search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tea plantation"

    • பலாப்பழங்களை ருசிப்பதற்காக காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களுக்கு திரண்டு வருவது வாடிக்கையாக உள்ளது.
    • தொடர்ந்து பலா மரத்தின் மேல் கால் போட்டு ஏறி நின்றுகொண்ட யானை, மீண்டும் துதிக்கையை உயர்த்தி மரத்தின் உச்சியில் விளைந்து தொங்கிய பலாப்பழங்களை பறித்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த ஓவேலி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் தேயிலை மற்றும் காப்பி தோட்டங்களில் ஊடுபயிராக பலாப்பழ மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளன. அங்கு தற்போது பலாப்பழ சீசன் என்பதால் அங்குள்ள மரங்களில் பழங்கள் காய்ந்து தொங்குகின்றன. இதனால் பலாப்பழங்களை ருசிப்பதற்காக காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களுக்கு திரண்டு வருவது வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில் ஒரு காட்டு யானை நேற்று கூடலூர் ஓவேலி பகுதிக்கு வந்தது. பின்னர் அங்குள்ள தேயிலை-காப்பி தோட்டத்துக்குள் புகுந்து அங்கு விளைந்து நிற்கும் பலாமரங்களை நோட்டம் பார்த்தது. அப்போது ஒரு மரத்தின் உச்சியில் மட்டும் காய்கள் பழுத்து தொங்குவது தெரியவந்தது. தொடர்ந்து பலாமரத்தின்கீழ் நின்றபடி தும்பிக்கை மூலம் பலாப்பழங்களை பறிக்க முயன்றது. ஆனாலும் மரத்தின் உச்சியில் பழங்கள் இருந்ததால் யானைக்கு எட்டவில்லை. தொடர்ந்து பலா மரத்தின் மேல் கால் போட்டு ஏறி நின்றுகொண்ட யானை, மீண்டும் துதிக்கையை உயர்த்தி மரத்தின் உச்சியில் விளைந்து தொங்கிய பலாப்பழங்களை பறித்தது. பின்னர் அந்த பழங்களை தரையில் போட்டு நாசூக்காக மிதித்தது. இதில் அந்த பழங்கள் பிளந்து, சுளைகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. தொடர்ந்து பலாக்காய்களை லாவகமாக தூக்கி நிறுத்தி, இரண்டாக பிளந்த காட்டு யானை, அவற்றில் இருந்த பழச்சுளைகளை ஆசைதீர ருசித்து தின்றது. பின்னர் மீண்டும் அடர்ந்த காட்டுக்குள் சென்றுவிட்டது.

    இந்த காட்சியை, அந்த வழியாக சென்ற ஒருவர் செல்போனில் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்தார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.

    • மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்பட்ட மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு, குதிரைவெட்டி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன.
    • கடந்த சில மாதங்களாக மாஞ்சோலை அடுத்த நாலுமுக்கு தேயிலை தோட்ட பகுதியில் மிளா ஒன்று சுற்றி திரிகிறது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்பட்ட மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு, குதிரைவெட்டி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன. மேலும் இந்த வனப்பகுதியில் காட்டுயானை, சிறுத்தை, மிளா, காட்டெருமை, மான், கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளும் வசித்து வருகின்றன.

    இந்த பகுதி நெல்லை மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தளம் என்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்ப குடும்பமாக வருகை தந்து, மாஞ்சோலையின் இயற்கை எழில் மிகுந்த அழகை ரசித்து செல்கின்றனர்.

    இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக மாஞ்சோலை அடுத்த நாலுமுக்கு தேயிலை தோட்ட பகுதியில் மிளா ஒன்று சுற்றி திரிகிறது. அது சுற்றுலா பயணிகள் கொண்டுவரும் தின்பண்டங்களை சாப்பிட்டு செல்கிறது. அவ்வாறு அதற்கு சுற்றுலா பயணிகள் வழங்குவதை தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

    குன்னூர் ஏல மையத்தில் ரூ.10 கோடியே 84 லட்சத்துக்கு தேயிலைத்தூள் விற்பனை செய்யப்பட்டது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தில் தேயிலை விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை நம்பி ஏராளமான விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் ஆன்லைனில் ஏலம் நடைபெறுகிறது.

    இந்த ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை வாங்குகின்றனர். ஆனால் தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் தேயிலை ஏலம் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான 4-வது ஏலம் கடந்த 24, 25-ந் தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 13 லட்சத்து 12 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வந்தது. இதில் 7 லட்சத்து 61 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 5 லட்சத்து 51 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 10 லட்சத்து 71 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இது 82 சதவீத விற்பனை ஆகும்.

