search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மத்திய மந்திரி பதவி வேண்டும்- பாரதிய ஜனதாவுக்கு பா.ம.க. திடீர் நிபந்தனை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மத்திய மந்திரி பதவி வேண்டும்- பாரதிய ஜனதாவுக்கு பா.ம.க. 'திடீர்' நிபந்தனை

    • பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. உள்ளிட்ட பிற கட்சிகளுக்கும் விரைவில் தொகுதிகளை இறுதி செய்ய உள்ளனர்.
    • கோவையில் 18-ந்தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்கு முன்பாக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விடும்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி விட்டன. கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் கட்சிகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டன.

    பாராளுமன்ற தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகின்றன.

    பாராளுமன்ற தேர்தலில் மும்முனை போட்டி உருவாகி உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணி உருவாகி உள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்து எந்தெந்த தொகுதிகள் என உடன்பாடு ஏற்பட்டு வருகின்றன. அ.தி.மு.க., பா.ஜனதாவை விட தி.மு.க. தேர்தல் களத்தில் வேகமாக செல்கிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வை இழுக்க பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை ரகசியமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில் பா.ஜ.க.வும் பா.ம.க.வை தன் பக்கம் இழுக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. பா.ஜ.க. நிர்வாகிகள் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெறவே விரும்புகிறார். அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய 2 கட்சிகளும் பா.ம.க.விடம் தொடர்ந்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினாலும் இதில் எந்த உடன்பாடும் இதுவரையில் எட்டப்படவில்லை.

    பா.ஜனதாவிடம் பா.ம.க. 8 தொகுதிகள், ஒரு மேல்சபை எம்.பி. மூலம் மத்திய மந்திரி சபையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதற்கு பா.ம.க. கேட்கும் தொகுதியில் 7 கொடுக்க பா.ஜ.க. சம்மதம் தெரிவித்து விட்டது. ஆனால் மேல்சபை எம்.பி.க்கு உறுதி சொல்லவில்லை. மேல்சபை எம்.பி. மூலம் கேபினட் மந்திரி சபையில் இடம் பெறுவதற்கான கோரிக்கையை பா.ஜ.க. ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

    அதற்கு பா.ஜனதா தரப்பில் முதலில் கூட்டணிக்கு வாருங்கள். மேல்சபை எம்.பி., கேபினட் மந்திரி பற்றி பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    அதே நேரத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் வெற்றி பெற்று வந்தால் மத்திய மந்திரி பதவி குறித்து பேசலாம் எனவும் தமிழக கூட்டணி கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க பிரதமர் மோடி விரும்புவதாகவும் அதனால் மத்திய மந்திரி பதவி குறித்து பின்பு பேசிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் பா.ம.க.வை சமாதானப்படுத்தி கூட்டணிக்குள் கொண்டு வர பா.ஜ.க. தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியை விட வலுவான கூட்டணியை உருவாக்கும் வகையில் பா.ம.க.விடம் தொடர்ந்து பா.ஜ.க. பேசி வருகிறது.


    தமிழகத்தில் பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் அதற்கு முன்னதாக பா.ம.க.-பா.ஜ.க. இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் தீவிரமாக உள்ளனர்.

    16 அல்லது 17-ந்தேதிக்குள் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு விடும். மத்திய மந்திரி சபையில் இடம் கொடுப்பது தொடர்பான ஒரே விவகாரத்தில்தான் இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடித்து வருகிறது. அதற்கும் விரைவில் தீர்வு காணப்படும் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. உள்ளிட்ட பிற கட்சிகளுக்கும் விரைவில் தொகுதிகளை இறுதி செய்ய உள்ளனர்.

    கோவையில் 18-ந்தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்கு முன்பாக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விடும்.

    இதே போல அ.தி.மு.க. கூட்டணியும் தொகுதி பங்கீட்டில் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டன. தே.மு.தி.க.வுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு விடும். எனவே அடுத்து வருகின்ற சில நாட்களில் தமிழக தேர்தல்களம் மேலும் சூடு பிடிக்கும்.

    Next Story
    ×