என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • படுக்கை வசதியுடன் கூடிய பேருந்து இயக்க அரசு முன்வருமா?
    • புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்குவது குறித்து பரிசீலனை.

    சென்னை:

    சட்ட சபையில் கேள்வி நேரத்தில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, காரைக்குடியில் இருந்து சென்னைக்கு படுக்கை வசதியுடன் கூடிய பேருந்து இயக்க அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் தேவகோட்டையில் இருந்து காரைக்குடி, சென்னைக்கு படுக்கை வசதியுடன் கூடிய பேருந்து இயக்கப்பட்டு வருவதாகவும், இந்நிலையில் காரைக்குடியில் இருந்து கூடுதலாக படுக்கை வசதி கொண்ட பேருந்து இயக்க அவசியம் இல்லை என பதிலளித்தார்.

    மேலும், பழைய பேருந்து களை மாற்றும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அதிக பேருந்துகள் வாங்காத காரணத்தால் பழைய பேருந்துகளை மாற்றுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளதாகவும், அந்த பணிகள் முடிந்தப்பின் புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனவும் பதில் அளித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாலையை விரிவுபடுத்திட வேண்டும்.
    • ஊராட்சிக்கு ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.

    சென்னை:

    சட்டசபையில் பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி (திமுக) பேசியதாவது:-

    எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 3 லட்சம் உள்ளது. இது போதாது. ரூ.5 லட்சமாக உயர்த்தி தர வேண்டும். பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் சாலையை விரிவுபடுத்திட வேண்டும்.

    தாம்பரம் மாநகராட்சி பகுதிகளிலுள்ள பாதாள சாக்கடை திட்டங்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அதை புதுப்பிக்க வேண்டும். 135 ஏக்கர் பரப்பளவில் உள்ள திருநீர்மலை ஏரி மிக பெரிய ஏரி. சென்னை சேத்துப் பட்டில் படகு குழாம் உள்ளது போன்று சென்னை புறநகர் பகுதியில் படகு குழாம் எதுவும் இல்லை. எனவே அதை திருநீர்மலை ஏரியில் அமைக்க வேண்டும்.

    அங்கு பொதுமக்கள் நடைபயிற்சி செய்யும் வகையில் மின்விளக்கு வசதி அமைக்க வேண்டும். திரிசூலம் ஊராட்சிக்கு ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைக்க, மீனம்பாக்கம் முதல் இரும்புலியூர் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு இ.கருணாநிதி எம்.எல்.ஏ. பேசினார்.

    • முழுமையான தகவல்களை உள்வாங்கி பேசி இருக்கவேண்டும். தவறான தகவல்களை கூறி மக்களை குழப்பியுள்ளார்.
    • முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் மீது உரிமை மீறல் பிரச்சனையை பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் கொண்டுவருவார்கள்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போ அவர் கூறியதாவது:-

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காத தமிழக அரசு, மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். வன்னியர்களின் வாக்குகளை வாங்கிய தி.மு.க. இட ஒதுக்கீடு மூலம் பிரதிநிதித்துவம் பெறுவதை தி.மு.க. விரும்பவில்லை. இதற்கு தி.மு.க. சொல்லும் காரணம் சரியானது அல்ல. கல்வி, வேலைவாய்ப்பில் பின் தங்கிய நிலையில் உள்ளதை புள்ளி விவரங்களின் மூலம் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று தி.மு.க. கூறியதை பா.ம.க., வன்னியர் சங்கம் ஏற்காது. இதற்காக நான் மாபெரும் போராட்டங்களை நடத்தியுள்ளேன். தற்போது வன்னியர் உள் இடஒதுக்கீடு வழங்க கோரி மாபெரும் போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

    10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினால் வன்னியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். இப்படி ஒரு பொய்யான தகவலை அவர் கூறியுள்ளார். உயர்கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படாமல் இருந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ( வன்னியர்) வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து முழுமையான தகவல்களை உள்வாங்கி பேசி இருக்கவேண்டும். தவறான தகவல்களை கூறி மக்களை குழப்பியுள்ளார்.

    முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் மீது உரிமை மீறல் பிரச்சனையை பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் கொண்டுவருவார்கள். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து சி.பி. ஐ. விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகிறேன். இது குறித்து பா.ம.க. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

    இதில் நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம். மது தொடர்பான அனைத்து தீமைகளுக்கும் தி.மு.க. தான் காரணம். சாராயத்தை அறியாமல் இருந்த ஒரு தலைமுறைக்கு 1972-ம் ஆண்டு அறிமுகம் செய்தது தி.மு.க.தான் காரணம். எனவே முழு மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்தவேண்டும். நெல்லுக்கு தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை குறைவு. குவிண்டால் ஒன்றுக்கு ரூ 800 உயர்த்தி தரவேண்டும். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாலாற்றின் குறுக்கே எத்தனை அணைகள் வேண்டுமானாலும் கட்டலாம் என்று கூறியது இரு மாநில உறவுவை கெடுக்கிறது. 22 அணைகள் கட்டியபின்பு இனி அணை கட்டினால் பாலாறு பாலைவனமாகும். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சட்டப்பேரவையில் எதிர்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு கொடுப்பதில்லை. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. சட்டப்பேரவை 100 நாட்கள் நடத்தவேண்டும். சட்டப்பேரவை நிகழ்வுகளை அடுத்தகூட்டத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்யவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • மாநகராட்சி சார்பில் வீடு வீடாக முகக்கவசம் வழங்கப்பட்டது.
    • மூச்சு திணறல் உள்ளதா? என்று சுகாதார துறையினர் ஆய்வு.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஜெபமாலை புரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அமைந்துள்ளது. தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை திடீரென குப்பை கிடங்கில் தீ பற்றி எரிய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் காரணாக மளமளவென தீ பரவி பற்றி எரிந்தன.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்த ஆணையர் மகேஸ்வரி விரைந்து சென்று தீ அணைக்கும் பணியை துரிதப்படுத்தினார்.

    இந்த தீ விபத்து காரணமாக புகை மண்டலமாக மாறியதால் ஜெபமாலைபுரம் மற்றும் சுற்றியுள்ள சீனிவாசபுரம், மேலவீதி, வடக்கு வீதி உள்ளிட்ட பகுதி மக்கள், மாணவர்கள் அவதியடைந்தனர்.

    மேலும் துர்நாற்றத்துடன் கூடிய புகை பரவியதால் வாகன ஓட்டிகள் முகத்தை மூடியப்படி சிரமத்திற்கு இடையே சென்று வருகின்றனர். புகைமூட்டம் காரணமாக அந்தப் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு மாநகராட்சி சார்பில் வீடு வீடாக முகக்கவசம் வழங்கப்பட்டது.

    மேலும் யாருக்காவது மூச்சு திணறல் உள்ளதா? எனவும் வீடு வீடாக சென்று சுகாதார துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலத்த காற்றால் குப்பை கிடங்கில் தீ பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    • சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    கூடலூர்:

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது.

    இதேபோல் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்திற்கு ரெட்அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் அங்கு கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 4 அடி உயர்ந்துள்ளது. குறிப்பாக இன்று ஒரேநாளில் 2 அடி உயர்ந்துள்ளது. நேற்று காலை 119.90 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 121.80 அடியாக உயர்ந்துள்ளது.

    நேற்று 3579 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 5389 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1133 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2984 மி.கனஅடியாக உள்ளது.

    கூடுதல் தண்ணீர் திறப்பால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு 102 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 48.29 அடியாக உள்ளது. வரத்து 695 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 1778 மி.கனஅடி.

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. போதிய அளவு மழை இல்லாத காரணத்தால் கடந்த சில நாட்களாக ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வந்தது.

    கடந்த வாரம் ஆறு நீரின்றி முழுமையாக வறண்டு போனது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததன் காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆற்றில் லேசான நீர்வரத்து ஏற்பட்டது. இந்த நீர்வரத்து வருசநாடு கிராமத்துடன் நின்று போனது.

    இந்நிலையில் வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை பெய்ததால் வைகை ஆற்றில் மீண்டும் நீர்வரத்து ஏற்பட்டது. இந்த தண்ணீர் அய்யனார்புரம் கிராமத்தை கடந்து சென்றது. தொடர்ந்து வெள்ளிமலை வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    கனமழை காரணமாக சின்னசுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதியான மேகமலை வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதன்காரணமாக சின்னசுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்து பெய்வதால் சின்னசுருளி அருவியில் எந்த நேரத்திலும் வெள்ளம் ஏற்படலாம் என்ற நிலை உள்ளதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மழை குறைந்து அருவியில் சீரான நிலை ஏற்படும் வரையில் இந்த தடை உத்தரவு தொடரும் என்று மேகமலை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சின்னசுருளி அருவியில் வரும் நீர்வரத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இதேபோல் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியிலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    • கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
    • 8 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் நேற்று சோதனையிட்டனர்.

    சேலம்:

    சேலத்தை அடுத்த வலசையூரை சேர்ந்தவர் சபரி சங்கர் (35) . இவர் சேலம், தருமபுரி, நாமக்கல் , ஆத்தூர், திருச்சி உள்பட 11 இடங்களில் எஸ்.வி.எஸ். நகை கடை என்ற பெயரில் நகை கடைகளை நடத்தி வந்தார். இதில் கவர்ச்சி கரமான திட்டங்களை அறிவித்து ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் முதலீடு பெற்றார்.

