என் மலர்tooltip icon

    இந்தியா

    • மகாத்மா காந்தியின் சிலைக்கு எதிரே ராஜாஜியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
    • லுட்யன்ஸ் டெல்லி என்று அழைக்கப்படுகிறது.

    டெல்லியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவனில் ராஜாஜியின் சிலையை ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று திறந்து வைத்தார்.

    சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் ஒரே கவர்னர் ஜெனரல் ராஜாஜி என்று அழைக்கப்படும் சி.ராஜகோபாலாச்சாரி ஆவார். 1948 முதல் அவர் அந்த பதவியில் அவர் இருந்தார்.

    1950 ஜனவரி 26, இல் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பின் அந்த பதவி நீக்கப்பட்டு ஜனாதிபதி பதவி உருவாக்கபட்டது. கவர்னர் ஜெனரலாக இருந்த சமயம் ராஜாஜி ராஷ்டிரபதி பவனில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் அவரின் நினைவை போற்றும் வகையில் ராஷ்டிரபதி பவன் அசோக் மண்டபத்திற்கு அருகிலுள்ள பிரமாண்டமான படிக்கட்டுப் பகுதியில், மகாத்மா காந்தியின் சிலைக்கு எதிரே ராஜாஜியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

    இந்த இடத்தில் முன்பு இருந்த எட்வின் லுட்யன்ஸ் என்பவரின் சிலைக்குப் பதிலாகவே ராஜாஜியின் சிலை வைக்கப்பட்டுள்ளது.

    பிரிட்டிஷ் கட்டிட கலைஞரான எட்வின் லுட்யன்ஸ், 1912-ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் புதிய தலைநகராக டெல்லியை வடிவமைக்க நியமிக்கப்பட்டவர் ஆவார்.

    தற்போது அவரின் சிலை அகற்றப்பட்டுள்ள, ராஷ்டிரபதி பவன் உட்பட டெல்லியின் பல முக்கிய கட்டிடங்களை அவரே வடிவமைத்தார்.

    அவர் வடிவமைத்த பிரதான கட்டிடங்கள் அமைந்துள்ள 26 சதுர கிலோமீட்டர் பகுதி லுட்யன்ஸ் டெல்லி என்று அழைக்கப்படுகிறது.

    நேற்று ராஜாஜி சிலையை திறந்து வைத்த நிகழ்வில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்மு, ராஜாஜி கவர்னராக ஜெனரல் மாளிகைக்கு வந்தபோது, தனது அறையில் ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் மகாத்மா காந்தியின் படங்களை வைத்தார்.

    இந்தியா அப்போது, டொமினியன் அந்தஸ்தில் இருந்தபோதே, இந்தியர்களின் இதயங்களில் சுயராஜ்யம் முழுமையாக நிலைநாட்டப்பட்டுவிட்டது என்ற செய்தியை அவர் இதன் மூலம் உணர்த்தினார்.

    முன்பு ராஷ்டிரபதி பவனில் இந்தியாவைச் சுரண்டிய பிரிட்டிஷ் அதிகாரிகளின் படங்கள் இருந்தன. ஆனால் இப்போது, 'பரம் வீர் தீர்கா' பகுதியில் பரம் வீர் சக்ரா விருது பெற்ற வீரர்களின் படங்கள் அலங்கரிக்கின்றன.

    இந்திய செம்மொழிகளின் கையெழுத்துப் பிரதிகள் மற்றும் நூல்களைப் பாதுகாக்க ராஷ்டிரபதி பவனில் 'கிரந்த் குடிர்' என்ற பாரம்பரிய நூலகம் நிறுவப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

    இந்த விழாவிற்காக பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய செய்தியை கலாச்சாரத்துறை அமைச்சர் வாசித்தார். அதில், "வரலாற்றுச் சிறப்புமிக்க ராஷ்டிரபதி பவனில் ராஜாஜியின் சிலையைத் திறப்பது இந்திய மக்களுக்குப் பெருமைக்குரிய தருணம்" என்று மோடி குறிப்பிட்டுள்ளார். 

