என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சென்னை ஐ.ஐ.டியை கொண்டு வருவதற்காக காரணமாக இருந்த காமராஜருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
    • பல்வேறு ஆராய்ச்சி பணிகளையும், அங்குள்ள தொழில்நுட்ப ஆய்வகங்களையும் பொதுமக்கள் நேரில் சென்று பார்வையிட முடியும்.

    இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனங்களில் ஒன்று சென்னை ஐஐடி. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில், சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் மார்பளவு சிலையை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி திறந்து வைத்தார்.

    சென்னை ஐ.ஐ.டியை கொண்டு வருவதற்காக காரணமாக இருந்த காமராஜருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக, ஜனவரி 3, 4-ம் தேதிகளில் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி மையங்களையும் ஆய்வகங்களையும் பார்வையிடலாம் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    'அனைவருக்கும் சென்னை ஐஐடி' என்ற சிறப்பு திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஐஐடி வளாகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். இதன்மூலம் ஐஐடி-யில் நடைபெறும் பல்வேறு ஆராய்ச்சி பணிகளையும், அங்குள்ள தொழில்நுட்ப ஆய்வகங்களையும் பொதுமக்கள் நேரில் சென்று பார்வையிட முடியும்.

    • திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.
    • காணிக்கை பணத்துடன் பக்தர் செலுத்திய ஐபோனும் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

    திருப்போரூர்:

    திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக அங்குள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச்சேர்ந்த தினேஷ் என்பவர் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் அங்குள்ள உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தியபோது தவறுதலாக தன்னுடைய ஐபோனையும் போட்டு விட்டார். இதனால் பதறிய அவர் உண்டியலை திறந்து தனது செல்போனை திருப்பி தருமாறு கோவில் ஊழியர்களிடம் தெரிவித்தார். ஆனால் அவர்கள் இதுபற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் தான் முடிவு எடுக்க முடியும் என்று தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து தினேஷ் இது குறித்து சென்னை இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். அப்போது திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல் திறக்கப்படும் போது தகவல் தெரிவிக்கப்படும் எனக் கூறிஅனுப்பி விட்டனர்.

    இந்நிலையில் நேற்று திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. அதில் பக்தர் தவறுதலாக செலுத்திய ஐபோனும் இருந்தது. இதுபற்றி தினேசுக்க தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் உண்டியல் எண்ணும் இடத்திற்கு வந்தார். அவர் ஐபோன் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் வந்து செல்போனை பெற முயன்ற போது கோவில் நிர்வாகத்தினர் உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே உரியது.

    உங்களுக்கு செல்போன் கொடுக்க முடியாது. வேண்டுமென்றால் உங்களுடைய முக்கியமான தரவுகள் ஏதேனும் செல்போனில் இருந்தால் அவற்றை மட்டும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி கைவிரித்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த தினேஷ் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்து அந்த செல்போனில் உள்ள சிம்கார்டு மற்றும் மெமரி கார்டுகளை பெற்றுக் கொண்டு சென்றார். காணிக்கை பணத்துடன் பக்தர் செலுத்திய ஐபோனும் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

    • ஒன்றிய குழு கூட்டத்தை புறக்கணித்து தி.மு.க. கவுன்சிலர் அருள் தேவி போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • திம்மாவரம் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றனர்.

    வண்டலூர்:

    காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள திம்மாவரம் ஊராட்சியில் முறையான அனுமதியின்றி அரசு இடத்தில் தனியார் பெயரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒன்றிய குழு கூட்டத்தை புறக்கணித்து தி.மு.க. கவுன்சிலர் அருள் தேவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இந்தநிலையில் திம்மாவரம் ஊராட்சியில் இன்று காலை வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றனர். அப்போது பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலாவை முற்றுகையிட்டு சுத்திகரிப்பு நிலையம் மீது நடவடிக்கை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து அரசுக்கு சொந்தமான இடம் என்பதால் முறையான அனுமதி பெற்று மக்களின் பயன்பாட்டிற்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை கொண்டு வரவேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    • தாக்குதலில் படுகாயம் அடைந்த 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம் அருகே மேனாம்பேடு சாலையில் நேற்று இரவு 10 மணியளவில் வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் கஞ்சா போதையில் பட்டா கத்தியை சாலையில் உரசிய படி சென்று ரகளையில் ஈடுபட்டனர்.

