என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஆட்களை திரட்ட ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளும் படாத பாடுபடுவார்கள்.
    • பரிசு பொருட்கள் என்று எதையாவது கட்டாயம் கொடுக்க வேண்டும்.

    சென்னை:

    அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு ஆட்களை திரட்ட ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளும் படாதபாடுபடுவார்கள்.

    கை செலவுக்கு பணம், பிரியாணி, குவார்ட்டர், புடவைகள், பரிசு பொருட்கள் என்று எதையாவது கட்டாயம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கூட்டத்தை சேர்ப்பது கஷ்டம்.

    இந்த நிலையில், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் வேளச்சேரியில் நடந்தது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுப.வீரபாண்டியன், கரு.பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டது. அப்போது நாற்காலியில் அமர்ந்து இருந்தவர்கள் நாற்காலிகளை தூக்கி குடையாக பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்கள்.

    பலர் நாற்காலிகளை தலையில் வைத்தபடியே மெல்ல அங்கிருந்து நகர்ந்தார்கள். கூட்டத்தில் அமர்ந்திருந்த நாற்காலிகளையே தூக்கிச் சென்றதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

    ஆனால் உண்மையிலேயே கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு நாற்காலிகள் இலவசம் தான் என்றார் கவுன்சிலரும் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட செயலாளருமான வேளச்சேரி ஆனந்த்.

    தனது 176-வது வார்டுக்கு உட்பட்டவர்களை கூட்டத்துக்கு வருமாறும், கூட்டத்தில் புது பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் கடைசியில் அந்த நாற்காலிகளை எடுத்து செல்லலாம் என்றும் கூறி இருந்தாராம். இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

    கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு எதையாவது கொடுப்பதை விட நாற்காலிகளை கொடுத்தால் வீடுகளுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று கருதினேன். இதற்காக மொத்தமாக 2 ஆயிரம் நாற்காலிகளை கம்பெனியில் இருந்து ரூ.400 விலைக்கு வாங்கினேன்.

    இப்படி செய்ததால் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும் இடையில் எழுந்து சென்றால் நாற்காலிகளில் யாராவது அமர்ந்து விடுவார்கள். அப்புறம் நாற்காலி நமக்கு கிடைக்கிறது என்று கூட்டம் முடியும் வரை நாற்காலியை விட மாட்டார்கள். வெளியே செல்ல மாட்டார்கள் என்றார். கூட்டத்தை கவர எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க?

    • கேலோ இந்தியா போட்டிக்கு ம.பிக்கு மத்திய அரசு ரூ. 25 கோடி கொடுத்து, தமிழகத்திற்கு கொடுத்தது ரூ. 10 கோடி.
    • ராயபுரம், கொடுங்கையூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

    தமிழக சட்டப்பேரவையில் விளையாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

    • விளையாட்டு வீரர்களுக்கு கலைஞர் ஸ்போர்ட்ஸ்கிட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • திமுக ஆட்சிக்கு வந்த பின் விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 102 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    • ஓட்டப்பந்தயம் என்றால் உசேன் போல்ட், கிரிக்கெட் என்றால் தோனி அதேபோல் அரசியல் களத்தில் முதல்வர் ஸ்டாலின்.

    • கடந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் 12 பேர் பங்கேற்றிருந்தனர். இந்த முறை பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 16 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.

    • பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ. 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    • கேலோ இந்தியா போட்டிக்கு ம.பிக்கு மத்திய அரசு ரூ. 25 கோடி கொடுத்து, தமிழகத்திற்கு கொடுத்தது ரூ. 10 கோடி.

    • முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் கூடுதல் விளையாட்டுகள் இந்தாண்டு சேர்க்கப்படும்.

    • அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.

    • கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்படும்.

    • உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 210 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    • ராயபுரம், கொடுங்கையூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    • கோவில்களில் ஓதுவாா் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்படும்.
    • 50 கோவில்களில் 100 இசைக் கலைஞா்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படுவா்.

    சென்னை:

    தமிழக சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகளில் கூறியிருப்பதாவது:-

    ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் பயன்பெறும் 17 ஆயிரம் கோவில்களுக்கு வைப்புத் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயா்த்தி அளிக்கப்படும். இதற்காக ரூ.85 கோடி அரசு நிதியாக அளிக்கப்படும்.

