என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும் என மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் அறிக்கை.
    • தமிழர்களின் பண்பாட்டையும் அவர்களின் உணர்வுகளையும் அவமதிக்கும் செயலாகும்.

    பொங்கல் பண்டிகையன்று யுஜிசி-நெட் தேர்வு நடைபெறுவதற்கு திமுக மாணவர் அணி கண்டனம் தெரிவித்துள்ளது.

    தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும் என மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஒன்றிய பாஜக அரசின் கீழ் இயக்கும் தேர்வு முகமை (NATIONAL TESTING AGENCY) அறிவித்துள்ள 'யுஜிசி நெட் தேர்வு அட்டவணையில் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களைக் குறிவைத்து 2025, ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் 30 பாடங்களுக்கானத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தமிழர்களின் பண்பாட்டையும் அவர்களின் உணர்வுகளையும் அவமதிக்கும் செயலாகும்.

    மத்திய பாஜக அரசு சார்பில் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகள் பொங்கல் பண்டிகை விடுமுறை நாள்களில் அறிவிக்கப்படுவது தொடர் கதையாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட பட்டயக் கணக்காளர் (Chartered Accountant) தேர்வு கூட பொங்கல் விடுமுறை நாட்களில் அறிவிக்கப்பட்டது. பிறகு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த அறிவிப்பையும் பார்க்க வேண்டியுள்ளது.

    தமிழர்களின் ஒற்றுமைக்கும், கொண்டாட்டத்துக்கும் அனுகூலமாக விளங்கும் பெருவிழா பொங்கள். "நாம் காணும் பொங்கள் விழா, உலகெங்கிலும் பிறந்து மொழி பயின்று வாழும் மனித குலத்துக்கே பொதுவான விழா! ஆம்! பசிக்கின்ற நம் வயிறு படைத்துள்ள மனித இனம் முழுவதுக்கும் சொந்தமான உலகப்பெருவிழா!" என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் போற்றப்படும் உலகப் பெருவிழாவினை மத்திய பாஜக அரசு தொடர்ச்சியாக அவமரியாதை செய்வதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    மேலும், அறிவிக்கப்பட்ட 'யுஜிசி- நெட்' தேர்வு அட்டவணையை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில் திராவிட மாடல் முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று திமுக மாணவர் அணி சார்பில் தமிழ்நாடெங்கும் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பாஜகவினர் தமிழக அரசை கண்டித்து பேரணி நடத்தினர்.
    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

    கோயம்பத்தூரில் தமிழக அரசை கண்டித்து தடையை மீறி கருப்பு தின பேரணியை பாஜகவினர் இன்று நடத்தினர்

    கோவை, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜகவினர் தமிழக அரசை கண்டித்து பேரணி நடத்தினர்.

    இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

    இந்நிலையில், தடையை மீறி பேரணி சென்றதாக அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்பட பாஜகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
    • சம்பவ இடத்திலேயே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நெல்லை மாவட்ட நீதிமன்ற வாயிலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    அப்போது, மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பு பணிகள் தொடர்பாகவும், அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நீதிமன்ற வளாகத்தில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது, இதனை ஏன் காவல்துறை தடுக்கவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    முன் விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 3 பல்கலைக்கழகங்களுக்கு ஏற்கனவே வெளியிட்டுள்ள தேடுதல் குழுவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
    • யுஜிசி உறுப்பினர் இல்லாமல் தேடுதல் குழுவை அமைத்தால், அது நீதிமன்றத்தால் நிராகரிப்பட நேரிடும்.

    துணைவேந்தர் நியமனம் தொடர்பான தேடல் குழு விவகாரத்தில் தமிழக அரசு மீது ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

    அதில், " உயர்கல்வி அமைச்சருக்கு தவறாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு குழுவில் வேண்டுமென்றே பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினர் தவிர்க்கப்பட்டிருக்கிறார்.

    3 பல்கலைக்கழகங்களுக்கு ஏற்கனவே வெளியிட்டுள்ள தேடுதல் குழுவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.

    யுஜிசி உறுப்பினர் இல்லாமல் தேடுதல் குழுவை அமைத்தால், அது நீதிமன்றத்தால் நிராகரிப்பட நேரிடும்.

    மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினரை சேர்த்து புதிய தேடுதல் குழுவிற்கான அரசாணையை வெளியிட வேண்டும்" என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

    • 3 நாட்களுக்குள் கேரள அரசு பொறுப்பேற்று கழிவுகளை அகற்ற வேண்டும்- தேசிய பசுமை தீர்ப்பாயம்.
    • 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இன்று கொட்டப்பட்டு கழிவுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

    கேரளா மாநில மருத்துவக் கழிவுகள், திடக்கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் கேரள கழிவுகள் கொட்டப்பட்டன.

    இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் 3 நாட்களுக்குள் கேரள அரசு பொறுப்பேற்று கழிவுகளை அகற்ற வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கேரள அரசு ஒரு குழுவை அமைத்து கழிவுகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கேட்டுக்கொண்டது.

    அதனைத்தொடர்ந்து 8 பேர் கொண்ட கேரள மாநில அதிகாரிகள் குழு இன்று கழிவுகள் கொட்டப்பட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டது. எந்த வகையான கழிவுகள் கொட்டப்பட்டன. அவைகள் அபாயகரமானதா? என்பது குறித்த தரவுகளை இந்த குழுவினர் சேகரித்தனர். இது தொடர்பாக அவர்கள் கேரள மாநில அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய இருக்கின்றனர்.

    இந்த நிலையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் குழு "மருத்துவக் கழிவுகளில் சோதனைக்குப் பயன்படுத்தப்படும் மாதிரிகளே அதிகம் உள்ளன. கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அபாயகரமானது இல்லை. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி கழிவுகளை அகற்றுவது பற்றி கேரள அரசு நடவடிக்கை எடுக்கும்" எனத் தெரிவித்துள்ளது.

    • குமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

    இதை கொண்டாடும் விதமாக, "மூப்பிலா தமிழில் முப்பால் படைத்த அய்யன் திருவள்ளுவருக்கு கலைஞர் அமைத்த சிலையை #StatueOfWisdom-ஆக கொண்டாடுவோம்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சமத்துவம் போற்றும் உலகப் பொதுமறை படைத்த அய்யன் வள்ளுவருக்கு, நமது நாடு தொடங்கும் குமரி எல்லையில் வானுயரச் சிலை அமைத்து ஆண்டுகள் ஆகிறது 25.

    மூப்பிலாத் தமிழில் முப்பால் படைத்த அய்யன் திருவள்ளுவருக்கு முத்தமிழ் வித்தகர் கலைஞர் அமைத்த சிலையை #StatueOfWisdom-ஆகக் கொண்டாடுவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஒரு மாநிலத்தில் அமைதியும், சட்டம் - ஒழுங்கும் நிலவாவிட்டால், அங்கு மக்களால் வாழ முடியாது.
    • தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்பது இல்லாமலேயே போய்விட்டது.

    நெல்லை நீதிமன்ற வாசலில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்ட அறிகையில் கூறப்பட்டுள்ளதாவது,

    திருநெல்வேலி நகரின் மையப் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாயாண்டி என்ற இளைஞர் பட்டப்பகலில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். நீதிமன்ற வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களையும் மீறி இந்தப் படுகொலை நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் வரும் அனைவரும் தீவிர ஆய்வுக்குப் பிறகே அனுமதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. ஆனால், காவல்துறையின் சோதனையையும் மீறி கொலையாளிகள் ஆயுதங்களுடன் உள்ளே வந்தது எப்படி? அப்படியானால், காவல்துறையினர் கவனக்குறைவாக இருந்தார்களா? அல்லது கொலையாளிகள் ஆயுதங்களுடன் உள்ளே நுழைவதை காவல்துறையினரே கண்டும் காணாமலும் விட்டுவிட்டார்களா? என்ற ஐயங்கள் எழுகின்றன. இவை அனைத்திற்கும் தமிழக காவல்துறையும், அரசும் விளக்கம் அளிக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை மாதங்களில் மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவரை சரமாரியாக வெட்டியது, பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது, நீதிமன்றத்திற்குள் நுழைந்து விசாரணைக்கு வந்தவரை படுகொலை செய்தது என கொடூர நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

