என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பொதுத்தேர்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து தேர்வுக்கு தயாராகும் வகையில் கடுமையான பயிற்சி அளித்து வருகிறார்கள்.
    • ஆடை குறைபாட்டை மற்ற மாணவர்கள் கேலி செய்ததால் மனமுடைந்த மாணவர் செல்வபிரகாஷ் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட காளவாசல் கலைஞர் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 50). இவரது மனைவி லட்சுமி (48). கதிர்வேல் அருகே உள்ள ரைஸ் மில்லில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த தம்பதிக்கு கோகிலா என்ற மகளும், செல்வபிரகாஷ் என்ற மகனும் இருந்தனர். இதில் மகள் கோகிலாவுக்கு திருமணமாகி மம்சாபுரம் பகுதியில் தனது கணவருடன் தனிக்குடித்தனம் வசித்து வருகிறார்.

    செல்வபிரகாஷ் கீழராஜகுலராமன் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பொதுத்தேர்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து தேர்வுக்கு தயாராகும் வகையில் கடுமையான பயிற்சி அளித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் நேற்று காலை பெற்றோரிடம் கூறி விட்டு வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற செல்வபிரகாஷ் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். ஆனால் அவர் பள்ளி முடிந்து சென்றுவிட்டதாக கூறியுள்ளனர்.

    இதனால் பதட்டம் அடைந்த உறவினர்கள் மகள் கோகிலா வீடு உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று தேடினர். ஆனால் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே கதிர்வேல் தற்போது குடியிருக்கும் வீட்டின் அருகே புதிதாக வீடு கட்ட கொட்டகை அமைத்துள்ளார். அங்கு சென்று பார்த்த போது, செல்வபிரகாஷ், சால்வையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் கதறித்துடித்தனர். பின்னர் இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் மாணவர் செல்வபிரகாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன, பள்ளியில் ஆசிரியர்கள் திட்டினார்களா, இல்லை சகமாணவர்கள் கேலி செய்தார்களா அல்லது தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

    முதல்கட்ட விசாரணையில் ஆடை குறைபாட்டை மற்ற மாணவர்கள் கேலி செய்ததால் மனமுடைந்த மாணவர் செல்வபிரகாஷ் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சிவரஞ்சனிக்கு திருமணம் முடிந்து நாகமலை புதுக்கோட்டையில் குடியிருந்து வருகிறார்.
    • வங்கி அதிகாரிகள் லோன் பெற தேவையான ஆவணங்கள் இல்லையென பரமேஸ்வரியின் விண்ணப்பத்தை நிராகரித்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள தேங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவன்காளை. இவர் மதுரை பழங்காநத்தம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (வயது55). பக்கவாத நோயால் அவதிப்பட்டு பரமேஸ்வரி அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

    இதற்கிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேங்கல்பட்டியில் உள்ள அவரது வீட்டில் பரமேஸ்வரி வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்துள்ளார். அப்போது அங்கு வந்த அவரது கணவர் சிவன்காளை மனைவியை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு பரமேஸ்வரியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பரமேஸ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பரமேஸ்வரியின் மகள் சிவரஞ்சனி (31) கொடுத்த புகாரின் பேரில் செக்கானூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகராணி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தார். பிரேத பரிசோதனையில் கழுத்து நெறிக்கப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வாயில் நுரை தள்ளி இறந்தது அறிக்கையில் தெரிய வந்தது. இதனால் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்தனர்.

    மேலும் கொலை தொடர்பாக மகள் சிவரஞ்சனி, இவரது கணவர் ஜெயபிரகாஷ் (30), அவரது நண்பர்கள் நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த மதுசூதனன் (30), மதனகோபால் (29), அழகுபாண்டி (34) ஆகியோர் ஆ.கொக்குளம் வி.ஏ.ஓ., சங்கர் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    தேங்கல்பட்டியை சேர்ந்தவர் பரமேஸ்வரியின் முதல் கணவர் இறந்துவிட்ட நிலையில் மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்த சிவன்காளையுடன் நட்பு ஏற்பட்டு நாளடைவில் அவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். சிவன்காளைக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி இறந்து விட்டார்.

