என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சிறுவனை கதவை பூட்டி பலமாக தாக்கி உள்ளார்.
- காரில் ஏன் கிறுக்கி வைத்தாய் என்று திட்டியதாக தெரிகிறது.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள குரும்பபாளையம் ஆதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சுதா. இவர்களது மகன் சத்தியவர்ஷன் (வயது 9). இவன் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்தநிலையில் அப்பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவர் சிறுவன் சத்தியவர்ஷனை அழைத்து, காரில் ஏன் கிறுக்கி வைத்தாய் என்று திட்டியதாக தெரிகிறது. அப்போது சத்தியவர்ஷன் நான் எழுதவில்லை எனக் கூறிய நிலையில், அதைக்கேட்காத மோகன், சிறுவனை வீட்டிற்குள் அழைத்து சென்று கதவை பூட்டி சத்தியவர்ஷனை பலமாக தாக்கி உள்ளார்.
இதற்கிடையே சிறுவன் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததை தொடர்ந்து பெற்றோர்கள், உறவினர்கள் அப்பகுதியில் தேடினர். அப்போது மோகன் வீட்டில் இருந்து சிறுவனின் அலறல் சத்தம் கேட்கவே, உறவினர்கள் செல்வராஜ், கருப்பாத்தாள் ஆகிய 2 பேர் மோகன் வீட்டிற்குள் சென்று தட்டிக்கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மோகன், கத்தியால் செல்வராஜ், கருப்பாத்தாளை சரமாரியாக குத்தி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். படுகாயம் அடைந்த 2 பேரும் அவினாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சேவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- காட்டு யானையால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருந்தனர்.
- வனத்துறையினர் பட்டாசு வெடித்து ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டு சுற்றுப்புற கிராம பகுதிகளில் சுற்றித்திரிந்த கிரி என்ற ஒற்றை காட்டு யானை விவசாயிகள் மற்றும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்தது.
காது கேட்காத இந்த ஒற்றை காட்டு யானையை பொதுமக்கள் விவசாயிகள் விரட்டினாலும் அது அசராமல் அப்படியே நிற்கும், இந்த காட்டு யானையால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் இந்த கிரி ஒற்றை காட்டு யானை தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து பல்வேறு கிராமங்கள் வழியாக தற்போது கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமம் அருகே வந்துள்ளது. அந்த பகுதியில் சாலையோரம் சுற்றித்திரிந்த இந்த காட்டு யானை குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் பட்டாசு வெடித்து ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
காது கேட்காத இந்த கிரி ஒற்றை காட்டு யானையால் போடிச்சிப்பள்ளி, சினிகிரிப்பள்ளி, பென்னிகல் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பொதுமக்கள் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். விவசாயிகள் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- அமித்ஷா படத்தை கால்களால் மிதித்து அவமரியாதை செய்தனர்.
- அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர்:
ஓசூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை கண்டித்து ஒசூர் தொகுதி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் எம்.ஜி.ரோடில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு சாலை மறியல் நடைபெற்றது.
இந்த நிலையில், மறியலில் ஈடுபட்டவர்கள் திடீரென அமித் ஷாவின் உருவ படத்தை தீ வைத்து எரித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டவுன் சப்-இன்ஸ்பெக்டர், கட்சியினரிடமிருந்து படத்தை கைப்பற்ற முயன்றார்.
ஆனால் கட்சியினர் அவரை சூழ்ந்து கொண்டு, சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தி, அமித் ஷாவின் படத்தை முழுவதுமாக எரித்தனர்.
மேலும், அவரது படத்தை கீழே போட்டு கால்களால் மிதித்து அவமரியாதை செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதில், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செந்தமிழ், ஜீபி கிருஷ்ணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
- கடந்த முறை போல் அல்லாமல் கவர்னர் தனது உரையை முழுவதுமாக வாசிப்பார் என நம்புவோம்.