    இந்த திட்டத்தில் நிகழாண்டு ஆயிரம் நிதி வசதியற்ற கோவில்களும் இணைக்கப்படும். அத்தகைய கோவில்களில் உள்ள அா்ச்சகா்களுக்கு மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

    ஆறு கோவில்களில் பக்தா்களுக்கான ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏதுவாக பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு ரூ.177.10 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் நிகழாண்டில் அழகா்கோவில், மருதமலை முருகன் கோவிலுக்கு விரிவுபடுத்தப்படும்.

    பழனியில் உள்ள முருகன் கோவில் சாா்பாக நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டியுடன் இனி மதிய உணவும் வழங்கப்படும். நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் ஐந்து கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

    அதன்படி, கோவை ஈச்சனாரி விநாயகா் கோவில், சோளிங்கா் லட்சுமி நரசிம்மசுவாமி கோவில், குலசை முத்தாரம்மன் கோவில், கும்பகோணம் உப்பிலியப்பன் கோவில், திருச்சி தாயுமானசுவாமி கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம் அளிக்கப்படும்.

    ஒருவேளை மட்டும் அன்னதானம் வழங்கும் திட்டம், சென்னை மதுரவாயல் மாா்க்கசகாயேஸ்வரா், புழல் திருமூல நாதசுவாமி, திருச்சி லால்குடி பிடாரி அய்யனாா், பெரம்பலூா் அபராதரட்சகா், திருப்பூா் அழகு நாச்சியம்மன், கடலூா் காரத்தொழுவு அழகா் கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

    சென்னை மாநகரம் மற்றும் புறநகரில் அமைந்துள்ள 115 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். கோவை லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், தென்காசி இலஞ்சிகுமாரா் கோவிலுக்கு புதிய தங்கத்தேர்களும், திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயா், குமாரவயலூா் முருகன், மணப்பாறை நல்லாண்டவா், திருநாகேஸ்வரம் கோவில்களுக்கு புதிதாக வெள்ளித்தோ்கள் செய்யப்படும்.

    ராமேசுவரம், காசி ஆன்மிகப் பயணத்துக்கு நிகழாண்டு 420 மூத்த குடிமக்கள் அழைத்துச் செல்லப்படுவா். கடலூா் மாவட்டம் வடலூா் அருட்பிரகாச வள்ளலாா் அவதரித்த இல்லம் மறுசீரமைத்து கட்டப்படும்.

    மேலும், 22 வழிபாட்டு மடங்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். கோவில்களின் ஆவணங்களை காக்கும் நோக்குடன் முதல் கட்டமாக முக்கிய கோவில்களின் ஆவணங்கள் பாதுகாக்கப்படும்.

    மயிலாப்பூா் கபாலீஸ்வரா், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி, ஸ்ரீவில்லிபுத்தூா் நாச்சியாா், சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி, கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோவில்களின் கோபுரங்கள், விமானங்கள் இரவு நேரங்களில் ஒளிரும் வகையில் ஒளிரூட்டப்படும்.

    19 கோவில்களில் புதிய ராஜகோபுரங்களும், 17 கோவில்களில் புதிதாக திருமண மண்டபங்களும், 23 கோவில்களில் புதிய வணிக வளாகங்களும், 35 கோவில்களில் அடிப்படை வசதிகளும், 12 கோவில்களில் அா்ச்சகா்கள், பணியாளா்கள் குடியிருப்புகளும் ஏற்படுத்தப்படும்.

    பக்தா்களின் வசதிக்காக, பழனி, திருவண்ணாமலையில் புதிதாக தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் ரூ.23 கோடியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்.

    திருவாரூா் தியாகராஜ சுவாமி, திருவாலங்காடு ஆலாங்காட்டு ஈசுவரா் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடத்தப்படும். 50 கோவில்களில் 100 இசை கலைஞா்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படுவா். பழனி, சென்னை மயிலாப்பூா் கோவில்களில் ஓதுவாா் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறி உள்ளார்.