    ஒவ்வொரு நிகழ்வின் போதும் முன்பகை காரணமாகவே இத்தகைய நிகழ்வுகள் நடப்பதாகக் கூறி காவல்துறையின் தோல்வியை நியாயப்படுத்தும் வகையில் தான் தமிழக அரசு பதிலளிக்கிறதே தவிர, சட்டம் - ஒழுங்கை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறையின் அலட்சிய அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

    நெல்லை நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்கு வந்தவரை கொலை செய்தவர்களை கைது செய்துவிட்டோம் என்று காவல்துறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறையினர் முன்னிலையில் படுகொலை நடைபெற்றிருக்கிறது. அதைத் தடுக்க தவறிய காவல்துறையினர், கொலை நடந்த பிறகு கொலையாளியைப் பிடிப்பது ஒன்றும் சாதனையல்ல. கொலையைத் தடுக்கத் தவறியது காவல்துறையின் படுதோல்வி. அதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

    கடந்த சில நாட்களுக்கு முன் கடலூரில் கடை ஒன்றில் வணிகம் செய்து கொண்டிருந்த அதன் உரிமையாளர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், அதற்குக் காரணமானவர்கள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டு, 15 நாட்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், அந்த வழக்கிலும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்பது இல்லாமலேயே போய்விட்டது. அது எங்கு போயிருக்கிறது? என்பதுதான் தெரியவில்லை.

    ஒரு மாநிலத்தில் அமைதியும், சட்டம் - ஒழுங்கும் நிலவாவிட்டால், அங்கு மக்களால் வாழ முடியாது. சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாத தமிழக ஆட்சியாளர்கள், தமிழ்நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதில் இருந்து வெளியே வந்து தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவும், மக்கள் அச்சமின்றி நடமாடவும் வகை செய்ய வேண்டும்.

    • மின்மினி செயலியும், போத்தீஸ் நிறுவனமும் இணைந்து சேலைகள் தின கொண்டாட்டத்தை நடத்தியது.
    • 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு...' என்று எல்லோரது கண்களும் அவர்களை நோக்கித்தான் திரும்பும்.

    சென்னை:

    மின்மினி செயலியும், போத்தீஸ் நிறுவனமும் இணைந்து சேலைகள் தின கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.

    மேகம் சூடி இருள் கவிழ்ந்த நேரத்தில் ஒன்றிரண்டு மின்மினி பூச்சிகள் வட்டமிட்டு கண் சிமிட்டினாலே பார்க்க பரவசமாக இருக்கும்.

    நூற்றுக்கணக்கான மின் மினி பூச்சிகள் ஒரே நேரத்தில் பரவசப்படுத்தினால் எப்படி இருக்கும்?

    அப்படி ஒரு ரம்மியமான சூழலில் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் சேலை கட்டி மின்மினி பூச்சிகள் போல் ஒரே இடத்தில் வட்டமிட்டால் மனதுக்கு எப்படி இருக்கும்? பார்த்தவர்கள் இதயமெல்லாம் பட்டாம் பூச்சிகள், மின்மினி பூச்சிகள் தான் நினைவுக்கு வந்திருக்கும்.

    மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வழக்கமாக மேற்கத்திய உடைகளிலும், சுடிதார், ஜீன்ஸ் போன்ற நாகரீக உடைகளில் மட்டுமே மாணவிகளை பார்த்து ரசித்த கல்லூரி, இன்று காலை சேலைகளில் கண்டு மகிழ்ந்து ஆச்சரியப்பட்டது.

    மின்மினி செயலியும், போத்தீஸ் நிறுவனமும் இணைந்து சேலைகள் தின கொண்டாட்டத்தை நடத்தியது. இதையொட்டி கல்லூரி மாணவிகள் மட்டும் பங்கு பெற்ற பல்வேறு விதமான போட்டிகள் சென்னையில் உள்ள 20 கல்லூரிகளில் நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் தலா 50 பேர் வீதம் 1000 பேர் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டார்கள். அந்த இறுதிப் போட்டிதான் இன்று ஏ.எம். ஜெயின் கல்லூரியில் நடைபெற்றது.

    சேலை கட்டி கல்லூரி வளாகத்துக்குள் வந்து குவிந்த மாணவிகள் கூட்டத்தை பார்த்து கல்லூரிக்கு வந்திருந்த மாணவிகளும், நாமும் சேலை கட்டி வந்திருக்கலாமோ, அவர்களெல்லாம் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்று பார்த்து பொறாமைப்பட்டார்கள்.