    சிவரஞ்சனிக்கு திருமணம் முடிந்து நாகமலை புதுக்கோட்டையில் குடியிருந்து வருகிறார். பரமேஸ்வரிக்கு இரண்டு சொந்த வீடுகள் உள்ளது. இந்த நிலையில் தேங்கல்பட்டியில் சொந்த வீடு கட்டும் பணி நடைபெற்று வந்தது. வீடு கட்டுவதால் பண நெருக்கடியில் இருந்த பரமேஸ்வரி வீட்டின் பெயரில் வங்கியில் கடன் பெற முயன்றுள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் லோன் பெற தேவையான ஆவணங்கள் இல்லையென பரமேஸ்வரியின் விண்ணப்பத்தை நிராகரித்தனர்.

    இதனால் வேறுவழியின்றி மகள் சிவரஞ்சனியின் உதவியை நாடியுள்ளார். அப்போது மகளிடம் அவரது பெயரில் உள்ள வீட்டை அடமானம் வைத்து லோன் வாங்கி தருமாறு கூறி தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். ஆனால் மகள் சிவரஞ்சனி தனது தாய் இரண்டாவதாக சிவன்காளையை திருமணம் செய்தது பிடிக்காமலும், சொத்துக்களை தன்னிடம் இருந்து வாங்கி அவருக்கு கொடுத்து விடுவார் என்ற எண்ணத்திலும், ஏற்கனவே உள்ள வீட்டை தன் பெயரில் எழுதி தருமாறு சிவரஞ்சனி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்தநிலையில் சிவரஞ்சனி, அவரது கணவர் மற்றும் அவரின் கூட்டாளிகள் மூன்று பேரும் தேங்கல்பட்டியிலுள்ள பரமேஸ்வரியின் வீட்டிற்கு சென்று சொத்தை சிவரஞ்சனி பெயருக்கு மாற்றி தரும்படி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் பரமேஸ்வரியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

    இதிலிருந்து தப்பித்து கொள்ள பரமேஸ்வரி உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாகவும், தன் தாயின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து மகள் சிவரஞ்சனி, அவரது கணவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் கூட்டாளிகள் உள்பட 5 பேரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சொத்துக்காக பெற்ற மகளே தனது தாயை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்ததில் அங்கு பல ஏக்கர் பரப்பளவில் வளர்ந்து நின்ற சுமார் 100 மரங்கள் மற்றும் செடி-கொடிகள் ஆகியவை தீயில் கருகி சாம்பலாயின.
    • வனப்பகுதியில் இருந்த வன விலங்குகள் மற்றும் பறவைகள் வேறு இடங்களுக்கு தப்பிசென்றன.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பாரஸ்ட் டேல் வனப்பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்ததில் அங்கு பல ஏக்கர் பரப்பளவில் வளர்ந்து நின்ற சுமார் 100 மரங்கள் மற்றும் செடி-கொடிகள் ஆகியவை தீயில் கருகி சாம்பலாயின. மேலும் வனப்பகுதியில் இருந்த வன விலங்குகள் மற்றும் பறவைகள் வேறு இடங்களுக்கு தப்பிசென்றன.

    இதுகுறித்து தகவலின்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் வனத்துக்குள் தீ விபத்து காரணமாக பரவி நிற்கும் அடர்ந்த புகையால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் பாரஸ்ட்டேல் காட்டுப்பகுதியில் பற்றியெரியும் தீயை, கடந்தாண்டு போல ஹெலிகாப்படர் பயன்படுத்தி அணைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டுமென அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இதற்கிடையே குன்னூர் தீவிபத்து தொட ர்பாக குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனக்குழுவினர் விசாரணை நடத்தியதில், அங்குள்ள ஒரு தேயிலை தோட்ட த்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊழியர்கள் கவாத்து செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவையற்ற பொருட்களை குவித்து தீ வைத்து எரித்தனர். பின்பு தீயை அணைக்காமல் சென்றது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து குன்னூர் வனத்தில் பற்றியெரிந்த தீ விபத்துக்கு காரணமாக இருந்ததாக பாரஸ்ட்டேல் தேயிலை தோட்ட உரிமையாளர் எபினேசர் ஜெயசீலன் இன்பம் மற்றும் தொழிலாளர்கள் கருப்பையா (வயது 65), மோகன் (35), ஜெயக்குமார் (60) ஆகிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    • இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு போதை ஊசிகள், போதை மாத்திரைகள் கேட்டது தெரிந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சேலத்தில் யார் மூலம் போதை பொருட்கள் வாங்கப்பட்டது, எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் நேற்று இரவு எஸ்பிளனேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சிறுமி, இளம் பெண் 3 வாலிபர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    இதையடுத்து போலீசார் சிறுமி மற்றும் இளம் பெண்ணை எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அனுப்பூரைச் சேர்ந்த சரண்யா (வயது 19) எனத் தெரிந்தது. எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சரித்திர குற்றவாளியான சின்னா என்பவர் சேலத்தில் உள்ள சரண்யாவை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு போதை ஊசிகள், போதை மாத்திரைகள் கேட்டது தெரிந்தது.

