என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மார்கழி 2-வது செவ்வாய்க்கிழமை கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
- அன்னதானம் உண்டியல் அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பிலியனூர் அக்ரஹாரம் பகுதியில் பிரசித்தி பெற்ற அக்ரஹார முனியப்பன் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை தினங்களில் ஆண்டுதோறும் வரும் மார்கழி மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனாக ஆயிரக்கணக்கான ஆடு, கோழிகள் பலியிட்டு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.
அந்த வகையில் முனியப்பன் கோவில் பக்தர்கள் காணிக்கையாக வைக்கும் திரிசூலங்கள் உள்ள இடத்தில் அன்னதானம் உண்டியல் அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
அந்த உண்டியலை மாதத்திற்கு ஒருமுறை பிரித்து காணிக்கை எடுப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று முனியப்பன் கோவில் உண்டியல் எண்ணும் பணி தருமபுரி அறநிலையத்துறை சார்பில் அதிகாரிகள் முன்னிலையில் எண்ணும்போது அதில் ஒரு காசோலை இருந்ததை கண்டு எடுத்தனர்.

அதில் ரூ.90 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 256 ரூபாய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர்.
உடனே காசோலையை கைப்பற்றிய அதிகாரிகள் அதில் மகேந்திரன் என்பவர் சவுத் இந்தியன் வங்கிக்கான காசோலையில் போடப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த காசோலைக்கான கணக்கு தருமபுரி சவுத் இந்தியன் வங்கியில் உள்ளதா என்றும் அவ்வாறு இருக்கையில் அந்த கணக்கில் பணம் உள்ளதா என்பது குறித்து இன்று சவுத் இந்தியன் வங்கியில் அறநிலை துறை அதிகாரிகள் விசாரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது உண்மையான காசோலையா அல்லது பரபரப்பை ஏற்படுத்துவதற்காக போடப்பட்ட காசோலையா என தெரியவரும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அமராவதி ஆற்றை அடிப்படையாக கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- அனைத்து ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. கேரளா மற்றும் தமிழக வனப் பகுதியில் உற்பத்தியாகின்ற பாம்பாறு, தேனாறு, சின்னாறு, சிலந்தையாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் சிறு சிறு ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.
இந்த அணையை ஆதாரமாகக் கொண்டு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அத்துடன் அமராவதி பிரதான கால்வாய் மற்றும் அமராவதி ஆற்றை அடிப்படையாக கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 8 ராஜ வாய்க்கால் பாசனத்திற்கு கடந்த 24-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது. இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதையொட்டி கடந்த 2 நாட்களாக அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த 25-ந்தேதி நிலவரப்படி 52.96 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 58.17 அடியாக உயர்ந்தது. அதன்படி 3 நாளில் அணையின் நீர் இருப்பு 5.21 அடி உயர்ந்துள்ளது.அணைக்கு வினாடிக்கு 2070 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. மேலும் வானம் மேகமூட்டமாக காணப்படுவதுடன் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் நிலவுவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பதற்கான சூழல் உள்ளது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- நீட் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து எதிர்த்து வருகிறோம்.
- நீட் தேர்வு முறைகேடுகளால் பல ஆண்டுகாலம் உழைத்த மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:
தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் கேள்வி நேரத்துடன் தொடங்கியது. நீட் முறைகேடு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 2017-ம் ஆண்டு நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியது.
* நீட் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து எதிர்த்து வருகிறோம்.
* நீட் விவகாரத்தில் அரசியல் கட்சிகளிடையே கருத்து ஒற்றுமை நிலவி வருகிறது.
* மருத்துவ துறையிலும் சுகாதார குறியீடுகளிலும் நாட்டிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாடு உள்ளது.
* முனைவர் அனந்த கிருஷ்ணன் பரிந்துரையின்பேரில் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய அடித்தளமிட்டவர் கருணாநிதி.
* நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கிய நிலையில் மருத்துவப்படிப்பு மாணவர்களுக்கு எட்டாக்கனியாகி விட்டது.
* நீட் தேர்வு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் அண்மைக்காலமாக எழுந்து வருகின்றன.