    பின்னர் சில மாதங்களுக்கு முன்பு கடையை பூட்டி விட்டு சுமார் 100 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துவிட்டு தலைமறை வாகிவிட்டார் .

    இது குறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவரை புதுச்சேரியில் வைத்து தருமபுரி போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கோவை சிறையில் வைத்து சபரிசங்கரை கைது செய்தனர். பின்னர் கடந்த 24-ந் தேதி சபரிசங்கரிடம் விசாரணை நடத்த 4 நாட்கள் காவலில் எடுத்தனர்.

    தொடர்ந்து சேலம் அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி, ஆத்தூர், தாரமங்கலம் உள்பட 5 இடங்களில் உள்ள எஸ்.வி.எஸ். நகைகடைகளை திறந்து 8 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் நேற்று சோதனையிட்டனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வருவாய்துறையினருடன் இணைந்து கடைகளை திறந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சபரி சங்கரை அந்த கடைகளுக்கு அழைத்து வந்து கடையில் பொருட்களை கணக்கெடுத்தனர். அதில் தங்க நகைகள் பெரிய அளவில் இல்லை என்று கூறப்படுகிறது. 70 கிலோவிற்கு மேல் வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளிக்கட்டிகள் அங்கு இருந்ததாகவும், அதனை பறிமுதல் செய்ததாகவும் போலீசார் கூறி உள்ளனர்.

    தொடர்ந்து சபரி சங்கரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, நகை கடைகளில் வேலை செய்த மேலாளர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அவர்களுக்கு கார்களை வாங்கி கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

    இதனால் அவர்கள் கடைகளில் இருந்த நகைகளை அள்ளி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த கடைகளின் மேலாளர்களை பிடித்தால் மேலும் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் அவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். 

    • போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • போக்குவரத்துதுறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    கோவை:

    தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்குவதற்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடையானது கடந்த 18-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.

    இதையடுத்து தமிழகத்தில் அரசின் உத்தரவை மீறி வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறதா என கண்காணித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கோவை மாவட்டத்திலும், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இன்று காலை சென்னையில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகு ளத்துக்கு செல்வதற்காக கோவை வழியாக ஒரு ஆம்னி பஸ் வந்தது.

    இந்த ஆம்னி பஸ் கோவை திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகே இன்று காலை வந்தது. இதனை அறிந்த போக்குவரத்து துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த பஸ்சில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். பின்னர் பஸ்சை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பஸ் மத்திய போக்குவரத்துதுறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    அந்த பஸ்சில் இருந்த கேரளாவை சேர்ந்த 21 பயணிகளும் கீழே இறக்கப்பட்டு, அவர்களை சொந்த ஊர் அனுப்புவதற்கான நடவடிக்கையை அந்த ஆம்னி பஸ் நிர்வாகம் செய்து வருகிறது.

    இதுகுறித்து கோவை போக்குவரத்துத்துறை அதிகாரி ஆனந்த் கூறும்போது, `வெளிமாநில பஸ்கள் தமிழ்நாட்டில் பயணிகளை ஏற்றக்கூடாது. தமிழ்நாட்டு வழியாக மற்ற மாநிலங்களுக்கு சென்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் தான் தற்போது இந்த ஆம்னி பஸ்சை நிறுத்தியுள்ளோம். இந்த பஸ்சில் கேரளா செல்லக்கூடிய 21 பயணிகள் உள்ளனர். அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைளை அந்த ஆம்னி பஸ் நிர்வாகம் செய்து தரும்' என்றார்.

    • வருகிற ஜூலை 1 -ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    • 34 சுற்றுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது. இந்த பணி வருகின்ற ஜூலை 1 -ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    உடுமலை அமராவதி வனச்சரகங்கள் மற்றும் வெளிமண்டல பகுதியான கொழுமம், வந்தரவு வசனங்களில் உள்ள 34 சுற்றுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக வனப்பகுதியில் 53 நேர்கோட்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது. வன பணியாளர்கள் செல்போன் செயலி மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அப்போது முதல் மூன்று நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் வீதம் மூன்று நாட்களில் 15 கிலோமீட்டர் தூரம் சென்று சுற்றுகளில் காணப்படுகின்ற புலி, சிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தடயங்கள் குறித்து பதிவு செய்யப்படும்.

    அடுத்த மூன்று நாட்களில் நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்படும் வனவிலங்குகளின் காலடிகுளம்பினங்கள், பறவைகள், மனிதர்கள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் ஆகியவை குறித்து பதிவு செய்யப்படும். அதே பாதையில் திரும்பி வரும்போது ஒவ்வொரு 400 மீட்டரிலும் உள்ள தாவர வகைகளும் கணக்கீடு செய்யப்பட உள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • கடந்த 2 நாட்களாக நீலகிரி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
    • 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.57 அடியாக உயர்ந்து உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நீலகிரி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 7,781 கனஅடியாக நீர் வரத்து அதிகரித்து கொண்டிருக்கிறது. காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 60.24 அடியாக உயர்ந்து உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.96 அடியாக உள்ளது. இதேபோல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.57 அடியாக உயர்ந்து உள்ளது.