    • இன்று காலை மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஒரு மர்ம போன் வந்தது.
    • கோபுரத்தின் உள்புறம், வெளிப்புறம் பகுதிகளில் சோதனை கருவிகள் மூலம் சோதனையில் ஈடுபட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் காந்திஜி சாலை - பட்டமங்கலம் சாலை சந்திப்பில் மணிக்கூண்டு கோபுரம் அமைந்து உள்ளது. இந்த மணிகூண்டு கோபுரம் மயிலாடுதுறையின் பழமையும் நினைவு கோபுர தூணாகவும் இருந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஒரு மர்ம போன் வந்தது.

    அதில் பேசிய மர்மநபர் மயிலாடுதுறை மணிக்கூண்டு கோபுரத்தில் வெடிகுண்டுகள் வைத்து இருப்பதாக கூறினார்.

    இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா தலைமையில் நாகை மாவட்ட வெடிகுண்டு நிபுணர்கள் மணிக்கூண்டு கோபுரத்திற்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    அவர்கள் கோபுரத்தின் உள்புறம், வெளிப்புறம் பகுதிகளில் சோதனை கருவிகள் மூலம் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் முடிவில் எதுவும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு புரளி என தெரிய வந்தது.

    வெடிகுண்டு உள்ளதாக புரளியை பரப்பியவர் யார்? என போலீசார் விசாரித்து தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் மணிக்கூண்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • 2025-2026-ல் குவிண்டால் ஒன்றுக்கு ரு. 2,500 வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது காலம் கடந்த ஒன்றாக அமையும்.
    • தமிழக அரசு, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரம் என்பதை கவனத்தில் கொண்டு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்ருக்கு ரூ.130-ம் அறிவித்திருப்பது போதுமானதல்ல. அதாவது இயற்கைச் சீற்றம், பொருளாதாரமின்மை, உழவுக்கான கூலி, விதை நெல் விலை, நடவுக்கூலி, அறுவடைக்கூலி, உரம் போன்ற பல்வேறு காரணங்களால் நெல் விவசாயத்தில் முதலீடு செய்த பணம் கிடைப்பதில் சிரமம் உள்ளது.

    அது மட்டுமல்ல நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,405 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,450 என்றும் கொள்முதல் செய்திட அறிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக தி.மு.க தேர்தல் நேரத்தில் அறிவித்த குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என்பதை மூன்றாண்டு கடந்தும் நடைமுறைப்படுத்த முன்வராமல் அடுத்த ஆண்டு அதாவது 2025-2026-ல் குவிண்டால் ஒன்றுக்கு ரு. 2,500 வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது காலம் கடந்த ஒன்றாக அமையும்.

    எனவே தமிழக அரசு 2024-2025 நடப்பாண்டிலேயே குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 வழங்க வேண்டும்.

    மேலும் தமிழக அரசு, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரம் என்பதை கவனத்தில் கொண்டு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மேல்முறையீடு செய்தவர்களில் 1 லட்சத்து 48 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
    • மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1.15 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர்.

    சென்னை :

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி அடிப்படையில் குடும்பத் தலைவிகள் மாதம் தோறும் ரூ.1000 பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 2024-25ஆம் நிதியாண்டில் ரூ.13,722 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம். செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்த பின் 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலம் மேல்முறையீடு செய்யலாம்.

    மேல்முறையீடு செய்தவர்களில் 1 லட்சத்து 48 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1.15 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர்.

    திருநங்கைகள், பெண்கள் 150 நபர்களுக்கு பொது சேவை வாகனம் (PSV) பேட்ஜ்களுடன் கூடிய இலகுரக மோட்டார் வாகனங்களில் சுயசார்ப்பு திறன் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது. 100 திருநங்கைகள் மற்றும் பெண்களுக்கு 3 சக்கர வாகன ஓட்டுர் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சட்டசபையில் சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

    • இளைய சக்தியான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.
    • ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட சபையில் 110-வது விதியின் கீழ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புக்கும், தொழில் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைக்கப்போகும் மாபெரும் அறிவிப்பு ஒன்றையும், தமிழ்நாட்டிலுள்ள இளைஞர்களின் அறிவு வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்போகும் அறிவுலகம் வரவேற்கும் முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    நமது திராவிட மாடல் ஆட்சி அமைந்தபிறகு, தமிழ்நாடு அனைத்து  துறைகளிலும் வளர்ந்து வருகிறது. அதில் மிக முக்கியமானது பெருந்தொழில்கள். வளர்ச்சிமிகு தமிழ்நாடாகவும், அமைதிமிகு தமிழ்நாடாகவும் இருப்பதால், தமிழ்நாட்டை நோக்கி பல்வேறு நிறுவனங்கள் உலகம் முழுவதும் இருந்து தொழில் தொடங்குவதற்கு வந்து கொண்டே இருக்கிறார்கள்.

