என் மலர்
உள்ளூர் செய்திகள்
- காத்திருந்தால் காலங்கள் ஓடி விடும்.
- பேச்சுவார்த்தை நடப்பது போல் நடக்கட்டும்.
சென்னை:
நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தங்களது கட்சி போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் அ.தி.மு.க.வுடன் நேற்று தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவுகள் சரிவர அமையாத சூழலில் மேலும் ஒரு பெரிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறினார்.
மேலும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து சென்னையில் இன்று மன்சூர் அலிகான் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணியில் ஒரு சீட் நாங்கள் போட்டியிட கேட்டுள்ளோம். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
மேலும் ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி பற்றி பேசி வருகிறோம். காத்திருந்தால் காலங்கள் ஓடி விடும். பேச்சுவார்த்தை நடப்பது போல் நடக்கட்டும். நான் தேர்தல் பணிகளை இன்று முதல் தனியாக தொடங்க இருக்கிறேன். இன்று தேர்தல் பணிக்காக வேலூர் செல்கிறேன்.
நான் சாதாரண கிள்ளுக் கீரை கிடையாது. சினிமாவிலும் அரசியலிலும் 40 ஆண்டு காலமாக இருக்கிறேன் என்று கூறினார்.
- திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர்கோவில் சிறப்பு பெற்றது.
- பங்குனி திருவிழா 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சோழிங்கநல்லூர்:
திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர்கோவில் சிறப்பு பெற்றது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா வருகிற 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா வருகிற 26-ந்தேதி வரை 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
விழாவைமுன்னிட்டு தினந்தோறும் சந்திரசேகரர் பல்வேறு வாகனங்களில் காலை, மாலையில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 20-ந் தேதி காலை 9 மணிக்கு சந்திர சேகரர் தொட்டி விழா எமதர்மனுக்கு அருளல், இரவு விடையூர்திக் காட்சி (ரிஷபவாகனம்), பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது. 22-ந் தேதி காலை சந்திரசேகரர் தேர் திரு விழாவும், பிரம்மனுக்கு காட்சி அருளலும் நடைபெற உள்ளது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 23-ந் தேதி காலை 9 மணிக்கு சந்திர சேகரர் 4 மறைகளுக்கு அருளல், மாலை 6 மணிக்கு பரிவேட்டை விழா, இரவு 1 மணிக்கு தியாகராஜர் வீதி உலா நடைபெறுகிறது.
24-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் நடை பெறுகிறது. மாலை 6.30 மணிக்கு அகத்தியருக்கு திருமண காட்சி, வன்னி மரக்காட்சி நடைபெறுகிறது. 25-ந்தேதி திருவான்மியூர் குப்பம் கடற்கரையில் சந்திர சேகரர் கடல் நீராடல், இரவு 8 மணிக்கு திரிபுர சுந்தரி, தியாகராஜர் சுவாமி திருமண விழா, இரவு 10.30 மணிக்கு கொடியிறக்கம், தொடர்ந்து வால்மீகி முனிவருக்கு 18 திருநடன காட்சி அருளி வீடுபேறு அளித்தல் நடக்கிறது.
தெப்பத்திருவிழா
26-ந்தேதி மாலை சந்திர சேகரர் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. இரவு வெள்ளியங்கிரி விமானத்தில் சுவாமி வீதி உலா, தியாகராஜர், திரிபுரசுந்தரி அம்மனுக்கு அருளல், அதிகாலை 4.30 மணிக்கு பந்தம்பரி 18 திருநடன காட்சி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
- 24.21 லட்சம் குடும்பங்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டி உள்ளது.
- மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கின் தனிப்பட்ட தலையீட்டை எதிர்பார்க்கிறோம்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
2023ம் ஆண்டு நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் இருந்து திறன்சாரா தொழிலாளர்களுக்கான ஊதியம் வழங்கப்படாததால் பொறுப்புத் தொகையும் ரூ.1,678.83 கோடியாக சேர்ந்துள்ளது.
டிசம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த 24.21 லட்சம் குடும்பங்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டி உள்ளது.
05.01.2024 வரை திரட்டப்பட்ட மொத்த ஊதிய பொறுப்புத் தொகையான ரூ.1,678.83 கோடியை தொழிலாளர்களுக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும்.
