என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பாடம் சொல்லித்தர ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார்.
- பள்ளியில் அனைத்து அடிப்படை வசதிகளும் இருந்தும் மாணவர் சேர்க்கை இல்லை.
மதுரை:
மதுரை மாவட்டம் பி.ராமநாதபுரத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் 1, 3, 5 ஆகிய வகுப்புகளில் தலா ஒருவர் மட்டுமே படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் சொல்லித்தர ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். அவர்தான் பள்ளியின் தலைமை ஆசிரியரும் கூட. சிறுமிகள் முறையே 3 மற்றும் 5-ம் வகுப்புகளும், சிறுவன் ஒன்றாம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
மேலும் இந்த 3 மாணவர்களுக்கும் அருகில் பாப்பையாபுரத்தில் உள்ள பள்ளியில் இருந்து காலை உணவு திட்டம் மூலம் உணவு சமைத்துக் கொண்டு வரப்படுகிறது. மதிய உணவு அருகில் உள்ள சிலைமலைபட்டியில் இருந்து கொண்டு வரப்படுகிறது. பள்ளியில் அனைத்து அடிப்படை வசதிகளும் இருந்தும் மாணவர் சேர்க்கை இல்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "எங்கள் கிராமத்தில் 150 பேர் வசித்து வருகிறோம். ஆனால் பெரும்பாலானோர் வேலைக்காக குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டனர். அதனால் குறைந்த அளவே மக்கள் வசித்து வரும் நிலையில் பள்ளி செல்லும் மாணவர்கள் அதிகம் இல்லாததால் சேர்க்கை குறைவாக உள்ளது" என்றனா்.
- தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
- நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை:
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து, மேற்கு தொடர்ச்சி மலையில் காணும் இடமெல்லாம் வெள்ளியை உருகிவிட்டது போல ரம்மியமாக காட்சியளிக்கிறது.
ஓடைகளில் நீர்வரத்து, அதிகரித்ததால் நேற்று முன்தினமும் நொய்யல் ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதியல் கன மழை கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாக நொய்யல் ஆற்றுக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரித்தது. வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணை நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேறி, பேரூர் குளம், குறிச்சி குளம், சொட்டையாண்டி குட்டை உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.
இதனால் குனியமுத்தூர் தடுப்பணை, சுண்ணாம்பு காளவாய் தடுப்பணை, புட்டுவிக்கி தடுப்பணைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் புதுக்குளம், உக்குளம், கோளராம்பதி, நரசாம்பதி, குமாரசாமி, செல்வ சிந்தாமணி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது.
குளத்திற்கு செல்லும் ராஜவாய்க்கால், தடுப்பணைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆபத்தை உணராமல் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பது, செல்பி எடுப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் எங்கு செல்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டியது அவசியமாகும். போலீசாரும், நீர்நிலை பகுதிகளில் ரோந்து சென்று, ஆபத்தை உணராமல் தண்ணீரில் இறங்குபவர்களை தடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக, இங்குள்ள தடுப்பணைகள், குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் அலர்ட் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 471 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
சின்கோனா 64
சின்னக்கல்லார்-93
வால்பாறை 72
வால்பாறை தாலுகா-69
சிறுவாணி அடிவாரம்-63
- போலீசார் இதுவரை சுமார் 86 பேரை கைது செய்துள்ளனர்.
- கைது செய்யப்பட்ட 3 பேரும் சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே கள்ளச்சாராயத்தை தடுக்கும் பொருட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் வியபாரம் செய்வோர் மற்றும் அதனை கடத்துபவர்களை உடனடியாககைது செய்ய வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜித் சதுர்வேதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் இதுவரை சுமார் 86 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பிரபல கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டன் (வயது42) என்பவரை சங்கராபுரம் போலீசார் கள்ளச்சாராய வழக்கில் அழைத்து வந்து போலீஸ் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டன் போலீஸ் நிலையத்திலிருந்து திடீரென தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த தகவல் வெளியானதால் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் தப்பிஓடிய கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டனை தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஏற்கனவே சேஷசமுத்திரம் கிராமத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 40-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் அக்கிராமத்தில் மட்டும் 4 பேர் இதுவரை உயிரிழந்தனர். இதனிடையே சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சின்னதுரை, செந்தில், ராஜா ஆகிய 3 பேரும் சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- தற்போது பகல் நேரத்திலும் விலங்குகள் உலா வரத் தொடங்கி உள்ளன.
- விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். இரவு நேரத்தில் மட்டும் ஊருக்குள் உலா வந்த வனவிலங்குகள் தற்போது பகல் நேரத்திலும் உலா வரத் தொடங்கி உள்ளன.
இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
குன்னூர் அருகே உள்ள பழத்தோட்டம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கரடிகள் சுற்றி வருகின்றன. இந்த பகுதியின் அருகே தேயிலை தோட்டம் உள்ளது. சம்பவத்தன்று அந்த தோட்டத்திற்குள் கரடி ஒன்று புகுந்தது.
மக்கள் நடமாட்டம் இருப்பதை அறிந்து கொண்ட கரடி அங்கு மிங்கும் ஓடியது. பின்னர் அங்குள்ள மரத்தின் அருகே சென்று மரத்தை சுற்றியது. மரத்தில் உள்ள கிளைகளை இழுத்தும், தலையை மரத்தின் இடுக்கில் கொடுத்தும் விளையாடி கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக மரத்தின் இடுக்கில் கரடியின் தலை சிக்கிக்கொண்டது. இதனால் கரடி அலறியது. சத்தம் கேட்டு தொழிலாளர்கள் அங்கு சென்று பார்த்தனர். கரடியின் தலை மரத்தின் இடுக்கில் சிக்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கரடி தலையை மீட்பதற்காக போராடியது. அரைமணிநேர போராட்டத்திற்கு பிறகு மரத்தின் இடுக்கில் சிக்கிய தலையை மீட்டது. பின்னர் அங்கிருந்து வனத்திற்குள் ஓடிவிட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழத்தோட்ட பகுதியில் தொடர்ந்து கரடிகள் நடமாடி வருவதால் அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 86 அடியாக இருந்தது.
- தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணைகள் மற்றும் அருவிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்றும் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தொடர் மழை காரணமாக 143 அடி உயரம் கொண்ட பிரதான அணையான பாபநாசத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 86 அடியாக இருந்தது. நேற்று 97.50 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று மேலும் 2.5 அடி உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 99.90 அடியாக இருந்தது. தொடர்ந்து பிற்பகலில் 100 அடியை எட்டியது. கடந்த 3 நாட்களில் 14 அடி உயர்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக பாபநாசம் அணைக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நேற்று இரவு முதல் மழை குறைந்ததால் தண்ணீர் வரத்தும் குறைந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு 2,576 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 804.75 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதேபோல் 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 78.64 அடியாகவும், 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 7 அடி உயர்ந்து 112 அடியாகவும், இன்று மேலும் 2 அடி உயர்ந்து 114.76 அடியாகவும் உள்ளது.
இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான நாலு முக்கில் 42 மில்லி மீட்டர், ஊத்து பகுதியில் 33 மில்லி மீட்டரும், காக்காச்சி பகுதிகளில் 24 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 9 மில்லி மீட்டரும் மழைப் பொழிவு பதிவாகி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா நதி நீர்மட்டம் நேற்று 4 அடி உயர்ந்து 57 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 2 அடி உயர்ந்து 59 அடியாக உள்ளது.
84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 75 அடியாகவும், கருப்பாநதி நீர்மட்டம் 37.40 அடியாகவும் உள்ளது. 36 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 80 அடியாக இருந்த நிலையில் நேற்று 5 அடி உயர்ந்து 85 அடியாகவும், இன்று மேலும் 5 அடி உயர்ந்து 90 அடியாகவும் உள்ளது.
கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 52.50 அடியாகவும், நேற்று 50.50 அடியை எட்டிய நிலையில் இன்று மேலும் ஒரு அடி உயர்ந்துள்ளது. அணை நிரம்ப இன்னும் ஒரு அடியே உள்ளது.
அம்பை வனச்சரகம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழை காரணமாக மாஞ்சோலை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த தடை உத்தரவு மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும்.
- மாணவர் திட்டங்களுக்கு வழிகாட்டுவார்கள்.
- புதிய ஆய்வு துறைகளில் கவனம் செலுத்தும்.
