என் மலர்
உள்ளூர் செய்திகள்
- குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை உடன் வைத்துக்கொண்டு குழாய்கள் உடைக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.
- உடைப்பை சரி செய்யாமல் அதற்கு மேலே ரோடு போடும் பணி இன்று காலை நடைபெற்றது.
திருப்பூர்:
திருப்பூர் தாராபுரம் சாலையிலிருந்து காங்கேயம் சாலை செல்லக்கூடிய மாநகராட்சிக்கு உட்பட்ட 44 வது வார்டு பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளும் முன்பாகவே சாலை அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும்போது மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை உடன் வைத்துக்கொண்டு குழாய்கள் உடைக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் இதனை பொருட்படுத்தாமல் நேற்று இரவு பணிகள் மேற்கொண்ட போது சுமார் 2000 வீடுகளுக்கு செல்லக்கூடிய 8 மெயின் குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களும் உடைக்கப்பட்டது. அந்த உடைப்பை சரி செய்யாமல் அதற்கு மேலே ரோடு போடும் பணி இன்று காலை நடைபெற்றது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் 44 வது வார்டு கவுன்சிலர் கண்ணப்பன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் அங்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலர் கண்ணப்பன் கூறும்போது, நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக தொடர்ந்து அப்பகுதியில் குடிநீர் குழாய்கள் உடைக்கப்படுவதாகவும் இதனால் கடந்த ஒரு மாத காலமாக முறையாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது. நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தியும் கூட நெடுஞ்சாலை துறையினர் கண்டும் காணாமல் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதே நிலை தொடருமானால் நெடுஞ்சாலை துறை மற்றும் ஒப்பந்ததாரரை கண்டித்து மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.
- எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்து வருவதால் அதன் விலை உயர்ந்து உள்ளது.
- கோயம்பேடு சந்தைக்கு வரும் எலுமிச்சை பழங்களின் வரத்து குறைந்து உள்ளது.
போரூர்:
சென்னையில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சாலையோர கடைகளில் குளிர்பானம், எலுமிச்சை சாறு, கரும்புசாறு குடித்தும் தர்பூசணி உள்ளிட்ட நீர்சத்து அதிகம் உள்ள பழங்களை சாப்பிட்டும் வருகின்றனர்.
சுட்டெரிக்கும் வெயில் காரணமாக எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்து வருவதால் அதன் விலை உயர்ந்து உள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு கிலோ ரூ.70-க்கு விற்கப்பட்ட எலுமிச்சை பழம் தற்போது ரூ.100-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் கிலோ ரூ.150 வரை விற்பனை ஆகிறது. மேலும் கடைகளில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, எலுமிச்சை அதிகளவில் உற்பத்தி நடந்து வரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் எலுமிச்சை பழங்களின் வரத்து குறைந்து உள்ளது. இதனால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில் எலுமிச்சை பழத்தின் தேவையும் அதிகரித்து அதன் விலை மேலும் உயரும் என்றனர்.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறி விற்பனைக்கு குவிந்தன. இதனால் பீன்ஸ், அவரைக்காய், வெண்டைக்காய் ஆகிய காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.70-க்கு விற்ற பீன்ஸ் விலை வீழ்ச்சி அடைந்து இன்று கிலோ ரூ.20-க்கு விற்கப்படுகிறது. கேரட் கிலோ-ரூ.25, பீட்ரூட்-ரூ.30, அவரைக்காய்-ரூ.10, வரி கத்தரிக்காய்-ரூ.15, வெண்டைக்காய்-ரூ.20 க்கு விற்பனை ஆனது.
- சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குடும்பத்தினர் அனைவரும் முறையாக தீர்வை செலுத்தி குடியிருந்து வருகின்றனர்.
- போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவுக்கான ஏற்பாடுகள் அப்பகுதியில் செய்யப்பட்டு சமையல் செய்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்குட்பட்ட பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள புனை வெங்கப்பன் குளத்தின் நீர் புறம்போக்கு பகுதியில் அருந்ததியினர் மற்றும் பிற சமுதாயத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றனர்.