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கின் தனிப்பட்ட தலையீட்டை எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

- வேப்பம்பட்டு-பெருமாள்பட்டு இடையே ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்தபோது தந்தை மற்றும் 2 மகள்கள் ரெயில் மோதி பலியானார்கள்.
வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே வேப்பம்பட்டு-பெருமாள்பட்டு இடையே ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் இந்த பணி முழுமை அடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்தபோது தந்தை மற்றும் 2 மகள்கள் ரெயில் மோதி பலியானார்கள்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதியில் நிற்கும் மேம்பால பணியை விரைந்து முடிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ரெயில்வே மேம்பாலப்பணியை மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்றது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பணியை முடிக்க கூடுதலாக ரூ.24 கோடி 18 லட்சத்து 83 ஆயிரத்து 895 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் வேப்பம்பட்டு ரெயில் நிலைய மேம்பாலம் கட்டும் பணி இன்று பூமி பூஜையுடன் மீண்டும் தொடங்கியது. இதில் பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி, ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- கடைசியாக காங்கிரசே அங்கு வெற்றி பெற்றிருந்ததாலும் தொகுதியை தக்க வைக்க காங்கிரஸ் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
- காங்கிரசுக்கு தான் தொகுதி என்பது முடிவான நிலையில் அந்த கட்சியின் சார்பில் யார் களம் இறக்கப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் விஜயதரணி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், 3 முறை இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
கடந்த சில மாதங்களாக கட்சி தலைமை மீது விஜயதரணி அதிருப்தியில் இருந்தார். கட்சி தலைமை பதவி மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இடம் கிடைக்காதது குறித்து அதிருப்தியில் இருந்த அவர், சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி, பாரதிய ஜனதாவில் இணைந்தார்.
அத்தோடு தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுக்கு கடிதமும் எழுதினார். அதனை பெற்றுக்கொண்ட சபா நாயகர், விஜயதரணியின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து சட்டசபை செயலகம், விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவித்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் தகவல் அனுப்பியது. எனவே விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் உருவானது. இடைத்தேர்தலை பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படலாம் என்று கருதப்படுகிறது.
எனவே பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்ட அரசியல் கட்சிகள், விளவங் கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கும் சேர்ந்து தயாராகி வருகிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் அதிகமுறை வெற்றி பெற்றிருப்பதாலும், கடைசியாக காங்கிரசே அங்கு வெற்றி பெற்றிருந்ததாலும் தொகுதியை தக்க வைக்க காங்கிரஸ் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவிடமும் வலியுறுத்தி உள்ளது. இதற்கிடையில் விளவங்கோடு தொகுதியில் தி.மு.க. களம் இறங்க வேண்டும் என அக்கட்சியினர் தலைமைக்கு கோரிக்கை விடுத்தனர்.எனவே விளவங்கோடு தொகுதியில் களம் இறங்கப் போவது யார்? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்தநிலையில் அந்த தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்க, தி.மு.க. முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பாராளுமன்ற தேர்தல் பணிகளில் முனைப்பு காட்டிவரும் தி.மு.க., சட்டமன்ற இடைத்தேர்தலில் கவனம் செலுத்த விரும்பவில்லை என்பதாலும், அந்த தொகுதி ஏற்கனவே காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரசுக்கு தான் தொகுதி என்பது முடிவான நிலையில் அந்த கட்சியின் சார்பில் யார் களம் இறக்கப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அங்கு பெண் வேட்பாளரே நிறுத்தப்படுவார் என சமீபத்தில் தொகுதியில் நடந்த மகளிர் அணி மாநாட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்திருந்தார்.
எனவே குமரி மாவட்ட மகளிர் காங்கிரசார் இடைத்தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங், மாநில துணைத் தலைவர் ராபர்ட் புரூஸ், ஜவகர் பால்மஞ்ச் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர்.டாக்டர் சாமுவேல் ஜார்ஜ், மேற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி சர்மிளா ஏஞ்சல், தாரகை கட்பர்ட் உள்ளிட்ட பலர் தொகுதியில் களம் இறங்க கட்சியின் தலைமையை அணுகி வருகின்றனர்.
இடைத்தேர்தலில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு கொடுப்பது? என்று காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருகிறது. இதனால் தற்போதே விளவங்கோடு தொகுதி சூடுபிடித்துள்ளது.