* நீட் தேர்வுக்கு பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
* அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் அரங்கேறிய சம்பவங்கள் மாணவர்களின் நம்பிக்கையை நிலை குலையச் செய்துள்ளன.
* நீட் தேர்வு முறைகேடுகளால் பல ஆண்டுகாலம் உழைத்த மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
* நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல் இந்தியாவின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது என்று கூறினார்.
- காலை 12 மணிமுதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.
- அனுமதியின்றி மதுக்கூடம் செயல்படுவது தெரிய வந்தால் தெரிவிக்க வேண்டும்.
சேலம்:
சேலம் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் கடை மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் சேலம் கெஜ்ஜல்நாயக்கன் பட்டியில் நடைபெற்றது.
முதுநிலை மண்டல மேலாளர் நர்மதாதேவி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் அதிகாரிகள், கடை மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது முதுநிலை மண்டல மேலாளர் நர்மதா பேசுகையில், `ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் தற்போது 20 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிந்துள்ளது, இதற்கு கள்ளச்சாராய விற்பனை தான் காரணமா என்று கடை மேற்பார்வையாளர்களிடம் கேட்டார்.
அப்போது சில அதிகாரிகள் மழையின் காரணமாக விற்பனை குறைந்தாகவும், இன்னும் சிலர் இந்த பகுதிகளில் உள்ளவர்கள் மற்ற பகுதிக்கு வேலைக்கு சென்று விட்டார்கள் அதனால் மது விற்பனை குறைந்து விட்டதாகவும் கூறினர்.
தொடர்ந்து பேசிய நர்மதா தேவி , டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதிகள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல், சட்ட விரோத மது விற்பனை, கஞ்சா மற்றும் இதர போதை பொருட்கள் சப்ளை செய்யும் நபர்கள் குறித்தும் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும் மதுபான சில்லறை விற்பனை கடை மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களில் காலை 12 மணிமுதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.
அனுமதியின்றி மதுக்கூடம் செயல்படுவது தெரிய வந்தால் உடனடியாக மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். அனைத்து மதுக்கூடங்களுக்கும் உணவு பாதுகாப்பு தரச்சான்றிதழ் கட்டாயம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட மேலாளர் தனஞ்செயன் மற்றும் கலால் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது.
- முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்தவர் குமார் (வயது 34). அரசுப்பள்ளி ஆசிரியர். இவரது வாட்ஸ்அப்பிற்கு கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது.
அதில் சில கம்பெனிகளின் பங்கு முதலீட்டு விவரங்கள் கொடுக்கப்பட்டு, அதில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என இருந்தது. அதில் ஒரு இணையதள முகவரியும் இருந்தது. அந்த 'லிங்க்'கை கிளிக் செய்த குமார், தன் விவரங்களை பதிந்து தனக்கான பக்கத்தை உருவாக்கினார்.
மேலும் அதில், சிறிதளவு முதலீடு செய்த குமாருக்கு அதிகளவு லாபமும் கிடைத்தது. இதையடுத்து தன்னிடம் இருந்த, 20 லட்சத்து, 85 ஆயிரம் ரூபாயை அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு மொத்தமாக அனுப்பினார்.
இவரது முதலீடு, லாபத்துடன் இணையதள பக்கத்தில் காண்பித்த போதும், அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. இவரை தொடர்பு கொண்ட மொபைல் எண்களும் 'சுவிட்ச் ஆப்' ஆனது. ஓரிரு நாளில் குறிப்பிட்ட அந்த இணையதள பக்கமும் முடங்கியது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குமார், இது குறித்து நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சந்தேகத்துக்கு இடமாக நின்ற பெண் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரிக்கையில் ஒருவர் மட்டும் தப்பி ஓடினார்.
- முருகேஸ்வரி, அமீர் ஆகியோர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
திருப்பூர்:
ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு அதிக அளவில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாதேவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமாஅனிதா, கிரிஜா, ஏட்டுகள் சுரேஷ், முகமதுசபி, சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் ரெயில் நிலையம் எதிரே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்ற பெண் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரிக்கையில் ஒருவர் மட்டும் தப்பி ஓடினார். அவரையும் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. மொத்தம் 7 கிலோ 600 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. ஆந்திராவில் இருந்து 3 பேரும் மொத்தமாக வாங்கி ரெயில் மூலமாக வந்து திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர்.
