search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "allocated"

    பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. #LSPolls #ADMK #PMKConstituencies
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளன. ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது. இதில் அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் சேருவது உறுதி ஆனது.

    இதில் முதல்கட்டமாக அதிமுக-பாமக இடையே இன்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை நந்தனம் அருகே உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில் இன்று காலை கூட்டணி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பாமக தலைவர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.



    இதையடுத்து இரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

    21 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் அதிமுக போட்டியிடும் என்றும், இந்த தொகுதிகளில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

    பாமக போட்டியிடும் 7 தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் தெரிவித்தார். #LSPolls #ADMK #PMKConstituencies

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்ட கழக வளர்ச்சிக்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சோசலிச தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.
    கோத்தகிரி:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சோசலிச தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் கரு.வெற்றிவேல் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கடந்த 1964-ம் ஆண்டு சிரிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு பணி வழங்கப்பட்டது. மேலும் அவை அரசு தேயிலை தோட்டமாக செயல்பட்டு வந்தன. அதைத்தொடர்ந்து கடந்த 1976-ம் ஆண்டு தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகமாக(டேன்டீ) தனிவாரியம் அமைக்கப்பட்டு, நீலகிரியில் நடுவட்டம், கோவையில் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நலிவுற்ற நிலையில் இருந்த அரசு சின்கோனா தோட்ட பகுதிகளையும் இணைத்து சிறப்பாக இயங்கி வந்தது.

    ஆனால் சமீப காலங்களில் டேன்டீ தொழிலாளர்களுக்கு பணபலன்களை வழங்க முடியாமலும், மாத சம்பளத்தை தொழிலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் வழங்க முடியாமலும் நலிவுற்ற நிலையில் டேன்டீ உள்ளது. இதன் காரணமாக பழுதடைந்த தொழிலாளர் குடியிருப்புகளை பராமரித்தல், டேன்டீ தேயிலை தோட்டங்களில் எரு இடுதல், மருந்து அடித்தல், பராமரிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பதால், டேன்டீ தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

    எனவே டேன்டீயை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை காப்பாற்ற தமிழக அரசு வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் டேன்டீயை புணரமைக்க குறைந்தது ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து உதவவேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்க அணைப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சி பணிக்காக ரூ.1¼ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஏலகிரி கோடை விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.
    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அருகே ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏலகிரிமலையில் கோடை விழா நேற்று தொடங்கியது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி வரவேற்றார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரவி, லோகநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சுற்றுலாத்துறை ஆணையர் பழனிகுமார் சிறப்புரையாற்றினார்.

    அமைச்சர் கே.சி.வீரமணி கோடை விழாவை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் பல்துறை பணி விளக்க கண்காட்சியை திறந்து வைத்தார். அமைச்சர் நிலோபர் கபில் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சியினை திறந்து வைத்தார்.

    விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் பேசியதாவது:-

    இந்த கோடை விழாவில் சுற்றுலா பயணிகள், பொது மக்கள் தங்களை புதுப்பித்து கொண்டு உள்ளத்தாலும், இல்லத்தாலும் மகிழ்ச்சி அடைகின்றனர். கோடை விடுமுறையை கொண்டாடி மகிழ்வதால், அடுத்த சில மாதங்களுக்கு தங்களை ஆயத்தப்படுத்தி கொள்ள ஏலகிரியின் இயற்கையும், கோடை விழாவும் வசந்த வாசலாக மக்களுக்கு திகழ்கிறது.

    மற்ற மாநிலங்களை விட தமிழகத்தின் சுற்றுலா தலங்கள் எத்திசையும் புகழ் மணக்கக்கூடிய சிறப்பை பெற்றுள்ளது. இந்தாண்டு வரவு - செலவு திட்டத்தில், சுற்றுலாத் துறைக்கு ரூ.173 கோடியே 42 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாணியம்பாடி வட்டம் ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்க அணைப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சி பணிக்காக ரூ.1 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் வேலூர் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ராஜ்குமார், திருப்பத்தூர் துணை பதிவாளர் பாஸ்கர், ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளவரசன், அன்பரசன், ஜோலார்பேட்டை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.ரமேஷ், ஜோலார்பேட்டை நகர சபை முன்னாள் தலைவர் வசுமதி சீனிவாசன், அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன் மற்றும் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிச்சாண்டி நன்றி கூறினார்.

    விழாவை முன்னிட்டு மங்கல இசை, கிராமிய கலை நிகழ்ச்சிகள், மேஜிக் ஷோ, பல்சுவை நிகழ்ச்சி, லேசர் நடன நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மலர் கண்காட்சியும் இடம் பெற்றது.

    2-வது நாள் நிறைவு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. 
    ×