- ஆடு மேய்த்து விட்டு வீட்டுக்கு திரும்பிய புஷ்பலதா பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- சம்பவம் தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புத்தரச்சல் வேலப்பகவுண்டம்பாளையம் பிரிவில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவரது மனைவி புஷ்பலதா. இவர்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து தங்களுக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர்.
புஷ்பலதா மற்றும் அவரது மருமகள் ஆகியோர் தோட்டத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த மோதிரம், தங்க சங்கிலி உட்பட 10 பவுன் நகைகளையும், 5000 ரூபாய் ரொக்க பணத்தையும் திருடி சென்றுள்ளனர். ஆடு மேய்த்து விட்டு வீட்டுக்கு திரும்பிய புஷ்பலதா பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்களின் உதவியோடு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் புத்தரச்சல் பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களையும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் 10 பவுன் நகைகளை வீட்டுக்குள் புகுந்து மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழ்நாட்டில் இருந்து பல பகுதிகளில் இருந்தும் பாட்டாளி மக்கள் கட்சியினர் வந்தனர்.
- 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அடுத்த நாயுடு மங்கலத்தில் பாட்டாளி மக்கள் சார்பில் கடந்த 1989-ம் ஆண்டு அக்னி கலசம் வைக்கப்பட்டது. இந்த கலசத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பஸ் நிலையம் அமைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தால் அக்னி கலசம் அகற்றப்பட்டது.
இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பஸ் நிலைய கட்டுமான பணி நிறைவு பெற்றவுடன் மீண்டும் அதே இடத்தில் அக்னி குண்டம் அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் சொன்னபடி அக்னி குண்டம் அமைக்கப்படாததால் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் அக்னி குண்டம் அமைக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தால் அக்னி குண்டம் அகற்றப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏந்தல் பக்தவச்சலம் தலைமையில் 2-வது முறையாக புதிய அக்னி குண்டம் அமைக்கப்பட்டது.
இதை வருவாய் துறை மற்றும் போலீசார் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாட்டாளி மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி தலைமையில் இன்று காலை திருவண்ணாமலை அண்ணா நுழைவுவாயில் அருகில் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினரும், வன்னியர் சங்கத்தினரும் பேரணியாக நாயுடுமங்கலம் சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் இருந்து பல பகுதிகளில் இருந்தும் பாட்டாளி மக்கள் கட்சியினர் வந்தனர். இதனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இந்த பேரணியால் திருவண்ணாமலை முதல் நாயுடுமங்கலம் வரை உள்ள பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவியது.
- சின்னமணி புதுக்கோட்டை செல்வதற்காக எப்போதும் வென்றான் பஸ்நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்தார்.
- சின்னமணியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புதியம்புத்தூர்:
தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பண்டாரம் மகன் வைரமுத்து. இவரது மனைவி சின்னமணி (வயது 35).
இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வைரமுத்து இறந்துவிட்டார். இதையடுத்து சின்னமணி புதுக்கோட்டையில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
சின்னமணிக்கும், அவரது கணவரின் தம்பி ராஜேஸ் கண்ணன் (20) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை சின்னமணி எப்போதும் வென்றான் வந்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சின்னமணி புதுக்கோட்டை செல்வதற்காக எப்போதும் வென்றான் பஸ்நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்குவந்த ராஜேஸ் கண்ணன், சின்னமணியை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். பின்னர் அவர் எப்போதும் வென்றான் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சின்னமணியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டப்பகலில் பஸ் நிறுத்தத்தில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தொடக்க விழா மின்ட் தங்க சாலை பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது.
- நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
சென்னை:
ரூ.4,181 கோடி மதிப்பீட்டில், வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகள் தொடக்க விழா மின்ட் தங்க சாலை பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது.
பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று தொடங்கி வைக்கிறார்.
இதில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், சி.எம்.டி.ஏ., பள்ளிக் கல்வித்துறை, சுகாதாரத்துறை, மீன் வளத்துறை, விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெறும் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
சென்னை நகரின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் விக்டோரியா ஹால் புதுப்பிப்பு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி வீடுகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்பட முடிவுற்ற எண்ணற்ற பணிகளையும் திறந்து வைக்கிறார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
- 2-ம் கட்டமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் பேட்டி அளித்த தே.மு.தி.க. நிர்வாகிகள் வெற்றிக் கூட்டணியில் இடம் பெற்று உள்ளோம் என்று கூறினார்கள்.
