என் மலர்
உள்ளூர் செய்திகள்
- எதிர்மனுதாரராக உள்ள 18 எம்.எல்.ஏக்களில், நான்கு பேருக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
- அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி அவர்கள் கருத்தை கேட்ட பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை பிறப்பிக்க வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்காவை கொண்டு சென்றதாக தற்போது முதலமைச்சராக பதவி வகிக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்எல்ஏ-க்களுக்கு எதிராக சட்டசபை உரிமைக்குழு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசில் அடிப்படைத் தவறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு, இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாகக் கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டது.
இதையடுத்து உரிமைக்குழு, தி.மு.க. எம்எல்ஏ-க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு 2-வது நோட்டீசையும் ரத்து செய்தது.
இதை எதிர்த்து முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில், சட்டசபைச் செயலாளர் மற்றும் உரிமைக்குழு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி. குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.

அப்போது ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், இந்த நோட்டீஸ் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தற்போதைய சட்டசபை தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என்பதால் அதனை அவருடைய முடிவுக்கே விட்டுவிட வேண்டுமெனக் கூறினார்.
அதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், சட்டசபை மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரங்கள் என்ன என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே ஒன்றோடு ஒன்று தலையீடு செய்யக்கூடாது. உரிமை மீறல் நோட்டீஸ் மீது இறுதி முடிவெடுக்கப்படாத நிலையில், அதில் தலையிட விரும்பவி்ல்லை. அவ்வாறு தலையீடு செய்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும். மேலும் அது மிகவும் ஆபத்தானது. இதுதொடர்பாக புதிதாக அமைந்துள்ள சட்டசபை முடிவுக்கே விட்டுவிடலாம், என கருத்து தெரிவித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள இன்று பிறப்பித்தனர். அதில் நீதிபதிகள் தீர்ப்பை பிறப்பிக்க தயாரான போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன் ஆஜராகி, இந்த வழக்கில் எதிர்மனுதாரராக உள்ள 18 எம்.எல்.ஏக்களில், நான்கு பேருக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மீதமுள்ள 14 பேருக்கு இதுவரை நோட்டீஸ் அனுப்பவில்லை. இந்த வழக்கில் தற்போது நீங்கள் தீர்ப்பளித்தால், இவர்கள் மேல்முறையீடு செல்லும் பொழுது எங்களுடைய கருத்தை கேட்காமலேயே ஐகோர்ட்டு தீர்ப்பளித்து விட்டது என்று ஒரு நிலைப்பாட்டை எடுப்பார்கள். அதனால் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி அவர்கள் கருத்தை கேட்ட பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை பிறப்பிக்க வேண்டும். அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்த மேல் முறையீட்டு வழக்கை தாக்கல் செய்யும்போது அவர்கள் நோட்டீஸ் அனுப்பாமல் வழக்கு நடத்தியுள்ளனர் .
இதை நான் கூட கவனிக்கவில்லை. அதற்காக மன்னிக்கவும் என்று கோரிக்கை விடுத்தார்.
உடனே நீதிபதிகள் ஆவணங்களை எடுத்து பார்த்தனர். பின்னர் இந்த வழக்கில் எதிர்மனுதாரராக உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப வில்லை. நோட்டீஸ் அனுப்பாததற்கு காரணம் அவர் கிடைக்க வில்லை என்று அச்சிடப்பட்டுள்ளது. எதிர்மனுதாரர்கள் அனைவரும் பிரபல மானவர்கள் என்று கூறினர். பின்னர், எதிர்மனு தாரர்களாக உள்ள மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 14 பேருக்கும் எலக்ட்ரானிக் முறையிலோ அல்லது நேரிலோ நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவர்கள் நோட்டீசை பெற்றுக் கொண்டு வருகிற வியாழக்கிழமை தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்கலாம். இந்த வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு தள்ளி வைக்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்
- வீடுகள் கட்டும் மக்களின் கனவை எளிதாக்கவே ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி.
- ஆய்வின்போது விண்ணப்பத்தில் இருக்கும் விபரங்கள் சரியாக இருக்க வேண்டும்.
சென்னை:
ஆன்லைன் மூலம் உடனடியாக கட்டட அனுமதி பெறுவது தொடர்பாக அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* வீடுகள் கட்டும் மக்களின் கனவை எளிதாக்கவே ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி அளிக்கப்படுகிறது.
* ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர் அளிக்கும் விபரங்கள் அடிப்படையில் உடனடி அனுமதி அளிக்கப்படும்.
