search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை 2 நாளில் முடிவு செய்வோம்- செல்வப்பெருந்தகை
    X

    காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை 2 நாளில் முடிவு செய்வோம்- செல்வப்பெருந்தகை

    • கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிடுவோம். ஒரு சில தொகுதிகள் மாற வாய்ப்பு உள்ளது.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக மக்களுக்கு செய்த திட்டங்களை வெளிப்படையாக சொல்கிறார். ஆனால் மோடி அவ்வாறு சொல்லவில்லை.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் பத்திரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் தலைவர் ஆதிஷ் அகர்வாலா ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

    நாளை (15-ந்தேதி)க்குள் அத்தனை தகவல்களையும் வலைதளத்தில் ஏற்றுவது சிரமம் என்று தேர்தல் ஆணையம் கூறி இருக்கிறது. இது இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மீதான நம்பகத்தன்மையின்மையை காட்டுகிறது. 140 கோடி மக்களுக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய தேர்தல் ஆணையம் 44 ஆயிரம் பக்கங்கள் கொண்ட தகவல்களை வலைதளத்தில் 2 நாட்களில் பதிவேற்றம் செய்ய முடியாது என்று கூறுவது வியப்பாக இருக்கிறது.

    அவ்வாறு பதிவேற்றம் செய்ய முடியாவிட்டால் அந்த தகவல்களின் மாதிரி புள்ளி விவரங்களை தமிழக காங்கிரசிடம் கொடுத்தால் அதை பதிவேற்றுவதற்கு தேவையான உதவிகளை எங்களால் தர இயலும். தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் எங்களை அணுகலாம்.

    கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிடுவோம். ஒரு சில தொகுதிகள் மாற வாய்ப்பு உள்ளது.

    தி.மு.க.வுடன், கூட்டணி தொகுதி ஒதுக்கீடு உடன்பாடு இன்னும் 2 நாட்களில் முடிவடையும். தேர்தலில் போட்டியிட புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்குவது பற்றி தேசிய தலைமை முடிவு செய்யும்.

    முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதித்து முதலமைச்சர் உடனே கவர்னருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் கவர்னர் அந்த கடிதத்துக்கு பதில் கொடுக்கவில்லை. அந்த தீர்ப்பின்படி பொன்முடி எம்.எல்.ஏ.வாக தொடர முழு அதிகாரம் உள்ளது.

    சுப்ரீம் கார்ட்டு தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் திருக்கோவிலூர் தொகுதி காலி இடமாக இருந்தது ரத்து செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்படுவது தள்ளிக்கொண்டே போகிறது. இதுபற்றி பிரதமர் மோடிக்கு கவலை இல்லை. அவரது கவலையெல்லாம் பாசிச ஆட்சி நடத்துவது பற்றிதான். எனவே பொதுமக்கள், மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.


    பிரதமர் மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருகிறார். அப்போது அந்த மேடைகளில் அவர் தமிழகத்துக்கு செய்த திட்டங்களை பற்றி குறிப்பிடாதது ஏன்?

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக மக்களுக்கு செய்த திட்டங்களை வெளிப்படையாக சொல்கிறார். ஆனால் மோடி அவ்வாறு சொல்லவில்லை. எனவே தமிழக மக்களுக்கு மத்திய அரசு என்ன செய்தது என்பதை பிரதமர் மோடி பட்டியலிட வேண்டும்.

    டி.டி.வி.தினகரன் வழக்குகளுக்கு பயந்து பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளார். அவர் சந்தர்ப்பவாதியாக மாறி விட்டார். அவ்வாறு மாறவில்லை என்றால் ஜெயிலுக்கு போக நேரிடும்

    இவ்வாறு அவர் கூறினார்.அப்போது அருகில் காங்கிரஸ் மூத்த நிர்வாகி கோபண்ணா உடன் இருந்தார்.

    Next Story
    ×