என் மலர்
இந்தியா
- இபிஎஸ் கல்லூரியில் ஒரு மாதத்திற்குள் 2 மாணவிகள் உயிர்மாய்ப்பு.
- மாணவி மன உளைச்சலில் இருந்ததாக போலீசார் தகவல்
ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் நர்சிங் மாணவி ஒருவர் நேற்று காலை தான் தங்கியிருந்த விடுதி கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 19 வயது மாணவி பல்லவி, குப்பத்தில் உள்ள பிஇஎஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு (பிஎஸ்சி நர்சிங்) படித்து வந்தார்.
போலீசாரின் கூற்றுப்படி பல்லவி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வியாழனன்று மாலை (20.11.25) விடுதியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். மாணவி குதித்ததை பார்த்த சக மாணவிகளும், அங்கிருந்த ஊழியர்களும் அவரைமீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் வெள்ளிக்கிழமை காலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பல்லவியின் குடும்பத்தினர் கல்லூரி மற்றும் விடுதி நிர்வாகத்தை குற்றம் சாட்டியுள்ளனர்.
முன்னதாக அக்.31ஆம் தேதி முதலாமாண்டு மாணவி ஒருவர் தூக்க மாத்திரை உட்கொண்டு இறந்த நிலையில், ஒரு மாதத்திற்குள் இரண்டு மாணவிகள் உயிரை மாய்த்துக்கொண்டது அங்குள்ள சக மாணவிகள் மத்தியிலும், ஊழியர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாத தொடக்கத்தில் சித்தூர் மாவட்டத்தில் பொறியியல் மாணவர்கள் இருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.
மற்றொரு மாணவர் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த வாரம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஒரு பொறியியல் மாணவர் உயிரை மாய்த்துக்கொண்டார். மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்வது பெற்றோர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
- திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலைக்கு என்ன பதில் வைத்துள்ளார் பொம்மை முதல்வர்?
- உடனடியாக திமுக ஒன்றியச் செயலாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
விழுப்புரம் அருகே திமுக ஒன்றியச் செயலாளர், பெண் ஒருவரை 6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
"காவல்துறையால் என்னை ஒன்றும் செய்ய முடியாது; நான் முக்கிய புள்ளி" எனக் கூறி, தனது திமுக பதவியை வைத்து கொண்டு இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலைக்கு என்ன பதில் வைத்துள்ளார் பொம்மை முதல்வர்?
அமைச்சருக்கு நெருக்கமான அனுதாபி முதல், பதவியை வைத்து கொண்டு கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ள ஒன்றியச் செயலாளர் வரை, இந்த திமுக பாலியல் SIR-களைக் கூட கட்டுப்படுத்த கையாலாகாத தலைவராக தான் இந்த பொம்மை முதல்வர் இருக்கிறார்.
தன் கட்சி காமுகர்களை ஒடுக்க முடியாத இந்த பொம்மை முதல்வர், நம் தமிழகத்தை எப்படி பாதுகாக்கப் போகிறார்?
உடனடியாக திமுக ஒன்றியச் செயலாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- 2026 தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சராக மீண்டும் மு.க.ஸ்டாலின் வருவார்.
- அரசியல் கட்சிகள் நடத்தும் ஒவ்வொரு போராட்டங்களுக்கும் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னை தாயகத்தில் சமத்துவ நடைபயணத்திற்கு வீரர்கள் நேர்காணல் இன்று நடைபெற்றது.
பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சியில் ஜனவரி 2-ந்தேதி ம.தி.மு.க.வின் சமத்துவ நடைபயணம் தொடங்குகிறது. மதுரையில் இந்த பயணம் 12-ந்தேதி நிறைவடைகிறது.
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதனால் போதைப் பொருளை ஒழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த விழிப்புணர்வு நடைபயணம் நடக்கிறது. திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்த பயணத்தில் சுமார் 1000 வீரர்கள் என்னோடு கலந்து கொள்கிறார்கள். இது எனது 11-வது நடை பயணமாகும். தமிழக அரசு போதைப் பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சாதி மத மோதல் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் இது அமைகிறது.
