என் மலர்
உள்ளூர் செய்திகள்
- படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழப்பு.
- உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு போலீசார் விசாரணை.
கடலூர் அருகே பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையை தெரு நாய் ஒன்று கடித்து குதறி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திட்டக்குடி அடுத்த கொடிக்களம் கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தெரு நாய் ஒன்று கடித்து கொன்றுள்ளது.
குழந்தையின் தாய் வீட்டின் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், வீட்டிற்குள் புகுந்து குழந்தையை நாய் கடித்து குதறியுள்ளது.
இதையடுத்து, படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
நாய் கடித்து உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதல் முறையாக சைக்கிள் கண்டுபிடிக்கும் பொழுது ஒரு சக்கரம் பொருத்தி சைக்கிள் தயாரிக்கப்பட்டது.
- ஸ்ரீதரன் என்ற முதியவர் ஒருசக்கர சைக்கிள் வாகனத்தை தானே வடிவமைப்பு ஒட்டி வருகிறார்.
ஆரம்பக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒற்றை சக்கர சைக்கிளை ஓட்டி அசத்தும் முதியவரை கண்டு பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் பகுதியில் காப்பகத்தில் வசிக்கும் ஒரு ஸ்ரீதரன் என்ற முதியவர் ஒருசக்கர சைக்கிள் வாகனத்தை தானே வடிவமைப்பு ஒட்டி வருகிறார்.
தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரத்தில் முக்கிய சாலைகளில் அந்த சக்கர சைக்கிளை அவர் ஓட்டி வரும் நிலையில் அதனை பலரும் வியந்து பார்த்து ஆச்சரியத்துடன் பாராட்டி வருகின்றனர்.
வயது மூப்பிலும் தன்னால் ஒரு சக்கர சைக்கிளை ஓட்ட முடிவது மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்வதாகவும் ஆரம்ப கால பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையிலும் உள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
முதல் முறையாக சைக்கிள் கண்டுபிடிக்கும் பொழுது ஒரு சக்கரம் பொருத்தி சைக்கிள் தயாரிக்கப்பட்டது. ஆனால் ஒரு சக்கர சைக்கிள் என்பது அனைவராலும் பயன்படுத்த முடியாத நிலையில் பின்பு படிப்படியாக மற்றொரு சிறிய சக்கரம் பொருத்தியும் பின்பு இரு சக்கரமாக சைக்கிள் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- 105 ஹெக்டேர் அளவிற்கு மணல் அள்ளப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை கடிதத்தில் தெரிவித்துள்ளது.
- கொள்ளை போனது கோபாலபுரத்தின் சொத்துக்கள் அல்ல, தமிழக மக்களுக்குச் சேர வேண்டிய தமிழகத்தின் கனிம வளங்கள்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில், மணல் கொள்ளையின் மூலம் சுமார் 4,730 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக, அமலாக்கத்துறை விசாரணையின் மூலம் தெரிய வந்தது. சட்டவிரோதமாக மணல் கொள்ளையடித்த விவகாரத்தில், அரசு அதிகாரிகளின் உடந்தையோடு தனியார் மணல் ஒப்பந்ததாரர்கள் மோசடியில் ஈடுபட்டு உள்ளதாகவும், தமிழக அரசு, மணல் கொள்ளை தொடர்பாக, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்தது. தற்போது, அமலாக்கத்துறை, தமிழக காவல்துறை இயக்குனருக்கு எழுதிய ஜூன் 14 தேதியிட்ட கடித விவரங்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கடிதத்தில், சட்டவிரோத பண பரிமாற்றச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த 9 மாதங்களாக நடந்த விசாரணையில், கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே, அனுமதிக்கப்பட்ட அளவை விட 23.64 லட்சம் யூனிட் அதிகமாக மணல் அள்ளப்பட்டதாகவும், பொதுப்பணித்துறை அனுமதி அளித்த இடத்தில், மணல் ஒப்பந்ததாரர்கள் ராட்சத இயந்திரங்களை வைத்து சட்ட விரோதமாக மணல் அள்ளி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்ட நான்கு மணல் குவாரிகளில், ஒப்பந்ததாரர்கள் 30 மடங்கு அதிகமாக மணல் அள்ளியிருக்கின்றனர். 