    • தனிப்பட்ட உதவி என்பதால் யாருக்கு வழங்க வேண்டும் என்பதைத் தானே தீர்மானிப்பேன்
    • மதத்தின் அடிப்படையில் கொடுத்த உதவியை திரும்பப் பெறுவது மனிதாபிமானமற்ற செயல்

    ராஜஸ்தானில் பிரதமர் மோடி பிப்.28 அன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் இச்சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ளுமாறு பொதுமக்களை அழைக்க ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் உள்ள கரேடா என்ற கிராமத்திற்கு சென்றுள்ளார் பாஜக முன்னாள் எம்.பி. சுக்பீர் சிங் ஜானபுரியா.

    பிரதமர் மோடியின் வருகை குறித்து மக்களிடம் பரப்புரை செய்து கொண்டிருந்தபோது, அங்குவந்த பெண்களுக்கு போர்வைகள் வழங்கியுள்ளார். அப்போது ஒரு பெண்ணின் பெயரை கேட்டுள்ளார். அவர் தனது பெயரை சொன்னவுடன் அவர் முஸ்லீம் என தெரியவர அவருக்கு கொடுத்தப் போர்வையை திரும்பப் பெற்றுள்ளார். மேலும் அங்கிருந்த முஸ்லீம் பெண்களுக்கு கொடுத்த அனைத்துப் போர்வைகளும் திரும்ப பெறப்பட்டுள்ளது.

    அதற்கு "பிரதமர் நரேந்திர மோடியைத் திட்டுபவர்களுக்கு போர்வை வாங்க உரிமையில்லை" என்றும் "நீங்கள் வருத்தப்பட்டாலும் எனக்குக் கவலையில்லை" என்றும் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது ஒரு அரசுத் திட்டம் அல்ல என்றும், தனது சொந்தப் பணத்தில் செய்யப்படும் தனிப்பட்ட உதவி என்பதால் யாருக்கு வழங்க வேண்டும் என்பதைத் தானே தீர்மானிப்பேன் என்றும் கூறியுள்ளார். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.  

    பல பெண்கள் மணிக்கணக்காக காத்திருந்தும் வெறுங்கையுடன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஏழை மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு போர்வைகளை வழங்கிய பிறகு அவர்களின் பெயரைக் கேட்டு, பின்னர் அவர்களின் மதத்தின் அடிப்படையில் அவற்றை திரும்பப் பெறுவது மனிதாபிமானமற்ற செயல் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


    • பாகிஸ்தான் நோட்டுகள் இணைக்கப்பட்ட இரண்டு பலூன்கள் கண்டெடுக்கப்பட்டது.
    • பாகிஸ்தான் நோட்டுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே, அமெரிக்க டாலர் மற்றும் பாகிஸ்தான் நோட்டுகள் இணைக்கப்பட்ட இரண்டு பலூன்கள் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    இந்த அமெரிக்க டாலர் மற்றும் பாகிஸ்தான் நோட்டுகள் உண்மையானவையா இல்லையா என்பதைக் கண்டறிய விசாரணைகள் நடந்து வருவதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

    நேற்று உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள விமானப்படை பகுதியில் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் (PIL) பெயரைக் கொண்ட பலூன் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    • பல்வேறு வசதிகள் செய்யப்படுகிறது.
    • ஒவ்வொரு துறை அலுவலகத்திலும் இணைய வசதியுடன் கம்ப்யூட்டர் வசதிகள், முழுநேரமும் ஊழியர்கள் இடம் பெறுவார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமையில் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் பா.ஜ.க. தேர்தல் முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.

    பாரதிய ஜனதா கட்சியின் தலைமைத் தேர்தல் அலுவலகம் அமைந்தகரையில் உள்ள அய்யாவு மகாலில் அமைகிறது. இதற்கான வேலைகள் இரவு பகலாக நடந்து வருகிறது. இந்த அலுவலகத்தில் பிரசாரங்களை ஒருங்கிணைப்பது, விளம்பரத் துறை, பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது, சமூக ஊடகப் பிரிவு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, சட்ட உதவி, தலைவர்கள் சுற்றுப்பயண ஏற்பாடு, அகில இந்திய தலைவர்கள் வருகை, தங்க வைத்தல், பிரசாரத்துக்கு தேவையான பொருட்களை அனுப்பி வைத்தல், வாகனங்கள் ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட 30 துறைகள் அமைக்கப்படுகிறது.