    அப்போது திடீரென ஆவேசம் அடைந்த அவர்கள் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த வட மாநில வாலிபர்கள் மற்றும் பொதுமக்களை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டினர். இதனை கண்டு அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அலறியடித்து ஓடினர்.

    போதை வாலிபர்கள் வெட்டியதில் திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு பகுதியை சேர்ந்த நவீன்(20), பாடியை சேர்ந்த டிரைவர் அசான் மைதீன்(35), அம்பத்தூரைச் சேர்ந்த தனசேகரன்(47), வடமாநிலத்தைச் சேர்ந்த மகேந்திர குமார்(35), தீபக் (27) ஆகிய 5 பேர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ரவுடி கும்பல் அரிவாள், பட்டாகத்தியை காட்டி மிரட்டியபடி அங்கிருந்து தப்ப சென்று விட்டனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதில் நவீன் என்பவருக்கு தலையில் பலத்த வெட்டுகாயம் ஏற்பட்டு 22 தையல்கள் போடப் பட்டுள்ளன. அவரது இடது கையில் மோதிர விரல் துண்டானது. கட்டை விரல் தவிர்த்து மற்ற மூன்று விரல்களும் தொங்கிய நிலையில் இருந்தது. அவருக்கு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


    இதேபோல் டிரைவர் அசான் மைதீனுக்கு தலை நடுவில் 9 தையல்கள், தனசேகரனுக்கு கையில் 7 தையல்கள், வடமாநில வாலிபர்கள் மகேந்திர குமாருக்கு கழுத்தில் 6 தையல்களும், தீபக்கிற்கு தலையில் 13 தையல்களும் போடப்பட்டு உள்ளன. இதுபற்றி அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே வடமாநில வாலிபர்கள் தாக்கப்பட்டது பற்றி அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் நிலையத்தை வட மாநில வாலிபர்கள் 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போலீசாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

    தாக்குதல் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அரிவாளால் வெட்டியது அதே பகுதியை சேர்ந்த ரவுடிகளான மங்களபுரத்தை சேர்ந்த நித்திவேல், மண்ணூர்பேட்டையை சேர்ந்த லக்கி என்கிற லோகேஷ், திருவேற்காடு அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிந்தது. அவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    கஞ்சா போதையில் அவர்கள் கெத்து காட்டுவதற்காக பொதுமக்களை மிரட்டி வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவான ரவுடிகள் நித்திவேல் உள்பட 3 பேரையும் பிடிக்க அம்பத்தூர் உதவி கமிஷனர் கிரி தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நீதிமன்ற வாயிலில் நடந்த இக்கொலையை காவல்துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
    • மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மீள முடியாத அளவிற்கு படு பாதாளத்திற்கு சென்றுவிட்டதன் அத்தாட்சி!

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    "எங்கும் கொலை; எதிலும் கொலை" என்ற இந்த திமுக ஆட்சியின் அவல நிலைக்கு, இன்று நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல.

    திருநெல்வேலியில் நீதிமன்ற வாயிலில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    நீதிமன்ற வாயிலில் நடந்த இக்கொலையை காவல்துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    நீதிமன்ற வாயில்களில் அச்சமின்றி குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது என்பது மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மீள முடியாத அளவிற்கு படு பாதாளத்திற்கு சென்றுவிட்டதன் அத்தாட்சி!

    இதுமட்டுமின்றி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் செய்திகளில் வந்தவை:

    ● சென்னை தி. நகரில் வங்கிக்குள் புகுந்து வங்கி ஊழியரின் காது வெட்டு

    ●சிவகங்கையில் தாயின் கண்ணெதிரே மகனை மர்ம கும்பல் வெட்டிக்கொலை

    ●சென்னை அம்பத்தூரில் நள்ளிரவில் கஞ்சா போதையில் 5 பேருக்கு கத்திக்குத்து.

    "தனிப்பட்ட கொலைகள்" என்று இன்னும் எத்தனை நாட்கள் தான் மு.க.ஸ்டாலினின் திமுக அரசு சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் கடந்து செல்லப் போகிறது?

    நிர்வாகத் திறன் துளியும் இல்லாமல், சட்டத்தின் மீதோ, அதை காக்கும் இடத்தில் உள்ள அரசின் காவல்துறை மீதோ குற்றவாளிகளுக்கு அச்சம் அறவே இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை கண்டுகொள்ளாத மு.க.ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம்.

