்ளன. அமெரிக்காவில் கூட இன்றும் வாக்குச்சீட்டு முறையே உள்ளது. அதே போல் இந்தியாவிலும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×