தமிழகத்தின் நலனுக்காக எனது எஞ்சிய காலத்தையும் செலவிட முடிவு செய்து இந்த பயணத்தை மேற்கொள்கிறேன். திராவிட இயக்கத்துக்கு எதிராக இந்துத்துவா சக்திகள் எதிர்த்து வருகின்றன. அதனை முறியடிக்கும் வகையிலும் இந்த பயணம் அமையும்.
2026 தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சராக மீண்டும் மு.க.ஸ்டாலின் வருவார். அரசியல் கட்சிகள் நடத்தும் ஒவ்வொரு போராட்டங்களுக்கும் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். விஜய் கூட்டத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு நேரில் சென்று துக்கம் விசாரிக்காமல் அவர்களை அழைத்து துக்கம் விசாரித்தது முறையல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ஜீவன், தொண்டர் படை தலைவர் பாஸ்கர சேதுபதி, வக்கீல் நன்மாறன், கழக குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
- தமிழ்நாட்டிற்கு பொறுப்பு டி.ஜி.பி. என்று அறிமுகப்படுத்தியதே அ.தி.மு.க. தான்.
- கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ ரெயில் கொண்டுவரப்பட வேண்டும்.
புதுக்கோட்டை:
தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொறுப்பு டி.ஜி.பி. விவகாரத்தில் பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் விவரங்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும். யூடியூபில் வருகின்ற செய்திகள் பேசுவதை எல்லாம் செய்திகள் என்று எடுத்துக்கொண்டு ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கிறார் அவர்.
எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக தான் பா.ஜ.க. அரசின் சிறந்த சேவகர் என்று நிரூபித்துக் கொண்டு வருகிறார். மத்திய அரசுக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போது எல்லாம் குறுக்கே விழுந்து தமிழ்நாடு அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி ஒன்றிய பா.ஜ.க. அரசை காப்பாற்றி வருகிறார்.
அது டி.ஜி.பி. விவகாரத்திலும் நடந்துள்ளது. ஆளுநர் மூலம் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்று எண்ணிய மத்திய பா.ஜ.க. அரசு அது டி.ஜி.பி. மூலம் நடந்து விடாதா என்று எண்ணினார்கள். ஆனால் டி.ஜி.பி. மூலம் நடக்க முடியவில்லை.
தமிழ்நாட்டிற்கு பொறுப்பு டி.ஜி.பி. என்று அறிமுகப்படுத்தியதே அ.தி.மு.க. தான். 2011-ம் ஆண்டு ராமானுஜத்தை உளவுத்துறை டி.ஜி.பி. ஆகவும், சட்ட-ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி. ஆகவும் அ.தி.மு.க. அரசுதான் கொண்டு வந்தது.
ராஜேந்திரன் என்பவரையும் பொறுப்பு டி.ஜி.பி.யாக கொண்டு வந்ததும் அ.தி.மு.க. தான். தற்போது இதை பற்றி பேசி பா.ஜ.க. அரசின் விசுவாசி என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்துக் கொண்டு வருகிறார். பொறுப்பு டி.ஜி.பி. பற்றி பேசுவதற்கு எந்தவித அருகதையும் எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது.
அ.தி.மு.க. ஆட்சியில் அலங்கோலமாக கடந்த சட்ட ஒழுங்கை திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக கொண்டு வந்துள்ளது.
கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ ரெயில் கொண்டுவரப்பட வேண்டும். சென்னையில் சிறப்பாக மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றோம். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு சென்னையில் சிறப்பாக நடைபெறுகிறது. எங்களுக்கு எந்த அளவு போட வேண்டும் என்பது சரியாக தெரியும். யார் எங்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டாம். போலியான தருணங்களை சொல்லி நிராகரித்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்திய கடற்படையின் ரகசிய தகவல்கள் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மூலம் பாகிஸ்தானுக்கு விற்பனை
- இந்திய கடற்படை கப்பல்கள் கேரளாவில் உள்ள கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்படுகின்றன.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இருவரை கர்நாடக காவல்துறை கைது செய்துள்ளது. உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோஹித் (20) மற்றும் சாண்ட்ரி (37) என அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள், கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் மல்பே பிரிவில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, கப்பல் கட்டும் தளத்தின் ரகசிய தகவல்கள் வெளியில் கசிவதாக, ஊழியர்கள் மீது மல்பே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஊழியர்களை கண்காணித்து இருவரையும் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் ரோஹித்-தான் முக்கிய குற்றவாளி என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களாக மால்பே பிரிவில் இன்சுலேட்டராக பணிபுரிந்த ரோஹித், கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் பணிபுரிந்த தனது கூட்டாளி சாண்ட்ரி உடன் இணைந்து இந்திய கடற்படை கப்பல்களின் ரகசிய பட்டியல், அவற்றின் அடையாள எண்கள், மத்திய அரசின் கீழ் உள்ள துறைமுகங்கள், கப்பல் கட்டும் தள நடவடிக்கைகள் மற்றும் கடற்படை கப்பல்கள் போன்றவற்றின் விவரங்களை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் மற்றும் பிறநாடுகளுக்கு கொடுத்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மால்பே பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகும், ரோஹித் சாண்ட்ரியிடமிருந்து தகவல்களைப் பெற்று வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் பாகிஸ்தானுக்கு பகிர்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்திய கடற்படை கப்பல்கள் கேரளாவில் உள்ள கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் மல்பே பிரிவு தனியார் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்காக கப்பல்களை உற்பத்தி செய்கிறது.