    மேற்சொன்ன குற்றச்செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், போட்டோஷூட்டிலும், மடைமாற்று அரசியலிலும் மட்டுமே செலுத்தும் கவனத்தை தனது முதல் பணியான சட்டம் ஒழுங்கை காப்பதிலும் செலுத்துமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 



    • 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நேற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 12 மணி நேரத்தில், வடக்கு திசையில் நகர்ந்து, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு, இது அதற்கடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடகிழக்கு திசையில் நகரக்கூடும்.

    இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    25-ந்தேதி மற்றும் 26-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • ஈரோடு இந்த மண் தான் தமிழ்நாட்டின் புதிய வரலாற்றின் தொடக்கம்.
    • 222 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளைவழங்கினார்.

    ஈரோடு இந்த மண் தான் தமிழ்நாட்டின் புதிய வரலாற்றின் தொடக்கம். பெரியாரை கொடுத்த மண் இந்த மண். தந்தை பெரியார் நமக்கு அண்ணா, கலைஞரை கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் திராவிட இயக்கம் இல்லை. இன்றைய வளர்ச்சி நிறைந்த தமிழ்நாடும் இல்லை. நாமும் இல்லை. சில நாட்களுக்கு முன்பு தான் தந்தை பெரியார் ஏற்று நடத்திய வைக்கம் நூற்றாண்டு விழா கேரளாவில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. கேரள மக்கள் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியை பாராட்டுகிறார்கள். அதற்கு காரணம் இந்த ஈரோடு மண்ணின் மைந்தரான பெரியார் போட்ட அடித்தளம் தான். பல புரட்சிகராமான தொடக்கம் விளைந்திருக்கக் கூடிய இந்த ஈரோட்டு மண்ணில் நடைபெறக்கூடிய இந்த அரசு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பெருமைப்படுகிறேன், பூரிப்படைகிறேன். உங்களை எல்லாம் நான் பார்த்து மகிழ்ச்சியடைந்தாலும் இந்த நேரத்திலே ஒரு சோகமும், வேதனையும் உள்ளது.

    கடந்த வாரம் நம்முடைய ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நம்மை விட்டு பிரிந்த சோகம் தான் அது. தந்தை பெரியாரின் பேரன் அவர். மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக மிக சிறப்பாக செயல்பட்டவர் இளங்கோவன். அவருடைய இழப்பு ஈரோடு தொகுதிக்கு மட்டுமல்ல, ஈரோடு தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய இழப்பு. இன்றைக்கு அவர் நம்முடன் இருந்திருந்தால் நமது திராவிட மாடல் அரசின் செயல் திட்டங்கள் குறித்து எடுத்து உரைத்திருப்பார்.

    அவருக்கு இந்த கூட்டத்தின் வாயிலாகவும், என்னுடைய அஞ்சலியை நான் செலுத்திக் கொண்டு இருக்கிறேன். இன்றை நாள் இந்த விழாவின் மூலமாக 951 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 559 புதிய திட்டங்களுக்கான திறப்பு விழா தொடங்கப்பட்டது. 222 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. 284 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள், 50 ஆயிரத்து 88 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. மொத்தமாக சொன்னால் ஆயிரத்து 368 கோடிமதிப்பிலான திட்டங்களின் விழாவாக நடந்து வருகிறது. விழாவுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்த அமைச்சர் முத்துசாமியை நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். பரபரப்போ, ஆர்பாட்டமோ இல்லாமல் நினைத்த காரித்தை நிகழ்த்தி காட்டுபவர் அமைச்சர் முத்துசாமி.

    கடந்த 3 ஆண்டுகளில் நமது திராவிட மாடல் அரசு ஈரோட்டுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றுவதில் அந்த பட்டியல் மிகவும் நீளமானது. சிலவற்றை மட்டும் நினைவில் கூற விரும்புகிறேன். மேற்கு மண்டல மக்களின் நீண்ட கால கோரிக்கையான அத்திகடவு-அவினாசி திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி தொடங்கி வைத்தோம். இதற்கு ஈரோடு மாவடத்தில் உள்ள 357 ஏரிகளுக்கு நீர் வழங்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்ட நகர் பகுதிகளில் 70 ஆண்டுகளாக குடியிருந்து வரக்கூடிய 4191 நபர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டு உள்ளது. நத்தம் நிலவரி திட்டம் புதிய அரசாணைப்படி 2922 பட்டா வழங்கப்பட்டு இன்னமும் அந்த பணி தொடங்கி கொண்டு இருக்கிறது.

