என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கி கலாச்சாரம்"

    • இராணிப்பேட்டை மாவட்டத்தில் கள்ளத் துப்பாக்கிகள் தடையின்றி கிடைப்பது தான் அதற்கு காரணம் ஆகும்.
    • எப்படி வேண்டுமானாலும் படுகொலை செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

    சென்னை :

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சேலம் மாவட்டம் கருமந்துறையை அடுத்த கிராங்காடு கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் இராஜேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இராஜேந்திரனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர்களான இராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாகவும், அதன் காரணமாகவே அவர்கள் இராஜேந்திரனை சுட்டுக் கொலை செய்திருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. நிலத்தகராறுக்கு கூட ஆளும்கட்சி நிர்வாகியை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலை மோசமடைந்திருப்பதை பார்க்கும் போது தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன தான் பாதுகாப்பு? என்ற வினா தான் எழுகிறது.

    திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்கு மட்டும் தான் காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதி பா.ம.க. நிர்வாகிகளை ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் கைது செய்து பொய் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியை பழிவாங்கத் துடிப்பதில் காட்டும் அக்கறையையும், செலவிடும் நேரத்தையும் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறை செலவிட்டிருந்தால் இத்தகைய படுகொலைகளை தடுத்திருக்க முடியும். ஆனால், திமுக காவல்துறை அதற்கு தயாராக இல்லை.

    திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து துப்பாக்கிக் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது என்று தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறேன். அந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் தான் சேலம் மாவட்டத்தில் திமுக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை, யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் படுகொலை செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

    கடந்த சில வாரங்களுக்கு முன் இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளரும், வழக்கறிஞருமான சு.சக்கரவர்த்தியை அதே பகுதியைச் சேர்ந்த சமூகவிரோதிகள் சிலர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இராணிப்பேட்டை மாவட்டத்தில் கள்ளத் துப்பாக்கிகள் தடையின்றி கிடைப்பது தான் அதற்கு காரணம் ஆகும்.

    தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் தாராளமாக கிடைப்பதாகவும், ரூ.5000 விலைக்குக் கூட துப்பாக்கிகள் விற்பனை செய்யப்படுவதாகவும், பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. ஆனாலும், துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது. மக்களைப் பாதுகாக்கத் தவறிய திமுக தொடர்ந்து ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விட்டது. தங்களைக் காக்கத் தவறிய திமுகவுக்கு வரும் தேர்தலில் சரியான தண்டனையை தமிழ்நாட்டு மக்கள் அளிப்பார்கள் என்று கூறியுள்ளார். 

    • திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் துப்பாக்கி கலாச்சாரம் வந்தது போல பழனிசாமி பேசுவதைப் பார்த்து மக்கள் சிரிப்பார்கள்.
    • திமுக அரசு அமைந்த பிறகுதான் குற்றங்கள் தடுக்கப்பட்டு, குறைந்து கொண்டு வருகின்றன.

    சென்னை :

    அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பாமக இளைஞரணி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி துப்பாக்கியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டின் பாதுகாப்பைச் சீர்குலைத்துச் சீரழிவு ஆட்சி நடத்திய பழனிசாமி, திமுக அரசைக் குறை சொல்வதற்கு அருகதை கிடையாது!

    சக்கரவர்த்தி வழக்கில் சம்பவம் நடந்த 3-ஆவது நாளே முக்கியக் குற்றவாளிகள் இருவரை போலீஸ் கைது செய்துள்ளது. சக்கரவர்த்தி 11.06.2025-ம் தேதி இரவு பைக்கில் வீட்டிற்குச் சென்றவர் சாலையில் உயிரிழந்து கிடந்தார். சடலத்தை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவிட்டு, சந்தேகம் மரணமாக முதலில் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது போலீஸ். உடற்கூறு ஆய்வில், சக்கரவர்த்தி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது தெரியவந்ததும், கொலை வழக்காக மாற்றப்பட்டு உடனே இருவரை போலீஸ் கைதும் செய்தது.