வேலூர்:
வி.ஐ.டி. பல்கலைக்கழகம் நோக்கியாவுடன் 5ஜி மற்றும் அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் பற்றி கூட்டு ஆராய்ச்சி தொடர ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
வி.ஐ.டி. நிறுவனர் வேந்தர் டாக்டர். ஜி.விசுவநாதன், வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன் மற்றும் டாக்டர் ஜி.வி. செல்வம் முன்னிலையில் விஐடி பதிவாளர் டாக்டர் டி.ஜெயபாரதி மற்றும் நோக்கியா பெங்களூரு பல்கலைக்கழக ஒத்துழைப்புத் தலைவர் பொன்னி ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
விஐடி துணைவேந்தர் டாக்டர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் டாக்டர் பார்த்த சாரதி மல்லிக், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் துறை டீன் டாக்டர்.எஸ்.சிவானந்தம் மற்றும் நோக்கியா லேப்ஸ் தலைவர் எஸ்.மீனாட்சி, நோக்கியா விஐடி புரிந்துணர்வு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் க. கோவர்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், விஐடி மற்றும் நோக்கியா ஆகியவை 5ஜி, செயற்கை நுண்ணறிவு (ஏ1உ) மேம்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு, டிஜிட்டல் ட்வின், ரேடியோ அடிப்படையிலான உணர்திறன், இணைக்கப்பட்ட வான்வழி வாகனங்கள், மின்னணு ஆரோக்கியம் மற்றும் ஆட்டோமேஷன் போன்ற புதிய ஆய்வு துறைகளில் கவனம் செலுத்தும்.
நோக்கியாவின் வல்லுநர்கள் விஐடியின் பாடத்திட்டக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள், கற்றல், முன்மாதிரி மற்றும் மாணவர் திட்டங்களுக்கு வழிகாட்டுவார்கள்.
நோக்கியா விஐடி மாணவர்களுக்கான கற்றல் வாய்ப்புகளை வழங்கும் மற்றும் குறுகிய கால தொடர் கல்வி திட்டங்களை கூட்டாக ஏற்பாடு செய்யும் என தெரிவித்தனர்.
- விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறவேண்டும்.
- இந்தியாவில் எந்த மாநிலத்திலும் எந்த கணக்கெடுப்புக்கும் நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.
விழுப்புரம்:
பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து தொகுதிக்குட்பட்ட ஆசூர்கிராமத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வீதி வீதியாக நடந்தே சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறவேண்டும். ஆளும்கட்சியைச் சேர்ந்த 9 அமைச்சர்கள், அவரை சார்ந்தவர்கள் இங்கேயே தங்கியிருந்து மக்களுக்கு எப்படி பணம் கொடுக்கலாம், எவ்வாறு வாக்குகளை பெறலாம் என திட்டமிட்டுள்ளனர்.
சட்டசபையில் முதலமைச்சரும், அமைச்சர்களும் சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு சம்பந்தமாக பல பொய்களை பேசியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
இங்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் நீதிமன்றம் தடை செய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும், மத்திய அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் சொல்கிறார். ஒவ்வொரு சமுதாயமும் என்னென்ன நிலைமையில் இருக்கிறது, எந்தளவுக்கு முன்னேறியிருக்கிறது, அவர்களுக்கான இடஒதுக்கீடு பயன்படுகிறதா என்று மாநில அரசு சர்வே எடுத்தால்தான் தெரியும்.
இதைக்கூட நடத்த மாட்டோம் என்று முதலமைச்சர் சொல்வது மோசமான நிர்வாகமாக பார்க்கிறேன். ஆண்டுதோறும் பறவைகளை கணக்கெடுக்கிறீர்கள், தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் கணக்கெடுக்கப்படுகிறது. ஏன் அரசு பஸ்கள் எவ்வளவு இயக்குவதற்கு தகுதியானது என கணக்கெடுக்கிறீர்கள், மாணவர்களுக்கு நிதி உதவி வழங்க தகுதியான மாணவர்களை கணக்கெடுப்பு செய்கிறீர்கள். ஆனால் தமிழ்நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு மக்கள் எப்படி இருக்கிறார்கள் என கணக்கெடுப்பு நடத்த தயக்கம் காட்டுகிறார்கள். சமூகநீதிக்காகசாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தி.மு.க. அரசு தயக்கம், காட்டுவது ஏன்? இந்தியாவில் எந்த மாநிலத்திலும் எந்த கணக்கெடுப்புக்கும் நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எந்த கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. இஸ்லாமியர்களுக்கும், அருந்ததியர்களுக்கும் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டபோது எந்த கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை, நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனால் வன்னியர்களுக்கு மட்டும் கொடுக்க மறுப்பது ஏன்? உங்களுக்கு அதிகாரம் இருந்தும் இல்லை, இல்லை என்று பொய் சொல்கிறீர்கள். இது இடைத்தேர்தல் பிரச்சனை கிடையாது.சமூகநீதிப் பிரச்சனை.