விசாரணையில் அவர்கள் தேனியை சேர்ந்த முருகேஸ்வரி (வயது 49), கேரள மாநிலம் ஆனைக்கட்டி பகுதியை சேர்ந்த அமீர் (38), கோழிக்கோட்டை சேர்ந்த முகமது சபிர் பாஷா (23) என்பது தெரியவந்தது. இவர்களில் முருகேஸ்வரி, அமீர் ஆகியோர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மாநகர மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஸ்வரி, அமீர், முகமது சபிர் பாஷா ஆகிய 3 பேரையும் கைது செய்ததுடன், 7 கிலோ 600 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
- உங்களை எல்லோரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
- பாசிட்டிவ் பவர் இருப்பவர்களை பார்த்தால் ஒரு சக்தி கிடைக்கும், இன்று கிடைத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழாவில் விஜய் பேசியதாவது:-
* நடந்து முடிந்த தேர்வில் சாதனை படைத்த தம்பி, தங்கைகள், அவர்களுடன் வந்திருக்கும் பெற்றோர்களுக்கும், விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்த புஸ்சி ஆனந்த், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் என் நெஞ்சில் குடியிருக்கும் என் நண்பா, நண்பிகள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள்...
* உங்களை எல்லோரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
* பாசிட்டிவ் பவர் இருப்பவர்களை பார்த்தால் ஒரு சக்தி கிடைக்கும், இன்று கிடைத்துள்ளது.
* தமிழ்நாட்டின் எதிர்காலம் மாணவ, மாணவிகள் தான்.
* எல்லா துறையும் நல்ல துறை தான். நீங்க எதை தேர்ந்தெடுக்குறீங்களோ.. அதை முழு ஈடுபாடுடன் செய்தால் அதில் வெற்றி நிச்சயம் தான். அதனால் நீங்கள் உங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுங்கள்.
தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளனர்.
*இதுபோன்ற நிகழ்வுகளில் நல்ல விஷயங்களை பேசுவதை தவிர வேறு என்ன பேசுவது..
* தமிழ்நாட்டிற்கு தற்போதைய தேவை நல்ல தலைவர்கள் தான். அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், துறை ரீதியாகவும் நல்ல தலைவர்கள் தேவை.
* துறையை தேர்ந்தெடுப்பது போல அரசியலையும் தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- விஜய் சுமார் 10 மணி அளிவில் விழா நடைபெறும் மேடைக்கு வருகை வந்தார்.
- விஜய் வந்ததும் மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து கோஷம் எழுப்பினர்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா தொடங்கியது.
திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டருக்கு அதிகாலையிலேயே வருகை வந்த விஜய் சுமார் 10 மணி அளிவில் விழா நடைபெறும் மேடைக்கு வருகை வந்தார். விஜய் வந்ததும் மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து கோஷம் எழுப்பினர். மாணவர்கள் வரிசையில் முன்னிருக்கையில் விஜய் அமர்ந்தார்.
முதலில் விழா தொடங்கும் விதமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பின்பு மாணவர்கள் மத்தியில் அமர்ந்த விஜய் அவர்களுடன் கலந்துரையாடி பின்னர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
- வெள்ளி விலையில் எந்த மாற்றமுமில்லை.
- தங்கம் விலை இந்த வாரத்தில் கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ. 600 குறைந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
சென்னையில் கடந்த 3 நாட்களாக குறைந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 53,328-க்கும் கிராமுக்கு ரூ.41 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,666-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமுமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.94.50-க்கும் பார் வெள்ளி ரூ.94,500-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை இந்த வாரத்தில் கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ. 600 குறைந்தது குறிப்பிடத்தக்கது.
- பாடம் சொல்லித்தர ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார்.
- பள்ளியில் அனைத்து அடிப்படை வசதிகளும் இருந்தும் மாணவர் சேர்க்கை இல்லை.