    இந்த தொழில் நிறுவனங்கள் மூலமாக தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சி அடைகிறது என்பது மட்டுமல்ல; தமிழ்நாட்டின் இளைய சக்தியான இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

    2022-ம் ஆண்டிற்கான ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு 'நம்பர்-1' மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது. மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், மின்னணுப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.

    புதுதொழில் வளர்ச்சிக்கான மாநிலங்களின் தரவரிசையில், 2020-ம் ஆண்டில் கடைசி நிலையில் இருந்த தமிழ்நாடு, தற்போது சிறந்த செயற்பாட்டாளர் அந்தஸ்தை பெற்று முதலிடம் பெற்றுள்ளது.

    இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ம் ஆண்டிற்குள் 'ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக' உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை விரைவில் அடைவதற்காக, தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து வருவதை இதன்மூலம் அறியலாம்.

    அனைத்து மாவட்டங்களிலும் தொழில்களை பரவலாக உருவாக்கி வருகிறோம். இதில் மின்னணு மற்றும் மின் வாகனங்கள் உற்பத்தித் துறையில் ஓசூர் கடந்த சில ஆண்டுகளில் முதலீடுகளை அதிகளவில் ஈர்த்து வருகிறது.

    இப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்டு வேகமாக வளர்ந்து வரும் ஓசூர் நகரத்தினை, தமிழ்நாட்டின் முக்கியமான பொரு ளாதார வளர்ச்சி மையமாக உருவாக்கு வதற்காக, அங்கு நவீன உட்கட்டமைப்புகளை அமைக்கும் நோக்கில், பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில், ஓசூர் நகரத்திற்கான ஒரு புதிய பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு, அது முடிவடையும் தருவாயில் உள்ளது. ஓசூர் மட்டுமல்லாது, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி பகுதியின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஓசூரில் ஒரு விமான நிலையம் அமைப்பது அவசியம் என இந்த அரசு கருதுகிறது.

    ஒசூரில் இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்பதனை இந்த மாமன்றத்தில் நான் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    அடுத்து, 2-வது அறிவிப்பை வழங்க விரும்புகிறேன். திராவிட இயக்கம் என்பது மாபெரும் அறிவியக்கம். அதனால் தான் திராவிட முன்னேற்ற கழகத்தின் முதல் தலைமை நிலையத்துக்கு பேரறிஞர் அண்ணா, 'அறிவகம்' என்று பெயர் சூட்டினார்.

    தற்போதைய தலைமை நிலையத்துக்கு 'அறிவாலயம்' என்று பெயர் சூட்டினார் கலைஞர்.

    திராவிட முன்னேற்ற கழகம் எங்கெல்லாம் கிளை பரப்பியதோ, அங்கெல்லாம் படிப்பகங்கள் உருவாக்கப்பட்டன. அரசியல் இயக்கமாக மட்டுமல்லாமல், தமிழ் இலக்கிய இயக்கமாகவும் வளர்ந்தது.

    வாசிப்பதற்கும் சுவாசிப்பதற்கும் வேறுபாடு காணமுடியாத வாழ்க்கை வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா. பாதி வரை படித்த புத்தகங்களின் மீதியை படிப்பதற்கு ஏதுவாக அறுவை சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்னவர் பேரறிஞர் அண்ணா.

    அந்த பேரறிஞரின் நூற்றாண்டைக் கொண்டாடி மகிழ்ந்த தலைவர் கலைஞர், கோட்டூர்புரத்தில் எட்டு மாடிகள் கொண்ட, ஒரே நேரத்தில் 1200 பேர் உட்கார்ந்து படிக்கிற வகையில், 3 லட்சத்து 33 ஆயிரம் சதுர அடிகள் கொண்ட நூலகத்தை உருவாக்கி, அதற்கு 'அண்ணா நூற்றாண்டு நூலகம்' என்ற பெயரையும் சூட்டி மகிழ்ந்தார்.