* ஆய்வின்போது விண்ணப்பத்தில் இருக்கும் விபரங்கள் சரியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
- டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு.
- பஸ் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடு போல் காட்சி அளித்தது.
கோவை:
திருவண்ணாமலையில் இருந்து நேற்று இரவு கோவைக்கு தனியார் ஆம்னி ஒன்று புறப்பட்டு வந்தது.
திடீர் தீ விபத்து படுக்கை வசதி கொண்ட அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
தாஸ் மற்றும் உஸ்மான் என 2 டிரைவர்கள் பஸ்சை ஓட்டி வந்தனர். பஸ் கோவையை நெருங்கியதும் ஒவ்வொரு பயணியாக தாங்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கிக் கொண்டு இருந்தனர்.
பீளமேடு பகுதிக்கு வந்தபோது பஸ்சில் 25 பேர் இருந்தனர். அப்போது பஸ்சை ஓட்டிய டிரைவர் தாஸ், பஸ்சில் தீப்பற்றுவது போல் உணர்ந்தார். உடனடியாக அவர் கீழே இறங்கி பார்த்தார். அப்போது டீசல் வரும் பைப்பில் கசிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பஸ்சை ஓரமாக நிறுத்தி, பஸ்சில் இருந்த பயணிகளை அவசரமாக வெளியேற்றினார். அனைத்து பயணிகளும் பதறி அடித்துக் கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்கினர். பயணிகள் இறங்கிய அடுத்த நொடியில் பஸ் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. டிரைவர்கள் தீயை அணைக்க போராடினர்.
ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. பஸ் முழுவதும் தீ கொளுந்து விட்டு எரிந்தது. அதிகாலை நேரத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். அதற்குள் பஸ் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடு போல் காட்சி அளித்தது.
அடுத்தக்கட்டமாக அந்த பஸ்சை அங்கிருந்து அகற்றுவதற்கான பணிகள் தொடங்கி நடந்தன. டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதற்காக அந்த டிரைவருக்கு பயணிகள் நன்றி தெரிவித்தனர்.
- பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டரின் பேரில் பனியன்கள் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.
- விளையாட்டு போட்டிகளுக்கு திருப்பூரில் இருந்து பனியன்கள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர்:
பின்னலாடை நகரான திருப்பூரில் இருந்து வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு பனியன்கள் உள்ளிட்ட ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டரின் பேரில் பனியன்கள் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட் , உலக கால்பந்து போட்டி உள்பட சர்வதேச அளவில் நடைபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு திருப்பூரில் இருந்து பனியன்கள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
தற்போது உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ந்தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் அப்போட்டியில் பங்கேற்கும் பார்வையாளர்கள் அணிவதற்காக திருப்பூரில் உள்ள பேக் பே இந்தியா நிறுவனம் 10 லட்சம் டீ-சர்ட் பனியன்களை தயாரித்து அனுப்பி வைத்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் உரிமையாளர்களான தீபா ஜெயன் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர் கூறியதாவது:-
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்காக எங்களது நிறுவனம் மூலம் பெற்ற ஆர்டர்களில் இதுவரை 70 சதவீத ஆர்டர்களை முடித்து அனுப்பி வைத்துவிட்டோம். மீதமுள்ள 30 சதவீத ஆர்டர்களை முடிப்பதற்கு 6 சிறு, குறு நிறுவனங்கள் மூலம் பனியன் தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே 2023ம் ஆண்டு பிரான்சில் நடந்த ரக்பி உலக கோப்பைக்கான போட்டிக்கும் பனியன்கள் தயாரித்து அனுப்பி வைத்திருந்தோம். ஐ.ஓ.சி.யின் அதிகாரபூர்வ உரிம திட்டத்தின் மூலம் எங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு தயாரித்து அனுப்புகிறோம். ஜவுளி உற்பத்தியில் பல நிறுவனங்கள் பெண்களால் நடத்தப்படுவதில்லை. பல ஆண்டுகளாக நாங்கள் உருவாக்கிய நம்பகத்தன்மையின் மூலம் நாங்கள் சுமூகமாக இயங்கி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- இந்து வாழ்வியலே சனாதானம்.
- இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த மேல்சிறுணை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா. ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சனாதானம் என்பது என்ன? என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது. இந்து வாழ்வியலே சனாதானம்.