4.9 ஹெக்டேர் அளவில் மட்டுமே மணல் அள்ள அனுமதிக்கப்பட்ட இடத்தில், 105 ஹெக்டேர் அளவிற்கு மணல் அள்ளப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை கடிதத்தில் தெரிவித்துள்ளது. மொத்தமாக ஐந்து மாவட்டங்களில், 190 ஹெக்டேர் அளவில், 28 பகுதிகளில் மணல் அள்ள ஒப்பந்ததாரர்களுக்கு அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், சட்ட விரோதமாக 987 ஹெக்டேர் பரப்பளவில் மணல் அள்ளப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை கடிதத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் அமலாக்கத்துறை தொழில்நுட்ப ரீதியாக, தெளிவான சாட்டிலைட் புகைப்படங்களை வைத்து மணல் அள்ளப்பட்டதற்கு முன்பாகவும், சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்ட பின்பும் எவ்வாறு இருந்தது என்பதை ஆய்வு செய்து அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது. ஜிபிஎஸ் கருவிகள் கொண்டு ஆய்வு மேற்கொண்டதில், 273 மணல் இயந்திரங்களை பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 16 நபர்கள், இந்த ராட்சத மணல் அள்ளும் இயந்திரத்தை வாங்கியதாகவும் அமலாக்கத்துறை தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், அமலாக்கத்துறை தனது கடிதத்தில், நான்கு நிறுவனங்களைக் குறிப்பிட்டு அதில் யார் யாருக்கு மணல் அள்ளவும், மணல் எடுத்துச் செல்லவும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு அரசுக்குப் பெருமளவில் இழப்பு ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாது, மணல் ஒப்பந்ததாரர்கள், சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே அமலாக்கத்துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில், மணல் ஒப்பந்ததாரர்களின் 130 கோடி ரூபாய் அளவிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அதில், சுமார் 128 கோடி ரூபாய் மதிப்பிலான 209 மணல் அள்ளும் இயந்திரங்களையும் முடக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் மணல் ஒப்பந்ததாரர்களின் 35 வங்கி கணக்குகளிலிருந்த, 2.25 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
முழுக்க முழுக்க அதிகாரிகளின் துணையோடு நடந்துள்ள இந்த மணல் கொள்ளை தொடர்பாக, ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி அரியலூர், கரூர், தஞ்சாவூர், திருச்சி, வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள், அமலாக்கத்துறை விசாரணைக்காக ஆஜராகியிருந்தார்கள். ஆனால், தமிழக அரசுக்குப் பேரிழப்பு ஏற்படுத்தியுள்ள இந்த மணல் கொள்ளை தொடர்பாக, திமுக அரசு இதுவரை, எந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போதே, ஆட்சிக்கு வந்த அடுத்த பத்து நிமிடத்தில், திமுகவினர் மணல் கொள்ளை அடிக்கலாம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக தனது கட்சிக்காரர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற, இன்று தமிழகத்தின் கனிம வளங்களைப் பலியாக்கிக் கொண்டிருக்கிறது. மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, திமுக அரசு தவறி விட்டதாக அமலாக்கத்துறையே நேரடியாகக் கடிதம் எழுதியும், இன்னும் மூடி மறைக்கப் பார்க்கிறது திமுக
கொள்ளை போனது கோபாலபுரத்தின் சொத்துக்கள் அல்ல, தமிழக மக்களுக்குச் சேர வேண்டிய தமிழகத்தின் கனிம வளங்கள் என்பதை, திமுக அரசு நினைவில் கொள்ள வேண்டும். உடனடியாக, மணல் கொள்ளையில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, குற்றம் செய்தவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
- ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேஷ் என்பவர் உயிரிழப்பு.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18-ந் தேதி விற்பனை செய்யப்பட்ட எத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
இதற்கிடையே, மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ள 90க்கும் மேற்பட்டோரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களில் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனால், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது.
- இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 61 பேரும் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர்.
- உண்ணாவிரத போராட்டத்துக்கு பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
கள்ளச்சாராய மரணத்திற்கு சிபிஐ விசாரணை கோரி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 61 பேரும் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர்.