    ஈரோடு மாவட்ட விளையாட்டு அரங்கில் 400 மீட்டர் சிந்தடிக் ஓடுதளம் பாதைகூடிய கால்பந்து மைதானம் 7 கோடி மதிப்பில் புணரமைக்கப்பட்டு பயன்பாட்டுக் கொண்டு வரப்பட்டு உள்ளது. 1368 கோடி திட்டங்களின் மதிப்பீட்டு விழாவாக இந்த நிகழ்ச்சி நடந்த கொண்டு இருக்கிறது.


    அந்தியூர், பர்கூர், தாளவாடி, தலமலை, ஆசனூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட 9 கிராமங்களில் வசிக்க கூடிய மலைவாழ் மக்களின் வசதிக்காக 5 கோடி ரூபாய் மதிப்பில் இணைப்பு சாலை அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டு தற்போது 3 பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள 6 பணிகள் நடைபெற்று வருகிறது. மலைவாழ் மக்களின் பொருளாதார மேம்பாட்டு கணக்கின் அடிப்படையில் கொண்டு தாளவாடி மற்றும் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள 5 கோடியே 64 லட்சம் மதிப்பில் தலா 500 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட குளிர்பதன சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு தற்போது உழவர்கள் மற்றும் வியாபாரிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோட்டில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு ஐ.டி. பூங்கா அமைக்கப்படும்.

    இவ்வாறு ஏராளமான திட்டங்களை நாம் செயல்படுத்தி வருகிறோம். அந்த உறுதியோடு இந்த நிகழ்ச்சியின் வாயிலாக இன்னும் சில அறிவிப்புகளை நான் வெளியிடுகிறேன். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் உங்கள் அரசின் முதல் அறிவிப்பாக நான் சொல்வது ஈரோடு மாநகராட்சி, அந்தியூர், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை போன்ற பகுதிகளில் இருக்ககூடிய சாலைகள் 100 கோடி செலவில் மேம்படுத்தப்படும். ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு 15 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடமும், ஈரோடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு 8.3 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

    சென்னிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட 50 கிராமங்களில் கூட்டு குடிநீர் திட்டம் 18 கோடி செலவில் மேம்படுத்தப்படும். இதுமட்டுமல்லாமல் சத்தியமங்கலம், நம்பியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூட்டு குடிநீர் திட்டம் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், பவானிசாகர் ஒன்றியத்துக்கான கூட்டு குடிநீர் திட்டம் 12 கோடி மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படும். அந்தியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கத்திரி மலை பகுதியில் மலை கிராம மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றுகிற வகையில் 2.50 கோடி மதிப்பீட்டில் மின் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

    மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டாரத்தில் நீர்பாசன திட்டத்தின் கீழ் 18 கோடி செலவில் இந்த திட்டம் மேம்படுத்தப்படும். உயர்கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டு உள்ள சிக்கைய்ய நாயக்கர் கல்லூரியில் 10 கோடி மதிப்பீட்டில் உலக தரத்திலான விளையாட்டு மைதானம், நூலக வசதி, குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி மையமும் அமைக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் வாடகை கட்டிடத்தில் 15 சுகாதார நிலையங்களுக்கு 6.75 கோடி மதிப்பீட்டில் சொந்த கட்டிடம் கட்டி தரப்படும். பவானி சங்கமேஸ்வரர், கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோவில் மற்றும் வீர நாராயண பெருமாள் திருக்கோவிலில் பக்தர்களுக்கான வசதிகள் 10 கோடி மதிப்பில் அமைத்து தரப்படும். இவை எல்லாம் விரைவில் நிறைவேற்றப்படும். மக்களை பற்றி கவலை படாமல் செல்லும் முந்தைய அரசு இல்லை இது.

