search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு
    X

    பாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு

    பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. #LSPolls #ADMK #PMKConstituencies
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளன. ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது. இதில் அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் சேருவது உறுதி ஆனது.

    இதில் முதல்கட்டமாக அதிமுக-பாமக இடையே இன்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை நந்தனம் அருகே உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில் இன்று காலை கூட்டணி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பாமக தலைவர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.



    இதையடுத்து இரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

    21 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் அதிமுக போட்டியிடும் என்றும், இந்த தொகுதிகளில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

    பாமக போட்டியிடும் 7 தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் தெரிவித்தார். #LSPolls #ADMK #PMKConstituencies

    Next Story
    ×