இன்று காலை தொடங்கி உள்ள போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.
இந்நிலையில், அ.தி.மு.க.வினர் தொடங்கியுள்ள உண்ணாவிரத போராட்டத்துக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
இதனையடுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் அதிமுகவினரின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளார்.
அந்த எக்ஸ் பதிவில், "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து, மாண்புமிகு எதிர்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான சனநாயகப்படுகொலையாகும்.
இந்திய ஒன்றிய பாஜக அரசின் சனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து எதிர்க்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவினைத் தெரிவித்து, சனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று சீமான் பதிவிட்டுள்ளார்.
- தமிழக அரசிடம் மத்திய அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்யும்படி கேட்டுள்ளது.
- இதுபோன்ற பொய் குற்றச்சாட்டு நிறுவனத்தை பாதிக்கும்.
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில், உதிரி பாகங்களை கொண்டு ஐ-போன் தயாரிக்கும் பணியை செய்து வருகிறது.
உலகின் முன்னணி நிறுவனமாக கருதப்படும் இந்நிறுவனம் வேலைவாய்ப்பு தொடர்பாக விளம்பரம் செய்துள்ளது.
அப்போது திருமணம் ஆன இரண்டு பெண்கள் வேலை கேட்டு நேரில் சென்றுள்ளனர். கேட் அருகில் நின்ற அதிகாரிகள் திருமணம் ஆகிவிட்டதா? என்று கேட்டுள்ளனர். அப்போது அந்த இரண்டு பெண்களும் திருமணம் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளனர். அப்படி என்றால் இங்கு உங்களுக்கு வேலை கிடையாது எனத் தெரிவித்துள்ளனர்.
இது அந்த பெண்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இது தொடர்பான செய்தி மெல்லமெல்ல பரவியது. ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் இந்த செய்தியை மிகப்பெரிய அளவில் கட்டுரையாக எழுதி உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் திருமணம் செய்த பெண்களுக்கு வேலைகிடையாது என்ற பாகுபாடு கடைபிடிக்கப்படுவதாக விமர்சித்திருந்தனர்.
இந்த சம்பவம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்யும்படி கேட்டுள்ளது.
இது தொடர்பாக பாக்ஸ்கான் நிறுவனம் விளக்கம் அளித்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-
திருமணமான பெண்களை வேலைக்கு எடுப்பது இல்லை என்ற நிபந்தனை எங்களின் கொள்கையே கிடையாது.
வேலைக்கு தேர்வு ஆகாத சிலர் இதுபோன்ற குற்றச்சாட்டை கிளப்பி உள்ளனர். இதுபோன்ற பொய் குற்றச்சாட்டு நிறுவனத்தை பாதிக்கும்.
பாதுகாப்பு கருதி பாலினம், மதம் பார்க்காமல் அனைத்து பணியாளர்களும் தங்கம் உள்ளிட்ட எந்த உலோக பொருட்களையும் அணிவதை தவிர்க்க வேண்டும் என்ற விதி மட்டுமே பின்பற்றப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
- விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் செல்போன், பேப்பர், பேனா, இதர பொருட்கள் எடுத்து வர அனுமதி இல்லை.
- நுழைவு கூப்பனில் உள்ள நபர்கள் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா நாளை மற்றும் ஜூலை 3-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடக்கிறது.
மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் செல்போன், பேப்பர், பேனா, இதர பொருட்கள் எடுத்து வர அனுமதி இல்லை. நுழைவு கூப்பனில் உள்ள நபர்கள் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை நடைபெற உள்ள ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் விஜய் 10 நிமிடங்கள் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சி தொடங்கிய பின் முதல் முறையாக ஊக்கத்தொகை வழங்கி, விஜய் பேச உள்ளதால் அரசியல் கருத்துகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் அம்பேத்கர், பெரியார், காமராஜர் பற்றி படியுங்கள். பணம் வாங்காமல் வாக்களியுங்கள் என பெற்றோருக்கு வலியுறுத்த மாணவர்களிடம் விஜய் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- செங்கோலை எதிர்ப்பதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையே திராவிட முன்னேற்ற கழகம் எதிர்க்கிறது.