இதனை ஒட்டிய பகுதியான மாநகராட்சி 18-வது வார்டுக்கு உட்பட்ட பேட்டை தங்கம்மன் கோவில் தெருவிலும் அருந்ததியினர் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.
சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குடும்பத்தினர் அனைவரும் முறையாக தீர்வை செலுத்தி குடியிருந்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்கக்கோரியும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டியும் பலமுறை அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்திருந்தனர். ஆனால் அந்த மனுக்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் நெல்லையின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டி கள் ஒட்டினர்.
ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று அவர்கள் குடியிருக்கும் பகுதி தெருக்களில் முழுவதும் கருப்புக்கொடி கட்டினர். அனைத்து வீடுகளின் வாசல் முன்பு கருப்புக்கொடி கட்டப்பட்டது.
அப்பகுதி குடியிருப்புவாசிகள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் இளமாறன் தலைமையில் அங்குள்ள தங்கம்மன் கோவில் அருகே பந்தல் அமைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளும் அரசு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி போராட் டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபடுப வர்களுக்கு காலை மற்றும் மதிய உணவுக்கான ஏற்பாடுகள் அப்பகுதியில் செய்யப்பட்டு சமையல் செய்து வருகின்றனர்.
தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் போராட்டக்காரர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
- பால்வண்ணன் என்பவர் கடந்த 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை ஊத்தங்கரை அறநிலையத்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
- அரசு அதிகாரியை அரசுக்கு எதிராக கையாடல் செய்திருப்பது இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்துக்கு எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளி எதிரே இயங்கி வரும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பால்வண்ணன் என்பவர் கடந்த 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை ஊத்தங்கரை அறநிலையத்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
அப்போது ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதியில் உள்ள 43 கோவில்களுக்கான வழங்கப்பட்ட அரசு நிதியையும் கோவில் அறநிலையத்துறை உண்டியல் பணங்களையும் அறநிலையத்துறை வங்கிக் கணக்கானது ஆய்வாளர் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வந்ததாக தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இவர் மோசடி செய்யும் நோக்கத்தோடு வங்கி கணக்கு புத்தகங்களில் அளித்தல் மற்றும் மாறுதல் செய்து அரசு ஆவணங்களை சரிவர பராமரிக்கப்படாமல் அரசு பணம் ரூ.86,06,026 பணத்தை எடுத்து கையாடல் செய்ததாக தெரியவந்தது.
மேலும் அரசு சொத்தினை ஏமாற்றி பணத்தைக் கையொப்பமிட்டு அரசு முத்திரையும் பயன்படுத்தி வஞ்சித்துள்ளதாகவும் பால்வண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஜோதி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதியப்பட்ட வழக்கினை விசாரணை அதிகாரி சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், முன்னாள் அறநிலையத்துறை அலுவலர் பால்வண்ணன் மீதான வழக்கினை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு அதிகாரியை அரசுக்கு எதிராக கையாடல் செய்திருப்பது இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தற்போது பால்வண்ணன் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் அறநிலையத்துறை ஆய்வாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
- ஜூலை மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரணைக்குக் கொண்டு வருவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
- வழக்கை விசாரித்து வந்த நீதிபதியும் கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றும் சென்று விட்டார்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 26-ந்தேதி தொடங்க இருக்கும் நிலையில், நடப்பாண்டிலும் தமிழ்க் கட்டாயப்பாடம் இல்லை; மொழிச் சிறுபான்மையினர் நடப்பாண்டில் அவர்களின் தாய்மொழிப் பாடத்தில் தேர்வு எழுதலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாக்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டு 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் அந்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாததற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணமாகும்.
தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்திற்கு எதிராக 2015-16-ம் ஆண்டில் மொழிச் சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2023-ம் ஆண்டு முதல் செயல்படுத்த ஆணையிட்டது. ஆனாலும், அதை மதிக்காத பள்ளிகள் உச்சநீதிமன்றத்திற்கு சென்றன. கடைசி நேரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததால் கடந்த ஆண்டு மட்டும் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டத்திலிருந்து விலக்கு அளித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூலையில் நீதிமன்றம் திறக்கப்பட்ட பின்னர் இவ்வழக்கை விசாரித்து தீர்ப்பளிப்பதாக அறிவித்தது.
ஆனால், ஜூலை மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரணைக்குக் கொண்டு வருவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதியும் கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றும் சென்று விட்டார். அதன் விளைவு தான் நடப்பாண்டிலும் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, அடுத்த ஆண்டு முதல் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- காலியாக உள்ள பணியிடங்களுக்கு நர்சுகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
- எந்த அச்சுறுத்தலுக்கும் தி.மு.க. பயப்படாது. அதனை முதலமைச்சர் எதிர்கொள்வார்.
சென்னை:
சென்னை சைதாப்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் ரூ.15.50 கோடி மதிப்பீட்டில் பேறுகால பச்சிளங்குழந்தை சிகிச்சை பிரிவின் கூடுதல் தளங்கள் கட்டுவதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக சுகாதாரத்துறையில் உள்ள காலி பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த 2 மாதங்களில் 1021 மருத்துவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமிக்கப்பட்டனர்.

கொரோனா காலத்தில் எம்.ஆர்.பி. மூலம் நியமிக்கப்பட்ட 977 நர்சுகள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். காலியாக உள்ள பணியிடங்களுக்கு நர்சுகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் 2015-ம் ஆண்டு எம்.ஆர்.பி. மூலம் தேர்வு செய்யப்பட்ட 483 ஒப்பந்த நர்சுகள் பணி நிரந்தரம் செய்யப்படுகின்றனர். இதே போல 2019 கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட 977 நர்சுகளும் நிரந்தரப்பணியில் நியமிக்கப்படுகிறார்கள்.
ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1196 நர்சுகளுக்கு நிரந்தர பணி ஆணை நாளை வழங்கப்படுகிறது. கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தமிழகத்தில் கவர்னர் அரசியல் செய்கிறார். கஞ்சா செடி எதுவும் இங்கு பயிரிடப்படவில்லை. ஆந்திராவில் பயிரிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த அச்சுறுத்தலுக்கும் தி.மு.க. பயப்படாது. அதனை முதலமைச்சர் எதிர்கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் இயக்குனர் சங்குமணி, மண்டல குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கொழுமம், குமரலிங்கம், சாமராயப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
- முதலைகளை பாா்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனா்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் மூலம் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீா் வசதி பெற்று வருகின்றன.
குடிநீா் மற்றும் பாசன தேவைகளுக்காக அணையில் இருந்து அமராவதி ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் அமராவதி அணையில் இருந்து வெளியேறிய சில முதலைகள் கரையோரத்தில் நடமாடி வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனா். மேலும் உடுமலையை அடுத்துள்ள கொழுமம் கிராமத்தில் உள்ள சோதனைச்சாவடி அருகே பெரிய முதலை சாலையில் ஊா்ந்து சென்றுள்ளது. இதனைப்பார்த்த இளைஞர்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூகவலை தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
அதனைப்பார்த்த கொழுமம், குமரலிங்கம், சாமராயப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது:- அமராவதி அணையில் ஏராளமான முதலைகள் உள்ளன. வழக்கமாக பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடும்போது அணையில் உள்ள முதலை கள் பிரதான ஷட்டா் வழியாக அமராவதி ஆற்றில் சென்று விடும் நிலை ஏற்பட்டு வருகிறது. பொது மக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம்.
முதலைகளை பாா்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனா்.
- சிறிது நேரம் கழித்து மீண்டும் வாலிபர் மட்டும் சிறுவன் இல்லாமல் தனியாக வந்ததும் பதிவாகி இருந்தது.