    இதுதவிர கூட்ட அரங்கம், தலைவர் அறை, முக்கிய தலைவர்கள் கலந்துரையாடும் அறை உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்படுகிறது. ஒவ்வொரு துறை அலுவலகத்திலும் இணைய வசதியுடன் கம்ப்யூட்டர் வசதிகள், முழுநேரமும் ஊழியர்கள் இடம் பெறுவார்கள்.

    இந்த பணிகள் அனைத்தும் வருகிற 25-ந்தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். 26-ந்தேதி (வியாழன்) இந்த அலுவலகத்தை மத்திய மந்திரி பியூஷ்கோயல் திறந்து வைக்கிறார். அதன் பிறகு கட்சி அலுவலகமும் தற்காலிகமாக இங்கு செயல்படும்.

    • நாகேன் ராய்க்கு பங்கா விபூஷண் விருது வழங்கி கவுரவைக்கப்பட்டது.
    • ராஜ்பன்ஷி சமூகத்தின் முக்கிய தலைவராக ராய் உள்ளார்.

    பாஜக மாநிலங்களவை எம்பியான நாகேன் ராய்க்கு மேற்கு வங்கத்தின் மிக உயர்ந்த குடிமகன் விருதான பங்கா விபூஷண் விருது வழங்கி கவுரவைக்கப்பட்டது.

    மேற்குவங்கத்தில் விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி, நாகேன் ராய்க்கு விருது வழங்கியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.

    மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் பலவீனமாக உள்ள வடக்கு வங்கதேசத்தில் உள்ள ராஜ்பன்ஷி சமூகத்தின் முக்கிய தலைவராக ராய் இருப்பதால் இந்த விருது முக்கியத்துவம் பெற்றுள்ளது. சமீபத்திய தேர்தல்களில் வடக்கு வங்கதேசத்தில் பாஜக நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இதுகுறித்து வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • தலைமறைவான தட்சிணாமூர்த்தி மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது தாய்க்கும் தட்சிணாமூர்த்தி என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனால் மாணவி தனது தாயுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.

    இந்த நிலையில் மகள் என்றும் பாராமல் அவருக்கு தாயே தூக்கமாத்திரை கொடுத்து தனது கள்ளக்காதலன் தட்சிணாமூர்த்திக்கு விருந்தாக்கினார். இதில் கர்ப்பம் அடைந்த மாணவி தாயின் பிடியில் இருந்து தப்பி திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறினார்.

    இதுகுறித்து வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது வாழ்க்கையை சீரழித்த கொடூர தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் தட்சிணாமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிஇருந்தார்.

    இதையடுத்து பெற்ற மகளையே தனது கள்ளக்காதலனுக்கு இரையாக்கிய தாயை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான தட்சிணாமூர்த்தி மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

    • மலைப்பாதைகளில் சாலையோரங்களில் உள்ள தோட்டங்களிலும் வேலிக்காக சங்கு பூச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
    • பூச்செடிகளில் இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் சங்கு பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

    பெரும்பாறை:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் ஒவ்வொரு காலநிலைக்கு ஏற்ப மரம், செடிகளில் பல்வேறு வண்ணப்பூக்கள் பூத்து கவர்ந்திழுப்பது வழக்கம். அதன்படி, தற்போது கொடைக்கானல் நகர்ப்பகுதி, மலைப்பாதைகள் மற்றும் கிராமங்களில் சங்கு பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

    குறிப்பாக கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை. தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, புல்லாவெளி, கே.சி. பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காபி, வாழை, மிளகு போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் தோட்டங்களுக்குள் யாரும் செல்லாமல் இருக்க வேலிக்காக சங்கு பூச்செடிகளை விவசாயிகள் நடவு செய்துள்ளனர். அதேபோல் மலைப்பாதைகளில் சாலையோரங்களில் உள்ள தோட்டங்களிலும் வேலிக்காக சங்கு பூச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது அந்த பூச்செடிகளில் இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் சங்கு பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. இவை சாலையோரங்களில் மின் விளக்குகளை தோரணங்களாக கட்டிவிடப்பட்டது போன்று சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளன. இதனால் அவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதுடன், தங்களது கேமரா, செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். 

    • கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மொத்தம் 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
    • கோவை தெற்கில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 509 வாக்காளர்கள் உள்ளனர்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கி டிசம்பர் 14-ந்தேதி வரை நடைபெற்றது.

    இதில் இறந்த வாக்காளர்கள் உள்பட 6½ லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதில் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் 25 லட்சத்து 75 ஆயிரம் வாக்காளர்கள் இருந்தனர்.

    இதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மொத்தம் 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    இந்த நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

    அதன்படி கோவை மாவட்டத்தில் மொத்தம் 26 லட்சத்து 96 ஆயிரத்து 813 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 13 லட்சத்து 889 பேரும், பெண் வாக்காளர்கள் 13 லட்சத்து 95 ஆயிரத்து 396 வாக்காளர்கள் அடங்குவர்.

    இறுதி வாக்காளர் பட்டியலில் சட்டசபை தொகுதி வாரியாக இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் விவரம் வருமாறு:-

    மேட்டுப்பாளையம் தொகுதியில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 22 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 46 ஆயிரத்து 382 பெண் வாக்காளர்கள், 34 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 79 ஆயிரத்து 438 வாக்காளர்கள் உள்ளனர்.

    சூலூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 45 ஆயிரத்து 987 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 57 ஆயிரத்து 452 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 102 பேரும் என மொத்தம் 3 லட்சத்து 3 ஆயிரத்து 541 வாக்காளர்களும் உள்ளனர்.

    கவுண்டம்பாளையம் தொகுதியில் 1 லட்சத்து 98 ஆயிரத்து 430 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 8 ஆயிரத்து 963 பெண் வாக்காளர்கள், 114 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 4 லட்சத்து 7 ஆயிரத்து 507 வாக்காளர்கள் உள்ளனர்.

    கோவை வடக்கில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 383 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 48 ஆயிரத்து 122 பெண் வாக்காளர்கள், 28 மூன்றாம் பாலினத்தவர்கள் என 2 லட்சத்து 91 ஆயிரத்து 533 வாக்காளர்கள் உள்ளனர்.

    தொண்டாமுத்தூரில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 38 ஆயிரத்து 968 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 48 ஆயிரத்து 371 பேரும், 103 மூன்றாம் பாலினத்தவர்களும் என 2 லட்சத்து 87 ஆயிரத்து 442 வாக்காளர்களும் உள்ளனர்.

    கோவை தெற்கில் ஆண் வாக்காளர்கள் 90 ஆயிரத்து 214 பேரும், பெண் வாக்காளர்கள் 96 ஆயிரத்து 263 பெண் வாக்காளர்களும், 32 மூன்றாம் பாலினத்தவர்களும் என 1 லட்சத்து 86 ஆயிரத்து 509 வாக்காளர்கள் உள்ளனர்.

    சிங்காநல்லூர் தொகுதியில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 758 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 37 ஆயிரத்து 277 பெண் வாக்காளர்கள், 23 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 58 பேரும், கிணத்துக்கடவு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 44 ஆயிரத்து 562 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 55 ஆயிரத்து 888 பேரும், 36 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 3 லட்சத்து 486 வாக்காளர்கள் உள்ளனர்.

    பொள்ளாச்சி தொகுதியில் 96 ஆயிரத்து 61 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 5 ஆயிரத்து 919 பெண் வாக்காளர்களும், 35 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 15 வாக்காளர்கள் உள்ளனர். வால்பாறையில் 81 ஆயிரத்து 504 ஆண் வாக்காளர்கள், 90 ஆயிரத்து 759 பெண் வாக்காளர்கள் 21 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 72 ஆயிரத்து 284 வாக்காளர்கள் உள்ளனர். 