    அந்த வகையில், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வசிப்பவர்களும் நூலகங்கள் மூலம் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த மதுரையில் 15-7-2023 அன்று கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டு, என்னால் திறந்து வைக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக, கோயம்புத்தூர் வாழ் பொதுமக்களுக்கும் இளைய தலைமுறைக்கும் பயன்படும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம், கலைஞர் பெயரில் அமைக்கப்படும் என்று இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தோம். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

    அந்த வரிசையில் காவிரி கரையில் அமைந்த மாநகரமான திருச்சி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்பதை இந்த அவைக்கு மட்டற்ற மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    பல்வேறு வசதிகளை உள்ளடக்கி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியப் பகுதியில் ஓர் அறிவுக் களஞ்சியமாக அது அமைந்திடும். தினந்தோறும் திட்டங்கள் தீட்டும் நாளாக, விடியும் நாளாக, விடியல் தரும் நாளாக உருவாக்கி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தண்ணீரை வித்தியாசமாக குடிப்பது போன்று சேட்டைகள் செய்ய ஆரம்பித்தார்.
    • மேஜையின் அடியில் படுத்துக்கொண்டார்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நேற்று வட மாநில வாலிபர் ஒருவர் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தார்.

    திடீரென விலங்குகள் நடப்பது போன்று நடைமேடையில் நடந்தார். பின்னர் நாய் போல குரைத்தார். குழாயில் வந்த தண்ணீரை வித்தியாசமாக குடிப்பது போன்று சேட்டைகள் செய்ய ஆரம்பித்தார்.

    இதனை வேடிக்கை பார்த்த பயணிகள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் வட மாநில வாலிபர் செயலைப் பார்த்து அச்சமடைந்தனர்.

    வட மாநில வாலிபர் எங்கே நம்மிடம் வந்து விடுவாரோ என்று எண்ணி பயணிகள் மெல்ல மெல்ல நகர்ந்தனர்.

    ரெயில்வே போலீசார் அவரது அருகே சென்றனர். கையில் லத்தியுடன் வருவதை பார்த்த வட மாநில வாலிபர் ஓட்டம் பிடித்தார். மேலும் ரெயில்வே அதிகாரி அலுவலகத்திற்குள் புகுந்தார். அங்கிருந்த பெட் துணி போடப்பட்டிருந்த மேஜையின் அடியில் படுத்துக்கொண்டார்.

    பின்னர் அந்த துணியை விலக்கி விலக்கி பார்த்தார். இதனால் சந்தேகம் அடைந்த ரெயில்வே போலீசார் வட மாநில வாலிபரிடம் இருந்த பையை ஆய்வு செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

    அவரிடம் இருந்த ஒரு சீட்டில் செல்போன் எண் ஒன்று இருந்தது. அதனை ரெயில்வே போலீசார் தொடர்பு கொண்டனர்.

    செல்போனில் பேசியவர் வடமாநில வாலிபர் தனது தம்பி என்று கூறினார். இதனையடுத்து ரெயில்வே போலீசார் அவரை சம்பவ இடத்திற்கு வரும்படி கூறினர்.

    இதற்கிடையில் அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு இருக்கலாம் என கருதி ரெயில்வே டாக்டரை வரவழைத்து பரிசோதனை செய்தனர்.

    ரெயில்வே டாக்டர் போலீசாரிடம் வட மாநில வாலிபருக்கு ஒன்றும் இல்லை நன்றாக தான் உள்ளார் என்று கூறினார். ஏதோ விரக்தியில் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார் என்று கூறினார்.

    வாலிபரின் அண்ணனிடம் நடந்தவைகள் பற்றி ரெயில்வே போலீசார் கூறினர். அந்த வாலிபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரபு குமார் ஷர்மா என்றும், தற்போது இவருக்கு வேலை இல்லாததால் அண்ணனைத் தேடி வந்ததும் தெரியவந்தது.

    ஏன் இப்படி இவர் செய்கிறார் என்று ரெயில்வே போலீசார் கேட்டபோது தனக்கு தெரியவில்லை என்று வாலிபரின் அண்ணன் கூறினார்.

    இதனையடுத்து கடிதம் மூலம் எழுதி வாங்கிக்கொண்டு ரெயில்வே போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் போலீசார் மற்றும் பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரித்தால் தான் உண்மை வெளியே வரும்.
    • கள்ளச்சாராய சம்பவத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும்.