    சொன்னதை செய்யும் கலைஞரின் திராவிட மாடலின் உங்கள் ஸ்டாலின் அரசு இது. நேற்று நான் ஈரோட்டு வந்த உடன் இந்த மாவட்டத்தில் நடந்து கொண்டு இருக்க கூடிய பணிகள் என்ன என்ன என்பது ஆய்வு செய்வதோடு, கலெக்டருடன் பல்வேறு திட்டம் குறித்து ஆய்வு செய்தேன். இப்படி தொடர்ந்து ஆய்வு பணிகளில் ஈடுபட்டு மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    நமது திராவிட மாடல் அரசின் முத்தாய்ப்பு திட்டங்களை முழுமையாக சொல்ல நேரமில்லை. சிலவற்றை கூறுகிறேன். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தை பொருத்த வரை 4 லட்சத்து 90 ஆயிரம் மகளிர் மாதந்தோறும் பயனடைந்து வருகின்றனர். காலை உணவு திட்டத்தில் 46 ஆயிரம் 365 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். புதுமை பெண் திட்டத்தில் 10 ஆயிரம் மாணவிகள் மாதந்தோறும் பயனடைந்து வருகிறார்கள். தமிழ்புதல்வன் திட்டத்தில் 12 ஆயிரத்து 407 மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். நான் முதல்வன் திட்டத்தில் மட்டும் 1 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

    கடந்த 3 ஆண்டுகளில் 67 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 7,630 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து உள்ளது. மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 6 லட்சம் பயனாளிகள் பயனடைந்து வருகிறார்கள். 78 ஆயிரத்து 738 உழவர்களுக்கு 3 ஆயிரத்து 684 கோடி ரூபாய் பயிர்கடன் வழங்கப்பட்டு உள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளில் 71 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. 75 திருக்கோவில்களுக்கு திருகுடமுழுக்கு நடத்தப்பட்டு உள்ளது. இப்படி தொடர் திட்டங்களை தருகின்ற காரணத்தால் தான் மக்களாகிய நீங்களும் எங்களுக்கு தொடர் வெற்றிகளை தந்து கொண்டு இருக்கிறீர்கள். இது கடந்த ஆட்சியாளர்கள் அதாவது இப்போதைய எதிர்க்கட்சியாக இருக்க கூடியவர்களால் இந்த வெற்றியை தாங்கி கொள்ள முடியவில்லை.

    தி.மு.க.வுக்கு தொடர்ந்து மக்கள் ஆதரவு கிடைக்கும் வயிற்றெரிச்சல் காரணமாக எதிர்க்கட்சி தலைவராக இருக்ககூடிய எடப்பாடி பழனிசாமி புலம்பிக்கொண்டே இருக்கிறார். ஒரு எதிர்கட்சி தலைவர் ஆளுங்கட்சியை விமர்சிக்கலாம். தவறு கிடையாது. நியாயமான புகார்களாக இருந்தால் சொல்லலாம். ஆனால் தி.மு.க. ஆட்சி மீது குற்றம் சாட்ட எதுவும் இல்லாததால் எதுவும் கிடைக்காமல் பொய் சொல்ல கூடாது. பழனிசாமி என்கிற தனி நபராக அவர் பொய் சொல்லவில்லை.

    எதிர்க்கட்சி தலைவராக சொல்கிறார். அது அவர் வகிக்க கூடிய பதவிக்கு அழகல்ல. அன்மையில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலால் யாரும் எதிர்பார்க்காத அளவில் மழை வந்ததது. தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து அதை நாம் எதிர்கொண்டோம். பல லட்சம் மக்களை நாம் காப்பாற்றி உள்ளோம். மழை தொடங்கிய உடன் துணை முதலமைச்சர், அதிகாரிகளை அனுப்பினோம். கலெக்டருடன் தொடர்ந்து தொலைபேசியில் நானே பேசினே். மாநில கட்டுப்பாட்டு அறைக்கு சென்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினேன். அதுமட்டுமல்ல அதிக அளவு பாதிப்புக்கு உள்ளான விழுப்புரம், கடலூர் மாவட்டத்திற்கு நானே நேரில் சென்று உதவிகள் செய்தேன்.