    மேலும் விசாரணையில் சரண்யாவை அழைத்து வர சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் சின்னா காதலியான 16 வயது சிறுமியை அனுப்பி வைத்தது தெரிந்தது. இது தொடர்பாக அரண்மனைக்காரன் தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்த போதுதான் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

    சரண்யா செல்போனை சோதனை செய்தபோது கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசிகள் குறித்த புகைப்படங்கள் ஆவணங்கள், பண பரிமாற்றம் போன்ற தகவல் சிக்கியது.

    இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிவு செய்து சேலத்தில் யார் மூலம் போதை பொருட்கள் வாங்கப்பட்டது, எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காரை சோதனை செய்த போது காரில் குட்கா, ஹான்ஸ் உள்பட 440 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
    • கொள்முதல் மதிப்பு 2 லட்சத்து 27 ஆயிரம் என்றும், விற்பனை மதிப்பு ரூ.7 லட்சம் என்று கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை போலீசார் நேற்றிரவு உடையாப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே வெகுநேரமாக நின்று கொண்டிருந்த காரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட முயன்றனர்.

    அப்போது காருக்குள் இருந்த 2 பேர் தப்பியோட முயன்றனர். இதனை பார்த்த போலீசார் தப்பியோட முயன்ற ராஜஸ்தானை சேர்ந்த லெட்சமணன் (19) என்பவரை மடக்கி பிடித்தனர். மேலும் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் தப்பியோடி விட்டார்.

    தொடர்ந்து காரை சோதனை செய்த போது காரில் குட்கா, ஹான்ஸ் உள்பட 440 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதன் கொள்முதல் மதிப்பு 2 லட்சத்து 27 ஆயிரம் என்றும், விற்பனை மதிப்பு ரூ.7 லட்சம் என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து புகையிலை பொருட்கள் கடத்தி வந்த குஜராத் பதிவெண் கொண்ட அந்த காரையும், புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், பெங்களூரில் இருந்து ஆத்தூருக்கு புகையிலை பொருட்களை கடத்தி சென்றதாகவும், கார் பழுது ஆனதால் அங்கு நிறுத்தி வைத்திருந்த நிலையில் போலீசாரிடம் சிக்கி கொண்டதாகவும் கூறி உள்ளார்.

    இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இரவு பொருட்களின் இடையில் பாம்பு இருப்பதைக்கண்டு மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • வீட்டின் படிக்கட்டில் பழைய பொருட்கள் வைக்கும் போது கவனத்துடன் கையாள வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு கனிராவுத்தர் குளம் பெட்ரோல் பங்க் அருகே மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்தின் படிக்கட்டின் கீழ் மின்வாரிய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இரவு இந்த பொருட்களின் இடையில் பாம்பு இருப்பதைக்கண்டு மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அதிகாரிகள் பாம்பு பிடி வீரர் யுவராஜிக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த யுவராஜ் பாம்பை தேடினார். சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மின்வாரிய அலுவலகப் பொருட்கள் அடியில் பதுங்கி இருந்த பாம்பை வெளியே கொண்டு வந்தார். அது சாரைப்பாம்பு. 8 அடி நீளம் இருந்தது. அந்த பாம்பை லாபகமாக பிடித்த யுவராஜ் வனத்துறையிடம் ஒப்படைத்தார்.

    இதேப்போல் ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் உள்ள ஒரு வீட்டின் படிக்கட்டில் இருந்த 5 அடி நீள நல்ல பாம்பை பாம்பு பிடி வீரர் யுவராஜ் பிடித்தார். ஈரோடு மாவட்டம் கஸ்பா பேட்டையில் உள்ள ஒரு வீட்டின் சமையலறையில் பதுங்கி இருந்த 5 அடி நீளம் உள்ள நாகப்பாம்பையும் அவர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

    இது குறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜ் கூறும்போது,

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வெப்பத்தை தாங்க முடியாமல் பாம்புகள் குடியிருப்புகளை நோக்கி வர தொடங்கியுள்ளன. எனவே பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    வீட்டின் படிக்கட்டில் பழைய பொருட்கள் வைக்கும் போது கவனத்துடன் கையாள வேண்டும். அதை போன்று பிரிட்ஜ், வாஷிங் மெஷின் அடிப்பகுதியில் பாம்புகள் வர வாய்ப்புள்ளது. பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றார்.