- எதிர்க்கட்சி தலைவருக்கு உரிய அந்தஸ்து மரியாதை வழங்கப்பட்டு வருகிறது என அப்பாவு கூறினார்.
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த ஆண்டின் குளிர்கால கூட்டம் என்பதால் குறுகிய நாட்களே கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தொடரில் மதுரை மேலூர் அருகே டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான ஏல உரிமத்தை உடனே ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தவிர 19 சட்ட மசோதாக்களும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு சட்டமன்ற கூட்டத் தொடர் முடித்து வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 2025-ம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 6-ந்தேதி கூட்டப்பட உள்ளது.
இது குறித்து சட்டசபை சபாநாயகர் அப்பாவு இன்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி விதி 174 (1) ன் கீழ் தமிழக சட்டமன்றத்தை வருகிற ஜனவரி மாதம் 6-ந்தேதி கூட்டி உள்ளார்.
அன்று காலை 9.30 மணிக்கு கவர்னர் ஆர்.என். ரவி இந்திய அரசியலமைப்பு சட்டம் 176 (1) ன் கீழ் உரை நிகழ்த்த உள்ளார்.
சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும்.
கேள்வி:-ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்படுமா?
பதில்:- அதை நீங்கள் முதலமைச்சரிடம்தான் சொல்ல வேண்டும். சபாநாயகரிடம் இதுபற்றி கேட்க முடியுமா?
சட்டசபையில் முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தால் அந்த தீர்மானத்தை விவாதத்துக்கு வைத்து நிறைவேற்றுவதற்கு சட்டமன்றம் தயாராக இருக்கிறது.
கேள்வி:- கடந்த சட்டசபை கூட்டத் தொடரின் போது கவர்னர் ஆர்.என்.ரவி உரையில் முரண்பாடு இருந்தது. இந்த முறையும் முரண்பாடு இருந்தால்...?
பதில்:- முரண்பாடு நாங்கள் செய்தது போல கேட்கிறீர்கள்? தமிழக கவர்னர் முதல் பக்கத்தையும், கடைசி பக்கத்தையும் அப்போது வாசித்தார். அவ்வளவுதான். இந்த முறை முழுமையாக வாசிப்பார் என்று நம்புகிறோம்.
கேள்வி:- சட்டசபை கூட்டத் தொடர் 100 நாட்கள் நடத்துவோம் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் நாட்கள் சுருங்கி கொண்டே வருகிறதே? கடந்த கூட்டத்தொடர் கூட 2 நாட்கள்தான் நடைபெற்றுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டி உள்ளாரே?
பதில்:- இதுபற்றி சட்டசபையிலே பதில் சொல்லி உள்ளேன். 2011 முதல் 2021 வரை 10 ஆண்டு காலத்தில் குளிர்கால கூட்டத்தொடர் 2 நாட்கள் தான் நடத்தி இருக்கிறார்கள். எல்லோருமே அதற்கு காரணம். கூடுதல் செலவினத்துக்கான துணை பட்ஜெட்தான் நிதி அமைச்சர் தாக்கல் செய்வார். அதில் பேசுவதற்கு பெரிய 'சப்ஜெக்ட்' கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நெல்லை நீதிமன்ற வளாகத்தில் கொலை சம்பவம் அரங்கேறியதால் பரபரப்பு.
- கொலை செய்த கும்பல் காரில் தப்பியோட்டம்.