    இதுவரை மேற்கத்திய உடைகள் மட்டுமே அணிந்து பழக்கப்பட்டவர்கள், சேலை கட்டினால் நடப்பது கூட சிரமம் என்று நினைத்தவர்கள் இன்று சேலையிலும் அசத்தினார்கள்.

    8 முழம் சேலையை எடுத்து முன்பக்கமாக ஒரு முகப்பை சொருகிவிட்டு உடலை ஒரு சுற்று சுற்றுவார்கள். அதன் பிறகு 5 முதல் 6 மடிப்புகள் வரை ஒரே அளவில் மடித்து சொருகிய பிறகு, முந்தானையை தோள் மீது போட்டு ஒரு முந்தியை வலப்பக்கமாக எடுத்து கொசுவத்தை இடுப்பில் சொருகுவார்கள். பின்னர் மடிப்பை ஒழுங்காக எடுத்து நேர்த்தியாக்கி சேலை கட்டி வரும் அழகே தனி அழகாக இருக்கும்.

    விதவிதமான உடைகளில் எத்தனை பெண்கள் சென்றாலும், அவர்களுக்கு இடையே இவ்வாறு சேலை கட்டி, தலையில் பூச்சூடி வலம் வரும் பெண்களை பார்த்தால் 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு...' என்று எல்லோரது கண்களும் அவர்களை நோக்கித்தான் திரும்பும்.

    அதே போலத்தான் இன்றைய ஏ.எம்.ஜெயின் கல்லூரி காட்சியும் அமைந்திருந்தது. மேகம் சூழ்ந்து இருண்ட மாலைப் பொழுதைப் போல் காலை நேரம் காட்சியளித்தது. அப்போது போட்டியில் கலந்து கொண்ட அத்தனை மாணவிகளும் முதல் நிகழ்ச்சியாக நடந்து வரும் 'வாக்கத்தான்' நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார்கள்.

    நடிகை சனம் ஷெட்டி மற்றும் கல்லூரி டீன் ரம்யா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். கொடியிடை அசைய மாணவிகள் தழைய தழைய சேலை கட்டி நடந்த காட்சி பார்வையாளர்களை கண் சிமிட்டாமல் பார்க்க வைத்தது. அந்த நிகழ்ச்சி நிறைவடைந்ததும் மொத்த மாணவியர் கூட்டமும் போட்ட துள்ளல் நடனம் கல்லூரி வளாகத்தையே களை கட்ட வைத்தது.

    அதன் பிறகு கலையரங்கத்துக்குள் போட்டிகள் தொடங்கியது. முதல் போட்டியாக நடனப் போட்டி நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட குழுக்கள் கலந்து கொண்டனர். முதலில் ஆடிய மாணவிகள் "ஜெமினி ஜெமினி ஜெமினி... கவனி கவனி கவனி... ஓ போடு" என்ற பாடலுக்கு போட்ட ஆட்டம் கூட்டத்தில் இருக்கும் அனைவரையும் கவனிக்க வைத்தது.

    நடுவராக இருந்த நடிகை சுஜா வருணியே வியந்து போனார். சேலை கட்டிக் கொண்டு இவ்வளவு அழகாக ஆடுவது சாதாரண மானதல்ல என்று பாராட்டினார். ஆர்.ஜே.ஆனந்தியும் இந்த போட்டிக்கு நடுவராக இருந்தார்.

    அதைத் தொடர்ந்து "பஞ்சு மிட்டாய் சேல கட்டி... பட்டு வண்ண ரவிக்கை போட்டு... கஞ்சி கொண்டு போறவளே" என்ற பாடலுக்கும் அவர்கள் போட்ட ஆட்டம் நிஜத்திலும் சேலை கட்டி ரவிக்கை அணிந்து ஆடியது ஆச்சரிய மூட்டியது.

    நடனத்தை தொடர்ந்து ஆடை - அலங்கார போட்டி நடந்தது. சேலையில் கைவண்ணம் காட்டியது நெசவாளர்கள். அந்த சேலையிலேயே தங்கள் கை வண்ணத்தை காட்டினார்கள் மாணவிகள்.