    எழும்பூர்:

    சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 61 பேரும் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர்.

    இன்று காலை தொடங்கி உள்ள போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.

    இந்நிலையில், அ.தி.மு.க.வினர் தொடங்கியுள்ள உண்ணாவிரத போராட்டத்துக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். போராட்டத்தில் பங்கேற்றுள்ள எடப்பாடி பழனிசாமியை சந்திந்து பேசிய பிரேமலதா பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    * கள்ளக்குறிச்சியில் நடந்தது சாதாரண விஷயமா? இது குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டாமா?

    * இந்த போராட்டம் இதோடு முடிந்து விடாது.

    * நாளை கவர்னரை சந்தித்து தே.மு.தி.க. சார்பில் மனு அளிக்க உள்ளோம்.

    * கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரித்தால் தான் உண்மை வெளியே வரும்.

    * கள்ளச்சாராய சம்பவத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும்.

    * அ.தி.மு.க.வுக்கு விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றார்.

    • அரசு பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி.
    • கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் கவிந்து விபத்துக்குள்ளானது.

    குன்னம்:

    குமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு ஒரு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டு வந்தது. பஸ்சை கன்னியாகுமரி எஸ்.டி.மந்தாரு வாவரை பகுதியை சேர்ந்த அமர்நாத்(வயது36) என்பவர் ஓட்டினார்.

    பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். திருச்சியை அடுத்து பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் தனியார் பள்ளி அருகே பாலம் கட்டுமான பணி நடக்கிறது.

    இந்த பகுதியில் போக்குவரத்து சர்வீஸ் ரோட்டில் திருப்பி விடப்பட்டது. இன்று அதிகாலை இந்த பகுதியில் பஸ் வந்தபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் கவிந்து விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ்சில் வந்த குமரி மாவட்டம் விளவங்கோடு அருகே உள்ள மருதங்கோடு பால்குளத்து விளை வீட்டை சேர்ந்த ரெத்தினன் மகன் அஜின்மோன்(25) என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மேலும் பயணிகள் சுமார் 8 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    பலியான அஜின்மோன் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அஜின்மோன் பலியான தகவல் அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் பெரம்பலூருக்கு விரைந்துள்ளனர்.

    இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விபத்துக்குள்ளான பஸ்சை மீட்டு போக்குவரத்தை சரிசெய்தனர். தொடர்ந்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருச்சி மாநகரில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் எனும் மாபெரும் அறிவிப்பை சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
    • திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் டெல்டா மாவட்ட மக்களின், இளைஞர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

    சென்னை:

    திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக சட்டப்பேரைவையில் 110 விதியின் கீழ் இன்று அறிவித்துள்ளார். இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நன்றி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் "திருச்சி மாநகரில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் அமைக்கப்படும்" எனும் மாபெரும் அறிவிப்பை சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.

    அறிவார்ந்த சமுதாயத்தின் அடையாளச் சின்னத்தை திருச்சியில் கட்டமைக்கும் முதலமைச்சருக்கு, அமைச்சர் கே.என்.நேரு ஆகியோருக்கு திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் டெல்டா மாவட்ட மக்களின், இளைஞர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.

    • பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை.
    • சட்ட திருத்தம் நாளை மறுதினம் பேரவையில் கொண்டு வரப்பட உள்ளது.

    சென்னை:

    சட்ட சபையில் கேள்வி நேரத்தில், தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், தேன்கனிக்கோட்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அதிக மக்கள் தொகை கொண்ட பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், தமிழகத்தில் புதிய நகராட்சி, பேரூராட்சிகளை மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் தரம் உயர்த்துவது குறித்த சட்ட திருத்தம் நாளை மறுதினம் பேரவையில் கொண்டு வரப்பட உள்ளதாகவும் கூறினார்.

    மேலும், அதன் மூலம் சில பகுதிகளில் மக்கள் தொகை மற்றும் வருவாய் குறைவாக இருந்தாலும் தேவை ஏற்பட்டால் அவற்றை நகராட்சியாகவோ மாநகராட்சியாகவோ தரம் உயர்த்தலாம் என சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    ×