விரைவில் அனைத்து சமுதாயத்தினரையும் திரட்டிபோராட்டம் நடத்துவோம். கருணாநிதி மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இதற்கு எப்போதோ கையெழுத்து போட்டிருப்பார். ஏனெனில் அவருக்கு சமூகநீதி உணர்வு உண்டு. வன்னியர்களுக்காக இடஒதுக்கீடு பிரச்சனை, சமூகநீதி பிரச்சனை தொடர்பாக நான் தமிழக அமைச்சர்களுடன் விவாதம் நடத்த தயார். சட்டசபையில் சபாநாயகர் யாரையும் பேச விடுவதில்லை. அமைச்சர் பேசக்கூடியதை அவரே பேசி விடுகிறார். ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைய இருப்பதை பா.ம.க. வரவேற்கிறது. அப்போதுதான் அப்பகுதி வளர்ச்சி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாட்டில் நடப்பது தவறு என்று தெரிந்தும் கூட்டணி கட்சியினர் துணை போய் வருகின்றனர்.
- மத்திய அரசின் திட்டங்கள் எதிலும் தமிழ் இல்லை.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பிரசாரம் மேற்கொண்டார்.
தமிழகத்தையும், தமிழர்களையும் காப்பாற்றுவதற்காக நாம் தமிழர் கட்சி சமரசம் இல்லாமல் கடந்த 13 ஆண்டுகளாக எவ்வித அரசியல் பின் புலமும் இல்லாமல் போராடி வருகிறது. நாட்டில் நடப்பது தவறு என்று தெரிந்தும் கூட்டணி கட்சியினர் துணை போய் வருகின்றனர். தேர்தல் களத்தை வைத்து தெளிவு பெற வேண்டும். இந்தியம் என்பது இந்தியை திணிக்கும், திராவிடம் அதை ஆதரிக்கும். அதனால் நாம் தமிழர் தமிழ் தேசியம் பேசுகிறது.
தற்போது எந்த இடத்திலும் தமிழ் இல்லை. திராவிடம் தமிழர்களை பிரிக்கும். தமிழர்கள் ஒன்றுபட்டால் திராவிடம் இருக்காது. மத்திய அரசின் திட்டங்கள் எதிலும் தமிழ் இல்லை. இதை கேட்கும் தைரியம் திராவிடத்துக்கு இருக்கிறதா என்பதை மக்கள் அறிய வேண்டும். தமிழ் தேசியத்துக்கும், திராவிடத்துக்கும் பல்வேறு கருத்தியல் முரண்பாடு உள்ளது. தமிழ்மொழி, பாராளுமன்ற கட்டிடத்தில் இல்லை. அது குறித்தும் தி.மு.க. பேசவில்லை. திராவிடம், தேர்தலின் போது பணத்தை முன்நிறுத்தும். ஆனால் தமிழ் தேசியம் மானத்தையும், தன்மானத்தையும் முன்னிறுத்தும்.
சமூகநீதி குறித்து பேசும் தி.மு.க. மாநில உரிமைகளையெல்லாம் விட்டுக்கொடுத்து விட்டனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது ஏன்? நாங்கள் கேட்பது இடஒதுக்கீடு அல்ல, இடபங்கீடு தான் கேட்கிறோம். இதை மாநில அரசு செய்யலாம் என உரிமை உள்ளபோது, மத்திய அரசிடம் இந்த உரிமையை திராவிடம் அடமானம் வைக்கிறது. அரசியல் மாற்றம் இலவசங்களை அளித்து மக்களை அடிமையாக்கி வைத்துள்ள தி.மு.க.வுக்கு முடிவு கட்ட வேண்டும்.
நடைபெற உள்ள இந்த இடைத்தேர்தலால் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படபோவதில்லை. ஆனால் இத்தேர்தல் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு முன்னோட்டமாக அமையும். எனவே தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழ மக்கள், இத்தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 2 மாத மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ஜெயந்தி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
- வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாலச்சந்தர் ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த தெள்ளுர் கிராமத்தை சேர்ந்த சின்னராஜ்-குமாரி தம்பதியரின் மகள் ஜெயந்தி. இவருக்கும் ராம்பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஜெயந்தியை பிரசவத்துக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி சேர்த்தனர். அங்கு ஜெயந்தியை டாக்டர்கள் பரிசோதித்து வயிற்றில் குழந்தை அசைவற்று இருப்பதாக கூறினர்.