- பாஜக-தேர்தல் ஆணையத்தின் தீய தந்திரங்களை நிராகரித்து, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் கோடிக்கணக்கான கையெழுத்துகளைப் பெற்றுளாம்.
- காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.
வாக்கு மோசடிக்கு எதிராக டிசம்பர் 14 ஆம் தேதி டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் பேரணி நடத்தப்போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும், நமது அரசியலமைப்பை அழிக்கும் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரு செய்தியை அனுப்ப டிசம்பர் 14 அன்று டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் 'வோட் சோர் காடி சோட்' என்ற பிரமாண்ட பேரணியை காங்கிரஸ் நடத்தும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் எக்ஸ் இல் பதிவிட்டுள்ளார்.
மேலும், "போலி வாக்காளர்களைச் சேர்ப்பது, எதிர்க்கட்சிகளுக்குச் சார்பான வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது மற்றும் வாக்காளர் பட்டியலில் பெருமளவில் மாற்றங்களைச் செய்வது போன்ற பாஜக-தேர்தல் ஆணையத்தின் தீய தந்திரங்களை நிராகரித்து, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் கோடிக்கணக்கான கையெழுத்துகளைப் பெற்றுளாம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பேரணி நடத்துவது என்று முன்னதாக நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேலும் வலுப்பெறக்கூடும்.
- வடகடலோர மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேலும் வலுப்பெறக்கூடும்.
இதன்பின்பே, இது புயலாக வலுப்பெறுமா? புயலாக வலுப்பெறும் பட்சத்தில் எந்த இடத்தில் கரையைக் கடக்கக்கூடும் என்பதை அதன் நகர்வுகளை பொறுத்து அமையும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில், வட தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடிய 24-ந்தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- துணை முதல்வர்களாக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா பொறுப்பெற்றனர்.'
- பாஜகவில் இருந்து 14 பேர், ஜேடியு விலிருந்து இருந்து 8 பேர் அமைசர்களாக பதவியேற்றனர்.
பீகார் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 243 இல் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக-ஜேடியு என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது.
கடந்த வியாழக்கிழமை பீகார் முதல்வராக ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக பதவியேற்றார்.
பாஜகவில் இருந்து 14 பேர், ஜேடியு விலிருந்து இருந்து 8 பேர், லோக் சக்தி (ராம்விலாஸ்) கட்சியில் இருந்து 2 பேர், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சாவில் இருந்து தலா ஒருவர் அமைச்சர்களாக பதவியேற்றனர். துணை முதல்வர்களாக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா பொறுப்பெற்றனர்.'
இந்நிலையில் வியாழக்கிழமை பதவியேற்ற 26 அமைச்சர்களில் 18 பேருக்கு மட்டுமே இன்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பாஜகவை சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரிக்கு முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த துறையின்கீழ் காவல்துறை, உளவுத்துறை, பொது சட்டம் மற்றும் ஒழுங்கு போன்ற முக்கிய துறைகள் வருகின்றன.
கடந்த ௨௦ ஆண்டுகளாக தம்மிடமே வைத்திருந்த உள்துறையை முதல்முறையாக கூட்டணி கட்சியான பாஜவுக்கு நிதீஷ் குமார் விட்டுக் கொடுத்துள்ளார்.