    • வெள்ளப்பெருக்கின் காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.
    • சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று காலையிலும் சாரல் மழை பெய்து வந்த நிலையில் மதியம் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இதையடுத்து மலையோர கிராமங்களில் மக்கள் உஷார் படுத்தப்பட்டனர். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மலையோர பகுதியான குற்றியாறு, மோதிரமலை, தச்ச மலை பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் அங்குள்ள தரைபாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்றது. இதனால் 12 மலையோர கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். காளிகேசம் பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் டெம்போவில் வந்த தொழிலாளர்களை காட்டாற்று வெள்ளம் இழுத்துச்சென்றது. டெம்போவில் சிக்கி தவித்த தொழிலாளர்களை வனத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் கனமழை கொட்டியதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து நேற்று மாலை உபரிநீர் திறக்கப்பட்டது.

    இரு அணைகளில் இருந்தும் 4,008 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் குழித்துறை ஆறு, கோதை ஆறு, வள்ளியாறு, பரளி ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. குழித்துறை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.

    கோதை ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. திற்பரப்பு அருவியை மூழ்கடித்து தண்ணீர் கொட்டுவதால் அங்குள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் அருவியல் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.70 அடியாக இருந்தது.

    அணைக்கு 3,511 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து மதகுகள் வழியாக 636 கன அடி தண்ணீரும், உபரிநீராக 3,008 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.27 அடியாக உயர்ந்தது. அணைக்கு 2,123 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முக்கடல் அணை நீர்மட்டம் 20.90 அடியாக உயர்ந்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் அணைகளை கண்காணித்து வருகிறார்கள்.

    அணைகளுக்கு வரும் தண்ணீருக்கு ஏற்ப தண்ணீரை திறந்துவிட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மறுஅறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்றும் 4 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 28.8,

    பெருஞ்சாணி 32.4,

    சிற்றார் 1-16.4,

    சிற்றார் 2-18.2,

    கன்னிமார் 6.2,

    கொட்டாரம் 3,

    மயிலாடி 4.8,

    நாகர்கோவில் 5.4,

    பூதப்பாண்டி 12.4,

    முக்கடல் 10.4,

    பாலமோர் 52.4,

    தக்கலை 10,

    குளச்சல் 5,

    இரணியல் 6,

    அடையாமடை 21,

    குருந்தன்கோடு 3.8,

    கோழிப்போர்விளை 12.4,

    மாம்பழத்துறையாறு 6.4,

    களியல் 18.6,

    குழித்துறை 12.4,

    புத்தன் அணை 29.2,

    சுருளோடு 6.2,

    ஆணைக்கிடங்கு 5,

    திற்பரப்பு 14.8,

    முள்ளங்கினாவிளை 14.8.

    • 79 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சிலர், கடந்த 18, 19-ந் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில், உடல்நலம் பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவம னையில், 229 பேர் சேர்க்கப்பட்டனர்.

    கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட கடும் உபாதைகளால், நேற்று இரவு வரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 135 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    கள்ளக்குறிச்சி மருத்துவமணையில் 40 பேர், சேலம் 11 பேர், விழுப்புரத்தில் 2 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். தற்போது கள்ளக்குறிச்சியில் 48 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 9 போர், விழுப்புரத்தில் 2 பேர், சேலத்தில் 19 பேர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 79 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறாமல் இருந்த, 77 பேரை அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸ்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    • இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
    • 2022-ம் ஆண்டில் ஆண்டிற்கான ஏற்றுமதி குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    * திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது. இதில் முதன்மையானது தொழில் துறை.

    * உலகம் முழுவதும் இருந்து பல தொழில் நிறுவனங்கள் தமிழகத்திற்கு தொழில் தொடங்க வருகிறார்கள்.

    * இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

    * 2022-ம் ஆண்டில் ஆண்டிற்கான ஏற்றுமதி குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது.

    * புத்தொழில் வளர்ச்சியில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

    * மின் வாகனங்கள் உற்பத்தியில் ஓசூர் முக்கிய பங்காற்றி வருகிறது.

    * ஓசூரில் விமான நிலையம் அமைப்பது அவசியம் என அரசு கருதுகிறது.

    * ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது.

    * கோவையில் அறிவிக்கப்பட்ட நூலக கட்டுமான பணி விரைவில் தொடங்கும்.

    * திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்றார்.

    ×