search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school wall collapsed"

    • ஆடி மாதம் என்பதால் காலை முதலேயே காற்றின் வேகம் அதிகமாக காணப்படுகிறது.
    • பலத்த சூறைக்காற்றினால் பல இடங்களில் விளம்பர பலகைகள் விழுந்து வருவதுடன் காய்ந்த நிலையில் உள்ள மரங்களும் விழுந்து வருகின்றன.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் தற்போது மழை முற்றிலும் குறைந்து குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.

    ஆனால் ஆடி மாதம் என்பதால் காலை முதலேயே காற்றின் வேகம் அதிகமாக காணப்படுகிறது. பகல் நேரங்களில் புழுதியை வாரி இறைத்தபடி காற்று வீசுவதால் நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும், மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

    மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை கூட காற்றின் வேகம் தன்வசப்படுத்தி நிலைகுலைய செய்து விடுகிறது. இதனால் சிறிது கவனம் சிதறினாலும் வாகன ஓட்டுனர்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

    கொடைக்கானல் மேல்மலை கிராமமான கூக்கால் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குண்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காம்பவுண்டு சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்து கிடந்தது. காலையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஏற்கனவே கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினாலும் தற்போது வீசிய சூறைக்காற்றினாலும் சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என்று பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர். மாணவர்கள் யாரும் இல்லாத காரணத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    பலத்த சூறைக்காற்றினால் பல இடங்களில் விளம்பர பலகைகள் விழுந்து வருவதுடன் காய்ந்த நிலையில் உள்ள மரங்களும் விழுந்து வருகின்றன. மாலை மற்றும் இரவு நேரங்களில் சாலையின் நடுவே மரக்கிளைகள் முறிந்து விழுவதால் வாகன ஓட்டுனர்கள் சிரமம் அடைகின்றனர்.

    ஏறிச்சாலையையொட்டி உள்ள கீழ்பூமி பகுதியில் முறிந்து விழுந்த மரத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இதே நிலை நீடிக்கும் என்பதால் நகராட்சி மற்றும் மலை கிராமங்களில் சேதம் அடைந்து சாலையோரம் இருக்கும் மரக்கிளைகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×