    • துரை தயாநிதிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதி வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    வேலூர்:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி. இவர் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தார். இவரது மகன் துரை தயாநிதி. இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து துரை தயாநிதி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதியை வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் இன்று சேர்த்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • மீட்டர் பெட்டியில் வைத்து சென்ற சாவியை கொண்டு வீட்டை திறந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • சி.சி.டி.வி. கேமரா காட்சிப் பதிவுகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புது தெருவை சேர்ந்தவர் காஜாமைதீன். ரமலான் நோன்பை முன்னிட்டு நேற்று இரவு காஜாமைதீன் வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் வெளியே உள்ள மின்மீட்டர் பெட்டிக்குள் சாவியை வைத்துவிட்டு மனைவியுடன் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு இரவு தொழுகைக்காக சென்றார்.

    பின்னர் தொழுகை முடிந்து அவர்கள் வீட்டிற்கு வந்தனர். வீடு திறக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் நகை மற்றும் ஒரு செல்போன், ரூ.2500 ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். பீரோவில் 2 பெட்டிகளில் நகைகள் வைத்துள்ளனர். அதில் ஒரு பெட்டியில் இருந்த 9 பவுன் நகையை கொள்ளையர்கள் எடுத்து சென்ற நிலையில் மற்றொரு பெட்டியில் இருந்த நகைகளை கொள்ளையர்கள் விட்டு சென்றிருந்தனர். இது குறித்து காஜாமைதீன் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது மீட்டர் பெட்டியில் வைத்து சென்ற சாவியை கொண்டு வீட்டை திறந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிப் பதிவுகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை போன வீடு அதிக அளவு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். எனவே கொள்ளையில் ஈடுபட்டது யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எழும்பூரில் உள்ள கட்சி தலைமை நிலையமான தாயகத்தில் அவைத்தலைவர் அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெறும்.
    • ம.தி.மு.க. ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் அன்று மாலை 3 மணிக்கு நடைபெறும்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம் வருகிற 18-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமை நிலையமான தாயகத்தில் அவைத்தலைவர் அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெறும். இக்கூட்டத்தில் உயர்நிலைக்குழு, மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, தணிக்கைக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மையம் ஆகிய அமைப்புக்களின் செயலாளர்கள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள், தலைமைக் கழக மற்றும் அணிகளின் செயலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

    ம.தி.மு.க. ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் அன்று மாலை 3 மணிக்கு நடைபெறும். இக்கூட்டத்தில் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக இதில் ஆலோசிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடோன் சென்னை பெருங்குடியில் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக குடோனில் பராமரிக்கப்பட்டு வந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    சென்னை:

    சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், டெல்லியில் கடந்த 9-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், 7 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என பல நாடுகளுக்கு போதை பொருள் கடத்திய ஜாபர் சாதிக்கிற்கு, அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோர் பக்கபலமாக இருந்தனர். தலைமறைவாக உள்ள இவர்கள் இருவரையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் கூட்டாளியாக செயல்பட்ட சதா என்கிற சதானந்தம் என்பவரை அதிகாரிகள் சென்னையில் கைது செய்தனர். அவரை அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்து சென்றனர். அவரை இன்று அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். பின்னர் அவரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் ஜாபர் சாதிக்கிடம் நடத்திய விசாரணையில் சென்னையில் அவருக்கு சொந்தமான போதைப்பொருள் குடோன் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த குடோன் சென்னை பெருங்குடியில் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிருந்தும் போதைப்பொருட்கள் பொட்டலம் போடப்பட்டு கடத்தப்பட்டு உள்ளன.