    அதாவது சாதாரணமாக சேலை கட்டுவதில் இருந்து வித்தியாசமான முறையில் சேலைகளை கட்டி இப்படியும் அசத்த முடியும் என்று அசத்தி காட்டினார்கள். அதைத் தொடர்ந்து குழு விவாதப் போட்டி அட்டகாசமாக அரங்கேறியது.

    'சேலை கட்டியதும் செம அழகாக மகாலட்சுமியாட்டம் தெரிவது எந்த தலைமுறை பெண்கள்? 2000-க்கு பிறகு பிறந்தவர்களா, 1980-90களில் பிறந்தவர்களா? என்ற தலைப்பில் சுமார் 30 மாணவிகள் பங்கேற்று விவாதம் செய்தார்கள். இதற்கு நடுவராக சுமையாநாஸ் இருந்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் மின்மினி விற்பனைப் பிரிவு தலைமை அதிகாரி வெங்கட் சுந்தர்நாத், டி.ஜே.தீபிகா ஆகியோர் பங்கேற்றனர். ராஸ்மட்டாஸ் நிறுவனர் ஜோமைக்கேல் பிரவீன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

    நேரம் போவதே தெரியாமல் தொடர்ந்து போட்டிகள் களை கட்டிக் கொண்டிருந்தது. அரங்கத்தில் திரண்டிருந்த மாணவிகளும் உற்சாக குரலில் அரங்கத்தையே அதிர வைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது தங்கள் செல்போன்களை ஒளிர விட்டு ஆரவாரம் செய்தார்கள்.

    'நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி... என் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கிறங்கி போனேன்டி' என்ற புதிய மன்னர்கள் பாடலுக்கு ஏற்ப சேலையில் புதிய மாணவிகளாக தெரிந்தவர்களை பார்த்து கிறங்கித்தான் போனார்கள்.

    • குரூப் 2 ஏ பணிகளுக்கு, 2,006 பணியிடங்கள் காலியாக உள்ளன.
    • முதன்மை எழுத்துத் தேர்வுகள் 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளன.

    தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது.

    இதில், குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 தேர்வர்களில் 5,83,467 தேர்வர்கள் முதல்நிலை தேர்வு எழுதினர்.

    குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகளுக்கு அணுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் கடந்த 12 ஆம் தேதி வெளியிடபட்டது.

    குரூப் 2 பணிகளுக்கு மொத்தம் 534 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், முதன்மைத் தேர்வுக்கு 7,987 பேர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குரூப் 2 ஏ பணிகளுக்கு, 2,006 பணியிடங்கள் காலியாக உள்ளன.

    மொத்தமாக குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுக்கு 21,822 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகள் 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளன.

    இந்நிலையில், குரூப் 2, 2A முதன்மைத் தேர்வு OMR ஷீட் முறையிலேயே நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கணினி (CBT Mode) வழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கோவில் யானைகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
    • பழனி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஒரு மாதத்திற்குள் நியமிக்கபடுவார்கள்.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியல்களில் பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். உண்டியல் காணிக்கைகள் கோவில் ஊழியர்களால் தரம் பிரித்து மாத மாதம் எண்ணப்படுகிறது. உண்டியலில் கிடைத்த நகைகளை பழனி கோவில் தலைமை அலுவலகத்தில் பாதுகாத்து வைத்துள்ளனர். இந்தநிலையில் பயன்படுத்த இயலாத தங்க நகைகளில் உள்ள கற்கள், அழுக்கு, அரக்கு மற்றும் பிற உலோகங்கள் நீக்கப்பட்டு மும்பையில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தின் உருக்காலையில் சுத்த தங்கமாக மாற்றம் செய்யவும், வங்கியில் தங்க பத்திரமாக முதலீடு செய்யவும் இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி பழனி முருகன் கோவிலுக்கு வரப்பெற்ற ரூ.136 கோடி மதிப்பிலான 192.984 கிலோ கிராம் தங்க நகைகளை சுத்த தங்கமாக மாற்றி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி, பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார், ஓய்வு பெற்ற நீதியரசர் மாலா ஆகியோர் பங்கேற்று வங்கி அதிகாரிகளிடம் நகைகளை வழங்கினர்.