    • திராவிட மாடல் சத்தமில்லாமல் நடத்திய surgical strike உங்கள் உறக்கத்தைக் கெடுத்து, இப்படி புலம்பும் அளவுக்கு பெரிய HIT அடித்துள்ளது எனப் புரிந்துகொள்கிறேன்.
    • திராவிட மாடல் அரசின் மகளிருக்கான திட்டங்களை இல்லந்தோறும் எடுத்துக்கூற கழகத்தின் மகளிர் படை மாநிலம் முழுவதும் களமிறங்கிவிட்டது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    திராவிட மாடல் அரசின் 5 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை: முதலில் கொச்சைப்படுத்தினார்கள்; அது 'பூமராங்' ஆனதால் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள்!

    அ.தி.மு.க.வின் அழுத்தமே நாம் 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயை உரிமைத்தொகையாக வழங்கக் காரணம் என்ற அரிய கண்டுபிடிப்பை உதிர்த்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர்.

    பழனிசாமி அவர்களே, உங்கள் அழுத்தம் காரணமல்ல. "உங்கள் டெல்லி ஓனர்கள் தேர்தலைக் காரணம் காட்டி உரிமைத்தொகையைத் தடுத்து நிறுத்துவார்கள் என்ற சூழ்ச்சிதான் காரணம்!" இதனைத் தெளிவாக விளக்கித்தான் எனது சகோதரிகளின் கணக்கில் பணத்தை அட்வான்சாக வரவு வைத்திருக்கிறேன்.

    பரவாயில்லை, நீங்கள் உரிமை கொண்டாடுகிறீர்கள் என்பதில் இருந்தே திராவிட மாடல் சத்தமில்லாமல் நடத்திய surgical strike உங்கள் உறக்கத்தைக் கெடுத்து, இப்படி புலம்பும் அளவுக்கு பெரிய HIT அடித்துள்ளது எனப் புரிந்துகொள்கிறேன்.

    Copy, paste அரசியல் என்பது காலங்காலமாக அ.தி.மு.க.வின் வாடிக்கை என்பதைத் தமிழ்நாட்டில் அனைவரும் அறிவார்கள். அதனால், புதுசா ஏதாவது சொல்லுங்க!

    விடியல் பயணம், புதுமைப்பெண், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என திராவிட மாடல் அரசின் மகளிருக்கான திட்டங்களை இல்லந்தோறும் எடுத்துக்கூற கழகத்தின் மகளிர் படை மாநிலம் முழுவதும் களமிறங்கிவிட்டது. எங்கள் #DMKWomenPowerEngine முன் உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது! என்று கூறியுள்ளார். 



    • கலங்கரை விளக்கத்தின் பழங்காலத்து கட்டுமானத்தை பலப்படுத்த சீரமைப்பு பணிகள் இன்று முதல் தொடங்குகிறது.
    • பராமரிப்பு பணிகள் 2-வாரத்திற்கு நடைபெறுவதாக கூறப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்குள்ள புராதன சின்னங்களை பார்வையிட தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    மாமல்லபுரம் வரும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளின் கண்களில் முதலில் படுவது, அங்குள்ள 100-ஆண்டிற்கு மேல் பழமையான பாரம்பரிய கலங்கரை விளக்கம் தான். இதன் மேல் ஏறி உச்சியில் நின்று, கடற்கரை நகரமான மாமல்லபுரத்தின் புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் பாறை மற்றும் குடவரை கோவில்களின் அழகை வான்வழி பார்வையில் பார்த்து ரசிப்பார்கள்.

    இந்த நிலையில் கலங்கரை விளக்கத்தின் பழங்காலத்து கட்டுமானத்தை பலப்படுத்த சீரமைப்பு பணிகள் இன்று முதல் தொடங்குகிறது. இதற்கான சாரம் கட்டும் பணிகள் முன்அறிவிப்பு இல்லாமல் திடீரென நேற்று நடந்ததால் அதனை பார்வையிட வந்த சுற்றுலா பயணிகளை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அலுவலர்கள் அனுமதிக்கவில்லை.