    இரவு, பகல் பார்க்காமல் அரசு எந்திரம் பணி செய்த காரணத்தினால் ஓரிரு நாட்களில் பாதிப்பில் இருந்து மக்களை நாம் மீட்டோம். மக்கள் மழைக்கு பிறகு என்னென்ன பணிகள் செய்ய வேண்டுமோ அதை துரிதமாக செய்தோம். நிவாரண தொகை வழங்கி உள்ளோம். மத்திய அரசின் நிதியை பற்றி கூட கவலை படாமல் மாநில அரசே உடனடியாக எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து உள்ளோம். இதை பார்து பொருத்து கொள்ள முடியாமல் கற்பணை குற்றசாட்டுகளை பழனிசாமி சொல்லி கொண்டு இருக்கிறார். முன்னெச்சரிக்கை செய்யாமல் சாத்தனூர் அணையை திறந்து விட்டதாக ஒரு பொய்யை பரப்பினார். ஆனால் உண்மை என்ன 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    முன்கூடியே எச்சரிக்கை செய்த காரணத்தினால் தான் பெரிய அளவில் உயிரிழப்புகளை நாம் தவிர்த்து உள்ளோம். இது தான் உண்மை. அ.தி.மு.க. ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை முன்னெரிவிப்பு இல்லாமல் திறந்து விட்டதன் காரணமாக 200-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் இறந்து போனார்கள். சென்னையில் 23 லட்சம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது. அப்போதைய அமைச்சர்கள் யாரும் களத்திற்கு செல்லவில்லை. தன்னார்வலர்கள் தான் உதவி செய்தார்கள், இதையெல்லாம் மக்கள் மறந்து விட்டதாக எதிர்க்கட்சித்தலைவர் நினைக்கிறாரா, வெள்ளம், பூகம்பம் இதெல்லம் இயற்கை சீற்றம். ஆனால் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விட்டது மனிதனால் உண்டாக்கப்ட்ட பேரழிவு. இதை நான் சொல்லவில்லை இது சி.ஏ.ஜி. அறிக்கையில் சொல்லி உள்ளார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் இந்த அறிக்கையை சட்டமன்றத்தில் வைத்தார்கள். இதையெல்லாம் வைத்து சாத்தனூர் அணை பற்றி பொய் பேசி கொண்டு இருக்கிறார். அந்த பொய்யை சட்டமன்றத்தில் நாம் விரிவாக ஆதாரத்துடன் அம்பலபடுத்தி உள்ளோம்.

    அதனால் உடனடியாக டங்ஸ்டன் சுரங்கத்தை கையில் எடுத்து கொண்டார். நமது அரசு எதிர்க்கட்சிகள் கேட்பதற்கு முன்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் அந்த தீர்மானத்தில் மீது எதிர்க்கட்சித் தலைவர் என்ன பேசினார், ஏலமிட்ட மத்திய அரசை கண்டிக்காமல் நம்ம அரசை குறை கூறினார். அதற்குரிய பதில்களை எல்லாம் அமைச்சர்கள் தெளிவாக கூறிவிட்டார்கள். அதை கேட்காமல் சொன்னதையே சொல்லாமல் திரும்ப திரும்ப இந்த வாழைப்பழ செந்தில் காமெடி போன்று சட்டமன்றத்தில் திரும்ப திரும்ப சொன்னார். அதற்கு நான் உயிரோடு இருக்கும் வரை அந்த திட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் என்று தெளிவாக சொன்னேன், அதையும் கேட்கவில்லை. டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்ததே அ.தி.மு.க. தான் என்பதை நாம் கேள்வி பட்டோம். அதையும் அவர் ஒத்துக்கொள்ளவில்லை. அரசை விமர்சனம் செய்து சட்டசபையில் கத்தி பேசினார். அவையெல்லாம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்தால் ஆட்சி கலைந்து போய் இருக்கும் என்றார். இது என்ன ஒரு காமெடி. நான் உங்களுக்கு அன்போடு பொறுமையோடு சொல்கிறேன். காலிக்குடம் உருண்டால் சத்தம் அதிகமாக தான் வரும். அதே போல் நீங்கள் உருண்டு புரண்டு சத்தம் போட்டாலும் உண்மை ஒரு துளியும் கிடையாது. பொய் நெல்லை குத்தி பொங்கல் வைக்க முடியாது. 4 வருடம் ஆட்சியில் இருந்தும் உங்கள் பதவி சுயநலத்துக்காக துரோகம் செய்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடமானம் வைத்தது மக்களுக்கு நன்றாகவே தெரியும். மத்திய அரசை பார்த்து ஒரு கேள்வி கூட கேட்க தைரியம் இல்லாமல் உள்ளீர்கள். உங்களுக்கு மடியில் கனம் உள்ளது. இந்த லட்சணத்தில் எதிர்க்கட்சி உள்ளது. இப்படி தொடர்ந்து பொய் பிரசாரங்கள். நாள் தோறும் திட்டமிட்டு பரப்பும் அவதூறுகள். இப்படி எல்லா தடைகளையும் கடந்து தான் நாள்தோறும் நமது அரசு செயல்படுகிறது. மக்கள் திட்டங்களை செயல்படுத்தும் நமது திராவிட மாடல் அரசுக்கு மக்கள் வெற்றியை கொடுக்கிறார்கள். அதிலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு மண்டலத்தில் மக்கள் கொடுத்த வெற்றி மகத்தானது. வெற்றியை வாரி, வாரி வழங்கக்கூடிய உங்களுக்கு திட்டங்களை வாரி, வாரி நாங்கள் வழங்குகிறோம். என்னை பொறுத்தவரை மக்களாகிய நீங்கள் என்மீது வைக்க கூடிய அசைக்க முடியாத நம்பிக்கைக்கு நான் என்றும் உண்மை உள்ளவனாக இருப்பேன். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு என்றும் தமிழ்நாட்டுக்கு நல்லதே தான் வழங்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஈரோடு களஆய்வின் போது மக்கள் ஆதரவை பார்க்கும் போது 200 தொகுதிகளையும் தாண்டி தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.
    • 2026 தேர்தலில் 200 தொகுதியில் வெற்றி என இலக்கு நிர்ணயித்தோம். ஆனால் 200ஐ தாண்டி வெற்றி பெறுவோம்.