சனாதனத்தில் கூறியுள்ள உணவு, கல்வி, மருத்துவம் போன்றவை தற்பொழுது மிகப் பெரிய வியாபாரமாக மாறிவிட்டது, சனாதனம் பற்றிய எதிர்ப்பு தமிழகத்தில் 180 ஆண்டுகளுக்கு மேலாக காதில் விழுந்து கொண்டிருக்கிறது.
சனாதன தர்மத்தில் கூறியுள்ளது போல் கட்டணம் இல்லாமல் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சானாதனத்தை தொடர்ந்து எதிர்த்து பேசி வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனால் விரைவில் தமிழ்நாட்டில் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடத்தை போலீசார் அவசர அவசரமாக சுட்டுக் கொன்றது ஏன்? இதில் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே எதிர்கட்சிகள் அனைவரும் சி.பி.ஐ. விசாரணை கொண்டு வந்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்ல தடை.
- அவசர தேவைக்கு ஆம்புலன்சுகள் கூட செல்ல முடியாத அளவுக்கு நெரிசல்.
பொன்னேரி:
காட்டுப்பள்ளி துறைமுகம், அத்திப்பட்டு புதுநகர், காமராஜர் துறை முகம் மற்றும் அப்பகுதுயை சுற்றி உள்ள ஏராளமான தொழிற்சாலைகளுக்கு சாம்பல் கழிவு, நிலக்கரி, கண்டனர் லாரிகள், கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தச்சூர், பொன்னேரி, இலவம்பேடு, நாலூர், மீஞ்சூர்வழியாக தினமும் சென்று வருகிறன்றன.
இதனால் பொன்னேரி, மீஞ்சூர் பஜாரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு பள்ளி, கல்லூரிக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டு வந்தது.
மேலும் தொடர்ந்து விபத்துக்களும் ஏற்பட்டன. அவசர தேவைக்கு ஆம்புலன்சுகள் கூட செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டு வந்தது.
வண்டலூர் சாலையில் சென்றால் 2 டோல்கேட் மற்றும் கூடுதல் தொலைவு என்பதால் தச்சூர்-பொன்னேரிய சாலையில் சென்று வந்தன.
இதுபற்றி பொதுமக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார்கள் தெரிவித்தனர். இதைத்தொடரந்து பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கத் பல்வந் உத்தரவுப்படி தச்சூரில் இருந்து பொன்னேரி, மீஞ்சூர் வழியாக கனரக வாகனங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக பொன்னேரி போக்குவரத்து இன்ஸ்பெ க்டர் கமலக்கண்ணன் தலைமையில் போலீசார் எச்சரிக்கை பதாகைகள் ஆங்காங்கே வைத்து உள்ளனர்.
மேலும் தடையை மீறி வரும் கனரக வாகனங்களுக்கு ரூ.1500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் கனரக வாகனங்களை கண்காணித்தபடி வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
- 3 கருட சேவை உற்சவங்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
- பக்தர்கள் பக்தி கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், ஆனி மாதம், ஆடி மாதம் என ஆண்டுக்கு 3 கருட சேவை உற்சவங்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
பெருமாளை வணங்கு வதற்காக குளத்தில் இருந்து தாமரைப் பூவை பறித்த யானையான கஜேந்திரனின் காலை, முதலை பற்றிக் கொண்ட நிலையில், கஜேந்திரன் அலறியபடி பெருமாளை அழைத்தார். பெருமாள் கருட வாகனத்தில் காட்சியளித்து முதலையை அழித்து கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனை குறிக்கும் வகையில் கஜேந்திர மோட்சம் அருளும் ஆடி மாத கருட சேவை உற்சவம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்றது.
இதையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மஞ்சள் நிற பட்டு உடுத்தி, செண்பகப்பூ, மனோரஞ்சித பூ, மல்லிகைப்பூ, பஞ்சவர்ண பூ மலர் மாலைகள், திருவா பரணங்கள் அணிவித்து, மஞ்சள் பட்டு உத்திய தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் அனந்த சரஸ் திருக்குளத்தின் அருகே எழுந்தருளி கஜேந்திர மோட்சம் அருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து மேள, தாள வாத்தியங்கள் முழங்க கோவிலில் ஆழ்வார் பிரகாரத்தில் உலா வந்து கோபுர தரிசனம் தந்தார்.
இதையடுத்து பெருமாள், நான்கு மாட வீதிகளிலும் தங்க கருட வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தங்க கருட வாகனத்தில் வலம் வந்த வரதராஜ பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.
- தமிழக அரசு பதில் அளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
- ரேசன் கடைகளில் மது விற்க அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.