- வருகிற 17-ந் தேதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள தே.மு. தி.க. தொகுதி பங்கீடு தொடர்பாக 2 கட்ட பேச்சு வார்த்தையை நடத்தி முடித்துள்ளது. கடந்த 1-ந் தேதி அன்று விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்ற அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்தனர்.
இதன் பின்னர் தே.மு. தி.க. குழுவினர் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு நேரில் சென்று பேசினார்கள். 2-ம் கட்டமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் பேட்டி அளித்த தே.மு.தி.க. நிர்வாகிகள் வெற்றிக் கூட்டணியில் இடம் பெற்று உள்ளோம் என்று கூறினார்கள்.
ஆனால் பிரேமலதா அளித்த பேட்டியில் அ.தி.மு.க.வுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவித்தார். இதனால் குழப்பம் நிலவியது.
இருப்பினும் அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடை பெற்று வந்துள்ளது. 7 எம்.பி. தொகுதிகள் மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தே.மு.தி.க. கேட்டுள்ளது.
இதில் 4 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வருகிற 17-ந் தேதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பற்றி 3-வது கட்டமாக அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. இதன் பின்னர் 2 கட்சிகளின் நிர்வாகிகளும் தொகுதி உடன்பாடு தொடர்பாக நேரில் சந்தித்து கையெழுத்து போட உள்ளனர்.
பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக உள்ளது.
- போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி இருக்கும் ஜாபர் சாதிக் முதலமைச்சரின் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து உள்ளார் என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருந்தார்.
- போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது குற்றம் சாட்டி இருந்தார்.
சென்னை:
தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்தி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
ஜாபர் சாதிக்குடன் சினிமா, அரசியல் வட்டாரத்தில் பலர் நெருக்கமாக இருந்திருப்பதாக கூறியிருக்கும் அவர்கள் அதில் தொடர்புடைய நபர்களையும் விசாரணைக்காக அழைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது இருவரும் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.
சென்னையில் கடந்த 8-ந்தேதி பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, போதைப்பொருட்களை தடுப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறி விட்டார் என்றும் எனவே அவர் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி இருக்கும் ஜாபர் சாதிக் முதலமைச்சரின் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து உள்ளார் என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருந்தார்.
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது குற்றம் சாட்டி இருந்தார்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகிய இருவர் மீதும் கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் வக்கீல் தேவராஜன் சென்னை மாநகர குற்றவியல் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் போதைப்பொருளை ஒழிக்க முதலமைச்சர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். போதைப்பொருள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை இருவரும் பேசியுள்ளனர். எனவே அவர்கள் மீது கிரிமினல் மற்றும் அவதூறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
- குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை உடன் வைத்துக்கொண்டு குழாய்கள் உடைக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.
- உடைப்பை சரி செய்யாமல் அதற்கு மேலே ரோடு போடும் பணி இன்று காலை நடைபெற்றது.
திருப்பூர்:
திருப்பூர் தாராபுரம் சாலையிலிருந்து காங்கேயம் சாலை செல்லக்கூடிய மாநகராட்சிக்கு உட்பட்ட 44 வது வார்டு பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளும் முன்பாகவே சாலை அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும்போது மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை உடன் வைத்துக்கொண்டு குழாய்கள் உடைக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் இதனை பொருட்படுத்தாமல் நேற்று இரவு பணிகள் மேற்கொண்ட போது சுமார் 2000 வீடுகளுக்கு செல்லக்கூடிய 8 மெயின் குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களும் உடைக்கப்பட்டது. அந்த உடைப்பை சரி செய்யாமல் அதற்கு மேலே ரோடு போடும் பணி இன்று காலை நடைபெற்றது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் 44 வது வார்டு கவுன்சிலர் கண்ணப்பன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் அங்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலர் கண்ணப்பன் கூறும்போது, நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக தொடர்ந்து அப்பகுதியில் குடிநீர் குழாய்கள் உடைக்கப்படுவதாகவும் இதனால் கடந்த ஒரு மாத காலமாக முறையாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது. நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தியும் கூட நெடுஞ்சாலை துறையினர் கண்டும் காணாமல் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதே நிலை தொடருமானால் நெடுஞ்சாலை துறை மற்றும் ஒப்பந்ததாரரை கண்டித்து மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.