    அப்போது அமைச்சர் சேகர் பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் முதற்கட்டமாக 23 கோவில்களில் இருந்து காணிக்கை தங்கங்களை உருக்கி 443 கிலோ தங்கம் வங்கிகளில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.5 கோடியே 79 லட்சம் வட்டி கிடைக்கிறது. 2ம் கட்டமாக பழனி கோவிலில் 192.984 கிராம் தங்கமும், மாசாணியம்மன் கோவிலில் 28 கிலோ தங்கம், திருச்சி குணசீலன் கோவிலில் 12 கிலோ தங்கம் என 13 கோவில்களில் தங்க முதலீடு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்க உருக்கு ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 1000கிலோ தங்கம் முதலீடு செய்யப்பட்டு, ரூ.700 கோடி அளவிற்கு வைப்பு நிதியாக வைக்கப்படும். அதன்மூலம் ஆண்டுதோறும் ரூ.12 கோடி வட்டி வருமானம் பெறப்படும். 2007ம் ஆண்டு பழனி கோவிலில் 191 கிலோ தங்கம் முதலீடு செய்யப்பட்டு அதன்மூலம் ரூ.1 கோடியே 38 லட்சம் வருமானம் பெறப்படுகிறது.

    அறங்காவலர் குழு தீர்மானத்தின் படி அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் நிரப்பப்படும். கோவில் யானைகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. புதிய சட்டத்தின் படி யானை வாங்க இயலாது. புதிய யானையை வாங்கி பராமரிப்பு செலவையும் ஏற்கும் வகையில் புதிய யானையை பக்தர்கள் வாங்கிக் கொடுத்தால் அவை பெற்றுக்கொள்ளப்படும். பழனி கோவிலில் 2-வது ரோப்கார் மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ளதை போல நவீன முறையில் அமைக்கப்படும். பழனி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஒரு மாதத்திற்குள் நியமிக்கபடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பழனி மலைக்கோவிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர், வங்கி அதிகாரிகள், கோவில் உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அஸ்வின் என்ற மந்திரச் சொல் எதிரணிகளை நிலை குலைய செய்துள்ளது.
    • சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்ற செய்தி அதிர்ச்சி அளித்தது.

    நாகர்கோவில்:

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் அவரது சாதனைகளை பாராட்டும் வண்ணம் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதினை வழங்க வேண்டும் என விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2010 ஆண்டு முதல் கடந்த 14 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரராக விளங்கி வருகிறார் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட், ஒரு நாள், 20-20 என அனைத்து போட்டிகளிலும் இந்தியாவிற்கு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையான பேட்டிங் வாயிலாகவும் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்துள்ளார்.

    அஸ்வின் என்ற மந்திரச் சொல் எதிரணிகளை நிலை குலைய செய்து இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடி தந்துள்ளது. பல சாதனைகளை படைத்த நம்ம சென்னையை சேர்ந்த அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்ற செய்தி அதிர்ச்சி அளித்தது.

    இவ்வளவு திறமை வாய்ந்த வீரர் தனது புகழின் உச்சியில் ஓய்வை அறிவித்தது ஏற்க முடியாத ஒன்றாக உள்ளது. சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாட உள்ளார்.

    இத்தகைய சிறந்த வீரருக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதினை மத்திய அரசு வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திவ்யாஸ்ரீ தொட்டதில் உடலில் மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தாவரகரை கிராமத்தில் வசிப்பவர் கிருஷ்ணன் (வயது35) விவசாயி. இருவடைய மகள் திவ்யாஸ்ரீ (10). இந்த சிறுமி தாவரகரை அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை திவ்யாஸ்ரீ கழிவறை அருகே சென்றுள்ளார். அப்போது கழிவறை அருகே இருந்த மின்வயரை தொட்டுள்ளார். அப்போது திவ்யாஸ்ரீ உடலில் திடீரென்று மின்சாரம் பாய்ந்து சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தியதில் வீட்டின் அருகே இரவு நேரங்களில் யானை வராமல் இருக்க கிருஷ்ணன் மின் விளக்கு அமைத்து இருந்தார். அதில் மின்கசிவு ஏற்பட்டிருந்துள்ளது. அதை அறியாமல் திவ்யாஸ்ரீ தொட்டதில் உடலில் மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

    ×