- அரசியலுக்காக எந்த கீழ்த்தரமான கருத்துக்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் வெளிப்படுத்துவார்கள்.
பாராளுமன்றத்தில் செங்கோலை அகற்றும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.செங்கோல் குறித்த சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரியின் கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
'செங்கோல் என்பது கொடுங்கோலின் சின்னம் கிடையாது' 'செங்கோல் என்பது மக்களாட்சியின் சின்னம்' எந்த தமிழ் அரசரும் மக்கள் ஆட்சி மீறி ஆட்சி நடத்தவில்லை.
இது தமிழ் மண்ணின் நீதி தவறாமல் ஆட்சி நடப்பது என்பதற்கு ஆன குறியீடு தான் செங்கோல். ஆக பாராளுமன்றமும் அப்படி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாரத பிரதமர் அதை நிறுவினார்.
கொடுங்கோல் ஆட்சி செய்து கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இந்த செங்கோலின் தன்மையும் புனிதத்துவமும் தெரியாது என்பதை அவர்கள் இன்று வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
செங்கோலை எதிர்ப்பதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையே திராவிட முன்னேற்ற கழகம் எதிர்க்கிறது. அரசியலுக்காக எந்த கீழ்த்தரமான கருத்துக்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் வெளிப்படுத்துவார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.
சமாஜ்வாதி காட்சியை சார்ந்தவர்கள் எதிர்க்கலாம். ஆனால் நம் தமிழகத்தைச் சார்தவர்கள் எதிர்க்கலாமா? திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மையான பொய் முகம் இன்று கிழித்தெரியப்பட்டிருக்கிறது.
தமிழும் தமிழ் கலாச்சாரமும் அவர்களின் அரசியலுக்காக தான் அவர்களின் உணர்வுகளுக்காக அல்ல!.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகச் செயல்படுத்தி வருகிறது.
- நமது திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது,
இன்று MSMEDay!
நமது திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS), பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்கப் புத்தொழில் நிதி (TN SC/ST Fund), சந்தைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகள், தமிழ்நாடு தென்னை நார்க் கொள்கை 2024, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை – 2023
உள்ளிட்ட பல ஆக்கப்பூர்வமான திட்டங்களைக் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகச் செயல்படுத்தி வருகிறது.
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் MSME-க்கள் இன்னும் பெரும்பங்காற்றத் தேவையான ஊக்குவிப்பையும் உதவிகளையும் தொடர்ந்து வழங்குவோம்! என்று கூறியுள்ளார்.
- 30-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 28°-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
30-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே, இன்று முதல் 1-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், தமிழகத்தில் ஒரிரு இடங்களில், 2° - 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33°-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 28°-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 28°-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
- சி.பி.சி.ஐ.டி போலீசார் 16 பேரை கைது செய்தனர்.
- மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்து 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், மற்றும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் நேற்று வரை 63பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முதலில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல்கட்டமாக கருணாபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி, அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன், சேஷசமுத்திரத்தை சேர்ந்த சின்னதுரை, விரியூரை சேர்ந்த ஜோசப் என்ற ராஜா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதை அடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் மெத்தனால் சப்ளை செய்த புதுவை சேர்ந்த மாதேஷ் , மற்றும் சென்னையை சேர்ந்த சிவக்குமார், பன்சிலால், கவுதம், தேவபாண்டலத்தை சேர்ந்த சடையன், ரவி, சேஷசமுத்திரம் செந்தில், மல்லிகைப்பாடி ஏழுமலை உள்பட 16 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டகோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி, அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன், சேஷசமுத்திரத்தை சேர்ந்த சின்னதுரை, விரியூரை சேர்ந்த ஜோசப் என்ற ராஜாதுவை சேர்ந்த மாதேஷ் , மற்றும் சென்னையை சேர்ந்த சிவக்குமார், பன்சிலால், கவுதம், தேவபாண்டலத்தை சேர்ந்த சடையன், ரவி, சேஷசமுத்திரம் செந்தில், மல்லிகைப்பாடி ஏழுமலை ஆகிய 12 பேரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கள்ளக்குறிச்சி நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது. அதன் பின்னர்சி.பி.சி.ஐ.டி போலீசார் 12 பேரையும் எத்தனை நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்குவார் என்பது தெரியவரும்.