- தருமபுரி டி.எஸ்.பி. சிவராமன், நேரில் வந்து பிடிபட்ட மாணவனிடம் விசாரணை மேற்கொண்டார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் மிட்டாரெட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மன்மதன். கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி சீதா என்ற மனைவி உள்ளார்.
இந்த தம்பதியினருக்கு பல ஆண்டுகள் கழித்து பிறந்த மகன் பொன்னரசு (வயது 10). இந்த சிறுவன் அங்குள்ள அரசு தொடக்க பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி முதல் சிறுவனை காணவில்லை.
இந்த நிலையில் பதறிப்போன சிறுவனின் உறவினர்கள் அவனை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். எங்கும் கிடைக்கவில்லை. இதனால் சிறுவன் மாயமானது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சிறுவனின் பெற்றோர்கள் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் சிறுவனின் புகைப்படத்தை வாட்ஸ்அப் முகநூலில் பதிவிட்டு காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து அதியமான்கோட்டை போலீசார் விசாரித்ததில் சுமார் 12 மணியளவில் பள்ளியில் இருந்த பொன்னரசுவை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அழைத்துச் சென்றதை அந்த பகுதியில் இருந்தவர்கள் பார்த்த சிலர் கூறினர்.
இதைத்தொடர்ந்து போலீசார் மிட்டாரெட்டிஅள்ளி கிராமத்திற்கு சென்று தீவிர விசாரணையில் இறங்கினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் சிறுவன் பொன்னரசு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருடன் சென்றது பதிவாகி இருந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் வாலிபர் மட்டும் சிறுவன் இல்லாமல் தனியாக வந்ததும் பதிவாகி இருந்தது.
இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணன் மகன் இளங்கோ (19) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து இளங்கோவை பிடித்து போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தகவல் அறிந்த கிராம மக்கள் இரவு 100-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் திரண்டனர். சிறுவனுக்கு என்ன ஆனது என உறவினர்களும், கிராம மக்களும் ஒன்று சேர்ந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த தருமபுரி டி.எஸ்.பி. சிவராமன், நேரில் வந்து பிடிபட்ட மாணவனிடம் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது இளங்கோ கஞ்சா போதையில் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், கஞ்சா மயக்கத்தில் இருந்த இளங்கோ பள்ளியில் இருந்த சிறுவனை அழைத்துச் சென்று அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் தள்ளி கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கிராம மக்கள் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் விவசாய கிணற்றுக்கு சென்று இரவு 12 மணி அளவில் சிறுவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்தில் பொன்னரசுவின் பிணத்தை கிணற்றில் இருந்து மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இளங்கோவன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து இளங்கோவனிடம் எதற்காக சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை செய்தார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-
அதியமான்கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான நல்லம்பள்ளி, நார்த்தம்பட்டி, இலளிக்கம், மிட்டாரெட்டி அள்ளி உள்ளிட்ட கிராமங்களில் கஞ்சா சரளமாக புழக்கத்தில் இருப்பதாகவும் மாணவர்கள், இளைஞர்கள் சிலர் இதற்கு அடிமையாகி வருவதும், அதனால்தான் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர். மேலும் சில அலோபதி மருந்து கடைகளில் ரூ.10-க்கு போதை ஊசி போடுவதாக அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தனர்.
- கடந்த முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளில் 4 தொகுதிகளை தி.மு.க. எடுத்துக்கொள்ள விரும்புகிறது.
- திருச்சி, ஆரணி, தேனி தொகுதிகளுக்கு பதிலாக வேறு தொகுதியை தேர்வு செய்யுமாறு காங்கிரசை தி.மு.க. கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு நடைபெற்று வருகிறது.
இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகள் எவை என்று பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
கடந்த முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளில் 4 தொகுதிகளை தி.மு.க. எடுத்துக்கொள்ள விரும்புகிறது. இதில் திருச்சி, ஆரணி, தேனி தொகுதிகளுக்கு பதிலாக வேறு தொகுதியை தேர்வு செய்யுமாறு காங்கிரசை தி.மு.க. கேட்டுக் கொண்டுள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, நெல்லை, கன்னியாகுமரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய தொகுதிகளை காங்கிரசுக்கு மீண்டும் ஒதுக்க தி.மு.க. சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதனால் இன்று மாலை அல்லது நாளை காங்கிரசுக்கான தொகுதிகளை அடையாளம் காணும் பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அண்ணா அறிவாலயத்தில் ஒப்பந்தம் ஏற்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- பழனி நகராட்சி தக்காளி மார்க்கெட்டில் விவசாயிகள் கொண்டு வரக்கூடிய தக்காளிக்கு 14 கிலோ அடங்கிய பெட்டி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.
- கடந்த ஒரு மாதமாக தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பழனி:
பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான அமரபூண்டி, பாப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி, தொப்பம்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்த நிலையில் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. பழனி நகராட்சி தக்காளி மார்க்கெட்டில் விவசாயிகள் கொண்டு வரக்கூடிய தக்காளிக்கு 14 கிலோ அடங்கிய பெட்டி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக மொத்த விலையில் விவசாயிகளுக்கு 1 கிலோ தக்காளி ரூ.7 முதல் ரூ.8 வரை மட்டுமே கிடைக்கிறது.
கிராம பகுதியில் இருந்து தக்காளியை சந்தைக்குப் பறித்து எடுத்துச் செல்லக்கூடிய செலவிற்கு கூட போதுமானதாக இல்லாததால் விவசாயிகள் தோட்டத்திற்கு அருகில் சாலை ஓரங்களில் தக்காளி பழங்களை கொட்டி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதமாக தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- பலாப்பழங்களை ருசிப்பதற்காக காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களுக்கு திரண்டு வருவது வாடிக்கையாக உள்ளது.
- தொடர்ந்து பலா மரத்தின் மேல் கால் போட்டு ஏறி நின்றுகொண்ட யானை, மீண்டும் துதிக்கையை உயர்த்தி மரத்தின் உச்சியில் விளைந்து தொங்கிய பலாப்பழங்களை பறித்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த ஓவேலி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் தேயிலை மற்றும் காப்பி தோட்டங்களில் ஊடுபயிராக பலாப்பழ மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளன. அங்கு தற்போது பலாப்பழ சீசன் என்பதால் அங்குள்ள மரங்களில் பழங்கள் காய்ந்து தொங்குகின்றன. இதனால் பலாப்பழங்களை ருசிப்பதற்காக காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களுக்கு திரண்டு வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் ஒரு காட்டு யானை நேற்று கூடலூர் ஓவேலி பகுதிக்கு வந்தது. பின்னர் அங்குள்ள தேயிலை-காப்பி தோட்டத்துக்குள் புகுந்து அங்கு விளைந்து நிற்கும் பலாமரங்களை நோட்டம் பார்த்தது. அப்போது ஒரு மரத்தின் உச்சியில் மட்டும் காய்கள் பழுத்து தொங்குவது தெரியவந்தது. தொடர்ந்து பலாமரத்தின்கீழ் நின்றபடி தும்பிக்கை மூலம் பலாப்பழங்களை பறிக்க முயன்றது. ஆனாலும் மரத்தின் உச்சியில் பழங்கள் இருந்ததால் யானைக்கு எட்டவில்லை. தொடர்ந்து பலா மரத்தின் மேல் கால் போட்டு ஏறி நின்றுகொண்ட யானை, மீண்டும் துதிக்கையை உயர்த்தி மரத்தின் உச்சியில் விளைந்து தொங்கிய பலாப்பழங்களை பறித்தது. பின்னர் அந்த பழங்களை தரையில் போட்டு நாசூக்காக மிதித்தது. இதில் அந்த பழங்கள் பிளந்து, சுளைகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. தொடர்ந்து பலாக்காய்களை லாவகமாக தூக்கி நிறுத்தி, இரண்டாக பிளந்த காட்டு யானை, அவற்றில் இருந்த பழச்சுளைகளை ஆசைதீர ருசித்து தின்றது. பின்னர் மீண்டும் அடர்ந்த காட்டுக்குள் சென்றுவிட்டது.