    இதையடுத்து மத்திய போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று சென்னை பெருங்குடியில் உள்ள ஜாபர் சாதிக்குக்கு சொந்தமான போதைப்பொருள் குடோனுக்கு சென்றனர். அங்கு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள். இங்கிருந்து எந்தெந்த வழிகளில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டது? அதற்கு யார் யாரெல்லாம் உதவி செய்தார்கள் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக குடோனில் பராமரிக்கப்பட்டு வந்த ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதன் மூலம் குடோனில் பணி புரிந்தவர்களையும், ஜாபர் சாதிக்குடன் சேர்ந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுப ட்டவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிடுவோம். ஒரு சில தொகுதிகள் மாற வாய்ப்பு உள்ளது.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக மக்களுக்கு செய்த திட்டங்களை வெளிப்படையாக சொல்கிறார். ஆனால் மோடி அவ்வாறு சொல்லவில்லை.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் பத்திரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் தலைவர் ஆதிஷ் அகர்வாலா ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

    நாளை (15-ந்தேதி)க்குள் அத்தனை தகவல்களையும் வலைதளத்தில் ஏற்றுவது சிரமம் என்று தேர்தல் ஆணையம் கூறி இருக்கிறது. இது இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மீதான நம்பகத்தன்மையின்மையை காட்டுகிறது. 140 கோடி மக்களுக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய தேர்தல் ஆணையம் 44 ஆயிரம் பக்கங்கள் கொண்ட தகவல்களை வலைதளத்தில் 2 நாட்களில் பதிவேற்றம் செய்ய முடியாது என்று கூறுவது வியப்பாக இருக்கிறது.

    அவ்வாறு பதிவேற்றம் செய்ய முடியாவிட்டால் அந்த தகவல்களின் மாதிரி புள்ளி விவரங்களை தமிழக காங்கிரசிடம் கொடுத்தால் அதை பதிவேற்றுவதற்கு தேவையான உதவிகளை எங்களால் தர இயலும். தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் எங்களை அணுகலாம்.

    கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிடுவோம். ஒரு சில தொகுதிகள் மாற வாய்ப்பு உள்ளது.

    தி.மு.க.வுடன், கூட்டணி தொகுதி ஒதுக்கீடு உடன்பாடு இன்னும் 2 நாட்களில் முடிவடையும். தேர்தலில் போட்டியிட புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்குவது பற்றி தேசிய தலைமை முடிவு செய்யும்.

    முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதித்து முதலமைச்சர் உடனே கவர்னருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் கவர்னர் அந்த கடிதத்துக்கு பதில் கொடுக்கவில்லை. அந்த தீர்ப்பின்படி பொன்முடி எம்.எல்.ஏ.வாக தொடர முழு அதிகாரம் உள்ளது.

    சுப்ரீம் கார்ட்டு தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் திருக்கோவிலூர் தொகுதி காலி இடமாக இருந்தது ரத்து செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்படுவது தள்ளிக்கொண்டே போகிறது. இதுபற்றி பிரதமர் மோடிக்கு கவலை இல்லை. அவரது கவலையெல்லாம் பாசிச ஆட்சி நடத்துவது பற்றிதான். எனவே பொதுமக்கள், மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.


    பிரதமர் மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருகிறார். அப்போது அந்த மேடைகளில் அவர் தமிழகத்துக்கு செய்த திட்டங்களை பற்றி குறிப்பிடாதது ஏன்?

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக மக்களுக்கு செய்த திட்டங்களை வெளிப்படையாக சொல்கிறார். ஆனால் மோடி அவ்வாறு சொல்லவில்லை. எனவே தமிழக மக்களுக்கு மத்திய அரசு என்ன செய்தது என்பதை பிரதமர் மோடி பட்டியலிட வேண்டும்.

    டி.டி.வி.தினகரன் வழக்குகளுக்கு பயந்து பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளார். அவர் சந்தர்ப்பவாதியாக மாறி விட்டார். அவ்வாறு மாறவில்லை என்றால் ஜெயிலுக்கு போக நேரிடும்

    இவ்வாறு அவர் கூறினார்.அப்போது அருகில் காங்கிரஸ் மூத்த நிர்வாகி கோபண்ணா உடன் இருந்தார்.

    • 46 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 1.1.2024 முதல் 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
    • அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கத்தின் பல்வேறு சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 46 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 1.1.2024 முதல் 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    இந்த அகவிலைப்படி உயர்வால் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுகிறார்கள். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் தி.மு.க. அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

    அகவிலைப்படி உயர்வை அறிவித்ததையொட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில், அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கத்தின் பல்வேறு சங்க நிர்வாகிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    ×