    விற்பனையான தேயிலைத்தூளின் ரொக்க மதிப்பு ரூ.10 கோடியே 84 லட்சம் ஆகும். சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.256 எனவும், ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.253 எனவும் இருந்தது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.84 முதல் ரூ.90 வரையும், உயர் வகை ரூ.125 முதல் ரூ.140 வரையும் ஏலம் போனது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.84 முதல் ரூ.88 வரையும், உயர் வகை ரூ.125 முதல் ரூ.140 வரையும் விற்பனையானது. விற்பனையான அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கடந்த ஏலத்தை விட இந்த ஏலத்தில் ரூ.1 விலை உயர்வு இருந்தது. அடுத்த ஏலம் வருகிற 31, 1-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அந்த ஏலத்தில் 13 லட்சம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது.
    குன்னூர் ஏல மையத்தில் ரூ.15 கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை செய்யப்பட்டது.
    குன்னூர்:

    மலைப்பிரதேசமான நீலகிரியில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதனை நம்பி ஏராளமான விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. நீலகிரி மாவட்ட அனைத்து தேயிலை தொழிற்சாலைகளிலும் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் ஆன்லைன் மூலம் ஏலம் நடைபெறுகிறது.

    இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்து கொண்டு ஏலம் எடுக்கின்றனர். இந்த ஏலத்தில் தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

    குன்னூர் ஏல மையத்தில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் தேயிலைத்தூள் ஏலம் விடப்படுகிறது. அதன்படி 51-வது ஏலம் கடந்த 20, 21-ந் தேதிகளில் நடைபெற்றது.

    இந்த ஏலத்துக்கு 19 லட்சத்து 71 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வந்தது. அதில் 12 லட்சத்து 71 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 7 லட்சம் டஸ்ட் ரகமாவும் இருந்தது.

    ஏலத்தில் 15 லட்சத்து 56 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இதன் ரொக்க மதிப்பு ரூ.15 கோடியே 9 லட்சம் ஆகும். இது 80 சதவீத விற்பனை ஆகும். சி.டி.சி. தேயிலைத்தூளின் உயர்ந்தபட்ச விலை கிலோவுக்கு ரூ.235, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் உயர்ந்தபட்ச விலை கிலோவுக்கு ரூ.236 என இருந்தது.

    சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.80 முதல் ரூ.88 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.112 முதல் ரூ.120 வரையும் ஏலம் சென்றது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.82 முதல் ரூ.90 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.118 முதல் ரூ.124 வரையும் விற்பனையானது.

    இதுவே இந்த ஆண்டின் கடைசி ஏலம் ஆகும். அடுத்த ஆண்டிற்கான முதல் ஏலம் வருகிற 3, 4-ந் தேதிகளில் நடக்கிறது. அந்த ஏலத்துக்கு 17 லட்சத்து 82 கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்ட கழக வளர்ச்சிக்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சோசலிச தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.
    கோத்தகிரி:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சோசலிச தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் கரு.வெற்றிவேல் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கடந்த 1964-ம் ஆண்டு சிரிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு பணி வழங்கப்பட்டது. மேலும் அவை அரசு தேயிலை தோட்டமாக செயல்பட்டு வந்தன. அதைத்தொடர்ந்து கடந்த 1976-ம் ஆண்டு தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகமாக(டேன்டீ) தனிவாரியம் அமைக்கப்பட்டு, நீலகிரியில் நடுவட்டம், கோவையில் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நலிவுற்ற நிலையில் இருந்த அரசு சின்கோனா தோட்ட பகுதிகளையும் இணைத்து சிறப்பாக இயங்கி வந்தது.

    ஆனால் சமீப காலங்களில் டேன்டீ தொழிலாளர்களுக்கு பணபலன்களை வழங்க முடியாமலும், மாத சம்பளத்தை தொழிலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் வழங்க முடியாமலும் நலிவுற்ற நிலையில் டேன்டீ உள்ளது. இதன் காரணமாக பழுதடைந்த தொழிலாளர் குடியிருப்புகளை பராமரித்தல், டேன்டீ தேயிலை தோட்டங்களில் எரு இடுதல், மருந்து அடித்தல், பராமரிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பதால், டேன்டீ தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

    எனவே டேன்டீயை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை காப்பாற்ற தமிழக அரசு வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் டேன்டீயை புணரமைக்க குறைந்தது ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து உதவவேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    ×