search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு: தலைநகர் சம்பவத்தில் இரு சிறுவர்கள் உட்பட 9 பேர் காயம்
    X

    அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு: தலைநகர் சம்பவத்தில் இரு சிறுவர்கள் உட்பட 9 பேர் காயம்

    • சொகுசுக்கார் ஒன்றில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிகிறது.
    • வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று காவல்துறை அதிகாரி கூறி உள்ளார்.

    அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், ஜூலை 4ம் தேதி, சுதந்திர தின கொண்டாட்டத்ததின் போது நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில், அதில் பங்கேற்றவர்களில் 2 சிறுவர்கள் உள்பட 9 பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    இது குறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பது:

    வெள்ளை மாளிகைக்கு கிழக்கே, 20 நிமிட பயணத்தில் அடையக்கூடிய ஒரு பகுதியில், அதிகாலை 01:00 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 10-வயது மற்றும் 17-வயதுடைய இருவர் இருந்தனர். அனைவரும் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்திற்காக யாரும் கைது செய்யப்படவில்லை. இது குறித்த விசாரணைக்கு பொதுமக்களும் உதவ வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால், வாகனத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களா என்பதும் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களோ, வேறு எந்த விவரமோ காவல்துறை தெரிவிக்கவில்லை. டீன்வுட் அருகே சொகுசுக்கார் ஒன்றில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிகிறது.

    "இது போன்ற வன்முறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது", என்று பெருநகர காவல்துறை உதவித்தலைவர் லெஸ்லி பார்சன்ஸ், தெரிவித்தார்.

    "நம் மக்களிடம் ஏராளமாக துப்பாக்கிகள் இருக்கின்றன. அதே போல பல வன்முறையாளர்கள் தெருக்களில் உள்ளனர்" என வாஷிங்டன் மேயர் முரியல் பவுசர் தெரிவித்தார்.

    இதேபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை பால்டிமோர் பகுதியில் நடந்த ஒரு விருந்தில் மர்ம நபர் ஒருவர் 30 பேர் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 2 பேர் உயிரிழந்தனர்.

    திங்கட்கிழமை இரவு, பிலடெல்பியாவின் தெருக்களில் குண்டு துளைக்காத மேலாடை அணிந்த ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதில் 2 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர். சம்பவத்திற்கு பிறகு, குற்றவாளி காவல்துறையிடம் சரணடைந்தார்.

    திங்கட்கிழமை பின்னிரவு, டெக்சாஸ் சுற்றுப்புற பகுதியில் நடைபெற்ற ஒரு கொண்டாட்டத்தின் போது அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டத்தின் மீது பலர் கண்மூடித்தனமாக சுட்டதில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 8 பேர் காயமடைந்தனர். வருடந்தோறும் நடைபெறும் கோமோஃபெஸ்ட் கொண்டாட்டங்கள் முடிந்த 2 மணி நேரத்திற்குப் பிறகு கோமோ பகுதியின் ஃபோர்ட்வொர்த் சுற்றுவட்டாரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

    புளோரிடா மாநிலத்தில், தம்பா விரிகுடா பகுதியை கடக்கும் ஒரு தரைப்பாதையில், ஜூலை 4 கொண்டாட்டத்திற்காக கூடியிருந்த இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் போது துப்பாக்கிச் சூட்டில் ஒரு நபர் காயமடைந்தார். மேலும் ஒரு 7-வயது குழந்தை கொல்லப்பட்டது.

    அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடுகளும், உயிரிழப்புகளும் அமெரிக்க மக்களை பெரிதும் கவலை கொள்ள செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×