முந்தைய ஆட்சியில் சாம்ராட் சவுத்ரி வகித்து வந்த நிதி மற்றும் வணிக வரி இலாகா, ஜே.டியுவின் பிரேந்திர பிரசாத் யாதவிடம் வழங்கப்பட்டுள்ளது.
வருவாய் மற்றும் நில சீர்திருத்தங்கள், சுரங்கம் மற்றும் புவியியல் துறைக பாஜகவை சேர்ந்த மற்றொரு துணை முதல்வரான விஜய் சின்ஹாவுக்கு ஒதுக்கப்பட்டது. அதேபோல் விவசாயம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பேரிடர் மேலாண்மை துறை, தொழில்துறை பாஜக அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
- உயிர் மாய்ப்பு கடிதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என போலீசார் தகவல்
- பள்ளி ஆசிரியர்கள் மீது பெற்றோர்கள் குற்றச்சாட்டு.
மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் உள்ள ஜல்னா மாவட்டத்தில் 7ம் வகுப்பு சிறுமி, பள்ளி மாடியிலிருந்து விழுந்து உயிரை மாய்த்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 13 வயது மாணவி நேற்று (நவ.21) வழக்கம்போல பள்ளிக்கு சென்றுள்ளார். சிறுமி வீட்டிலிருந்து சென்ற சிறிது நேரத்திலேயே அவளது தந்தைக்கு பள்ளியிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில், உங்கள் மகள் பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிவித்துள்ளனர். செய்தியறிந்து உடனடியாக பள்ளியை அடைந்த குடும்பத்தினர் சிறுமியை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சம்பவம் அறிந்து பள்ளிக்கு சதார் காவல்நிலைய போலீசார், உயிரிழப்புக்கான காரணத்தை அறிய சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பள்ளி ஆசிரியர்கள், சக மாணவர்கள், குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பள்ளியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்துள்ளனர். தற்கொலை கடிதங்கள் போன்ற எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், உடற்கூராய்வுக்கு பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் எனவும் தெரிவித்தனர்.
உயிரை மாய்த்துக்கொண்டதற்கான காரணம் குறித்து இன்னும் தெரியவராத நிலையில், சிறுமியின் குடும்பத்தினர் பள்ளியை குற்றம் சாட்டியுள்ளனர். ஆசிரியர்களின் துன்புறுத்தலால்தான் இந்த முடிவை எடுத்திருப்பார் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் மன அழுத்தம் குறித்து உள்ளூர்வாசிகளும், பெற்றோர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
- முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
- அணையின் நீர்மட்டம் 138 அடியாக உயர்ந்தால் அதற்கு மேல் தேங்கும் நீர் கேரள பகுதிக்கு உபரியாக திறந்து விட வாய்ப்பு உள்ளது.
கூடலூர்:
152 அடி உயரம் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்கிக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஆனால் கேரள அரசு தன்னார்வ அமைப்பினர் மூலம் ரூல்கர்வ் விதிமுறைப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்க வேண்டும் என வலியுறுத்தியதால் அந்த விதிப்படியே தண்ணீரை தேக்கி வைத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை தேக்கிக்கொள்ளும் முறை பின்பற்றப்படுகிறது. இடைப்பட்ட காலத்தில் கூடுதல் நீர்வரத்து ஏற்பட்டால் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் தேங்கும் தண்ணீர் கேரள மாநிலம் இடுக்கி அணைக்கு திறந்து விடப்படுகிறது.
இதன்படி கடந்த மாதம் 10 நாட்களுக்கு மேலாக ரூல்கர்வ் விதிப்படி 138 அடிக்கு மேல் அணைக்கு வந்த நீரை உபரி நீராக கருதி இடுக்கி அணைக்கு திறந்து விடப்பட்டது. அதன்பிறகு மழைப்பொழிவு குறைந்த நிலையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது.