ஆனால் வயிற்றில் அசைவு தெரிவதாக உறவினர்கள் கூறியதன்பேரில் டாக்டா்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் ஜெயந்திக்கு உடல்நலம் மோசமான நிலை ஏற்பட்டதால் அவரை உடனடியாக மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அங்கு ஜெயந்தியை பரிசோதித்த டாக்டர்கள் ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் கோமா நிலைக்கு சென்று விட்டதாக கூறினர். அங்கு 2 மாத மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ஜெயந்தி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இங்கு அவர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். 13 மாதம் ஆகியும் கோமா நிலையிலேயே அவர் உள்ளதால் ஜெயந்தியின் உறவினர்கள், பெற்றோர்கள் சுகாதாரத்துறைக்கு தொடர்ந்து புகார் மனு அனுப்பி உள்ளனர்.
இதையடுத்து வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாலச்சந்தர் ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆரணி அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் மருத்துவ குழுவினர் சம்பவத்தன்று இருந்த டாக்டர்கள், நர்சுகள் மயக்கவியல் டாக்டர் உள்ளிட்டவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பான அறிக்கை சென்னை சுகாதாரத்துறைக்கு தெரிவித்து பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என இணை இயக்குனர் கூறினார்.
இதுகுறித்துதகவல் அறிந்தவுடன் ஜெயந்தியின் பெற்றோர்கள், உறவினர்கள் ஆரணி அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் பரபரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
- வாரந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
- தாம்பரம் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06036), வரும் ஜூலை மாதம் 5, 7, 12, 14, 19, 21 ஆகிய தேதிகள் வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே சார்பில் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தாம்பரம் - நாகர்கோவில், தாம்பரம் - கொச்சுவேலி இடையே ஏற்கனவே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், அந்த வாரந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வரும் வாரந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012), வரும் ஜூலை மாதம் 7, 14, 21 ஆகிய தேதிகள் வரையும், மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை தோறும் காலை 7.45 மணிக்கு புறப்பட்டு அதேநாள் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06011), வரும் ஜூலை மாதம் 8, 15, 22 ஆகிய தேதிகள் வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, தாம்பரத்தில் இருந்து வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை தோறும் இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.40 மணிக்கு கேரள மாநிலம் கொச்சுவேலி செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06035), வரும் ஜூலை மாதம் 4, 6, 11, 13, 18, 20 ஆகிய தேதிகள் வரையும், மறுமார்க்கமாக, கொச்சுவேலியில் இருந்து வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.35 மணிக்கு தாம்பரம் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06036), வரும் ஜூலை மாதம் 5, 7, 12, 14, 19, 21 ஆகிய தேதிகள் வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், நிகழ்ச்சியை விரைந்து முடிப்பதற்காகவும் விஜய் அரங்கிற்கு முன்கூட்டியே வந்துள்ளதாக கூறப்படுகிறது.
- மாணவர்களுடன் வருகை தந்துள்ள 3500 பார்வையாளர்களையும் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்குகிறது.
இதனால் விழா நடைபெறும் திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்படும் ஊக்கப்பரிசு வழங்கும் விழா நடைபெறும் இடத்திற்கு விஜய் அதிகாலையிலேயே வந்தடைந்தார். மாணவர்களுடன் வருகை தந்துள்ள 3500 பார்வையாளர்களையும் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், நிகழ்ச்சியை விரைந்து முடிப்பதற்காகவும் விஜய் அரங்கிற்கு முன்கூட்டியே வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய த.வெ.க. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், மாணவர்கள் பாராட்டு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. த.வெ.க. தலைவர் விஜய் பேசிய பின்னர் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் வந்துள்ளார்கள். மாணவர்களுக்கு மதிய விருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்படும் ஊக்கப்பரிசு வழங்கும் விழாவில் மாணவர்களுடன் வருகை தந்துள்ள 3500 பார்வையாளர்களையும் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழப்பு.
- உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு போலீசார் விசாரணை.
கடலூர் அருகே பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையை தெரு நாய் ஒன்று கடித்து குதறி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திட்டக்குடி அடுத்த கொடிக்களம் கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தெரு நாய் ஒன்று கடித்து கொன்றுள்ளது.
குழந்தையின் தாய் வீட்டின் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், வீட்டிற்குள் புகுந்து குழந்தையை நாய் கடித்து குதறியுள்ளது.
இதையடுத்து, படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
நாய் கடித்து உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