தமிழகத்தில் கள்ளுக்கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ஏன் மறுபரிசீலனை செய்ய கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுபானங்களை சூப்பர் மார்க்கெட், ரேசன் கடைகளில் விற்க அனுமதி கோரிய வழக்கை தள்ளி வைத்து பொறுப்பு தலைமை நீதிபதி கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்கவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியில் இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருச்சி:
ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர் தொகுதிகளுக்குட்பட்ட சில ஊராட்சிகளையும் லால்குடி, திருவெறும்பூர் தொகுதிகளுக்குட்ட சில ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியில் இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
- ஆடி மாதம் என்பதால் காலை முதலேயே காற்றின் வேகம் அதிகமாக காணப்படுகிறது.
- பலத்த சூறைக்காற்றினால் பல இடங்களில் விளம்பர பலகைகள் விழுந்து வருவதுடன் காய்ந்த நிலையில் உள்ள மரங்களும் விழுந்து வருகின்றன.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் தற்போது மழை முற்றிலும் குறைந்து குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.
ஆனால் ஆடி மாதம் என்பதால் காலை முதலேயே காற்றின் வேகம் அதிகமாக காணப்படுகிறது. பகல் நேரங்களில் புழுதியை வாரி இறைத்தபடி காற்று வீசுவதால் நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும், மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை கூட காற்றின் வேகம் தன்வசப்படுத்தி நிலைகுலைய செய்து விடுகிறது. இதனால் சிறிது கவனம் சிதறினாலும் வாகன ஓட்டுனர்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
கொடைக்கானல் மேல்மலை கிராமமான கூக்கால் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குண்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காம்பவுண்டு சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்து கிடந்தது. காலையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஏற்கனவே கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினாலும் தற்போது வீசிய சூறைக்காற்றினாலும் சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என்று பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர். மாணவர்கள் யாரும் இல்லாத காரணத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பலத்த சூறைக்காற்றினால் பல இடங்களில் விளம்பர பலகைகள் விழுந்து வருவதுடன் காய்ந்த நிலையில் உள்ள மரங்களும் விழுந்து வருகின்றன. மாலை மற்றும் இரவு நேரங்களில் சாலையின் நடுவே மரக்கிளைகள் முறிந்து விழுவதால் வாகன ஓட்டுனர்கள் சிரமம் அடைகின்றனர்.
ஏறிச்சாலையையொட்டி உள்ள கீழ்பூமி பகுதியில் முறிந்து விழுந்த மரத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இதே நிலை நீடிக்கும் என்பதால் நகராட்சி மற்றும் மலை கிராமங்களில் சேதம் அடைந்து சாலையோரம் இருக்கும் மரக்கிளைகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பெண்கள் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- திருப்பூர் - காங்கயம் மெயின் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் ஒன்றியம், நாச்சிபாளையம் ஊராட்சி ரங்கபாளையம் பிரிவில் ஜி.என். கார்டன் பகுதி உள்ளது.
இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தெருவிளக்கு, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஊராட்சி நிர்வாகம் இதுவரை நிறைவேற்றி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திடீரென ஒன்று திரண்டு நாச்சிப்பாளையம் திருப்பூர்- காங்கயம் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவிநாசி பாளையம் போலீசார் பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊராட்சி நிர்வாகத்துடன் பேசி அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனால் திருப்பூர் - காங்கயம் மெயின் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- சந்தேகத்திற்கிடமாக வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை நடத்தினர்.
- பைபர் படகையும், வேனையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கல்லாமொழி கிராம கடற்கரை வழியாக இலங்கைக்கு பீடி இலை மூட்டைகள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைதொடர்ந்து தூத்துக்குடி 'கியூ' பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், செல்வகுமார், ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர் இருதய ராஜ்குமார், இசக்கிமுத்து,முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கல்லாமொழி கடற்கரை வழியாக இன்று அதிகாலை 2 மணிக்கு சந்தேகத்திற்கிடமாக வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அதில் சுமார் 30 கிலோ எடை கொண்ட 106பீடிஇலை மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
அவற்றை இலங்கைக்கு படகில் கடத்துவதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம் ஆரக்கோட்டை காரைக்குடியை சேர்ந்த அருள் விஜயகாந்த் (வயது 35) மற்றும் நெல்லை மாவட்டம் பணகுடி மங்கம்மா சாலையைச் சேர்ந்த பாண்டியன் (40) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் பைபர் படகையும், வேனையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ. 75 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர்.