முல்லைப்பெரியாற்றின் கரையோரப்பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. எனவே கரைப்பகுதிகளை சீரமைக்க கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கரையோரப் பகுதிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
கடந்த சில நாட்களாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும் அணையில் இருந்து தண்ணீரை முற்றிலும் வெளியேற்றாமல் நிறுத்தியதாலும் நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 136 அடியை கடந்தது. இதனால் இடுக்கி மாவட்ட கரையோரப்பகுதிகளுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 136.20 அடியாக உள்ளது. நீர்வரத்து 1313 கன அடி. தண்ணீர் திறப்பு இல்லாத நிலையில் நீர் இருப்பு 6168 மி.கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 138 அடியாக உயர்ந்தால் அதற்கு மேல் தேங்கும் நீர் கேரள பகுதிக்கு உபரியாக திறந்து விட வாய்ப்பு உள்ளது.
பருவமழை காலங்களில் அணைக்கு வரும் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் உபரியாக திறந்து விடுவதால் 5 மாவட்ட விவசாயிகள் கோடை காலங்களில் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே தமிழக அரசு ரூல்கர்வ் நடைமுறையை ரத்து செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோவையில் செம்மொழி பூங்காவையும் திறந்து வைக்கிறார்.
- ஈரோட்டில் ரூ.605 கோடியில் முடிவுற்றப் பணிகளை தொடங்கி வைத்து 1,84,491 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வருகிற 25 மற்றும் 26-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார்.
வருகிற 25-ந்தேதி கோவையில் தொழில்துறை சார்பில் நடைபெறும் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். மேலும் அன்றைய தினமே கோவையில் செம்மொழி பூங்காவையும் திறந்து வைக்கிறார்.
இதனை தொடர்ந்து 26-ந்தேதி ஈரோடு- மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லான் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தீரன் சின்னமலையின் மணிமண்டபத்திற்கு சென்று மலர் தூவி மரியதை செலுத்துகிறார். மேலும் ஈரோட்டில் ரூ.605 கோடியில் முடிவுற்றப் பணிகளை தொடங்கி வைத்து 1,84,491 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
- இராணிப்பேட்டை மாவட்டத்தில் கள்ளத் துப்பாக்கிகள் தடையின்றி கிடைப்பது தான் அதற்கு காரணம் ஆகும்.
- எப்படி வேண்டுமானாலும் படுகொலை செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
சென்னை :
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேலம் மாவட்டம் கருமந்துறையை அடுத்த கிராங்காடு கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் இராஜேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இராஜேந்திரனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர்களான இராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாகவும், அதன் காரணமாகவே அவர்கள் இராஜேந்திரனை சுட்டுக் கொலை செய்திருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. நிலத்தகராறுக்கு கூட ஆளும்கட்சி நிர்வாகியை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலை மோசமடைந்திருப்பதை பார்க்கும் போது தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன தான் பாதுகாப்பு? என்ற வினா தான் எழுகிறது.
திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்கு மட்டும் தான் காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதி பா.ம.க. நிர்வாகிகளை ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் கைது செய்து பொய் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியை பழிவாங்கத் துடிப்பதில் காட்டும் அக்கறையையும், செலவிடும் நேரத்தையும் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறை செலவிட்டிருந்தால் இத்தகைய படுகொலைகளை தடுத்திருக்க முடியும். ஆனால், திமுக காவல்துறை அதற்கு தயாராக இல்லை.
திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து துப்பாக்கிக் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது என்று தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறேன். அந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் தான் சேலம் மாவட்டத்தில் திமுக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை, யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் படுகொலை செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
கடந்த சில வாரங்களுக்கு முன் இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளரும், வழக்கறிஞருமான சு.சக்கரவர்த்தியை அதே பகுதியைச் சேர்ந்த சமூகவிரோதிகள் சிலர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இராணிப்பேட்டை மாவட்டத்தில் கள்ளத் துப்பாக்கிகள் தடையின்றி கிடைப்பது தான் அதற்கு காரணம் ஆகும்.
தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் தாராளமாக கிடைப்பதாகவும், ரூ.5000 விலைக்குக் கூட துப்பாக்கிகள் விற்பனை செய்யப்படுவதாகவும், பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. ஆனாலும், துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது. மக்களைப் பாதுகாக்கத் தவறிய திமுக தொடர்ந்து ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விட்டது. தங்களைக் காக்கத் தவறிய திமுகவுக்கு வரும் தேர்தலில் சரியான தண்டனையை தமிழ்நாட்டு மக்கள் அளிப்பார்கள் என்று கூறியுள்ளார்.