    இந்த பராமரிப்பு பணிகள் 2-வாரத்திற்கு நடைபெறுவதாக கூறப்படுகிறது. முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென கலங்கரை விளக்கம் மூடப்பட்டதால் விடுமுறை நாளான நேற்று மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

    • தமிழ்நாடுதான் விஜய், விஜய்தான் தமிழ்நாடு!
    • தூயசக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுக-வுக்கும்தான் போர்!

    வேலூரில் நடைபெற்ற தவகெ கூட்டத்தில், திமுக-வையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் நேரடியாக தாக்கிப்பேசிய விஜய், உண்மையில் இந்த தேர்தல் எதுக்கான தேர்தல் என்று சொல்லட்டுமா..? எனக் கேள்வி எழுப்பி தொடர்ச்சியாக உரையாற்றினார்.

    இந்த தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் லஞ்சத்துக்கும் நடக்கும் போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் சரியாக நிர்வாகம் செய்யத் தெரியாத திமுக-வுக்கும் நடக்கும் போர். அதாவது தமிழ்நாட்டு மக்களுக்கும் உங்க ஆட்சிக்கும் நடக்கும் போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர். இதற்கு நடுவில் டெல்லி, என்டிஏ.. போன்றவை என்ன லாஜிக் என்றே புரியவில்லை சார். தமிழ்நாடுதான் விஜய், விஜய்தான் தமிழ்நாடு. தூயசக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுக-வுக்கும் தான் இந்த போர் என்று தவெக தலைவர் விஜய் ஆக்ரோஷமாக பேசினார்.

    விஜய்யின் உரையை கேட்ட தவெக தொண்டர்கள், கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

    • தினமும் 3 ஆயிரத்து 588 பஸ்கள் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
    • பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக தெற்கு ரெயில்வே பல்வேறு மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த 10வது, 11வது நடைமேடையில் பணிகள் தொடங்கி இருப்பதால் கடந்த 20-ந்தேதியில் இருந்து 5 மற்றும் 6-வது நடைமேடையில் இருந்து மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இதன் காரணமாக சேவைகளும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக தெற்கு ரெயில்வே பல்வேறு மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது.

    45 நாட்களுக்கு தற்காலிகமாக மின்சார ரெயில் சேவை மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் பொதுமக்கள் சிரமங்களுக்கு ஆளாகி உள்ளனர்.

    ஆனாலும் அதனை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று ரெயில்வே துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. புறநகர் மின்சார ரெயில் பயணிகள் வசதிக்காக மாநகரப் போக்குவரத்து கழகம் கூடுதலாக பஸ் சேவை அளிக்கிறது. குறிப்பாக எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது.

    தலைமைச் செயலகம் வழியாக 8 பஸ்கள், நுங்கம்பாக்கம் வழியாக 5 பஸ்கள், ராயபுரம் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை 27 பஸ்கள், பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பஸ்கள் என மொத்தம் 60 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது.

    இது தவிர எழும்பூர் நிலையம் வழியாக பஸ்கள் மாற்றிவிடப்பட்டுள்ளது. தீவுத்திடல், ராயபுரத்தில் இருந்து புறப்படக்கூடிய பஸ்கள் சென்ட்ரல், தலைமை செயலகம், சிந்தாதிரிப்பேட்டை வழியாக எழும்பூர் நிலையம் சென்று அங்கிருந்து அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, திருநின்றவூர், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது.

    இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது,

    "தினமும் 3 ஆயிரத்து 588 பஸ்கள் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. எழும்பூரில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டதன் அடிப்படையில் அங்கிருந்து முக்கிய பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக எந்தெந்த பகுதிகளுக்கு சேவை தேவைப்படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப பஸ் வசதி அளிக்கப்படுகிறது. 101 வழித்தடத்தில் கூடுதலாக மின்சார பஸ்கள் இயக்கப்படுகிறது" என்றார்.

    ×