இந்த காட்சியை, அந்த வழியாக சென்ற ஒருவர் செல்போனில் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்தார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.
- பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. உள்ளிட்ட பிற கட்சிகளுக்கும் விரைவில் தொகுதிகளை இறுதி செய்ய உள்ளனர்.
- கோவையில் 18-ந்தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்கு முன்பாக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விடும்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி விட்டன. கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் கட்சிகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டன.
பாராளுமன்ற தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகின்றன.
பாராளுமன்ற தேர்தலில் மும்முனை போட்டி உருவாகி உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணி உருவாகி உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்து எந்தெந்த தொகுதிகள் என உடன்பாடு ஏற்பட்டு வருகின்றன. அ.தி.மு.க., பா.ஜனதாவை விட தி.மு.க. தேர்தல் களத்தில் வேகமாக செல்கிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வை இழுக்க பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை ரகசியமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில் பா.ஜ.க.வும் பா.ம.க.வை தன் பக்கம் இழுக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. பா.ஜ.க. நிர்வாகிகள் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெறவே விரும்புகிறார். அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய 2 கட்சிகளும் பா.ம.க.விடம் தொடர்ந்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினாலும் இதில் எந்த உடன்பாடும் இதுவரையில் எட்டப்படவில்லை.
பா.ஜனதாவிடம் பா.ம.க. 8 தொகுதிகள், ஒரு மேல்சபை எம்.பி. மூலம் மத்திய மந்திரி சபையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதற்கு பா.ம.க. கேட்கும் தொகுதியில் 7 கொடுக்க பா.ஜ.க. சம்மதம் தெரிவித்து விட்டது. ஆனால் மேல்சபை எம்.பி.க்கு உறுதி சொல்லவில்லை. மேல்சபை எம்.பி. மூலம் கேபினட் மந்திரி சபையில் இடம் பெறுவதற்கான கோரிக்கையை பா.ஜ.க. ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதற்கு பா.ஜனதா தரப்பில் முதலில் கூட்டணிக்கு வாருங்கள். மேல்சபை எம்.பி., கேபினட் மந்திரி பற்றி பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
அதே நேரத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் வெற்றி பெற்று வந்தால் மத்திய மந்திரி பதவி குறித்து பேசலாம் எனவும் தமிழக கூட்டணி கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க பிரதமர் மோடி விரும்புவதாகவும் அதனால் மத்திய மந்திரி பதவி குறித்து பின்பு பேசிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பா.ம.க.வை சமாதானப்படுத்தி கூட்டணிக்குள் கொண்டு வர பா.ஜ.க. தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியை விட வலுவான கூட்டணியை உருவாக்கும் வகையில் பா.ம.க.விடம் தொடர்ந்து பா.ஜ.க. பேசி வருகிறது.

தமிழகத்தில் பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் அதற்கு முன்னதாக பா.ம.க.-பா.ஜ.க. இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் தீவிரமாக உள்ளனர்.
16 அல்லது 17-ந்தேதிக்குள் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு விடும். மத்திய மந்திரி சபையில் இடம் கொடுப்பது தொடர்பான ஒரே விவகாரத்தில்தான் இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடித்து வருகிறது. அதற்கும் விரைவில் தீர்வு காணப்படும் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. உள்ளிட்ட பிற கட்சிகளுக்கும் விரைவில் தொகுதிகளை இறுதி செய்ய உள்ளனர்.
கோவையில் 18-ந்தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்கு முன்பாக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விடும்.
இதே போல அ.தி.மு.க. கூட்டணியும் தொகுதி பங்கீட்டில் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டன. தே.மு.தி.க.வுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு விடும். எனவே அடுத்து வருகின்ற சில நாட்களில் தமிழக தேர்தல்களம் மேலும் சூடு பிடிக்கும்.