நெல்லை நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞரை அரிவாளால் வெட்டிய நான்கு பேர் கும்பல் அவரது முகத்தை சிதைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
ஊராட்சி மன்ற துணை தலைவர் கொலை வழக்கில் ஆஜராக சென்ற போது மாயாண்டியை நான்கு பேர் கொண்ட கும்பல் மக்கள் நடமாட்டம் கொண்ட பகுதியில் வைத்தே வெட்டிக் கொன்றது. இதில் மாயாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகொலை செய்யப்பட்ட மாயாண்டி மீது கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்ற வாசலில் கொலை நடைபெற்ற நிலையில் காவலர்கள் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

கொலை சம்பவம் அரங்கேறியதை அடுத்து நீதிமன்றம் முன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும் என்றும், வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், கொலை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கொண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆறு மாதங்களுக்கு முன் நடைபெற்ற கொலை சம்பவத்திற்கு இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக கொலை செய்த கும்பலோடு வந்ததாக போலீசார் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- பா.ஜ.க.வினரின் ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
- பா.ஜ.க.வினர் போராட்ட அறிவிப்பால் கோவையில் பரபரப்பு நிலவுகிறது.
கோவை:
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அல்-உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ. பாஷா, உடல்நலக்குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்தார்.
அவரது உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் அனுமதி வழங்கியதற்கு கோவை மாவட்ட பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அதன்பிறகும் இறுதி ஊர்வலம் நடந்ததால் இன்று கருப்பு தினம் கடைபிடித்து, கோவையில் ஊர்வலம் நடத்தப்போவதாக பா.ஜ.க.வினர் அறிவித்துள்ளனர். போலீசாரை கண்டித்து கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு ஊர்வலமாக செல்லப்போவதாக தெரிவித்து இருந்தனர். இதுதொடர்பாக அனுமதி கேட்டு போலீசாரிடமும் மனு அளித்துள்ளனர். ஆனால் பா.ஜ.க.வினரின் ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
இருந்தாலும் திட்டமிட்டபடி கண்டன ஊர்வலம் நடைபெறும் என பாஜகவினர் தெரிவித்தனர். ஊர்வலத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பா.ஜ.க.வினர் போராட்ட அறிவிப்பால் கோவையில் பரபரப்பு நிலவுகிறது.
- யுகேந்திரன் எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது நடைமேடையில் நிறுத்தினர்.
- பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கி புறநகர் மின்சார ரெயில் மூலமாக சென்னைக்கு வந்தனர்.
திருவள்ளூர்:
திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு சப்தகிரி விரைவு ரெயில் வந்து கொண்டு இருந்தது. என்ஜின் டிரைவராக யுகேந்திரன் இருந்தார்.
ரெயில் திருவள்ளூர் அருகே வந்து கொண்டு இருந்தபோது என்ஜின் டிரைவர் யுகேந்திரனுக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து ரெயிலை இயக்க முடியாத நிலை உருவானது.
இதற்குள் இரவு 9 மணியளவில் ரெயில் திருவள்ளூர் ரெயில் நிலையம் வந்தது. இதையடுத்து டிரைவர் யுகேந்திரன் எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது நடைமேடையில் நிறுத்தினர்.
பின்னர் அவர் தனது உடல்நிலை குறித்து சென்னையில் உள்ள ரெயில்வே அதிகாரிகளுக்கும், திருவள்ளூரில் உள்ள அதிகாரிகளுக்கும் தெரிவித்தார்.
பின்னர் உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ரெயில் நீண்டநேரம் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நின்றதால் அதில் இருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ஏராளமான பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கி புறநகர் மின்சார ரெயில் மூலமாக சென்னைக்கு வந்தனர்.
பின்னர் இரவு 10.15 மணியளவில் சென்னையில் இருந்து வந்த மற்றொரு என்ஜின் டிரைவர் நிறுத்தப்பட்ட சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை சென்னை நோக்கி ஓட்டி வந்தார்.
- நேரடி விமானம் இயக்க வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
- சென்னை-பினாங்கு தீவு இடையிலான பயண தூரம் 4 மணி நேரம் 30 நிமிடங்கள்.
