search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தேர்தல் அட்டவணை வெளியிட்ட பிறகு முன் தேதியிட்டு எந்த உத்தரவையும் திட்டத்தையும் அதிகாரிகள் வெளியிட கூடாது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தேர்தல் அட்டவணை வெளியிட்ட பிறகு முன் தேதியிட்டு எந்த உத்தரவையும் திட்டத்தையும் அதிகாரிகள் வெளியிட கூடாது

    • இந்திய தோ்தல் ஆணையத்தால் பாராளுமன்ற தோ்தல் குறித்த அறிவிப்பு வெளியானவுடன், தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடும்.
    • கடைசியாக வெளியிடப்பட்ட உத்தரவின் விவரத்தைக் குறிப்பிட்டு அதற்குக் கீழே இந்த கோடு வரைந்திருக்க வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தோ்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில், புதிய உத்தரவுகளை வெளியிட, பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அனைத்துத் துறைகளின் செயலா்களுக்கும் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தோ்தல் ஆணையத்தால் பாராளுமன்ற தோ்தல் குறித்த அறிவிப்பு வெளியானவுடன், தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடும். அதிலிருந்து புதிய திட்டங்கள் அல்லது புதிய உத்தரவுகளை வெளியிடக் கூடாது. இந்த விவகாரத்தில் கடந்த காலங்களில் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதாவது, தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வந்த இரண்டொரு நாட்களுக்குப் பிறகும், முன்தேதியிட்டு சில உத்தரவுகள் வெளியிடப்பட்டதாக புகாா்கள் எழுந்தன. தோ்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே, இந்த உத்தரவுகள் வெளியிடப்பட்டது போன்ற தோற்றத்தை அவை வெளிப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

    எனவே, இதுபோன்ற புகாா்கள், குற்றச்சாட்டுகளை தவிா்க்க வேண்டுமென அனைத்து கூடுதல் தலைமைச் செயலா்கள், முதன்மைச் செயலா்கள், துறைச் செயலா்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

    தோ்தல் தேதி தொடா்பான அறிவிப்பு ஊடகங்களில் வெளியானவுடன், அரசு உத்தரவுகளின் விவரங்களை பதிவிடும் பதிவேட்டில் நீளமாக ஒரு கோடு வரைந்து கொள்ள வேண்டும். அதாவது, கடைசியாக வெளியிடப்பட்ட உத்தரவின் விவரத்தைக் குறிப்பிட்டு அதற்குக் கீழே இந்த கோடு வரைந்திருக்க வேண்டும்.

    இதை நகலெடுத்து இந்தியத் தோ்தல் ஆணையத்தால், தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் இதனைச் செய்ய வேண்டும்.

    மேலும், அந்த நகலை தலைமைத் தோ்தல் அதிகாரியின் அலுவலகத்துக்கு அனுப்பிட வேண்டும். இந்த நடைமுறையால், தேவையற்ற குற்றச்சாட்டுகள் எழுவதும், மற்றவா்கள் புகாா்கள் கூறுவதும் தவிா்க்கப்படும். தோ்தல் தேதி அறிவிக்கப்படும் தருவாயில், துறைச் செயலா்கள் யாரேனும் தலைமையிடத்தை விட்டு வெளியே சென்றிருந்தால் அவா்கள் தலைமையிடத்தில் உள்ள குறிப்பிட்ட ஒருவருக்கு இந்தப் பணியைச் செய்திட அதிகாரம் அளித்திட வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் சத்யபிரதா சாகு கூறி உள்ளார்.

    Next Story
    ×