    ஒருவரின் மரணத்திற்குத் தெளிவான காரணம் தெரியாவிட்டால் இபிகோ சட்டத்தின் (IPC) பிரிவு 174-ன் கீழ் முதலில் காவல்துறை வழக்குப்பதிவு செய்யும். பிறகு மரணத்தில் சந்தேகம் எழுந்தால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 176-ன் கீழ் வழக்கை மாற்றுவார்கள். கொலை என்பது உறுதியானால், கொலை வழக்காக மாற்றலாம். இந்த அடிப்படையில்தான் சக்கரவர்த்தி வழக்கு முதலில் மர்ம மரணம் எனப்பதிவு செய்யப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் பக்கம் ஒதுங்காத, செய்தித்தாள் படிக்கிற பாமரனுக்குகூட தெரிந்த இந்த உண்மை, உள்துறையை கையில் வைத்திருந்த முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு தெரியவில்லை என்றால் அவர் முதலமைச்சர் நாற்காலியில் அமரவே தகுதியில்லாதவர். காவல் துறைக்குப் பொறுப்பு அமைச்சராக 4 ஆண்டுகள் இருந்த பழனிசாமிக்கு இந்த அடிப்படை அறிவு கொஞ்சம்கூட இல்லை.

    பாஜக பிரமுகர் சீனிவாசன் கொலை வழக்கில் கைதான நபர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட காரணத்தினாலேயே பாமக பிரமுகர் சக்கரவர்த்தி கொலை நடந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து, பாமகவைக் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் பழனிசாமி, பாமகவுக்கு தூது விடுவது போல அறிக்கை விட்டிருக்கிறார். பாமக நிர்வாகியைக் கொலை செய்தவர் பாஜக நிர்வாகியின் மகன் என்று பழனிசாமி ஏன் சொல்லவில்லை?

    அரசியல் செய்ய எதுவும் கிடைக்காமல், ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடக்காதா? அதை வைத்து ஏதேனும் மலின அரசியல் செய்ய முடியாதா? எனக் குற்றங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி.

    திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதை ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களே சொல்லும். தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்ட தரவுகளின் படி 2020 ஆண்டு பழனிசாமியின் ஆட்சியில் IPC ல் பதியப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை 8,91,700, திமுக அரசின் தீவிரமான நடவடிக்கையால் 2022 ஆண்டு IPC ல் பதியப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை1,93,913 குறைந்தது. கடுமையான நடவடிக்கைகளை எடுத்துக் குற்றங்களைக் குறைத்தது திராவிட மாடல் அரசுதான். இந்த இலட்சணத்தில் கேடுகெட்ட ஆட்சி நடத்திய பழனிசாமி அதிமுக ஆட்சியில் அமைதியும் வளமும் வளர்ச்சியும் பெற்றதாகக் கூசாமல் அடித்து விட்டுக் கொண்டிருக்கிறார்.

    துப்பாக்கி கலாச்சாரம் பற்றியெல்லாம் பழனிசாமி பேசலாமா? அதிமுக ஆட்சியில் துப்பாக்கி மலிவு விலைக்கு விற்கப்பட்டதும், அதை வாங்கி கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டதையும் மக்கள் மறக்க மாட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் துப்பாக்கி கலாச்சாரம் வந்தது போல பழனிசாமி பேசுவதைப் பார்த்து மக்கள் சிரிப்பார்கள்.

    * 2018-ல் கள்ளத் துப்பாக்கி கடத்தல் வழக்கில் சென்னையைச் சேர்ந்த பரமேஸ்வரன் எனும் காவலரே கைதானார்,

    * 2020-ல் 8 துப்பாக்கிகள், 60 தோட்டாக்களுடன் கும்பகோணம் அருகே மருத்துவர் ராம்குமார் பிடிபட்டார்.

    * 2018 ஏப்ரலில் அடையாறு இந்திரா நகர் வங்கியில் துப்பாக்கி முனையில் 7 லட்சம் கொள்ளை.

    * 2018-ல் கன்னியாகுமரியில் 10 ஆயிரம் ரூபாய்க்கு நாட்டுத் துப்பாக்கி விற்பனை.

    * 2020 மே மாதம் திருப்பூரில் நிலம் தொடர்பான பிரச்சினையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் கேட்ட நபர்,

    * 2020 ஜூலையில் ஈரோட்டிலிருந்து 9 எம்.எம். ரகக் கள்ளத்துப்பாக்கி, 5 தோட்டாக்களுடன் திருநெல்வேலிக்கு வந்த குமுளி ராஜ்குமார்.

    * 2020 செப்டம்பரில் சென்னை பெரம்பூரில் வீடு புகுந்து துப்பாக்கியைக் காட்டி பெண்ணை மிரட்டிய நபர்,

    * 2020 நவம்பரில் திருக்கோவிலூர் அருகே மளிகை கடைகாரர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை.

    இப்படிப் பழனிசாமி ஆட்சியில் நடந்த துப்பாக்கி சம்பவங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். "துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?" என்று கேள்வி கேட்க எடப்பாடி பழனிசாமிக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

    2020 ஆகஸ்ட் மாதம் வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், "பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கரில் இருந்து நாட்டு துப்பாக்கிகள் தமிழகத்தில் ரவுடிகள், குண்டர்கள், அரசியல்வாதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க வேண்டும்" என்று கூறியது பழனிசாமிக்கு தெரியாதா? இதுதான் அவருடைய ஆட்சியில் நிலவிய அமைதி, வளம், வளர்ச்சியா?