நாளை முதல் சென்னை-பினாங்கு தீவுக்கு நேரடி விமானம்
மலேசியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பினாங்கு தீவுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என பல மாதங்களாக பயணிகள் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது நாளை முதல், அதாவது டிசம்பர் 21 முதல், நேரடி விமான சேவை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் பல்வேறு நகரங்களுக்கு சென்னை உள்பட இந்தியாவின் பல நகரங்களில் இருந்து நேரடி விமான சேவை இருந்து வரும் நிலையில் மிகப்பெரிய தீவுகளில் ஒன்றான பினாங்கு தீவுக்கு நேரடி விமானம் இயக்க வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
பினாங்கு தீவில் வாழ்பவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் என்பதால், சென்னையில் இருந்து நேரடி விமானம் இயக்கப்பட வேண்டிய அவசியத்தையும் பயணிகள் குறிப்பிட்டு வந்தனர்.
இந்த நிலையில், சென்னையில் இருந்து பினாங்குக்கு நேரடி விமான சேவையை தொடங்க இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி வழங்கி உள்ளதை அடுத்து, நாளை முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ், சென்னை–பினாங்கு தீவுக்கு நேரடி விமான சேவையை இயக்க உள்ளது.
சென்னை மற்றும் பினாங்கு தீவு இடையிலான பயண தூரம் 4 மணி நேரம் 30 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- வெறும் அறிவிப்புகளை வெளியிட்டு விட்டு செல்லும் முந்தைய அரசு அல்ல இது.
- பொய் கூறுவது எடப்பாடி பழனிசாமி வகிக்கும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு அழகல்ல.
ஈரோடு:
ஈரோட்டில் நலத்திட்ட உதவிகள் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* ஈரோட்டில் பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் புதிதாக செயல்படுத்தப்படும்.
* ஈரோடு மாநகராட்சி அந்தியூர், கோபி, மொடக்குறிச்சியில் ரூ.100 கோடியில் சாலை மேம்படுத்தப்படும்.
* கத்திரிமலை பகுதியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் மின் இணைப்பு வழங்கப்படும்.
* உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள சிஎன்சி கல்லூரியில் TNPSC பயிற்சி மையம், நூலகம் அமைக்கப்படும்.
* 15 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
* ஈரோட்டில் ரூ.100 கோடி செலவில் பல ஒன்றியங்களில் சாலைகள் மேம்படுத்தப்படும்.
* மகளிர் உரிமை திட்டத்தில் ஈரோட்டில் 4 லட்சத்து 90 ஆயிரம் பெண்கள் பயன் பெறுகின்றனர்.
* புதுமை பெண் திட்டத்தில் 10 ஆயிரம் மகளிர் ஈரோட்டில் பயன் பெறுகின்றனர்.
* ஈரோட்டில் கடந்த 3 ஆண்டில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு
* வெறும் அறிவிப்புகளை வெளியிட்டு விட்டு செல்லும் முந்தைய அரசு அல்ல இது.
* திமுக தொடர்ந்து திட்டங்களை நிறைவேற்றுவதால் அதிமுகவுக்கு வயிற்றெரிச்சல்.
* திமுகவுக்கு மக்கள் ஆதரவு பெருகுவதால் எடப்பாடி பழனிசாமி உளறி கொண்டிருக்கிறார்.
* பொய் கூறுவது எடப்பாடி பழனிசாமி வகிக்கும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு அழகல்ல.
* மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்பட்டன. சாத்தனூர் அணை திறக்கும் முன் 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
* முன்னெச்சரிக்கையால் பெரிய அளவிலான உயிரிழப்புகளை தவிர்த்துள்ளோம்.
* செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டதை மக்கள் மறந்துவிட்டார்கள் என எடப்பாடி பழனிசாமி எண்ணுகிறாரா? சாத்தனூர் அணைணை வைத்து எடப்பாடி பழனிசாமி பொய் பிரசாரம் செய்கிறார்.
* மத்திய அரசின் நிதிக்காக காத்திருக்காமல் நிவாரண தொகை வழங்கி வருகிறோம்.