    கோவை :

    கோவையில் முன்னாள் எம்.பி. மோகன் உயிரிழந்த நிலையில், அவருடைய குடும்பத்தாரை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * ஈரோடு கிழக்கு தொகுதியில் மீண்டும் தி.மு.க. கூட்டணி போட்டியிடும்.

    * ஈரோடு களஆய்வின் போது மக்கள் ஆதரவை பார்க்கும் போது 200 தொகுதிகளையும் தாண்டி தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.

    * 2026 தேர்தலில் 200 தொகுதியில் வெற்றி என இலக்கு நிர்ணயித்தோம். ஆனால் 200ஐ தாண்டி வெற்றி பெறுவோம்.

    * ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெறும் என்றார். 

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.
    • இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பூர்:

    மத்திய அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதை கண்டித்தும் அவர் பதவி விலகக் கோரியும் திருப்பூரில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர்.

    இந்தநிலையில் இன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் தடையை மீறி ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    • தி.மு.க.வே ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து அத்தொகுதிக்கு பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 3½ ஆண்டுகளில் 3-வது தேர்தலை சந்திக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுமா? இல்லை தி.மு.க. களம் இறங்குமா? என்பது 2 கட்சிகளை சேர்ந்தவர்கள் மத்தியிலும் பலத்த கேள்வியாகவே இருந்து வருகிறது.

    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகனான சஞ்சய்க்கு மேல்சபை எம்.பி. பதவியை கொடுத்து விட்டு தி.மு.க.வே ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள். இதுபற்றி விரைவில் முடிவு எடுத்து போட்டியிடும் வேட்பாளரையும் அறிவிக்க உள்ளனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளது. கடந்த முறை இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளான வீரகுமார், ஆற்றல் அசோக் குமார் ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன.

    இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருகிறார். நிர்வாகிகளுடன் கலந்து பேசி அ.தி.மு.க. வேட்பாளர் யார்? என்பதை அவர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • வாலிபர்கள் மதுபோதையில் கூச்சலிட்டபடி மோதலில் ஈடுபட்டசம்பவம் அப்பகுதி மக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தியது.
    • மதுக்கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 41 வது வார்டு, ஜெம்நகரில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. குடியிருப்பு பகுதி அருகே செயல்படும் இந்த மதுக்கடைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    மதுக்கடையை இடமாற்றம் செய்யவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடந்த 3 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர்ந்து அதே இடத்தில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது.

    போதை வாலிபர்கள் அடிக்கடி மதுக்கடை அருகே மோதலில் ஈடுபட்டு வருவதால் அவ்வழியே செல்லவே அப்பகுதி மக்கள், பெண்கள் அச்சம் அடைந்து உள்ளனர். காலி மதுபாட்டில், பிளாஸ்டிக் டம்ளர்களையும் ஆங்காங்கே வீசி சென்று விடுகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுக்கடை முன்பு 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் மதுபோதையில் கூச்சலிட்டபடி மோதலில் ஈடுபட்டசம்பவம் அப்பகுதி மக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தியது.