மதுரை:
மதுரை மாவட்டம் பி.ராமநாதபுரத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் 1, 3, 5 ஆகிய வகுப்புகளில் தலா ஒருவர் மட்டுமே படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் சொல்லித்தர ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். அவர்தான் பள்ளியின் தலைமை ஆசிரியரும் கூட. சிறுமிகள் முறையே 3 மற்றும் 5-ம் வகுப்புகளும், சிறுவன் ஒன்றாம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
மேலும் இந்த 3 மாணவர்களுக்கும் அருகில் பாப்பையாபுரத்தில் உள்ள பள்ளியில் இருந்து காலை உணவு திட்டம் மூலம் உணவு சமைத்துக் கொண்டு வரப்படுகிறது. மதிய உணவு அருகில் உள்ள சிலைமலைபட்டியில் இருந்து கொண்டு வரப்படுகிறது. பள்ளியில் அனைத்து அடிப்படை வசதிகளும் இருந்தும் மாணவர் சேர்க்கை இல்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "எங்கள் கிராமத்தில் 150 பேர் வசித்து வருகிறோம். ஆனால் பெரும்பாலானோர் வேலைக்காக குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டனர். அதனால் குறைந்த அளவே மக்கள் வசித்து வரும் நிலையில் பள்ளி செல்லும் மாணவர்கள் அதிகம் இல்லாததால் சேர்க்கை குறைவாக உள்ளது" என்றனா்.
- தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
- நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை:
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து, மேற்கு தொடர்ச்சி மலையில் காணும் இடமெல்லாம் வெள்ளியை உருகிவிட்டது போல ரம்மியமாக காட்சியளிக்கிறது.
ஓடைகளில் நீர்வரத்து, அதிகரித்ததால் நேற்று முன்தினமும் நொய்யல் ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதியல் கன மழை கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாக நொய்யல் ஆற்றுக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரித்தது. வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணை நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேறி, பேரூர் குளம், குறிச்சி குளம், சொட்டையாண்டி குட்டை உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.
இதனால் குனியமுத்தூர் தடுப்பணை, சுண்ணாம்பு காளவாய் தடுப்பணை, புட்டுவிக்கி தடுப்பணைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் புதுக்குளம், உக்குளம், கோளராம்பதி, நரசாம்பதி, குமாரசாமி, செல்வ சிந்தாமணி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது.
குளத்திற்கு செல்லும் ராஜவாய்க்கால், தடுப்பணைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆபத்தை உணராமல் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பது, செல்பி எடுப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் எங்கு செல்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டியது அவசியமாகும். போலீசாரும், நீர்நிலை பகுதிகளில் ரோந்து சென்று, ஆபத்தை உணராமல் தண்ணீரில் இறங்குபவர்களை தடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக, இங்குள்ள தடுப்பணைகள், குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் அலர்ட் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 471 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
சின்கோனா 64
சின்னக்கல்லார்-93
வால்பாறை 72
வால்பாறை தாலுகா-69
சிறுவாணி அடிவாரம்-63
- போலீசார் இதுவரை சுமார் 86 பேரை கைது செய்துள்ளனர்.
- கைது செய்யப்பட்ட 3 பேரும் சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே கள்ளச்சாராயத்தை தடுக்கும் பொருட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் வியபாரம் செய்வோர் மற்றும் அதனை கடத்துபவர்களை உடனடியாககைது செய்ய வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜித் சதுர்வேதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் இதுவரை சுமார் 86 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பிரபல கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டன் (வயது42) என்பவரை சங்கராபுரம் போலீசார் கள்ளச்சாராய வழக்கில் அழைத்து வந்து போலீஸ் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டன் போலீஸ் நிலையத்திலிருந்து திடீரென தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த தகவல் வெளியானதால் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் தப்பிஓடிய கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டனை தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஏற்கனவே சேஷசமுத்திரம் கிராமத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 40-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் அக்கிராமத்தில் மட்டும் 4 பேர் இதுவரை உயிரிழந்தனர். இதனிடையே சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சின்னதுரை, செந்தில், ராஜா ஆகிய 3 பேரும் சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