* டங்ஸ்டன் விவகாரத்தில் ஏலமிட்ட மத்திய அரசை விமர்சிக்காமல் மாநில அரசை எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். டங்ஸ்டன் சுரங்கம் கொண்டு வரப்பட காரணமான சட்டத்திருத்தத்தை அதிமுக ஆதரித்தது.
* கவுண்டமணி- செந்தில் வாழைப்பழ காமெடி போல் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
* காலி குடம் உருண்டால் சத்தம் அதிகம் வரும்.
* எங்களை பார்த்து கத்தி பேசும் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசை பார்த்து கீச்சு குரலிலாவது பேச கூடாதா? என்றார்.
- பல்வேறு பொருட்களை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.
- கோவிலுக்கு வரும் பக்தர்கள் அளிக்கும் காணிக்கை தொகை வங்கியில் இருப்பு வைக்கப்படுகிறது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் தினந்தோறும் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்காக பணம், நகைகள், பட்டு வஸ்திரம், வெள்ளி, வெளிநாட்டு கடிகாரம், நவதானியங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.
தமிழகத்திலேயே அதிக வருவாய் கிடைக்கும் கோவிலாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அளிக்கும் காணிக்கை தொகை வங்கியில் இருப்பு வைக்கப்படுகிறது.
இதுதவிர கோவிலில் பயன்பாட்டில் இல்லாத பலமாற்று பொன் இனங்களில் உள்ள கற்கள், அழுக்கு, அரக்கு மற்றும் பிற உலோகங்கள் நீக்கப்பட்டு மும்பையில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தின் உருக்காலையில் சுத்த தங்கமாக மாற்றம் செய்து வங்கியில் தங்க பத்திரமாக முதலீடு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 2010ம் ஆண்டு பழனி கோவில் நகைகள் தங்க பத்திரமாக மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று பழனி கோவில் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் 192.984 கிலோ பொன் இனங்களை பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை வகித்தார். அமைச்சர் அர.சக்கரபாணி, முன்னாள் நீதிபதி மாலா, செந்தில்குமார் எம்.எல்.ஏ., கோவில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நரசிம்மனை 14 நாட்கள் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
- பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். ஆன்மிக சொற்பொழிவாளரான இவர், 'நமது கோவில்கள்' என்ற பெயரில் 'யூடியூப்' சேனல் வைத்துள்ளார். இதில் அவர், மத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பரபரப்பு கருத்துகளை தெரிவித்து வீடியோ வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் அவர், 'ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளுக்கு நடந்த அபசாரங்கள்' என்ற தலைப்பில் தனது யூடியூப் சேனலில் கடந்த வாரம் சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இதுதொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டதை தொடர்ந்து ரங்கராஜன் நரசிம்மன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நரசிம்மனை 14 நாட்கள் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரங்கராஜன் நரசிம்மன் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண் வழக்கறிஞரை சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சித்த புகாரில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் நடைமுறையை அமல்படுத்த கோரிக்கை.
- குழந்தைகளிடம் நன்கு படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
ஈரோடு:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்தார். இதைத் தொடர்ந்து நேற்று மாலை முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் பிச்சாண்டம்பாளையத்தில் உள்ள விசைத்தறி கூட்டங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் மற்றும் நெசவாளர்களின் தேவை குறித்து கேட்டறிந்தார்.
அப்போது விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் 750 யூனிட்டில் இருந்து ஆயிரம் யூனிட் வரை உயர்த்தி இருப்பது பயனுள்ளதாக இருக்கிறதா? என அங்குள்ள நெசவாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டார்.
அதற்கு நெசவாளர்கள் தொழில் மேன்மைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றனர். மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் நடைமுறையை அமல்படுத்தினால் மேலும் பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு அத்திட்டம் பரிசீலனையில் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பின்னர் நெசவாளர்களின் குழந்தைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
குழந்தைகளிடம் என்ன படிக்கிறீர்கள். நன்கு படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இதனை அடுத்து முதலமைச்சருடன் நெசவாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.