    எனவே குடியிருப்புகளுக்கு மத்தியில் செயல்படும் மதுக்கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஜெம்நகரில் குடியிருப்புகளுக்கு அருகேயே மதுக்கடை உள்ளது. இதனால் தினந்தோறும் குடிமகன்களின் அட்டகாசத்தால் இப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். பாதுகாப்பான சூழல் இல்லாததால் இரவு நேரத்தில் அவ்வழியே செல்ல பெண்கள் அச்சமடைந்து வருகிறார்கள். பாதுகாப்பு கேள்விக்குறி ஆகி உள்ளது. எனவே மதுக்கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்றனர்.

    • கோர்ட்டு முன்பு உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • கொலைக்கு பயன்படுத்திய கேரளா பதிவு எண் கொண்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கீழநத்தம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி என்ற பல்லு மாயாண்டி (வயது 28).

    இவரது தந்தை மணி பால் வியாபாரம் மற்றும் பந்தல் கட்டும் தொழில் செய்து வந்தார். மாயாண்டி தனது தந்தைக்கு உதவி செய்து வந்ததோடு, கூலி வேலைக்கும் சென்று வந்தார்.

    மாயாண்டி மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதில் ஒரு வழக்கில் ஆஜராவதற்காக மாயாண்டி இன்று காலை நெல்லை மாவட்ட நீதிமன்றத்துக்கு தனது தம்பி மாரிச்செல்வத்துடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    இவர்கள் கே.டி.சி. நகர்-திருச்செந்தூர் ரோட்டில் கோர்ட்டு முன்பு வந்தனர். அப்போது காரில் ஒரு மர்மகும்பல் வந்தது. அதில் இருந்து இறங்கிய ஒருவர் மாயாண்டியை நோக்கி அரிவாளால் வெட்டுவதற்காக ஓடி வந்தார்.

    இதைப்பார்த்த மாயாண்டியும், மாரிச்செல்வமும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஆளுக்கொரு திசையில் ஓட்டம் பிடித்தனர். உடனே காரில் இருந்து இறங்கிய மேலும் 3 பேர் சேர்ந்து மாயாண்டியை விரட்டினர்.

    அந்த கும்பல் கோர்ட்டு முன்பு மாயாண்டியை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியது. மாயாண்டியின் கை மணிக்கட்டை துண்டாக்கிய கும்பல், கால் மற்றும் உடலில் பல இடங்களில் வெட்டியதோடு தலையையும் சிதைத்தது.

    இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மாயாண்டி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    உடனே கொலையாளிகள் காரில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது அங்கு நின்ற ஒரு வக்கீல், ஒரு போலீஸ்காரர் சேர்ந்து, கும்பலில் இருந்த ஒரு வாலிபரை மடக்கி பிடித்தனர். மற்ற கொலையாளிகள் காரில் ஏறி தப்பிச்சென்றனர்.

    கோர்ட்டு முன்பு ஏராளமான வக்கீல்கள், போலீசார் மற்றும் பொது மக்கள் திரண்டிருந்த நிலையில் நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சம்பவ இடத்துக்கு மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா, கிழக்கு மண்டல துணை கமிஷனர் விஜயகுமார், பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

    அவர்கள் மாயாண்டியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    கொலை செய்யப்பட்ட மாயாண்டி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கீழநத்தம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ராஜாமணி (33) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக மாயாண்டி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    இதுதொடர்பாக பிடிபட்ட கீழநத்தம் இந்திரா காலனியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற வாலிபரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே கொலை நடந்த சமயத்தில் கோர்ட்டு முன்பு ஏராளமான போலீசார் இருந்தும் குற்றவாளிகள் தப்பிச்சென்ற போது அவர்களை பிடிக்க முடியாமல் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி வக்கீல்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட திரண்டனர்.

    இதைத்தொடர்ந்து வக்கீல்களுடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் வக்கீல்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இதற்கிடையே கோர்ட்டு முன்பு உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கொலை கும்பல் கேரள பதிவெண் கொண்ட ஒரு காரில் வந்து கொலை செய்ததும், அந்த காரிலேயே தப்பிச்சென்றதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து காரின் அடையாளத்தை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தி கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

    இதன் பயனாக கொலையில் தொடர்புடைய 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமகிருஷ்ணன், சுரேஷ், மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், சிவா, தங்க மகேஷ், மனோ ராஜ் ஆகியோரும் கைதாகி உள்ளனர். மேலும், கொலைக்கு பயன்படுத்திய கேரளா பதிவு எண் கொண்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    ×