    சக்கரவர்த்தி கொலை வழக்கில், "கள்ளத்துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதை விசாரிக்க வேண்டும்" என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஐடி விங் பிரமுகர் பிரபாத்துக்கு டபுள் பேரல் துப்பாக்கியை யார் வாங்கி கொடுத்தது? என பழனிசாமி விளக்குவாரா?

    திமுக அரசு அமைந்த பிறகுதான் குற்றங்கள் தடுக்கப்பட்டு, குறைந்து கொண்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கைப் சிறப்பாகப் பாதுகாத்து வருவதால்தான் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.69 விழுக்காடாக உயர்ந்து நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கிறது.

    • துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? ஒன்றுமே இல்லை!
    • கள்ளத்துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதை விசாரிக்க வேண்டும்;

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பாமக இளைஞரணி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி, கடந்த 11.06.2025 அன்று இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து உயிரிழந்ததாக ஸ்டாலின் மாடல் திமுக அரசால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூராய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது.

    அதிமுக ஆட்சியில் அமைதி, வளம், வளர்ச்சிப் பாதையில் சென்றுக்கொண்டிருந்த தமிழ்நாட்டை, பட்டாக்கத்தி, அரிவாள், துப்பாக்கியின் பாதைக்கு கொண்டு சென்றுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    இதே இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் பாபு துப்பாக்கி வைத்திருந்த போதே, இந்த அரசை நான் எச்சரித்தேன்.

    ஆனால், துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? ஒன்றுமே இல்லை!

    ரோடு ஷோவிலும் , போட்டோஷூட்டிலும் இருக்கும் கவனம், சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பதிலோ, மக்களைக் காப்பதிலோ இந்த பொம்மை முதலமைச்சருக்கு துளியும் இல்லை!

    பாமக மாவட்ட இளைஞரணி நிர்வாகி சக்கரவர்த்தி கொலை வழக்கில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்;

    கள்ளத்துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதை விசாரிக்க வேண்டும்; தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழித்திட வேண்டும் என மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    • துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார்.
    • அதிபயங்கர ஆயுதங்கள், துப்பாக்கிகள், தோட்டாக்களைத் தடை செய்வதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், துப்பாக்கியை தவறாக பயன்படுத்துவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அவ்வகையில், சமீபத்தில் துப்பாக்கிச் சூடு நடந்த லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர்ப் பகுதிக்கு சென்ற போது, துப்பாக்கி வாங்குவோரின் பின்னணி குறித்த விசாரணைகள் மற்றும் சோதனைகளை விரைவுபடுத்தும் புதிய நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.

    அத்துடன், துப்பாக்கி சூடு நடந்த மான்டேரி பார்க் சென்று, இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அதிபயங்கர ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள், தோட்டாக்களைத் தடை செய்வதில் தான் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.

    பைடன் அறிவித்துள்ள புதிய நடவடிக்கைகளின் மூலம், இனி பலகட்ட விசாரணைகளுக்குப் பிறகே துப்பாக்கிகள் விநியோகிக்கப்படும். துப்பாக்கியை ஒருவர் வாங்கும் முன்பு, அவர் குற்றவாளியா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை செய்பவரா என்பதை பார்த்த உடன் கண்டுபிடித்து விடலாம் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான தடை சட்டத்திற்கு பைடன் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையிலும், பாராளுமன்றத்தில் குடியரசுக் கட்சியினரின் ஆதரவில்லாததால் சட்டம் இயற்றுவதில் சிக்கல் உள்ளது. 

    • காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த சிறுவனுக்கு முதலுதவி செய்தனர்.
    • சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தில் உள்ள ஒரு வால்மார்ட் கடைக்கு வெளியே, 14 வயது சிறுவன் தனது தம்பியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து சோக்டாவ் காவல்துறை தலைவர், கெல்லி மார்ஷல் கூறுகையில், "இரண்டு சிறுவர்களும் காருக்குள் அமர்ந்திருக்கின்றனர். அவர்களின் தாய் கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன், காருக்குள் துப்பாக்கி இருப்பதை கண்டிருக்கிறான். அதனை எடுத்து விளையாட்டாக அழுத்தும்போது, தற்செயலாக அவனது தம்பியை சுட்டு விட்டான். அந்த சத்தம் அந்த வழியாக சென்றவர்களுக்கு கேட்டதையடுத்து அவசர உதவி எண் 911ஐ அழைத்தனர்" என தெரிவித்தார்.