- அடகு நகைகளில் சுரண்டு மோசடி சம்பவம் நடைபெற்று வருகிறது.
- பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை அமைந்துள்ளது. சுற்றுவட்டார கிராமங்களான குன்றக்குடி, நேமம், அரிபுரம், கே.ஆத்தங்குடி, வைரவன்பட்டி, சிறுகூடல் பட்டி, என்.புதூர், மாங்கொம்பு உள்ளிட்ட ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இந்த வங்கி மூலம் பயனடைந்து வருகிறார்கள்.
குறிப்பாக தங்களது தங்க நகைகளை இந்த வங்கிக் கிளையில் அடகு வைத்து பணம் பெற்றுச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேமம் கிராமத்தைச் சேர்ந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர் தான் அடகு வைத்த நகையை பிள்ளையார்பட்டி வங்கிக் கிளையில் இருந்து மீட்டுச் சென்றார்.
வீட்டிற்குச் சென்ற அவர் நகையை அணிந்து பார்த்த போது 4 கிராம் எடை குறைந்து இருப்பது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் வங்கிக் கிளையில் சென்று கேட்ட போது, பணியில் இருந்த அதிகாரிகள் உள்பட ஊழியர்கள் யாரும் சரிவர பதிலை அளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் அந்த வாடிக்கையாளர் அந்த வங்கிக் கிளையின் நகைகள் அடகு வைத்த தனக்கு தெரிந்தவர்கள் நண்பர்களிடம் இதுபற்றி கூறியுள்ளார்.
இதையடுத்து சுற்றுப்புற கிராம மக்கள் அனைவரும் வங்கி முன்பு திரண்டனர். அப்போது அவர்கள் தங்கள் அடகு வைத்த நகையை எடை சரிபார்ப்பு மற்றும் மீட்பதற்காக வந்தபோது அனைவரது நகைகளிலும் இரண்டு கிராம் முதல் 8 கிராம் வரையிலான எடை குறைந்து இருப்பது வாடிக்கையாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டது.
இதனால் பிள்ளையார்பட்டி வங்கிக் கிளை முன்பு தகவல் அறிந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
தாங்கள் நகையை அடகு வைக்கும் போது வங்கியில் எழுதி தரப்பட்டிருக்கும் எடைக்கும், மீட்டுக் கொண்டு வந்த பிறகு சரிபார்க்கும் போது உள்ள எடைக்கும் எட்டு கிராம் வரையில் குறைவாக வித்தியாசம் காணப்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த வங்கிக் கிளையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் வாடிக்கையாளர்கள் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நகையை அடகு வைத்து பணம் பெற்று வருகிறார்கள்.
இந்தநிலையில் கடந்த ஒரு வருட காலமாக இது போன்று அடகு நகைகளில் சுரண்டு மோசடி சம்பவம் நடைபெற்று உள்ளதாக வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நகைகளை வைக்கும் போது வங்கியில் தரப்படும் கணக்கு சான்று அட்டையிலும் மோசடியாக ஏற்கனவே எழுதப்பட்டிருப்பதை வெள்ளை மை கொண்டு அழித்து புதிதாக எடை எழுதி தரப்பட்டிருப்பதாக ஆதாரத்துடன் வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.
வங்கிகளில் அடகு வைத்த வாடிக்கையாளர்களின் அனைவரது நகைகளிலும் எடை குறைந்து காணப்படுவதால் இதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்று இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து வங்கி கிளையின் மூத்த மேலாளரிடம் கேட்ட போது, அனைத்து வாடிக்கையாளர்களின் நகை எடை குறைவது சம்பந்தமாக கணக்கீடுகள் நடைபெற்று வருவதாகவும், போலீசில் முறையாக புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், மண்டல அலுவலகத்திற்கும், தலைமை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து சிறப்பு அதிகாரிகள் குழு வங்கிக்கு வருகை தர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் வாடிக்கையாளர் களுக்கு எந்த விதமான நஷ்டமும் இன்றி அவர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அதுவரை வாடிக்கையாளர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.