    இரண்டு சிறுவர்களும் ஓக்லஹோமா நகர காவல்துறை அதிகாரி ஒருவரின் மகன்கள் என்றும் இதில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அவருடையது என்றும் ஆனால் சம்பவம் நடந்த போது அவர் சம்பவ இடத்திலேயே இல்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த சிறுவனுக்கு முதலுதவி செய்தனர். உடலில் தோட்டா பாய்ந்த பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறுவதை நிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டனர். சுடப்பட்ட அந்தச் சிறுவன் சுயநினைவோடு இருந்திருக்கிறான்.

    அவசரகால மருத்துவ பணியாளர்கள் அவனை ஆம்புலன்ஸ் மூலம் ஓக்லஹோமா பல்கலைக்கழக சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்றனர். சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவன் விரைவில் அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படுவான் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    சில மாதங்களுக்கு முன் விடுமுறை தின வியாபாரம் மும்முரமாக நடைபெற்றபோது, வால்மார்ட் ஊழியர் ஒருவர், துப்பாக்கியால் 6 பேரை சுட்டுக் கொன்று, தன்னையும் சுட்டுக் கொண்டு பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சொகுசுக்கார் ஒன்றில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிகிறது.
    • வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று காவல்துறை அதிகாரி கூறி உள்ளார்.

    அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், ஜூலை 4ம் தேதி, சுதந்திர தின கொண்டாட்டத்ததின் போது நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில், அதில் பங்கேற்றவர்களில் 2 சிறுவர்கள் உள்பட 9 பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    இது குறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பது:

    வெள்ளை மாளிகைக்கு கிழக்கே, 20 நிமிட பயணத்தில் அடையக்கூடிய ஒரு பகுதியில், அதிகாலை 01:00 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 10-வயது மற்றும் 17-வயதுடைய இருவர் இருந்தனர். அனைவரும் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்திற்காக யாரும் கைது செய்யப்படவில்லை. இது குறித்த விசாரணைக்கு பொதுமக்களும் உதவ வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால், வாகனத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களா என்பதும் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களோ, வேறு எந்த விவரமோ காவல்துறை தெரிவிக்கவில்லை. டீன்வுட் அருகே சொகுசுக்கார் ஒன்றில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிகிறது.

    "இது போன்ற வன்முறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது", என்று பெருநகர காவல்துறை உதவித்தலைவர் லெஸ்லி பார்சன்ஸ், தெரிவித்தார்.

    "நம் மக்களிடம் ஏராளமாக துப்பாக்கிகள் இருக்கின்றன. அதே போல பல வன்முறையாளர்கள் தெருக்களில் உள்ளனர்" என வாஷிங்டன் மேயர் முரியல் பவுசர் தெரிவித்தார்.

    இதேபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை பால்டிமோர் பகுதியில் நடந்த ஒரு விருந்தில் மர்ம நபர் ஒருவர் 30 பேர் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 2 பேர் உயிரிழந்தனர்.

    திங்கட்கிழமை இரவு, பிலடெல்பியாவின் தெருக்களில் குண்டு துளைக்காத மேலாடை அணிந்த ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதில் 2 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர். சம்பவத்திற்கு பிறகு, குற்றவாளி காவல்துறையிடம் சரணடைந்தார்.

    திங்கட்கிழமை பின்னிரவு, டெக்சாஸ் சுற்றுப்புற பகுதியில் நடைபெற்ற ஒரு கொண்டாட்டத்தின் போது அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டத்தின் மீது பலர் கண்மூடித்தனமாக சுட்டதில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 8 பேர் காயமடைந்தனர். வருடந்தோறும் நடைபெறும் கோமோஃபெஸ்ட் கொண்டாட்டங்கள் முடிந்த 2 மணி நேரத்திற்குப் பிறகு கோமோ பகுதியின் ஃபோர்ட்வொர்த் சுற்றுவட்டாரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

    புளோரிடா மாநிலத்தில், தம்பா விரிகுடா பகுதியை கடக்கும் ஒரு தரைப்பாதையில், ஜூலை 4 கொண்டாட்டத்திற்காக கூடியிருந்த இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் போது துப்பாக்கிச் சூட்டில் ஒரு நபர் காயமடைந்தார். மேலும் ஒரு 7-வயது குழந்தை கொல்லப்பட்டது.

    அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடுகளும், உயிரிழப்புகளும் அமெரிக்க மக்களை பெரிதும் கவலை கொள்ள செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×